ஹெல்த்
Published:Updated:

“என் வளர்ச்சிக்கு விதைபோட்டது ஆர்வம்தான்!” - சுதிக்‌ஷ்னா வீரவள்ளி

“என் வளர்ச்சிக்கு விதைபோட்டது ஆர்வம்தான்!” - சுதிக்‌ஷ்னா வீரவள்ளி
பிரீமியம் ஸ்டோரி
News
“என் வளர்ச்சிக்கு விதைபோட்டது ஆர்வம்தான்!” - சுதிக்‌ஷ்னா வீரவள்ளி

தன்னம்பிக்கை

பிறந்தபோதே வலது உள்ளங்கை இல்லை; ஒரு காலில் புராஸ்தெசிஸ் பொருத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் சுதிக்‌ஷ்னா வீரவள்ளிக்கு. உடலில் ஏற்பட்ட இந்த அசெளகர்யங்களை இருமடங்கல்ல, மும்மடங்கல்ல, ஆயிரம் மடங்கு ஈடுகட்டுவதற்காக நான்கு வயதிலிருந்தே பரதத்தையும் இசையையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். சிகாகோ இல்லினாய்ஸில் பிறந்து வளர்ந்த தமிழச்சி இவர். பரதநாட்டியப் பள்ளி நடத்தும் வனிதா வீரவள்ளிதான் இவரின் ஆசிரியர்; அம்மாவும்கூட. சென்னை வாணி மஹாலில் நாட்டிய நிகழ்ச்சி நடத்துவதற்காக சிகாகோவிலிருந்து வந்திருந்த சுதிக்‌ஷ்னா, நான்கைந்து வருடங்கள் பழகிய உணர்வை முதல் சந்திப்பிலேயே கொடுத்தார்.

“என் வளர்ச்சிக்கு விதைபோட்டது ஆர்வம்தான்!” - சுதிக்‌ஷ்னா வீரவள்ளி

``உங்களுக்கு ஏற்பட்ட நிலை என்றால், யாராக இருந்தாலும் துவண்டு போய்விடுவார்கள். இவ்வளவு நம்பிக்கை எங்கிருந்து வந்தது?’’

``நம்பிக்கை, துணிச்சல்ங்கிறதெல்லாம் பெரிய வார்த்தைகள். எனக்கு ஏற்பட்டது முழுக்க முழுக்க ஆர்வம் தொடர்பானது. அந்த ஆர்வமும், எனக்கு இயற்கையா வந்துடலை. பிறப்பிலேயே இந்தக் குறைபாடுகள் இருந்தப்போ, என்னைப் பார்த்து வருத்தப்படாமல், வித்தியாசமா நடத்தாமல் இருந்த அம்மாவும் அப்பாவும்தான் என் வளர்ச்சிக்கு முழுமையான காரணம். நடன ஆசிரியரான அம்மா; பாடகரான அப்பா; என் இசை குரு சூர்யபிரகாஷ். இவங்க எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். மூணு பேரும் எனக்கிருந்த இந்தச் சின்னக் குறைகளை சமன் செஞ்சுட்டாங்க. என்னை ரொம்ப அழகானவளா, திறமையானவளா உணரவெச்சிருக்காங்க.

“என் வளர்ச்சிக்கு விதைபோட்டது ஆர்வம்தான்!” - சுதிக்‌ஷ்னா வீரவள்ளி`மாற்றுத்திறனாளியைப் பார்க்கும்போது மத்தவங்களுக்கு என்ன தோணும்?’னு அடிக்கடி யோசிப்பேன். சிலர் வித்தியாசமா பார்க்கிறப்போ, `அந்தப் பார்வையில எதை உணர்த்த நினைக்கிறாங்க?’னு தோணும்’’ என்கிற சுதிக்‌ஷ்னா, ஆட்டிசம் உள்பட கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு, ‘பிஹேவியரல் தெரபி’ மூலம் நடனத்தையும் இசையையுமே சிகிச்சையாக அளித்துவருகிறார். எல்லாவற்றையும் மனதுடன் தொடர்புடைய ஒன்றாகத்தான் கருதுகிறார். பார்க்கும்போது, கேட்கும்போது, முகரும்போது என எல்லாவற்றிலும் நமது பார்வையும் எண்ணவோட்டமும் முக்கியமானவை என்பதை தீர்க்கமாக நம்புகிறார்.

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பயலாஜிக்கல் சயின்சஸில் மைனரும், உளவியல் மற்றும் ஆங்கிலத்தில் மேஜரும் படித்திருக்கிறார் சுதிக்‌ஷ்னா.

“என் வளர்ச்சிக்கு விதைபோட்டது ஆர்வம்தான்!” - சுதிக்‌ஷ்னா வீரவள்ளி

இசை சிகிச்சை குறித்துப் பேசும் சுதிக்‌ஷ்னா, ``ஆட்டிசம் பாதிச்ச குழந்தைகளைப் பொறுத்தவரை, சமூகப் பழக்கவழக்கங்களும், மற்றவர்களோடு தொடர்புகொள்ளும் திறனும்தான் அவங்களுக்கு முக்கியமானப் பிரச்னையா இருக்கும். நிறைய கவனச்சிதறல் இருக்கும். ஒரே வேலையைத் தொடர்ந்து செய்துகிட்டே இருப்பாங்க. மற்ற குழந்தைகள் மாதிரி தூக்கினாலோ, கொஞ்சினாலோ, ஏன் தொட்டாக்கூட அது எதுக்காகனு அவங்களுக்குத் தெரியாது. எந்தவித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாம தன்பாட்டுக்கு இருப்பாங்க. ஓர் இடத்துல உட்காரவெச்சு, நாம மட்டுமே பயிற்சி கொடுத்தா போதாது. அவங்களோட சமூகத் தொடர்புகள் அதிகரிக்கிறதுக்காகவும் வேலை செய்யணும். வெளியுலகத்தோடு தொடர்பு வேணும்னா, தனக்குள்ள இருக்கிற `இன்டர்னல் கனெக்ட்’டை அவங்க உணரணும். அந்த இணைப்பை இசை ஏற்படுத்துது. இதுதான் என்னுடைய சிகிச்சை முறை” என்கிறார்.

சிகாகோவில் 2009-ம் ஆண்டில் அரங்கேற்றத்தை நிகழ்த்திய சுதிக்‌ஷ்னா, 2010 முதல் இந்தியாவிலும் பல நாட்டிய நிகழ்ச்சிகளைத் தந்துகொண்டிருக்கிறார். வட அமெரிக்காவில் தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் பாரம்பர்ய நடன அமைப்பான `அனுபவா’வின் உறுப்பினராகவும் இருக்கிறார்.

``இன்னிக்கு வளர்ந்திருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி, மனுஷங்களை இன்னும் பக்குவப்பட்டவங்களா, எல்லாத்தையும் அதன் இயல்போடவே ஏத்துக்கிற தன்மையுள்ளவங்களா மாத்தணும்னு நினைக்கிறேன். `எல்லாமே இப்போ சுலபமா கிடைக்கிறதால, நாம யாருடைய அசெளகர்யங்களையும் பற்றிக் கவலையேபடறதில்லை’னு தோணுது. உடல்ரீதியான, மனரீதியான எந்தக் குறைபாடு கொண்டவர்களையும், வித்தியாசமாகப் பார்க்கிறதை முதல்ல நிறுத்தணும். அதுதான் முதல் படி. சாதாரண மனிதர்களா தங்களை நினைச்சுக்கிட்டு இருக்கிற மனிதர்கள்கிட்டயே மனக் குறைபாடு நிறைய இருக்கு. வெளித் தோற்றத்துல அது தெரியறதில்லை. அவ்வளவுதான்” என்று சொல்லிப் புன்னகைக்கிறார் சுதிக்‌ஷ்னா. ``அதென்ன சுதிக்‌ஷ்னானு பெயர்?’’ என்று கேட்டால், ``அதுக்கு `கூர்மை’னு அர்த்தம்’’ என்கிறார்.

வாணி மஹாலில் நிகழ்ச்சி தொடங்கியது. சுதிக்‌ஷ்னா சொன்னதுபோலவே அவரது ஆர்வமும், கலை மற்றும் மனிதர்களின் மீதான அவரது தீராத அக்கறையும் மட்டுமே அவரது `தித்... தித்... தை’யை அத்தனை அழகாக்கின. மேடையிலிருந்து இறங்கியதும், ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு அவர் சொன்னது இதுதான். ``மாற்றுத்திறனாளிகள்தான் அதிக அளவில் ஆசிரியர்களாக வேண்டும். ஏனெனில், வார்த்தைகளை, தத்துவங்களை மட்டுமல்ல...  மனிதர்களிடம் இருக்கும் குறைகளின் அருமையைக்கூட அவர்களால்தான் அழகாக, சிறப்பாக மற்றவர்களுக்கு உணர்த்த முடியும். அதை உணர்ந்தால்தான் உலகம் முழுமையானதாக மாறும்.”

- ம.குணவதி - படங்கள்: வீ.நாகமணி