Published:Updated:

``அவங்க நல்லா இருக்கணும்னுதான் நெலத்த வாங்கினோம்!'' - திருவண்ணாமலை முதிய தம்பதி

``அவங்க நல்லா இருக்கணும்னுதான் நெலத்த வாங்கினோம்!'' - திருவண்ணாமலை முதிய தம்பதி
``அவங்க நல்லா இருக்கணும்னுதான் நெலத்த வாங்கினோம்!'' - திருவண்ணாமலை முதிய தம்பதி

75 வயசுலேயும் விவசாயம் செய்து வாழ்ந்துக்கிறோம்னு சொல்றாங்களே... கண்டிப்பா நிலத்தை இவங்களுக்கு வாங்கிக் கொடுக்கணும்னு அந்தப் பகுதி ஆர்.டி.ஒ, தாசில்தாரை அனுப்பி விசாரணை செய்யச் சொன்னேன்.

பெற்ற தாய் தந்தையிடம் நிலத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை அலையவிட்ட மகன்களுக்குத் திருவண்ணாமலை கலெக்டர் புகட்டிய பாடம்தான் நேற்றைய ஹாட் நியூஸ். விஷயம் இதுதான்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுக்கா வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன் (70) அவர் மனைவி பூங்காவனம் (65). இவர்களுக்கு இரண்டு மகன்கள் மூத்தமகன் பழனி பஸ் கண்டக்டர், இரண்டாவது மகன் செல்வம் கட்டடத் தொழிலாளி. இவர்கள் இருவருக்கும், திருமணம் செய்துவைத்துவிட்டு மாதம் ஒருவர் வீட்டில் சாப்பிட்டு வந்துள்ளனர் கண்ணனும் பூங்காவனமும். பிள்ளைகள் நம்மை நன்றாகப் பார்த்துகொள்கிறார்களே என்கிற அதீதப் பாசத்தில் தன் பெயரில் இருந்த 5 ஏக்கர் நிலத்தை இரண்டு பாதியாகப் பிரித்து இரண்டு மகன்களுக்கு எழுதி வைத்திருக்கிறார் கண்ணன்.

அதன்பிறகு, இரண்டு மகன்களும் பெற்றோரை கொடுமைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அடித்துத் துன்புறுத்துவது, பட்டினி போடுவது என்று அவர்களின் துன்புறுத்தல் எல்லை மீறவே தாங்கமுடியாமல் திருவண்ணாமலை கலெக்டரில் புகார் கொடுத்தார்கள் கண்ணன் தம்பதி. கொதித்துப் போன கலெக்டர் நிலத்தை மகன்களிடமிருந்து திரும்பப் பெற்று இரண்டாகப் பிரித்து கண்ணணுக்கும் பூங்காவனத்துக்கும் பத்திரப்பதிவு செய்து வைத்துவிட்டார்.

மகன்களின் துன்புறுத்தலில் அவதிப்பட்டு, சரியான உணவு இல்லாமல் கண்கள் செருகிய நிலையில் இருந்த கண்ணனிடம் ஆறுதல் கூறிவிட்டுப் பேசினோம். ``எனக்குக் கல்யாணம் ஆனபிறகு, என் மனைவியும் நானும் சேர்ந்து உழைத்து சம்பாதிச்சு வாங்கினது இந்த ஐந்து ஏக்கர் நெலம். இந்த நெலத்துல விவசாயம் பண்ணித்தான் என் இரண்டு மகன்களையும் படிக்கவெச்சேன். கல்யாணமும் செய்து வெச்சேன். ரெண்டு வருஷம் கழித்து நெலத்தை ரெண்டாப் பிரிச்சு ரெண்டு பேருக்கும் எழுதி வெச்சேன். நெலத்தைப் பிரிக்கிற வரைக்கும் நல்லாப் பார்த்துக்கிட்ட பசங்க, அதுகப்புறம் கொடுமப் படுத்த ஆரம்பிச்சுட்டாங்க.

`காலை உணவுக்குச் சின்னவன் வீட்டுக்குப் போனா, மதிய சாப்பாட்டுக்கு இங்க வராதே உனக்கு நான் மட்டும்தான் பிள்ளையா? பெரியவனும் இருக்கான் அங்கே போ என்று சொல்லிவிட்டு பழைய கஞ்சியை ஊத்துவான். மதியம் பெரியவன் வீட்டுக்குப் போனா அங்கும் இதே நிலைமைதான். பல முறை எங்களைச் சின்னவன் அடித்துத் துன்புறுத்திருக்கான். இவனுகளை இப்படி ஆக்கினதுக்குக் காரணம் ஒரு காரணம் என் மருமகள்கள்.  

இனிமேல் இவன்களை நம்பினால் எங்கள் கதி அவ்வளவுதான்ங்கிறது புரிஞ்சது. என் மனைவி பூங்காவனமும் உடல் நிலை சரியில்லாமதான் இருக்கா. அவளுக்கு ஒரு கண்ல பார்வை மங்கிப்போச்சு. அதனால வெக்கத்தைவிட்டு என் பசங்ககிட்ட போய், `ரெண்டு பேரும் ஆளுக்கு 60 சென்ட் நெலத்தக் கொடுங்கப்பா... அதை வைச்சு அம்மாவும் நானும் சாப்புட்டுட்டு வாழ்ந்துக்குறோம். அதுகப்புறம் நீங்க பழையபடி அதை வைச்சுக்கோங்க'னு கெஞ்சுனேன். ஆனா, அவனுங்க ரெண்டுபேருமே `தரமுடியாது'னு சொல்லிட்டானுங்க. அவனுங்களுக்கு நெலத்தப் பிரிச்சுக் கொடுத்து 7 வருஷம் ஆச்சு. இந்த 7 வருஷமா எங்களுக்குச் சரியான சோறு தண்ணி இல்லாம, தெரிஞ்சவங்க குடுக்கிற கஞ்சித்தண்ணிய குடிச்சிகிட்டு, விவசாய வேலைக்குப் போய்ட்டு, அதுல கிடைக்கிற ஐம்பது ரூபா நூறு ரூபா பணத்தை வச்சி ரேஷன் கடையில அரிசி பருப்பு வாங்கி தனியாச் சமைச்சுச் சாப்பிடுகிறோம். 

இவனுங்க இரண்டுபேருமே ஆளுக்கு 60 சென்ட் நிலத்தக் கொடுத்தா அத வச்சி விவசாயம் பண்ணி வாழ்ந்துட்டுப் போய்டலாம். இனிமேலும் இவனுங்கள நம்பவேண்டாம்னு முடிவு பண்ணித்தான், 60 சென்ட் நிலத்த வாங்கிக் கொடுக்கச் சொல்லி கலெக்டர் அய்யாவிடம் மனு கொடுத்தோம் என்றவர், `அவனுங்க நல்லா இருக்கணும் என்றுதான் நாங்க கஷ்டப்பட்டு நெலத்த வாங்கினோம். அவனுங்களுக்காகத்தான் வாழ்ந்தோம். ஆனா இப்படிப் பண்ணுவாங்கனு நாங்க நெனைச்சுப் பார்க்கலை'' என்றார் கண்ணீருடன்.

இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி, ``அந்த வயசான தம்பதியோட மனுவைப் படிச்சதும் மன வருத்தமாப் போயிடுச்சு. 75 வயசுலேயும் விவசாயம் செய்து வாழ்ந்துக்கிறோம்னு சொல்றாங்களே... கண்டிப்பா நிலத்தை இவங்களுக்கு வாங்கிக் கொடுக்கணும்னு அந்தப் பகுதி ஆர்.டி.ஒ, தாசில்தாரை அனுப்பி விசாரணை செய்யச் சொன்னேன். அதன்பிறகு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் கீழ், செட்டில்மென்ட் பத்திரப்பதிவு செய்து கொடுத்ததை ரத்து செய்ய உத்தரவிட்டேன். ரத்து செய்தபின், 5 ஏக்கர் நிலத்தைக் கண்ணன் பெயரிலும் பூங்காவனம் பெயரிலும் பட்டா மற்றும் சிட்டாவை மாற்றி நேற்று அவர்களிடம் ஒப்படைத்தேன். இனி அவர்கள் வாழும்வரை வாழ்ந்துவிட்டு யாருக்கு நிலத்தை எழுதிக் கொடுக்கிறார்களோ அது அவர்களுடைய விருப்பம். தன்னைப் பெற்று வளர்த்த அப்பா அம்மாவுக்குச் சோறு போடாமல் அடித்துத் துன்புறுத்த எப்படித்தான் பிள்ளைகளுக்கு மனம் வருகிறதோ என்று தெரியவில்லை. இதெல்லாம் பாவம் இல்லையா... இதுபோன்ற செயல்கள் நகரங்களில் நடக்கின்றன. இப்போது கிராமங்களிலும் பெருகிவருகின்றன. தாய் தந்தையைக் கொடுமைப்படுத்துபவர்கள் மீது புகார் எழும்பட்சத்தில் உரிய நடவடிக்கை பாயும் என்றார்'' கடுமையாக.  

அடுத்த கட்டுரைக்கு