Published:Updated:

14 நாள்கள்

14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...பெண்கள் உலகம்

14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...பெண்கள் உலகம்

Published:Updated:
14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்
14 நாள்கள்

வெள்ள நிவாரணத்துக்கு வாரிவழங்கிய மீன் விற்கும் மாணவி!

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இளம்பெண் ஹானன் ஹமீது. பி.எஸ்ஸி படித்துவரும் ஹானன், கடந்த மாதம் முழுவதும் சமூக வலைதளங்களில் ‘போலி’, ‘ஏமாற்றுக்காரர்’ என்ற பெயரில் வசைபாடப்பட்டார். பொருளாதார நெருக்கடியில் இருந்த ஹானன், தினமும் கல்லூரிக்குச் சென்று திரும்பிய பின்னர், 65 கி.மீ தொலைவிலுள்ள தம்மனம் சந்தையில் மீன் விற்று வந்தார். நேர்த்தியாக உடை அணிவதில் நாட்டமுள்ள இவர், மீன் விற்பதை மலையாளப் பத்திரிகை ஒன்று சிலாகித்து எழுதியது. இதைக் கண்ட சமூக வலைதள பதிவர்கள், `வெறும் விளம்பரத்துக்காக, பிரபலமாக வேண்டும் என்ற ஆசைக்காக மீன் விற்பதுபோல நாடகமாடுகிறார் ஹானன்' என்று ஒருபுறமும், `முகத்தை வெளிக்காட்டியவாறு வியாபாரம் செய்யும் பெண்' என மதவாதிகள் மறுபுறமும் கடும் சொற்களால் வசைபாடி வந்தனர்.

முதல்வர் பினராயி விஜயன் தலையிட்டு ஹானனுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி உத்தரவிட்டதோடு, வலைதள பதிவர்கள் அமைதி காக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இந்த நேரத்தில் தன் வங்கிக் கணக்கிலிருந்து, முதலமைச்சர் நிவாரண நிதிக்காக (வெள்ளம்) 1.5 லட்ச ரூபாயை வழங்குவதாக அறிவித்தார் ஹானன். அவரைப் பற்றி பத்திரிகைகள் எழுதத் தொடங்கியதும் மக்களிடமிருந்து பண உதவி வந்ததாகவும், அதை அவர்களுக்கே தான் திருப்பித் தருவதாகவும் அறிவித்தார். ஹானனின் இந்த அறிவிப்பை வரவேற்றுப் புகழாரம் சூடியுள்ளனர் சமூக வலைதள பதிவர்கள்.

ஹூம்ம்ம்… அப்படியும் பேசும், இப்படியும் பேசும்… நரம்பில்லாத நாக்கு!

14 நாள்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தடுமாறி வரும் பெண்கள் சமூக ரேடியோ

தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த மச்சனூர் கிராமத்தில் இயங்கிவருகிறது பெண்களால் இயக்கப்படும், நாட்டின் முதல் சமூக வானொலி நிலையம். `சங்கம்’ என்ற பெயரில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட வானொலியில் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வின் பிரச்னைகள் குறித்தும் அவற்றை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பற்றியும் கருத்துகளைப் பகிர்ந்துவருகின்றனர். டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டி எனப்படும் அமைப்பால் தொடங்கப்பட்ட சங்கம், சிறு மற்றும் குறு விவசாயிகளான பெண்களை மையப்படுத்தியே நிலையத்தை நடத்தி வருகிறது. அரசின் விளம்பரங்களே இந்த வானொலிக்கு ஒரே வருமானம். கடந்த சில ஆண்டுகளாக விளம்பரங்களுக்கான தொகை 3.25 லட்ச ரூபாயை அரசு பாக்கி வைக்க, தடுமாறி வருகிறது `சங்கம்’.

யுனெஸ்கோ அமைப்பால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட வானொலியின் டிரான்ஸ்மீட்டர்கள் பழுதாகத் தொடங்க, 30 கி.மீ பரப்பளவில் கேட்கக்கூடிய வானொலி நிகழ்ச்சிகள் இப்போது 3 கி.மீ பரப்பளவில் மட்டுமே கேட்கின்றன. சுமார் 10 லட்ச ரூபாய் இருந்தால் நிலைமையைச் சீராக்கி
விடலாம் என்ற எண்ணத்தில் மக்கள் உதவியை நாடியுள்ளனர் இந்த அமைப்பின் பெண்கள்.

சங்கம் வானொலி பற்றிய தகவல்கள் அடங்கிய காணொலி: http://bit.ly/WRadios. உதவ: http://bit.ly/Radiohelp

எவ்வளவோ பண்றோம், இதையும் பண்ணுவோமே!

14 நாள்கள்

சர்ச்சையைக் கிளப்பிய பிரியங்கா சோப்ரா நிச்சயதார்த்தம்

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனாஸுடன் திருமணம் நிச்சயம் செய்யப்படும் `ரோக்கா’ என்ற மதச் சடங்கின் புகைப்படங்களைப் பகிர்ந்ததும் இன்ஸ்டாகிராமே தீப்பிடித்துக்கொண்டது. தன்னைவிட 11 வயது இளையவரான நிக்கை மணக்கிறார் பிரியங்கா என்பதே கலவரத்துக்கான காரணம். 36 வயதான பிரியங்கா தொடர்ச்சியாக பாலிவுட் படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும், ஹாலிவுட் சீரியல்களிலும் நடித்துவருகிறார். அங்குதான் நிக்கை பிரியங்கா சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. `குவாண்டிகோ’ என்ற ஆங்கிலத் தொடரில் பிரியங்காவின் நடிப்பு பரபரப்பாக அமெரிக்காவில் பேசப்பட்டு வருகிறது.

தங்களைக் குறித்துவரும் செய்திகள் எதைப்பற்றியும் ஜோடி கண்டுகொள்ளவில்லை. சடங்கு முடித்த கையுடன் இருவரும் அமெரிக்கா கிளம்பிவிட்டனர். இதற்கிடையே மணமகள் மற்றும் மணமகனின் தாய் இருவரும் இந்திப் பாடல்களுக்கு நடனமாடியிருக்கும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம்வருகின்றன.

வயசு வெறும் நம்பர்தான்… வாழ்த்துகள் பிரியங்கா!

14 நாள்கள்

மும்பைத் தீ: 15 பேரைக் காப்பாற்றிய ஆறாம் வகுப்பு மாணவி!

மும்பை பரேல் பகுதியிலுள்ள `ஹிந்த்மாதா சினிமா'வை ஒட்டிய கிறிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடிக் கட்டடத்தில் சமீபத்தில் தீ பற்றியது. அந்தக் கட்டடத்தில் வசித்துவந்த 10 வயது மாணவி சென் சதவர்தேயின் வீட்டிலும் தீ பரவத் தொடங்கியது. அன்று ரமலான் விடுமுறை என்பதால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சென், பெற்றோர் மற்றும் பக்கத்து ஃப்ளாட்வாசிகளின் கூக்குரலுக்கு விழித்தார். கரும்புகை மண்டலம் சமையலறையைச் சூழ்ந்துகொள்ள... பக்கத்து ஃப்ளாட்வாசிகளுடன் சேர்ந்து, அருகில் உள்ள பாதுகாப்பான இடம் என்று தான் கருதிய ஃப்ளாட்டுக்கு அனைவரையும் அழைத்துச் சென்றாள் சென்.

அமைதியாக இருக்கும்படி அங்கு குழுமியிருந்த மூன்று குடும்பங்களை அறிவுறுத்திய சென், துணியை நனைத்து, மூக்கில் கட்டிக்கொண்டு அதன் வழியாக மூச்சுவிடும்படி வலியுறுத்தினாள். “அதற்கடுத்து ஈரத் துணிமணிகளை நாங்கள் சுற்றிக்கொள்ள வேண்டும் என்று எங்கள் மகள் சொல்ல, அதையும் நாங்கள் செய்தோம்” என்கிறார் சென்னின் தந்தை குணவரத் சதவர்தே. மும்பை டான் போஸ்கோ சர்வதேசப் பள்ளியில் பயிலும் சென், தான் செய்த பேரிடர் மேலாண்மை புராஜெக்ட்டில் கற்றதையே இந்த இக்கட்டான நேரத்தில் பின்பற்றியதாகக் கூறுகிறாள். இப்படி 15 பேரைக் காப்பாற்றியும் இருக்கிறாள் இந்தச் சுட்டி!

மூர்த்தி சிறுசுன்னாலும் கீர்த்தி பெருசு!

14 நாள்கள்

சோதனைகளை முறியடித்த `ஹெப்டாத்லான் ராணி'

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் தடகளப் பிரிவில் மலைக்கச் செய்வது ஹெப்டாத்லான் போட்டி. 100 மீட்டர் தடையோட்டம், உயரம் தாண்டுதல், ஷாட்-புட், நீளம் தாண்டுதல், ஈட்டியெறிதல், 200 மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் - இவை ஏழிலும் பங்கெடுத்து, அவற்றில் அதிக மதிப்பெண் எடுப்பவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. மிகக் கடினமான இந்தப் போட்டியில்தான் தங்கம் வென்றிருக்கிறார் ஸ்வப்னா பர்மன். மேற்கு வங்கத்தின் ஜல்பாய்குரி மாவட்டத்தைச் சேர்ந்த கோஷ்பாரா என்ற சிற்றூரில் பிறந்தார் ஸ்வப்னா.

2013-ம் ஆண்டு பக்கவாதம் வந்து படுக்கையே வாழ்க்கை என மாறும் வரை, ரிக்‌ஷா இழுத்துக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார் அவர் அப்பா. தாயோ தேயிலைத் தோட்டத்தில் அவ்வப்போது இலை பறிக்கும் கூலித் தொழிலாளி. இன்றளவும் குடும்பத்தைக் காப்பாற்றி வருபவர் 21 வயதான ஸ்வப்னா மட்டுமே!

ஸ்வப்னாவுக்கு ஒரு விநோதப் பிரச்னை. அவரது கால்கள் இரண்டிலும் ஆறு விரல்கள். ஸ்போர்ட்ஸ் ஷூக்களையோ, ஸ்பைக்ஸையோ அணிய வாய்ப்பேயில்லை. குட்டையாக இருந்த காரணத்தால் உயரம் தாண்டுதலில் சோபிக்க முடியாது எனப் பயிற்சியாளர் அறிவுறுத்த... மனம் வாடிய ஸ்வப்னாவுக்குக் கைகொடுத்தது ஹெப்டாத்லான். மிகவும் சிரமமான இந்த விளையாட்டில் பயிற்சியெடுக்க ஆரம்பித்தார்.

இப்போது ஓட்டப்பந்தயத்தின்போது கால்முட்டியில் தாடை இடித்துவிட, கடும்வலியால் துடித்த ஸ்வப்னா, தாடையில் பாண்டேஜுடன்தான் இறுதிப்போட்டிகளில் கலந்துகொண்டார். `குடும்பத்தைச் சந்தித்து ஓர் ஆண்டு ஆகிவிட்டது' என்று கூறும் ஸ்வப்னா, தன் ட்விட்டர் பக்கத்தில், `வலியே சிறந்த ஊக்குவிக்கும் கருவி. என் நாட்டுக்காகத் தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது' என்று பதிவிட்டிருக்கிறார்.

எங்கிருந்து வர்றோம்கறது முக்கியமில்ல…என்ன செய்றோம்கறதுதான் முக்கியம்!

14 நாள்கள்

நிவாரணப் பணிகளில் கலக்கிய பெண்  ஆட்சியர்கள்!

2010-ம் ஆண்டு குடிமைப்பணி தேர்வுகளில் நாட்டிலேயே நான்காம் இடத்தைப் பிடித்தவர் அனுபமா. இப்போது திருச்சூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிக சேதமடைந்த கொடுங்கல்லூர், சாலக்குடி, அன்னமனாடா போன்ற பகுதிகளில் பம்பரமாகச் சுழன்று பணியாற்றியவர். மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த தற்காலிக நிவாரண முகாம்களில் தானியங்கள் சேகரித்து வைக்க பார் அசோசியேஷனிடம் அவர் இடம்கேட்க, அதற்கு மறுப்பு வரவே, பூட்டியிருந்த அறைகளை உடைத்து, பொருள்களைப் பத்திரப்படுத்த ஆணையிட்டார். இதன் மூலம் மக்களின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றார் அனுபமா.

திருவனந்தபுரத்தில் வெள்ளச்சேதம் அதிகம் இல்லையெனினும், இரண்டே நாள்களில் 54 ட்ரக் லோடுகள் நிவாரணப் பொருள்களை ஏற்பாடு செய்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவற்றைக் கொண்டு செல்லும் பணியை நேரில் கண்காணித்து வந்த அம்மாவட்ட ஆட்சியர் வாசுகியும் மக்களின் பேரன்பைப் பெற்றார். ஏறத்தாழ 400 தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து லாரிகளில் சரக்குகளை ஏற்ற, அவர்களிடம் எழுச்சி உரை ஒன்றை ஆற்றினார் வாசுகி. “நீங்கள் வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். கேரளத்தைச் சார்ந்தவர்கள் எத்தனை வலிமையானவர்கள் என்பதை உலகுக்கு நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள். நாட்டு விடுதலைக்காக மக்கள் போராடியதுபோல, நீங்கள் படையென ஆர்ப்பரித்துப் பணி செய்கிறீர்கள்” என்று முழங்கினார். வாசுகியின் இந்த உரை சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. சென்னையைச் சேர்ந்தவர் வாசுகி என்பது கூடுதல் தகவல்!

பட்டையக் கெளப்புங்கம்மா!

- நிவேதிதா லூயிஸ்