பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“நிலம், உழைப்பவர்களின் உரிமை!”

“நிலம், உழைப்பவர்களின் உரிமை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“நிலம், உழைப்பவர்களின் உரிமை!”

விஷ்ணுபுரம் சரவணன் - படம்: க.பாலாஜி

“கணவனை இழந்த இளம் பெண்களுக்குக் கல்வி கொடுக்கிறதுக்காக செளந்தரம்மா போனப்போ, தன்னோட உதவிக்கு என்னையும் கூட்டிட்டுப் போனாங்க. அப்போ எனக்கு வயசு 15, 16 இருக்கும். 90 வயசாயிடுச்சு...  இப்போ வரை ஓடிட்டிருக்கேன்” - பேச்சின் ஊடே மூச்சு ஏறி இறங்க, முதுமையைப் பொருட்படுத்தாமல் பேசுகிறார் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்.

“நிலம், உழைப்பவர்களின் உரிமை!”

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இலவச மையத்தில் தங்கி, கல்வி பெற்று, ‘மதுரையின் முதல் பெண் பட்டதாரி’ என்ற பெருமையைப் பெற்றவர். காந்தியக் கொள்கையில் பெரும் ஈடுபாடுகொண்டு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன் கணவர் சங்கரலிங்கம் ஜெகநாதனுடன் இணைந்து செயலாற்றியவர். 1968-ல் கீழ்வெண்மணியில் 44 விவசாயக் கூலிகள் கொல்லப்பட்டபோது ‘உழவனின் நில உரிமை இயக்கமா’ன ‘லாஃப்டி’ அமைப்பை நிறுவியவர்.

‘`நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் நிலமாவது கிடைக்கணும்னுதான் இந்த வயசிலும் உழைச்சுட்டிருக்கேன். திண்டுக்கல் பக்கத்துல ஒரு கிராமத்துல பிறந்து, படிப்புக்காக வீட்ல அடம்பிடிச்சு, அண்ணனோடு மதுரைக்கு வந்த எனக்கு அடைக்கலம் தந்தாங்க, டி.வி.எஸ் குடும்பத்தைச் சேர்ந்த மருத்துவர் செளந்தரம். அவங்களோட சமூகப் பணிக்கு உதவியா இணைந்தேன்’’ என்பவரின் வாழ்க்கை, சமூக நீதிப் போராட்டத்தின் அடையாளமாக, அகராதியாக ஆனது. செங்கல்பட்டில் தன் மகள் வீட்டிலிருக்கும் கிருஷ்ணம்மாளைச் சந்தித்தோம்.

“காந்தியை முதன்முதலாகச் சந்தித்தது பற்றிச் சொல்லுங்களேன்...”

“1946-ம் வருஷம், பிப்ரவரின்னு நினைக்கிறேன். சென்னையில் தக்கர் பாபா வித்யாலயாவைத் திறந்துவெச்சுட்டு, மதுரைக்கு வந்தார் காந்தி. செளந்தரம் அம்மா என்னை, வைத்தியநாத ஐயர் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்கே, காந்தியை மதுரைக்கு முன் எந்த ஸ்டேஷனில் இறக்கிக் கூட்டிட்டு வர்றதுன்னு ஆலோசனை செய்திட்டிருந்தாங்க. ஒருமனதா விலாங்குடி ஸ்டேஷன்னு முடிவாச்சு. நானும் அந்த ஸ்டேஷனுக்குப் போனேன். ஆனா, காந்தியைப் பார்க்க முடியலை. செளந்தரம்மா, காரில் என்னையும் ஏத்திக்கிட்டாங்க.

“நிலம், உழைப்பவர்களின் உரிமை!”

அடுத்து, கூடியிருந்த கூட்டத்துல, மேடையில எல்லோரும் ஏறணும்னு முண்டியடிச்சுட்டி ருந்தாங்க. காந்தி,  ‘அமைதியா இருங்க’னு சொல்லிட்டே இருந்தார். யாரும் அடங்கலை. அவர் அப்படியே சுருண்டு படுத்துக்கிட்டார். கூட்டம் முடிந்ததும் (அந்தக் கூட்டத்தில்தான், காந்தியின் தொண்டர்படையில் இருந்த, கிருஷ்ணம்மாளின் கணவர் ஜெகநாதனும் கலந்துகொண்டிருந்திருக்கிறார்),  விடுதியில சுசீலா நாயரோடு என்னையும் தங்கி காந்திஜியை கவனிச்சுக்கச் சொன்னாங்க செளந்தரம்மா. அங்கே வந்த ராஜாஜி, ‘யார் இந்தப் பொண்ணு?’னு கேட்டப்போ, செளந்தரம்மா, ‘என் பொண்ணு’னு சொன்னாங்க (கண் கலங்குகிறார்). அப்போ பல பேரு வந்து மணிக்கணக்கா காந்தியோடு பேசிட்டுப் போவாங்க. எனக்குத் தெரிஞ்ச அரைகுறை இங்கிலீஷ்ல நானும் ஏதாவது கேட்பேன். அந்த மூணு நாள்களை மறக்கவே முடியாது.

ஒருநாள், காலேஜ் சீக்கிரம் முடிஞ்சுட்டதால வீட்டுக்கு வந்துவிட்டேன். ஒரு அஞ்சு மணியளவில் ரேடியோவில், ‘பிரார்த்தனை செய்யச் சென்ற இடத்தில் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்’னு அறிவிச்சாங்க. அதைக் கேட்டதும் அந்த இடத்திலேயே நான் மயக்கமாகிட்டேன்.”

“லாஃப்டி இயக்கம் எப்படி உருவானது?”

‘’கீழ்வெண்மணியில் அத்தனை பேரைக் கொளுத்தின செய்தியை பேப்பர்ல படிச்சேன். நேர்ல போய்ப் பார்த்தபோது, வாழ வேண்டிய உயிர்கள் எல்லாம் கரிக்கட்டைகளா, சாம்பலா... ஐயோ, அதை நினைச்சுப் பார்க்கவே முடியல. அங்கேயே தங்கி, அவங்களுக்கு நிலம் வாங்கிக்கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். பகல்ல, நிலைமை என்னன்னு பார்க்கப் போவேன்; ராத்திரியில ஏதாச்சும் ஒரு குடிசையில படுத்துக்குவேன். நிறைய நிலம் வெச்சிருக்கிற நிலக்கிழார்களிடம் பேசி, கெஞ்சி, நிலத்தை வாங்கி நிலமில்லாதவர்களுக்குக் கொடுத்தேன். அதுக்கான பணத்தை உதவி செய்ய விரும்புகிறவர்கள்கிட்ட இருந்து வாங்கிப்பேன். அப்படி ஒருமுறை கூத்தாநல்லூர் இஸ்லாமியர் ஒருத்தரிடமிருந்து 82 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்காக ஒரு டிரஸ்ட் உருவாக்க வேண்டிய தேவை வந்ததால் உருவானதுதான், லாஃப்டி (LAFTI).”

“நிலம், உழைப்பவர்களின் உரிமை!”

‘`தற்போதைய அரசியல் விஷயங்களைக் கவனிக்கிறீர்களா?”

‘`சென்னை - சேலம் எட்டு வழிப் பாதை அமைக்கும் பணியில் பலர் நிலம், வீட்டை இழக்கப்போறாங்க. அது வளர்ச்சிக்கானதுன்னு சொல்லப்படுது. வளர்ச்சி முக்கியம்தான். ஆனா, அதுக்காக யார் வயித்துலேயும் அடிக்கக்கூடாது இல்லையா? இப்படித்தான் நாகப்பட்டினம் பக்கம் வளர்ச்சிக்காகன்னு இறால் பண்ணையைக் கொண்டு வந்தாங்க. அதை எதிர்த்து நானும் என் கணவரும் டெல்லிக்குப் போய் உண்ணாவிரதம் இருந்தோம். மேனகா காந்தி போன்றவங்க கேட்டுக்கிட்டதால போராட்டத்தைக் கைவிட்டு ஊருக்கு வந்தோம். இப்போ நாகப்பட்டினம் பகுதியில என்ன வளர்ச்சி வந்துடுச்சு? சேலம் மக்கள் போராடுறதைப் பார்க்குறேன். என் உடம்பு ஆரோக்கியமா இருந்திருந்தா, நான் முதல் ஆளா அவங்களோட கைகோத்து நின்னிருப்பேன். என்ன செய்ய... கொஞ்சம் நடந்தாலே தலை சுத்திட்டு மயக்கம் வருது.”

“உங்கள் வாழ்வில் பெருமிதமான தருணமாக எதைச் சொல்வீர்கள்?”

“பெருமிதம்னு சொல்ல முடியாது. சந்தோஷமான தருணம்னு அதைச் சொல்லலாம். 16,000 ஏக்கருக்கு நிலங்களைப் பெற்றுத் தந்திருக்கோம். ரெண்டாயிரத்துக்கும் மேல வீடுகளைக் கட்டியிருக்கிறோம். இதில் குறிப்பிட்டுச் சொல்லணும்னா, ஏழை விவசாயிகளுக்கு ஒரே நாளில் 1,040 ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்து கொடுத்தோம். அதுக்கு, அப்போது முதல்வராக இருந்த  கருணாநிதி ரொம்ப உதவினார். இப்ப அவர் உடம்புக்கு முடியாம இருக்கிற செய்தியைப் படிக்கிறேன். நேர்ல போய்ப் பார்க்க ஆசை.”