Published:Updated:

``குதிரையில் இருந்து விழுந்திருக்கேன்... கடிகூட வாங்கியிருக்கேன்!” - குதிரைப்படை வீரர் சுகன்யா

``குதிரையில் இருந்து விழுந்திருக்கேன்... கடிகூட வாங்கியிருக்கேன்!” - குதிரைப்படை வீரர் சுகன்யா
பிரீமியம் ஸ்டோரி
``குதிரையில் இருந்து விழுந்திருக்கேன்... கடிகூட வாங்கியிருக்கேன்!” - குதிரைப்படை வீரர் சுகன்யா

வித்தியாசம்சு.சூர்யா கோமதி - படங்கள் : தி.குமரகுருபரன்

சென்னை, மெரினா பீச். ஓயாத அலைகளை ரசித்துக்கொண்டிருக்கும் கண்களைத் தங்கள் பக்கம் திரும்ப வைக்கிறது, குதிரைகளின் குளம்புச் சத்தம். தமிழக அரசின் குதிரைப்படை குதிரைகள் அவை. கம்பீரமாக ஒரு குதிரையின் மீது அமர்ந்து வருகிறார் சுகன்யா. 45 காவலர்களைக்கொண்ட தமிழகக் குதிரைப்படையில், இப்போது ஒரே ஒரு பெண் காவலராகப் பணிபுரிபவர்.

“ஹே ராஜாத்தி... இவங்க நம்மள பார்க்கத்தான் வந்திருக்காங்க, கொஞ்சம் உன் சேட்டையை நிறுத்திட்டு ஓர் இடத்துல நில்லு’’ என்று தன் குதிரைக்கு அன்புக் கட்டளையிட்டுவிட்டு நம்மிடம் திரும்பினார் சுகன்யா. “எனக்குச் சொந்த ஊர் கோயம்புத்தூர். இளங்கலை ஆங்கிலம் படிச்சேன். ஸ்போர்ட்ஸ்னா ரொம்பப் பிடிக்கும். ஸ்கூல் படிக்கும்போதிலிருந்தே ஸ்போர்ட்ஸ்தான் நம்ம ஏரியா, கிரவுண்ட்தான் க்ளாஸ் ரூம். தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி வேலைபார்த்த எங்கப்பா, ‘தன்னம்பிக்கையுடன் வளரணும், சுயமா முடிவு எடுக்கத் தெரியணும்’னு சொல்லி என்னையும் எங்க அண்ணனையும் வளர்த்தார். என்கிட்ட, ‘நீ பெண்ணா பொறந்துட்ட காரணத்துக்காக யாரையும் நம்பி வாழக் கூடாது’ன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பார். அதனாலதான், அரசாங்க வேலையில் சேரணும் என்கிற முனைப்பு எனக்கு வந்தது.

``குதிரையில் இருந்து விழுந்திருக்கேன்... கடிகூட வாங்கியிருக்கேன்!” - குதிரைப்படை வீரர் சுகன்யா

கல்லூரிப் படிப்பை முடிச்சதும், முதல் முயற்சியிலேயே காவலர் வேலை கிடைச்சுடுச்சு. டிரெய்னிங் முடிஞ்சதும், ‘குதிரைப்படையில் சேர யாருக்கெல்லாம் விருப்பம்?’னு கேட்டாங்க. ‘குதிரையில ஏறி, இறங்கிறதுல அடிபட்டு பொம்பளைப் புள்ளைக்கு ஏதாச்சும் ஆகிட்டா என்ன பண்ணுறது?’னு எங்க வீட்டுல வேண்டாம்னு சொல்லிட்டாங்க. ஆனா, அவங்ககிட்ட சொல்லாம குதிரைப்படை பயிற்சிக்குப் போயிட்டேன். அங்கே நிறைய அடிபட்டுதான் கத்துக்கிட்டேன். திருடனுக்குத் தேள் கொட்டின மாதிரி, `வலிக்குது'னுகூட வீட்டில் சொல்ல முடியலை’’ - வாய்விட்டுச் சிரிக்கிறார் சுகன்யா. குதிரைப்படையில் சேர்ந்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் வீட்டில் சொல்லியிருக்கிறார்.

‘` `நீங்கதானே சுயமா முடிவெடுக்கணும்னு சொன்னீங்க? இது எனக்குப் பிடிச்சிருக்கு, செய்றேன்’னு அப்பாவைச் சமாதானப்படுத்தினேன். டிபார்ட்மென்ட்ல, ‘இந்தக் குதிரையில்தான் நீங்க பாதுகாப்பு பணிக்குப் போகப் போறீங்க. இது பேரு `பிராஸ்பெக்டட் ட்ரீம்’னு ஒரு குதிரையை என் பொறுப்பில் ஒப்படைச்சாங்க’’ என்று சுகன்யா சொல்ல, ராஜாத்தி தன் கால்களைத் தூக்கி, தலையை அசைக்கிறது. ‘சரி... சரி... அமைதியா இரு’ என்று குதிரையின் தலையை வருடிக்கொடுத்தவர், ‘`இவதான் அந்த பிராஸ்பெக்டட் ட்ரீம்.  ஆனா, நான் வெச்ச பேரு ராஜாத்தி. அந்தப் பேருதான் இவளுக்குப் பிடிக்கும்’’ என்று சொல்ல, தலையசைக்கிறது ராஜாத்தி.

“எட்டு வருஷத்துக்கு முன்னால் குதிரைப் படையில் சேர்ந்தேன். தினமும் காலையில் 5 மணி முதல் 7 மணி வரை வரையும், மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையும் மெரினாவில் ரோந்து போவோம். சுதந்திர தினம் போன்ற சிறப்பு தினங்களில் பரேடு செல்வது. குதிரைகளைக் கவனித்துக்கொள்வது இதுதான் எங்களுடைய ரெகுலரான பணிகள்’’ என்கிறவர், குதிரையைக் கட்டுப்படுத்திக்கொண்டே தொடர்ந்து பேசுகிறார்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``குதிரையில் இருந்து விழுந்திருக்கேன்... கடிகூட வாங்கியிருக்கேன்!” - குதிரைப்படை வீரர் சுகன்யா

‘`ஒவ்வொரு குதிரைக்கும் ஒவ்வொரு சுபாவம் இருக்கும். சில குதிரைகள் தண்ணியைப் பார்த்தா பயப்படும். சில குதிரைகள் சில நிறங்களைப் பார்த்தா மிரளும். அந்த மாதிரியான சூழல்ல, குதிரை தன்னை மறந்து வேகமெடுத்து நம்மைக் கீழே தள்ளிவிட்டுடும். எத்தனையோ பேருக்குக் குதிரை கீழே தள்ளி எலும்பு உடைஞ்சிருக்கு. நானும் இதுவரை பலமுறை குதிரையில் இருந்து கீழே விழுந்திருக்கேன்; அடிபட்டிருக்கேன். ஒருமுறை வேகமா ஓடி என்னைக் கடலுக்குள் தள்ளிவிட்டுருச்சு. அலை என்னை இழுத்துட்டுப் போக ஆரம்பிக்க, அவ்ளோதான்னு நினைச்சேன். நல்லவேளை அங்கே இருந்தவங்க எல்லாம் ஓடிவந்து காப்பாத்திட்டாங்க. எத்தனையோ முறை ராஜாத்திகிட்ட கடிகூட வாங்கியிருக்கேன். கோபப்படுவேனே தவிர, அவ மேல வெறுப்பு வந்ததில்லை. நான் ஒரு நாள் லீவு எடுத்துட்டு அடுத்த நாள் வரும்போது, அவ முகத்துல அவ்ளோ சந்தோஷத்தைக் காட்டுவா’’ என்று பாசமாக சுகன்யா சொல்ல, ராஜாத்தி திமிறுகிறது.

‘`அதோ... மற்ற வீரர்கள் எல்லாம் கிளம்பிட்டாங்கள்ல... இவ ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் போறாங்கனு கோபப்படுறா. எப்பவும் இவதான் ஃபர்ஸ்டா போகணும்னு நினைப்பா. இவளால இப்போ எல்லா இடங்களிலும் நான் ஃபர்ஸ்டா போயிட்டு இருக்கேன்’’ என்றவர், ஒரே ஜம்ப்பில் தன் குதிரை மீது ஏறி அமர்கிறார். `டாட்டா சொல்லு’ என்றதும், கீழே குனிந்து தலை அசைக்கிறது ராஜாத்தி!