Published:Updated:

உங்கள் கதை ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே! - ப்ரீத்தி ராய்

உங்கள் கதை ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே! - ப்ரீத்தி ராய்
பிரீமியம் ஸ்டோரி
News
உங்கள் கதை ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே! - ப்ரீத்தி ராய்

முகங்கள்ஆர்.வைதேகி

யிரும் உணர்வுகளும் சுமந்த மனிதர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது, அவர்களின் வலிகளை உணர்ந்து பேசவைப்பது, ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கையடக்கக் கதைக்குள் அடக்கி வாசகர்களுக்குத் தருவது என `பீயிங் யூ’வின் ஆன்மாவாகச் செயல்படுகிறார் ப்ரீத்தி ராய். அதென்ன பீயிங் யூ?

ஐஐஎம் பெங்களூரு நிறுவனத்தின் தொழில்முனைவோர் மையமான என்.எஸ்.ஆர்.சி.இ.எல்-லின் டாப் 100 பெண்கள் ஸ்டார்ட்அப்பில் ஒன்றாகத் தேர்வாகியிருக்கிற ஆன்லைன் மீடியா நிறுவனமே `பீயிங் யூ’ (Being You).

``பெங்களூருல சைக்காலஜி முடிச்சுட்டு ரேடியோ துறையில புரோகிராம் டைரக்டரா  வேலைபார்த்திட்டிருந்தேன். நண்பர்களோடு சேர்ந்து `மிஷன் ஸ்மைல்’னு ஒரு புராஜெக்ட் பண்ணினேன். க்ரியேட்டிவிட்டியையும் ஆர்ட் ஆஃப் லிவிங்கையும் இணைக்கிற முயற்சி அது. யார்கிட்டயும் நிதி உதவினு கேட்காம, அவர்களின்  திறமைகளை தானமா பெறும் முயற்சி.

வாழ்க்கையில அடுத்து என்ன செய்யப்போறேன்னு எந்த இலக்கும் இல்லாம இருந்த ஒரு காலகட்டத்தில்தான் பெங்களூரைச் சேர்ந்த ஷாலினி சரஸ்வதியைச் சந்திச்சேன். திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுக் கைகளையும் கால்களையும் இழந்த ஷாலினி, அந்த நிலையிலயும் கால்கள்ல ப்ளேடு பொருத்திக்கிட்டு, மாராத்தானில் ஓடுறவங்க. ஷாலினியைச் சந்திச்ச பிறகு `காபி டேபிள்’ புத்தகம் கொண்டுவரும் ஐடியாவும், அதுல ஷாலினி போன்றோரின் தன்னம்பிக்கைக் கதைகளைத் தொகுத்து மக்கள் பார்வைக்குக் கொண்டுபோற ஐடியாவும் வந்தது.  

உங்கள் கதை ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே! - ப்ரீத்தி ராய்

மாற்றுத்திறனாளிகளை யாரும் அழகானவங்களா, கம்பீரமானவங்களா பார்க்கிறதில்லை. அந்தப் பார்வையை மாற்றணும்னு நினைச்சேன்.  ஷாலினிக்கும் என் விருப்பத்துல உடன்பாடு இருந்தது. க்ரெளடு ஃபண்டிங் முறையில நிதி திரட்டி, 2017-ல்  `ரெய்ஸிங் அபவ்’ என்ற பெயரில் இந்தியாவின் 13 பேரைக்கொண்ட முதல் ஆம்பியூட்டி காலண்டரைக் கொண்டு வந்தோம். வெளிநாடுகள்ல மாற்றுத்திறனாளிகள் மாடல்களாக இருக்காங்க. அவங்களைக் கொண்டாடுறாங்க. இந்தியாவுல நிலைமை நேரெதிர். இந்தச் சூழலில் எங்களுடைய காலண்டர் முயற்சி, இந்தியா முழுக்கப் பாராட்டப்பட்டது. இந்த புராஜெக்ட்டுக்காக உழைச்ச யாரும் ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்கல.

இந்த வேலை எனக்கு மனநிறைவைக் கொடுத்தாலும், இதை மக்கள் மத்தியில பரவலா கொண்டுபோக முடியாத வருத்தமும் இருந்தது. அப்பதான் சல்மாவைச் சந்திச்சேன்.

2016-ம் வருஷம், ஒரு நாள் ஊபர் ஷேர் டிரைவில் போயிட்டிருந்தபோ, சல்மா என் சகபயணியா வந்தாங்க.  நாட்டுக்காக உயிரைத் துறந்த ராணுவ வீரரின் மனைவி அவங்க.  19 வயசுல கல்யாணம், பிறகு ராணுவ வீரரின் மனைவியா தியாகங்கள் சுமந்த வாழ்க்கைனு அந்த 15 நிமிஷப் பயணத்துல தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சொன்னாங்க. அவங்க கணவர் தினமும் அவங்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்புவாராம். கடைசிக் கடிதம் கிடைச்ச அன்னிக்குத்தான் அவருடைய சடலமும் அவங்க கைக்குக் கிடைச்சிருக்கு. சல்மாவின் வாழ்க்கையை அத்தனை சுலபத்துல என்னால கடந்தும் மறந்தும் போக முடியலை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`நான் மீடியாவுல இருக்கேன். உங்க கதையை எங்ககூடப் பகிர்ந்துக்க விருப்பமா?’னு அவங்ககிட்ட கேட்டேன். உடனே சம்மதிச்சாங்க.

உங்கள் கதை ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே! - ப்ரீத்தி ராய்

அதுக்கப்புறம்தான் செந்தில் குமாரையும் சந்திச்சேன். சென்னை இளைஞரான செந்தில், தோனி, விராட் கோலி மாதிரியான பிரபலங்களின் போட்டோகிராபர். `என்கூட சேர்ந்து வொர்க் பண்ண முடியுமா?  இதுல யாரும் பிரபல முகங்களா இருக்க மாட்டாங்க. ஆனா, சமுதாயத்துக்கு ஆழமான மெசேஜ் சொல்லத் தகுதியானவங்க’னு சொன்னேன்.அவரும் சம்மதிச்சார்.

நான் சொல்லப்போற கதையைப் படிக்கிறதுக்கு முன்னாடியே அந்தப் புகைப்படம் அவங்களைப் பற்றிப் பேசணும்னு நினைச்சேன். என்னுடைய `காபி டேபிள்’ புத்தக ஐடியாவைக் கைவிட்டுட்டு, டிஜிட்டல் மீடியா மூலமா மக்களை அடையுறதுக்கான வழியை யோசிச்சேன். `பீயிங் யூ’ என்ற பெயர்ல ஆன்லைன் மீடியா கம்பெனி அப்படித்தான் ஆரம்பமானது.

சல்மாவின் கதையை அதில் வெளியிட்டோம். நாங்க நினைச்சுப்பார்க்காத அளவுக்கு வரவேற்பு. நம்மைச் சுற்றிலும் இப்படி ஏராளமான நிஜக் கதைகள் இருக்கு. பலரும் அதையெல்லாம் கண்டுக்கறதில்லை. பீயிங் யூ மூலமா அந்தப் பார்வையை மெள்ள மெள்ள மாத்திக்கிட்டிருக்கோம்’’ - மாற்றத்துக்கான முதல் விதையை நட்டிருக்கும் நம்பிக்கையுடன் தொடர்கிற ப்ரீத்தி, இதுவரை 150-க்கும் மேலான நபர்களின் கதைகளை வெளியிட்டிருக்கிறார். ராணுவ வீரர்களின் குடும்பத்தார், உறுப்புகளை இழந்தவர்கள், நோயுடன் போராடி ஜெயித்தவர்கள், திருநங்கைகள், திருநம்பிகள், எனப் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையும் அங்குண்டு.

``நளினி சத்யநாராயணானு ஒரு பெண். கணவரின் புகைப்பழக்கம் பாதிச்சதால தொண்டைப் புற்றுநோய்க்கு ஆளாகி, தன் குரலை இழந்தவங்க. அவங்களுடைய கதைக்கு நிறைய வரவேற்பு.  தன்னுடைய புகைப்பழக்கம், தன் குடும்பத்தாரைப் பாதிக்கும்னு யோசிக்கவே இல்லைனு, நிறைய ஆண்கள் புகையைக் கைவிட முன்வந்தாங்க.

மனிதர்களையும் அவங்களுக்குள்ள ஒளிஞ்சிட் டிருக்கிற கதைகளையும் கண்டுபிடிக்கிறது முதல் சவால். நான் யார்னு விளக்கறதும் என்னுடைய முயற்சியின் நோக்கத்தைப் புரியவைப்பதும்  அடுத்த சவால். அந்த விஷயத்துல எங்களுக்கு உதவியா இருந்தவை எங்களுடைய புகைப்படங்கள். ஏற்கெனவே இதுல இடம்பெற்ற கதைகளையும் அவங்களுடைய படங்களையும் பார்த்ததும் பெரும்பாலும் யாரும் `நோ' சொல்றதில்லை.

உங்கள் கதை ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே! - ப்ரீத்தி ராய்

தனி மனுஷியா இந்தப் பயணத்தைத் தொடர்வது அவ்வளவு ஈஸி இல்லை. ஒவ்வொரு கதையும் இதயம் வலிக்கச் செய்யும். ஒவ்வொரு மனிதரைச் சந்திச்ச பிறகும் மனசளவுல நான் ரொம்பவே நொறுங்கிப்போயிடுவேன். அதுலேருந்து என்னை மீட்டெடுக்கிறது ரொம்பக் கஷ்டம். பல நேரங்களில் பல மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து என்னை மீட்டெடுக்க முடியாம திணறியிருக்கேன்.  இந்த எந்த முயற்சியிலயும் எனக்குப் பணமோ, புகழோ, வேறு ஆதாயமோ கிடைக்கிறதில்லை. அப்படியிருந்தும் `ஏன் இதையெல்லாம் செய்யணும்?'னு கேட்கிறவங்க இருக்காங்க.

என்னுடைய மெயில் பாக்ஸைத் திறக்கும் ஒவ்வொரு முறையும் அத்தனை மெயில்கள் வந்து குவிஞ்சு கிடக்கும். அதுல பாதிக்கும் மேலான மெயில்கள், நாங்க அறிமுகப்படுத்தின நபர்களின் கதைகளைப் பார்த்துட்டுத் தங்களுடைய வாழ்க்கையே மாறிப்போனதாகவும் அதுக்கு நன்றி சொல்லியும் வந்தவையா இருக்கு. அந்த பாசிட்டிவிட்டிதான் என்னை விரட்டிக்கிட்டே இருக்கு. யாரோ ஒருவர் வாழ்க்கையில் ஒரு பாசிட்டிவ் மாற்றம் ஏற்பட நான் ஒருவகையில காரணமா இருந்திருக்கேன் என்ற அந்த நினைப்புதான் என்னைத் தொடர்ந்து இயங்க வெச்சிட்டிருக்கு. பிரதிபலன் எதிர்பார்க்காம என்கூட சேர்ந்து இந்த முயற்சிக்கு உதவுற ஒவ்வொருத்தருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்’’ - அகம் நெகிழ்கிறவரின் அடுத்த இலக்கு பாட்காஸ்டிங் (Podcasting) வீடியோஸ்... அவற்றின் மூலம் இன்னும் அதிக மக்களைச் சென்றடைய முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு.

நமக்கும்!