Published:Updated:

"உயிரை மாய்த்துக்கொள்வோம்" - குழந்தை ஹரிணியைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் தம்பதி

"உயிரை மாய்த்துக்கொள்வோம்" - குழந்தை ஹரிணியைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் தம்பதி
News
"உயிரை மாய்த்துக்கொள்வோம்" - குழந்தை ஹரிணியைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் தம்பதி

"'வேற குழந்தை பெத்துக்க வேண்டியதுதானே? உங்க ஜென்மங்களுக்கு அது ஈஸியான வேலைதானே? ஹரிணியைக் கேட்டு ஏன் இப்படி அடம்பிடிக்கிறே?'ன்னு போலீஸ் நெஞ்சுல ஈரமே இல்லாம கேட்குதுண்ணே. என்னை இப்படிக் கேட்கும் போலீஸ் வசதியானவங்கள்னா கேட்குமா? கோடீஸ்வரங்க வீட்டு குழந்தைங்க காணாம போயிருந்தா இந்நேரத்துக்கு வேகமா தேடி கொடுத்திருப்பாங்க. பாசி, ஊசி விக்கிறவங்களுக்காக இரக்கப்படுவாங்களா?"

 "கல்யாணம் ஆகி மூணு வருஷம் எனக்குக் குழந்தை இல்லை. குழந்தை வரம் கேட்டு கோயில் கோயிலா ஏறி இறங்கி, மண்சோறு சாப்பிட்டு, மூணு வருஷம் கழிச்சுப் பொறந்த சாமி குழந்தைண்ணே ஹரிணி. இரண்டு வயசு குழந்தை போலவே இருக்கமாட்டா. பேச்சு, நடவடிக்கை எல்லாம் பார்த்தா, பத்து வயசு குழந்தை மாதிரி நடந்துப்பா. கண்ணுக்குள்ளவெச்சு காபந்து பண்ணினோம். ஆனா, அவளை யார் தூக்கிட்டுப் போனாங்களோ, எங்களை நினைச்சு அந்தப் பச்ச மண்ணு என்ன தவிதவிக்குதோ? அவ காணாம போய், ரெண்டு மாசம் ஆயிடுச்சு. அவளைப் பத்தி எந்தத் தகவலும் இதுவரை வரலை. பெத்த மனசு 'திக்குதிக்குன்னு' அடிச்சுக்குது சாமீ.." என்று கண்ணீர் வழிய வழிய ஹரிணி பற்றிய நினைவுகளை உதிர்க்கிறார் காளியம்மாள்.

விகடன் இணையதள வாசகர்களுக்கு ஹரிணி பாப்பாவைப் பற்றி அதிகம் அறிமுகம் தேவையில்லை. காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், காளியம்மாள் தம்பதியின் இரண்டு வயது மகள்தான் ஹரிணி. நாடோடி இன தம்பதிகளான இவர்கள், குழந்தை ஹரிணியோடு இரண்டு மாதங்களுக்கு முன்பு பக்கத்து ஊர் திருவிழாவிற்கு பாசிமணி விற்கப் போயிருக்கிறார்கள். வியாபாரம் முடிந்து திரும்பும்போது இரவாகிவிட, பவுஞ்சூர் என்ற இடத்தில் அணைக்கட்டு காவல்நிலையத்தை ஒட்டி குழந்தையோடு உறங்கி இருக்கிறார்கள். நடுஇரவில் ஹரிணி காணாமல் போக, பதறியடித்துக் கொண்டுபோய் அணைக்கட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களை காவல்துறை துரத்தி அடிக்கப் பார்த்திருக்கிறது. ஆனால், அங்கேயே தங்கிய அந்த தம்பதி, 'குழந்தை கிடைக்கும்வரை இங்கிருந்து இம்மியளவும் நகரமாட்டோம்' என்று வைராக்கியம் காட்டியது. இந்தத் தகவல்களை விகடன் இணையதளம்தான் தொடர்ச்சியாக செய்திகளாக பதிந்து வந்தது. இதற்கிடையே,கரூரைச் சேர்ந்த 'இணைந்த கைகள்' என்ற சமூக அமைப்பு,'ஹரிணியைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு!' என்று அறிவித்தது. இந்தத் தகவல்கள் சமூக வலைதளங்கள் மூலம் எட்டுத்திக்கும் பரப்பப்பட்டன. நாமும் செய்தியாக வெளியிட்டோம்.

இதனால்,பரபரப்பு ஏற்பட, அதன்பிறகு வழக்குப் பதிந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை, ஹரிணியை கண்டுபிடிக்க நான்கு தனிப்படைகளையும் அமைத்தது. கொல்கத்தா வரை போய் ஹரிணியை தனிப்படை போலீஸ் தேடியது. இந்நிலையில், வயிற்றில் ஏழு மாத அடுத்த குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் காளியம்மாள், ஹரிணியை நினைத்து ஏங்கித் தவித்தார். அழுது அரற்றினார். சாப்பிடாமல் அடம் பிடித்தார். இதனால், 'காளியம்மாள் வயிற்றில் வளரும் இரண்டாவது குழந்தை உசுருக்கு ஆபத்து வருமோ?' என்று கலங்கிப் போனார் வெங்கடேசன். இந்நிலையில், இந்தத் தம்பதியை மனரீதியாக தைரியப்படுத்தவும், காளியம்மாளுக்கு மருத்துவச் சோதனை செய்யவும் இணைந்த கைகள் அமைப்பினர் கரூருக்கு அவர்களை அழைத்து வந்தனர். நான்கு நாள்கள் அவர்களை கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சியில் உள்ள தனது இல்லத்தில் தங்க வைத்து தைரியப்படுத்தி அனுப்பி இருக்கிறார் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சலீம். கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காளியம்மாளுக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர், 'குழந்தைக்கு இப்போதைக்கு ஒன்றுமில்லை. ஆனா, காளியம்மாள் தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்தால்,அப்புறம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பிரச்னையாயிடும்' என்று சொல்லி அனுப்பினார். தோட்டக்குறிச்சியில் உள்ள பிள்ளையார் கோயிலில் கணவரோடு போய் ஹரிணி கிடைக்க மனமுருக வேண்டிக்கொண்டார் காளியம்மாள்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"என் கணவர் ஊர்தான் மானாமதி. எனக்கு அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரத்துல உள்ள வயலூர்தான் சொந்த ஊர். இரண்டு பேரும் உறவினர்கள்தாம். லவ் பண்ணி 2012-ம் வருஷம் திருமணம் பண்ணிக்கிட்டோம். என் கணவர் ஒன்றரை லட்சம் கடன் வாங்கி செலவு செய்து எங்க கல்யாணத்தை நடத்தினார். ஆனா, மூணு வருஷமா எங்களுக்கு குழந்தை இல்லை. 'என் வயித்துல ஒரு புழு பூச்சியைக் கொடு'ன்னு ஏறாத கோயில் இல்லை; வேண்டாத தெய்வம் இல்லை. கடம்பாடியம்மன் கோயில்ல நானும் என் புருஷனும் குழந்தை வரம் கேட்டு மூணு நாளைக்கு மண்சோறு சாப்பிட்டோம். அப்புறம்தான் ஹரிணியை உண்டாகி பெத்தெடுத்தேன். அவ பொறந்த நேரம் வீட்டுக் கஷ்டம் ஓரளவு ஒழிஞ்சது. அவ நாலு மாத குழந்தையா இருந்தப்ப சுடுதண்ணீர் கொட்டி ஹரிணிக்கு கைகள், மார்பு, வயிறுன்னு புண்ணாகிட்டு. துடிச்சுப் போயிட்டா புள்ள. நாங்க பதறிப்போயிட்டோம். இரண்டு நாள்ல 50 ஆயிரம் செலவு பண்ணி 17 மருத்துவமனைகளில் காண்பிச்சோம். யாரும் அவளை சரிபண்ணலை. புண்ணும் ஆறலை. குலதெய்வம் கறுப்பு அய்யனாரை வேண்டிகிட்டு என் கணவர் கொடுத்த மருந்துலதான் அவளுக்கு சரியாச்சு.

இரண்டு வயசு குழந்தை போல அவ இல்லை. பத்து வயசு புள்ளை போல பேசுவா. அவ சாமி குழந்தைண்ணே. அவ முகமும், மதுரை மீனாட்சியம்மன் முகமும் ஒரே மாதிரி இருக்கும். மத்த குழந்தை மாதிரி அவளுக்கு சோறூட்ட சிரமப்பட வேண்டியதில்லை. எங்க ரெண்டு பேருக்கும் அவ சோறு ஊட்டிட்டு, என் கையால தானா சோறு ஊட்டிக்குவா. என்னோட பொருளையோ, என் கணவரோட பொருளையோ யாராவது எடுத்தாகூட அழுது அதை வாங்கிடுவா. எங்க ரெண்டு பேரைத் தவிர யார் எவ்வளவு அன்பா கூப்பிட்டாலும் போகமாட்டா. மீறி தூக்கினாலும்,அழுதபடி, அவங்களை கடிச்சு வைப்பா. அப்படிப்பட்ட அவளை வலுக்கட்டாயமா வாயைப் பொத்தி தூக்கிட்டுப் போயிருக்காங்க பாவிங்க. நாங்க இல்லாம அவ சோறுகூட சாப்பிடமாட்டாண்ணே. என் மேலேயோ,என் கணவர் மேலேயோதான் படுத்து தூங்குவா. 'வேற குழந்தை பெத்துக்க வேண்டியதுதானே? உங்க ஜென்மங்களுக்கு அது ஈஸியான வேலைதானே? ஹரிணியைக் கேட்டு ஏன் இப்படி அடம்பிடிக்கிறே?'ன்னு போலீஸ் நெஞ்சுல ஈரமே இல்லாம கேட்குதுண்ணே. என்னை இப்படி கேட்கும் போலீஸ் வசதியானவங்கள்னா கேட்குமா? கோடீஸ்வரங்க வீட்டு குழந்தைங்க காணாம போயிருந்தா இந்நேரத்துக்கு வேகமா தேடி கொடுத்திருப்பாங்க. பாசி, ஊசி விக்கிறவங்களுக்காக இரக்கப்படுவாங்களா? நான் இன்னும் எத்தனை பிள்ளைகளை பெத்துக்கிட்டாலும், ஹரிணி போல ஒரு பிள்ளையை பெற என்னால முடியாது. ஹரிணி கிடைக்கிறவரை அவ காணாமல் போன பவுஞ்சூர் சாலை ஓரம்தான் எங்க வசிப்பிடம். அவ கிடைச்சா நாலு பேரா வூட்டுக்கு போவோம். இல்லைன்னா, அங்கேயே எங்க ஆயுசு முடிஞ்சுரும்" என்றார் சோகம் வார்த்தைகளில் தெறிக்க!

அடுத்து பேசிய அவரது கணவர் வெங்கடேசன், "முழிச்சா அவ நெனப்பு, படுத்தா அவ நெனப்புதான் சார். அவ காணாம போயி இரண்டு மாசம் கடந்துட்டு. வேலைக்குப் போக முடியலை. ஒரே நேரத்துல கருப்பு அய்யனார் மாதிரியும், மதுரை மீனாட்சி மாதிரியும் இருக்கும் அவளைப் பார்த்தாதான் எங்களுக்கு நிம்மதி. 'நீ இன்னொருத்திய வச்சுருக்க. ஹரிணியை அதனால் காளியம்மாளுக்கு தெரியாம வேற யாருக்கோ தூக்கி கொடுத்துட்ட'ன்னு ஈவு இரக்கமே இல்லாம பழி போடுது போலீஸ். நாக்குல நரம்பே இல்லாம பேசுறாங்க. எங்களுக்கு உறவினர்கள்கூட உதவலை. வருமானமே இல்லாம இருக்கிற எங்களுக்கு எல்லாத்துக்கும் உதவுறது கரூரைச் சேர்ந்த அமைப்புதான். இப்ப வீட்டுக்கே கூப்பிட்டு எங்களை தைரியப்படுத்தி அனுப்புறாங்க. அவங்க மட்டும் உதவலன்னா, நாங்க ரெண்டு பேரும் இந்நேரம் செத்துப் போயிருப்போம். உங்க விகடன் பத்திரிகையும் ஹரிணியைப் பற்றி தொடர்ந்து செய்தி வெளியிட்டு, ஹரிணி பற்றி உலகம் முழுக்க பல ஆயிரம் பேருக்குத் தெரியவச்சாங்க.  

ஹரிணி கிடைக்கனும்ன்னு ஐம்பது கோயில் படிகளை ஏறி இறங்கி இருக்கோம். சபரிமலைக்கு மாலையும் போட்டிருக்கிறேன். 'ஹரிணி கிடைச்சா மொட்டை போட்டுக்க வேண்டி இருக்கேன்'ன்னு புதுச்சேரியைச் சேர்ந்த ஜான்சிங்கிற இளம்பெண் போன் பண்ணி சொல்றாங்க. அவங்களுக்கு இன்னும் பதினைஞ்சு நாள்ல கல்யாணம். அதைக்கேட்டதும் நான் வெடிச்சு அழுதுட்டேன். இன்னும் பலர் தங்கள் வீடுகள் முன்பு ஹரிணி பற்றிய தகவலை பேனரா அடிச்சு வச்சுருக்காங்க. 'காணவில்லை'ன்னு நோட்டீஸ் அடிச்சுக் கொடுக்குறாங்க. கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் காளியம்மாள் வைத்தியச் செலவுக்கு பணம் அனுப்புறாங்க. இவங்க தர்ற நம்பிக்கையில், காட்டுற பாசத்துலதான் நாங்க இன்னும் உசிரோட இருக்கோம். எங்க ரெண்டு பேரோட உசிரை எடுத்துக்கிட்டாவது ஹரிணியை திருப்பிக் கொடுத்துடுங்க சாமி. ஹரிணி இல்லாம நாங்க நடைபிணமா வாழுறோம். ஹரிணி கிடைக்கலன்னா, அணைக்கட்டு காவல் நிலையம் முன்பு ரெண்டு பேரும் விஷத்தை வாங்கி குடிச்சுட்டு உசிரை மாய்ச்சிக்குவோம்" என்றார் சோகம் கப்பிப் போன குரலில்!

ஹரிணியை இழந்து வாடும் தாயைத் தவிக்கவிட்டு, தாய் அன்பைப் பொசுக்கிவிடாதீர்கள்!