Published:Updated:

ஒரு வெள்ளை காதல்! - ஃபேனி பார்க்ஸ்

ஒரு வெள்ளை காதல்! - ஃபேனி பார்க்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஒரு வெள்ளை காதல்! - ஃபேனி பார்க்ஸ்

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்

ஒரு வெள்ளை காதல்! - ஃபேனி பார்க்ஸ்

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்

Published:Updated:
ஒரு வெள்ளை காதல்! - ஃபேனி பார்க்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஒரு வெள்ளை காதல்! - ஃபேனி பார்க்ஸ்

இந்தியா எப்படி பிரிட்டனின் காலனி நாடாக மாறியது என்பது குறித்தும், ஆதிக்கத்தை உடைத்தெறிந்து எப்படி இந்தியா தன்னை விடுவித்துக்கொண்டது என்பது குறித்தும் எண்ணற்றப் பதிவுகள் வெளிவந்துவிட்டன. ஆனால், பிரிட்டனும் இந்தியாவும் எப்படி ஒன்றோடொன்று உரையாடிக்கொண்டன; அந்த உரையாடல் எத்தகைய மாற்றங்களை இரு நாடுகளைச் சேர்ந்தவர்களிடத்தில் ஏற்படுத்தின என்பது விரிவாக விவாதிக்கப்படவில்லை. ஃபேனி பார்க்ஸ், முக்கியமான ஓர் எழுத்தாளராக உயர்வது இந்த இடத்தில்தான். பிரிட்டனும் இந்தியாவும் உரையாடிக்கொண்டதை அருகில் இருந்து கேட்டு எழுதியவர் அவர். காதுகளை மட்டுமல்ல; மனதையும் திறந்துவைத்துக்கொண்டு அவர் செய்துள்ள பதிவு, நேர்மையானது; அசாத்தியமானது.

ஃபிரான்செஸ் சூஸன்னா ஆர்ச்சர் எனும் ஃபேனி, 1794 டிசம்பர் 8 அன்று வடக்கு வேல்ஸ் பகுதியில் பிறந்தார். `அழகான, திறமையான பெண்’ என வர்ணிக்கப்பட்ட ஃபேனி, 27-வது வயதில் சார்லஸ் கிராஃபோர்ட் பார்க்ஸைத் திருமணம் செய்துகொண்டார். சார்லஸுக்குக் கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தராகப் பணி நியமனம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நவம்பர் 1822-ல் இருவரும் கொல்கத்தா வந்தடைந்தனர். நிறுத்தங்கள் ஏதுமின்றி ஐந்தரை மாதங்கள் தொடர்ந்து சென்று களைப்பூட்டும் கப்பல் பயணம் அது.

முதல் பார்வையிலேயே இந்தியாவைக் காதலிக்கத் தொடங்கிவிட்டார் ஃபேனி. `இங்கு நிலவும் மிதமான குளிர் என்னை ஈர்த்துவிட்டது. இதைவிட மகிழ்ச்சியளிக்கக்கூடிய இன்னொரு நாடு இந்த உலகில் இருக்கிறதா?’

ஒரு வெள்ளை காதல்! - ஃபேனி பார்க்ஸ்

சௌரிங்கியில் பெரிய வீடு வாடகைக்குக் கிடைத்தது. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர பணியாளர்கள். அழகிய தோட்டம். இதையெல்லாம் பிரிட்டனில் நினைத்தாவது பார்க்க முடியுமா?

மாலை நேரத்தில் ஃபேனி காலார வெளியே சுற்றிவந்தார். குதிரைமீது தாவி ஏறி, கிராமப்புறங்களை வலம்வருவதும் உண்டு. மற்றபடி உண்டு, உறங்கி பொழுதைக் கழிப்பதுதான் ராஜ வாழ்க்கையா? அலுத்துப்போன ஃபேனி, தன்னைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள இந்தி, சம்ஸ்கிருதம் இரண்டையும் கற்க ஆரம்பித்தார். விரைவில் குளிர் மறைந்து கடும் சூடு வதைக்க ஆரம்பித்தது. `இந்தியா முடிவில்லா மகிழ்ச்சியை மட்டுமே அள்ளித்தரும் ஒரு தேவதை உலகமல்ல' என்பதைப் புரிந்துகொள்ள, ஃபேனிக்கு அதிக காலம் பிடிக்கவில்லை. ஆனால், இது எந்த வகையிலும் இந்தியா மீதான அவருடைய ஈர்ப்பைக் குறைக்கவில்லை. மாறாக, அதிகரிக்கவே செய்தது. `நான் இந்த நாட்டின் நீள, அகலங்களைச் சுற்றித் திரிந்து அப்படி இங்கே என்னதான் இருக்கிறது என்பதைக் கண்டறியப் போகிறேன்' என்று முடிவெடுத்தார். அடுத்த 24 ஆண்டுகளில் ஃபேனி இங்கே மேற்கொண்ட பயணங்கள், அவரை அடியோடு மாற்றியமைத்தன.

மிக முக்கியமாக,  பரிவாரமும் படையும் சூழ ஃபேனி பயணங்கள் மேற்கொண்டதில்லை. மூட்டைமுடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார். `நம்மைப் போன்ற நாகரிகப் பெண்கள் தனியாகப் பயணம் செய்வது சரியில்லை' என்று பல சீமாட்டிகள் கரிசனத்தோடு அவருக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள். `மேம்சாஹிப், இது கொள்ளைக்காரர்களும் ஆள்கொல்லி புலிகளும் நடமாடும் பகுதி. உங்கள் கணவரை அழைத்துக்கொண்டு வந்திருக்கலாமே!' என்று இந்தியர்களுமேகூட ஃபேனியை மாற்ற முயன்றிருக்கிறார்கள்.

ஒருநாள் வனப்பகுதிக்கு அருகில் பல்லக்கில் சென்றுகொண்டிருந்தபோது, நிலவொளியில் ஒரு புலி தென்பட்டது. சில நிமிடங்கள் அனைவரும் நின்றனர். அந்தப் புலி அங்குமிங்கும் பார்வையைச் சூழலவிட்டுவிட்டு சோம்ப லுடன் கடந்து சென்றுவிட்டது. `ஆள்கொல்லியாவது புலியாவது, ஃப்பூ' என்று சிரித்துக்கொண்டார் ஃபேனி. தனியாகச் சுற்றித் திரியும் தன்னைக் கண்டு கவலைப்படும் அனைவருக்கும் ஃபேனி அளிக்கும் ஒரே பதில், `நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன்’ என்பதுதான். `இந்தியாவில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இரண்டு விஷயங்கள் தேவை. ஒரு நல்ல அரேபிய குதிரை, ஒரு நல்ல கூடாரம். இவை இருந்துவிட்டால் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை’ என்கிறார் ஃபேனி.

இவரின் ஆரம்பகாலப் பயணங்கள் அனைத்தும் அழகைத் தேடியே அமைந்திருந் தன. ஏரிகள், மலைகள், செடி கொடிகள், மரங்கள், புல்வெளிகள், மாளிகைகள், மலர்கள், திருவிழாக்கள், கடை வீதிகள், குழந்தைகள் என்று பார்த்துப் பரவசம் அடைந்தார். ஒருகட்டத்தில் அவருடைய தேடல் விரிவடையத் தொடங்கியது. இந்தியாவின் வரலாறு, கலாசாரம், வாழ்க்கை முறை என விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்பினார். இந்துக்களின் சடங்குகள், வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள் ஆகியவற்றில் ஆர்வம் செலுத்தினார். அனைத்தையும் அவர் புரிந்துகொண்டார் என்றோ, அனைத்தையும் அவர் ஏற்று அங்கீகரித்தார் என்றோ சொல்ல முடியாது. குறிப்பாக, சில பக்தர்கள் தங்கள் உடலை வருத்திக்கொள்வது, நாக்கில் அலகு குத்திக்கொள்வது, சதையைக் கீறி ரத்தம் சிந்துவது போன்ற சடங்குகள் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு வெள்ளை காதல்! - ஃபேனி பார்க்ஸ்

ஒருமுறை கொல்கத்தாவில் உள்ள காளி கோயிலில் நடைபெற்ற திருவிழா ஒன்றை நேரில் கண்டார் ஃபேனி. பளிச்சிடும் வண்ண ஆடைகளை உடுத்திக்கொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டிருந்தனர். உடலெல்லாம் சாம்பலை அப்பிக்கொண்டு, கிட்டத்தட்ட முழு நிர்வாணமாக இருந்த சாமியார்களும் தென்பட்டனர். அவர்களுடைய சடைமுடி அழுக்காகவும் தோள் முழுக்கப் பரவியும் கிடந்தது. சற்றுத் தள்ளி நடந்தபோது, முப்பதடி உயரத்தில் மூன்று நீண்ட கம்புகள் நட்டு வைக்கப்பட்டிருந்தன. உச்சியில் மூங்கில் கழிகள் குறுக்கு வாக்கில் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றில் மனிதர்கள் கயிற்றில் ஊசலாடிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எப்படி மூங்கிலோடு பிணைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டபோது ஃபேனி அதிர்ச்சியடைந்தார்.

ஒவ்வொரு மனிதனின் உடலிலும் நான்கு இரும்புக் கொக்கிகள் சதையைத் துளைத்தபடி பொருத்தப்பட்டிருந்தன. அந்த வளையங்கள் கயிற்றிலும், கயிறு மூங்கிலிலும் இணைக்கப்பட்டிருந்தன. கையையும் காலையும் விரித்தபடி தொங்கிக்கொண்டிருந்த ஒவ்வொரு மனிதனின் கையிலும் பையொன்று இருந்தது. கீழிருந்தபடி அண்ணாந்து வேடிக்கை பார்க்கும் கூட்டத்தின் மீது அவர்கள் இனிப்பையோ, மலரையோ தூவுவார்கள். சிலர் ஆடைகளின்றி எட்டு கொக்கிகளோடு தொங்கிக்கொண்டிருந்தனர். மக்களை மகிழ்விப்பதற்காகவோ, வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவோ இப்படித் தொங்குவது வழக்கம். செல்வந்தர்களுக்கும் வேண்டுதல்கள் இருக்கும் என்றாலும், அவர்கள் தாமே கொக்கி மாட்டிக்கொண்டு தொங்குவதில்லை. அதற்குப் பதில் பணம் கொடுத்து சில ஏழைகளை நியமித்துக் கொண்டார்கள். `இப்படிப்பட்ட அருவருப் பான விஷயங்களைக்கூடத் தெரிந்துகொள்ள விரும்பினேன்’ என்கிறார் ஃபேனி.

கணவனை இழந்த பெண்களின் நிலை அவரை அழுத்தியது. இளம்பெண்கள் பலர் கங்கை நதிக்கரையிலும் கொல்கத்தாவின் பல பகுதிகளிலும் உடன்கட்டை ஏறுவதை வழக்கமாக வைத்திருந்ததை அறிந்து மனமுடைந்து போனார். அதேநேரம், `இது நாகரிகமற்ற நாடு. இங்கே இப்படித்தான் பெண்களை நடத்துவார்கள்' என்று பல சீமாட்டிகளைப்போல அவர் அங்கலாய்க்க வில்லை. `தேச எல்லைகள் கடந்து, நிறபேதம் கடந்து, எல்லா இடங்களிலும் பெண்கள் மோசமாகவே நடத்தப்படுகின்றனர்' என வாதிட்டார். `பெண்கள், ஆண்களுக்குக் கீழே' என்னும் விதி எல்லா மொழிகளிலும், எல்லா சமூகங்களிலும் நிலவுவதை, தன்னுடன் உரையாடுபவர்களிடம் சுட்டிக்காட்டினார். `இது ஆண்கள் வகுத்த சட்டம், அப்படித்தான் இருக்கும்’ என்றார்.

ஃபேனி சித்தார் கற்றுக்கொண்டார். சரளமாக உருதுவில் உரையாடினார். அந்தப்புரங்களில் அமர்ந்து அங்கிருந்தவர்களிடம் உரையாடி னார். லக்னோ, டெல்லி, குவாலியர், கான்பூர், டெல்லி, முசோரி என மனம் போன திசைகளிலெல்லாம் சென்றார். ஃபேனிக்குத் தெரியாததே கிடையாது என எல்லோரும் பேசிக்கொண்டது ஒரு ராஜபுத்திர இளவரசியின் காதிலும் விழ, அவர் ஃபேனியைத் தன் மாளிகைக்கு வரவேற்றதோடு, ஒரு விண்ணப்பத்தையும் வைத்தார். `உங்களுக்கு ஒட்டக அலங்காரம் தெரியும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னிடம் நிறைய ஒட்டகங்கள் இருக்கின்றன. அரண்மனை மக்களுக்கு அந்த அலங்காரம் செய்யக் கற்றுக்கொடுக்க முடியுமா?' என்றதும், `ஓ, இதற்கென்ன!' என்று வேலையில் இறங்கிவிட்டார் ஃபேனி. அவருடைய நினைவுக்குறிப்புகளில் இடம்பெற்றுள்ள ஓர் அத்தியாயத்தின் தலைப்பு, `ஒட்டகத்தை அழகுப்படுத்துவது எப்படி?’

அடுத்த கட்டத்துக்கு முன்னேறினார் ஃபேனி. இந்த மண்ணோடும் மக்களோடும் என்னைப் பிணைத்துக்கொள்ள முடியுமா? `இந்தியாவில் இருக்கும்போது இந்தியராக நடந்துகொள்வதே இயல்பானது' என்றார் ஃபேனி. இந்த ஃபேனி ஏன் இப்படி இந்தியர் போலவே சிந்திக்க வேண்டும் என்று பலருக்கும் விளங்கவேயில்லை.

ஒருமுறை தாஜ்மகாலுக்கு அருகில் ரமலான் பெருநாள் கொண்டாட்டத்தைக் காணச் சென்றிருந்தார். வண்ண வண்ண ஆடைகள் அணிந்திருந்த மக்கள் கூட்டம் அழகாகவும் அந்த இடத்துக்குப் பாந்தமாகவும் இருந்ததைக் கண்டார். `அது சரி, இந்த இடத்தில் மேற்கத்தியர்கள் ஏன் அங்குமிங்குமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்? அவர் களுக்கு இங்கே என்ன வேலை?' என்று ஃபேனியின் முகம் சுருங்கியது. அவர் எழுதுகிறார்... `பெரிய தொப்பிகளும் இறுக்க மான ஆடைகளும் அணிந்திருந்த ஐரோப்பிய சீமான்களையும், நளினமற்ற ஆடைகளை அணிந்திருந்த ஆங்கிலேய சீமாட்டிகளையும் கண்டு எரிச்சலுற்றேன்.’ இன்னோரிடத்தில், `இந்தியப் பெண்கள் அழகாகக் கவிதைபோல நடந்து செல்கிறார்கள். ஐரோப்பாவில் இந்தப் பண்பு அரிதாகவே இருக்கிறது’ என்கிறார் ஃபேனி.

ஒரு வெள்ளை காதல்! - ஃபேனி பார்க்ஸ்

ஆக்ரா கோட்டையில் உள்ள பெண்களின் வசிப்பிடம் பிரிட்டிஷ் அதிகாரிகளால் மாற்றியமைக்கப்பட்டதை அறிந்தபோது ஃபேனி துடித்துப்போனார். `இந்தப் பாழாய்ப்போன ஐரோப்பிய அதிகாரிகள் இந்த அழகிய இடத்தை எப்படி ஒரு சமையலறையாக மாற்றியிருக்கிறார்கள், பாருங்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடத்தை இப்படியா செய்வது? அழகிய மேற்கூரை, பளிங்குத் தரை, உள்வேலைப்பாடுகள் அனைத்தும் இப்போது பாழாகிவிட்டன. அவமானம்!’

ஃபேனியின் மனதுக்கு நெருக்கமான ஓர் இடம், தாஜ்மகால். `உன்னை ஒருமுறை நேரில் கண்டுவிட்டேன் என்னும் பரவச உணர்வே எனக்குப் போதுமானது. என்னால் இனி நிம்மதியாகக் கல்லறையில் துயில முடியும்.’

ஃபேனி பெருமதிப்புடன் கொண்டாடிய தாஜ்மகாலில் பளிங்குக் கல்லறைக்கு அருகில் ஒரு பிரிட்டிஷ் இசைக்குழு கலை நிகழ்ச்சி நடத்தியதைக் கேள்விப்பட்டார் ஃபேனி. அதில் கலந்துகொண்ட ஐரோப்பிய ஆண்களும் பெண்களும் உல்லாசமாக நடனமாடி மகிழ்ந்தனர் என்னும் செய்தி கிடைத்ததும் முகம் சிவந்துவிட்டது ஃபேனிக்கு. `இதைவிட அருவருப்பூட்டும் வேறு செயல் இருக்கிறதா? என்னால் தாஜ்மகாலுக்குள் பயபக்தியோடு மட்டுமே நுழைய முடியும். அது, ஒரு புனித இடம்; பேரரசு குடும்பம் வாழ்ந்த இடம். இப்படியா அந்த இடத்தை அவமதிப்பது?’

வெளுத்த உடலையும் கடந்து உணர்வுபூர்வமாக ஓர் இந்தியராகவே ஃபேனி மாறிப்போயிருந்ததையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. பிற்போக்கான, வளர்ச்சி குன்றிய நாடு எனக் கருதப்பட்ட இந்தியாவை, நாகரிக வெள்ளை மனிதர்கள் என்ன செய்து வைத்திருக் கிறார்கள் என்பதை அருகில் இருந்து பார்த்த ஃபேனிக்கு, ஐரோப்பிய மேட்டிமைத்தனத்தின் (மற்றவர்களைவிட தாம் உயர்ந் தவர்கள் என்கிற கர்வம்) அபாயம் நன்கு புரிந்தது. தன் கணவர் பணியாற்றிய கிழக்கிந்திய கம்பெனி குறித்து மிகத் தீவிரமாக விமர்சனங்களை அவர் முன்னெடுத்ததற்கு இந்தப் புரிதலே காரணம் என்கிறார் பிரபல வரலாற்றாசிரியர்  வில்லியம் டால்ரிம்பிள்.

வர்த்தக நிறுவனம் ஒன்று, எப்படி காலனி யாதிக்கச் சக்தியாக மாறிக்கொண் டிருக்கிறது என்பதைக் கண்ட ஃபேனி, இந்தியாவை இன்னமும் தீவிரமாக, மேலும் நெருக்கமாக நேசிக்க ஆரம்பித்தார். `சிதிலமடைந்து கொண்டிருக்கும்’ ஆவாத் சமஸ்தானத்தை நாம் இணைத்துக்கொள்ள வேண்டும் என்னும் குரல் கிழக்கிந்திய கம்பெனியினராலும் அவர்களுடைய ஆதரவாளர்களாலும் வலுவாக எழுப்பப்பட்டபோது, ஃபேனி தன் மறுப்பைத் திடமாகப் பதிவுசெய்தார். `கம்பெனி ஆட்சியின்கீழ் இருப்பவர்களைக் காட்டிலும் ஆவாத்தின் மக்கள் மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சிதான் வேண்டும் என்று அவர்கள் துடிப்பதாகத் தெரியவில்லை.’ இந்தியா எவருக்கும் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டிய அவசியமில்லை என்னும் தேசியவாதக் குரலை ஃபேனியிடமும் ஒருவர் தெளிவாக இனம் காண முடியும்.

ஒருநாள் பயணம் முடிவுக்கு வந்தது. ஒருவழியாக விடைபெற்றுக்கொண்டு அவர் தன் வீட்டுக்குத் திரும்பினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் தன் கால்களைப் பதித்தார் ஃபேனி. பெட்டியோடு வந்து நிற்கும் தன் மகளை அவருடைய அம்மாவால் அடையாளம் காண முடியவில்லை. முற்றிலும் புதிய நபராக ஃபேனி திரும்பி வந்ததை  வில்லியம் டால்ரிம்பிள் அழகாகக் குறிப்பிடுகிறார். `காலனியாதிக்கம் இப்போது தலைகீழாகத் திரும்பியிருந்தது. ஆதிக்கம் செய்ய இந்தியாவுக்கு வந்தவர்களில் ஒருவர் இந்தியாவின் ஆதிக்கத்துக்கு ஆளாகி, உருமாறிவிட்டார். இந்தியா, ஃபேனி பார்க்ஸை வென்றெடுத்துவிட்டது.’

வீடு திரும்புதல் மனநிறைவை அளிக்கும் என்றுதான் ஃபேனி நினைத்திருந்தார். ஆனால், அது அவ்வாறாக இருக்கவில்லை. உடைந்துபோய் எழுதினார் ஃபேனி. `இந்தியாவைவிட்டுப் பிரிந்தது என் மனதை என்னவோ செய்கிறது!’