Published:Updated:

என்னஞ்சல்

என்னஞ்சல்
பிரீமியம் ஸ்டோரி
என்னஞ்சல்

புதிய தொடர்ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

என்னஞ்சல்

புதிய தொடர்ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
என்னஞ்சல்
பிரீமியம் ஸ்டோரி
என்னஞ்சல்

4th standard D Section படிக்கும் என் செல்லக்குட்டி மகனுக்கு...

உன் அம்மா, ஸாரி, மம்மி எழுதுவது...

ஹாய்டா!

என்னஞ்சல்

சின்ன வயசுல என் அப்பாவோட முதுகுல ஆனை விளையாட்டு விளையாடுவேன். ‘அம்பாரி’ விளையாட்டுன்னும் சொல்வோம். ஆனா அந்த வயசிலதான் உன்னை  Play school அனுப்பிவெச்சேன்.

ஆரம்பத்தில் நீ ரொம்ப அழுதே. ‘ஸ்கூலுக்குப் போக மாத்தேன். போ...’ இப்படியெல்லாம் அடம் பிடிச்சே. ஆனாலும் வலுக்கட்டாயமா ‘டாட்டா’ சொல்லிட்டு, ஹோண்டா ஆக்டிவாவை ஸ்டார்ட் பண்ணிட்டு ஆபீஸ் கிளம்பிட்டேன். அம்மா லேட்டா போனா ஆபீஸ்ல திட்டுவாங்கடா!

எப்படியும் ஈவ்னிங் வீட்டுக்கு வர, ஆறு, ஏழு மணி ஆகும்.  பிளே ஸ்கூலுடன் டே கேரிலும் உன்னைச் சேர்த்துவிட்டிருந்தேன். படிப்பு, விளையாட்டு, சாப்பாடு, தூக்கம்... இப்படி பாதி நாள் நான் இல்லாமத்தான் உன்னோட One Day.

கிட்டத்தட்ட முன்னிரவு நேரத்தில் உன்னை அழைத்துச் செல்ல வந்தபோது, பகலெல்லாம் என்னைத் தேடிச் சோர்ந்துபோயிருந்த உன் கண்களால் நீ பார்த்த அந்தப் பார்வையையும், பெருங்குரல் அழுகையையும்... என்னால் தாங்கவே முடியலைடா. (இந்த வரிகளை நீ புரிஞ்சுக்க உனக்குக் கொஞ்சம் வருஷம் ஆகும்) உன் பிஞ்சு மனதின் பயத்தை நீ உறங்கும்வரை முத்தமிட்டுத் தணிக்கப் பார்த்தேன்.

உன் அம்மாவோட அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி யாரும் காலேஜ் போனதில்லை. நான்தான் எங்க ஃபேமிலியில் முதன்முதலா காலேஜ் போனேன். ‘முதல் தலைமுறைப் பட்டதாரி’ன்னு சொல்வாங்க. உன் அம்மா. நான்கு பிள்ளைகளில் ஒருத்தி. வில்லேஜ் ஸ்கூலில் தமிழ் மீடியம்தான் படிச்சேன். (அப்படின்னா என்னன்னு கேட்கிறியா? இப்போ நீ இங்கிலீஷ்ல படிக்கிற சப்ஜெக்ட்ஸ் எல்லாம் நான் தமிழில்தான் படிச்சேன்). காலேஜ் போறப்போ கண்ணைக் கட்டிக் காட்டுல விட்டமாதிரி இருந்தது. சண்டே அன்னைக்கு நீ பாதி நேரம் கார்ட்டூன் சேனல் பார்க்கிறப்போ, எனக்கு ஒண்ணும் புரியாம முழிப்பேனே, அந்த மாதிரிதான் நான் காலேஜ் போனப்பவும் இருந்துச்சு. காரணம், ஸ்கூலில் தமிழில படிச்சுட்டு, காலேஜ் போனா எல்லா சப்ஜெக்டும் இங்கிலீஷ். அன்னைக்கே முடிவு பண்ணினேன், ‘எனக்குக் குழந்தை பிறந்தா கண்டிப்பா இங்கிலீஷ் மீடியம்தான்’னு.

என்னஞ்சல்

உன்னை ஸ்கூலில் சேர்க்க எவ்ளோ டொனேஷன் கொடுத்தோம், ஸ்கூல் ஃபீஸ் எவ்ளோன்னு உனக்குத் தெரியுமா? வேணாம். உனக்குத்தான் இன்னும் Addition, Substraction சரியா வரலையே. அதெல்லாம் நிறைய சைபர் உள்ள காசுடா. எனக்குக் கிடைக்காதது உனக்குக் கிடைக்கணும்னு நான் நினைச்சேன். ஆனா அதெல்லாம் உன்னால் முடியுமா, பிடிக்குமான்னு நான் பார்க்கலை. பார்க்கிற சூழலிலும் இல்லை.

உன்னுடைய ‘Kinder Garden Convocation’ நடந்த அந்த நாள். பளபளப்பான மெரூன் கோட்டில், கையில் லேமினேஷன் செய்யப்பட்ட பட்டத்துடனும், உன் நண்பர்களுடனும் விளையாடிக்கிட்டிருந்தே. எனக்குச் சிரிப்பா வந்துச்சு. அஞ்சு வயசில நான் என் அக்காவோட பழைய யூனிஃபார்ம் பாவாடையைப் போட்டுட்டு ஸ்கூலுக்குப் போயிருக்கேன். சாயம் போயிருக்கும் தெரியுமா? ஷேம் ஷேம்! நீ ‘கிண்டர் கார்டன் பட்டமளிப்பு விழா’வில் ஹேப்பியாதான் இருந்தே.

ஆனா அதுக்கப்புறம் ஓரியன்டேஷன்னு சொல்லி பேரன்ட்ஸை வரச்சொன்னாங்க.  இனிமேல் நீ குழந்தையில்லையாம். பெரிய க்ளாஸ் போயிட்டியாம். நிறைய எழுதணுமாம். நிறைய படிக்கணுமாம். Quarterly, Half-yearly, Annul Exam... இதுதான் அம்மா  எழுதின எக்ஸாம்ஸ். ஆனா இப்போ உனக்கு Mid-Term Test, Slip Test, Cycle Test, Revision Test-னு வாரத்துக்கு நாலு டெஸ்ட், நாற்பது புராஜெக்ட்ஸ். உன் வயசுல எனக்கு சிலேட்டில அனா, ஆவன்னாகூட சரியா எழுதத் தெரியாது.

ஒரு மஞ்சப்பை, அதுல சில புக்ஸ், சிலேட்டு...அவ்ளோதான். ஆனா இப்போ நீ கிலோ கணக்கில புத்தகப்பை தூக்குறே. ‘டோரோமான் போட்ட பை வேண்டுமா, சோட்டா பீம் போட்ட பை வேண்டுமா?’னு கேட்ட நான், இவ்வளவு புத்தகங்களை உன்னால் தூக்க முடியுதான்னு இதுவரை கேட்டதில்லை. உன் வயதில் உயிரெழுத்துகளையே நேராக எழுதத் தெரியாத நான், உன் பள்ளிக்கூடம் சொன்னபடி, கர்ஸிவ் ரைட்டிங் எழுதச் சொல்லி உன் கை முட்டிகளில் அடித்துக்கொண்டிருக்கிறேன். தெருப்புழுதியில் விளையாடுவதற்காகவே  பிறப்பெடுத்ததுபோல ஆடிக்கொண்டிருந்த நான், ‘கொஞ்ச நேரம் விளையாண்டுட்டு வர்றேன்மா’ என்று நீ கெஞ்சுவதைக் காது கொடுத்துக் கேட்பதே இல்லை. என் மனதில் இருப்பதெல்லாம், பேரன்ட்ஸ் - டீச்சர் மீட்டிங்கில், உன் படிப்பு விஷயத்தில் நீயும் நானும் உன் ஆசிரியையால் பிறர் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பது மட்டும்தான்.

பிள்ளைகள் டிராஃபிக்கில் மாட்டாமல் பீக் அவருக்கு முன்னால் பள்ளிக்கூடத்துக்கு வந்துவிட வேண்டும் என்பது சரிதான். அதற்காக 8 மணிக்குள் பள்ளிக்கூடத்துக்குள் இருக்க வேண்டும் என்றால், நானும்தான் என்ன செய்வேன்? ‘தங்கப் பிள்ளை எழுந்திரு’ என்று  செல்லம் கொஞ்சி உன் தூக்கத்தைக் கலைக்க எனக்கு ஏது நேரம்? ‘நேரமாச்சு ... எழுந்திரு, எழுந்திரு... ஸ்கூல்  வேன் வந்துரும்’ என்கிற உரத்த சத்தத்தில் தினம் தினம் உன் தூக்கத்தைக் கலைத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு நிமிடம் லேட்டா போனாலும் உன் பள்ளி உன்னை கேட்டுக்கு  வெளியில் நிறுத்திடும்; மூன்று நாள்கள் தாமதமானால் எனக்கு  மெசேஜ் வந்துடும். அதனால்தான், ‘அவன் குழந்தைடி, அவனுக்கு இது தூங்குற வயசுடி’ என்று உன் அப்பத்தா சொல்வதையெல்லாம் காதில் வாங்காமல், பதறப் பதற தினமும் உன் அதிகாலைத் தூக்க சுகங்களைத் தட்டிப் பறித்துக்கொண்டிருக்கிறேன்.

என்னஞ்சல்இப்போல்லாம் உன் பள்ளிக்கூடத்துக்கு ஏத்தபடியும், எனக்கேத்தபடியும் நீ மாறிட்ட.  சின்னத் தோள்கள்ல புத்தகப் பொதிகளைச் சுமக்கப் பழகிகிட்ட. உன் மிஸ் சொல்றதைக் கேட்டு, பிளாக் போர்டில் இருக்கிறதை எல்லாம் காப்பி பண்ணிடறே. சமயங்களில் காப்பி பண்ண முடியாம Incomplete-ஆ எழுதிட்டு வருவே. Open day அப்போ உங்க ஸ்கூல் மிஸ் கம்ப்ளைண்ட் பண்ணுவாங்க. இதைவிடக் கொடுமை, ‘டென் மினிட்ஸ்தான் லஞ்ச் பிரேக். உங்க பையன் 15 மினிட்ஸ் சாப்பிடறான்’னு மிஸ் சொல்றாங்க. ஆடுமாடுகள்தான் வேகவேகமா சாப்பிட்டு, அப்புறமா அசைபோடும்கிறதை உன் மிஸ்ஸுக்கு யார் சொல்லித்தர்றது?

இங்கிலீஷ் மிஸ்ஸுக்கு கர்ஸிவ் ரைட்டிங் வேணும். தமிழ் டீச்சருக்குத் தப்பில்லாம எழுதணும். உனக்கு இந்தி சொல்லிக்கொடுக்க, எனக்கு இந்தி தெரியாது. உங்க அப்பாவுக்கு உன் ஹேண்ட்ரைட்டிங் அழகா இருக்கணும், மேத்ஸ்ல தினமும் பல ஸ்டார்ஸ் வாங்கிட்டு வரணும். நீ வானத்தில இருக்கிற ஸ்டார்ஸ் எல்லாம் முழுசா பார்த்திருக்கியோ இல்லையோ, உன் நோட்புக்ல ஸ்டார்ஸ் பார்க்கணும் உங்க அப்பாவுக்கு.

படிச்சிட்டா மட்டும் போதுமா, Extra Curricular Activities வளர்த்துக்கணும்ல! பாட்டு கிளாஸ், மியூசிக் கிளாஸ், ஃபுட்பால் கிளாஸ், கராத்தே கிளாஸ்னு படிச்சுப் படிச்சு நீ ‘எந்திரன்’ சிட்டி ரோபோ மாதிரி ஆகிட்டே.  ஸ்கூல் முடிஞ்சு வந்தாலும், வாட்ஸ்-அப் குரூப்ல உன் ஹோம் வொர்க் என்னன்னு பார்த்து உன்னைப் பண்ணவைக்கணும். சனி ஞாயிறு லீவுன்னுதான் பேரு. மண்டே புராஜெக்ட்ஸ் சப்மிட் பண்ண, ரெண்டுநாளும் வேலை செய்யணும்.

காலையில் முதல் ஷிஃப்ட் வீட்டு வேலை, இரண்டாவது ஷிஃப்ட் ஆபீஸ் வேலை... மறுபடியும் மூன்றாவது ஷிஃப்ட் வீட்டு வேலை செய்வதற்காக நான் வீட்டுக்கு வரும்போது, என்னை எதிர்பார்த்து  நீயும் சின்சானும் காத்துக்கிட்டிருப்பீங்க. கூடவே உன் பசித்த வயிறும் வீட்டுப் பாடமும். நைட் சாப்பிட்டு முடிச்சுட்டு, கொஞ்சநேரம் செல்போன் கேம், கொஞ்சநேரம் டிவியில் சின்சான். அடிச்சுப்பிடிச்சுக் காலையில் எழுந்தா மறுபடியும்... ந்தா, ஸ்கூல் பஸ் ஹாரன் அடிக்குது. சீக்கிரம் கிளம்புடா.

இதில பல வார்த்தைகள் உனக்குப் புரியறதுக்கு, இன்னும் நீ வளரணும். அப்புறம்... ரொம்ப ஸாரிடா. நான் தமிழில்தான் லெட்டர் எழுதியிருக்கேன். உனக்குப் புரியாது, முழுசா படிக்க முடியாதுன்னு அம்மாவுக்குத் தெரியும். ஆனா அம்மாவால இவ்ளோ நீளமா இங்கிலீஷ்ல லெட்டர் எழுதத் தெரியாதுடா.

With Love

உன் செல்ல Mummy.

ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி