Published:Updated:

14 நாள்கள்

14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...பெண்கள் உலகம்

14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...பெண்கள் உலகம்

Published:Updated:
14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்
14 நாள்கள்

மூன்று மில்லியன் டாலர்  விருது பெறும் பெண் விண்வெளி ஆய்வாளர்!

1974-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைத் தன் பிஹெச்.டி வழிகாட்டியான ஆன்டனி ஹீவிஷிடம் தவறவிட்டார் ஜாஸ்லின் பெல் பர்னல். ஹீவிஷின் மேற்பார்வையில், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில், `பல்சர்' எனப்படும் நட்சத்திரங்கள் எழுப்பும் ரேடியோ ஒலியை முதன்முதலில் கண்டுபிடித்துச் சொன்னவர் ஜாஸ்லின். பூமியின் ரேடியோ அதிர்வுகள்தாம் அவை என்றும், விண்ணிலிருந்து எந்த சமிக்ஞையும் இல்லை என்றும் ஜாஸ்லினின் கண்டுபிடிப்பை மறுத்த ஹீவிஷ், அதே ஆய்வைத் தனியே தொடர்ந்து, நோபல் பரிசைத் தட்டிச் சென்றார். பிரிட்டிஷ் விண்வெளி ஆய்வாளர் சர் ஃப்ரெட் ஹாய்ல் கடும் கண்டனம் தெரிவித்தும், பரிசு ஹீவிஷ் கைக்கே சென்றது. அன்றைய ஆணாதிக்க அறிவியல் உலகில், இந்தத் துரோகத்தை யாரும் பெரிதாக எண்ணவும் இல்லை. தொடர்ந்து 40 ஆண்டுகள் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த ஜாஸ்லினுக்கு இந்த ஆண்டு உயரிய `ப்ரேக்த்ரூ' விருதை வழங்கி கௌரவிக்கவிருக்கிறது உலகின் தலைசிறந்த அறிவியல் வல்லுநர்களைக் கொண்ட குழு. இக்குழுவில் மார்க் சக்கர்பர்க்கும் இடம்பெற்றிருக்கிறார்.

பரிசுப் பணமான மூன்று மில்லியன் டாலரில், 2.3 மில்லியன் டாலரை இயற்பியல் ஆய்வு செய்ய விரும்பும் பெண் ஆய்வாளர்கள் மற்றும் நலிந்த வகுப்பினருக்கு உதவும் வகையில் ஊக்கத் தொகையாக அளிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார் ஜாஸ்லின். இன்னமும் இயற்பியல் ஆய்வுக்கூடங்களில் உள்ள பிரிவினை மற்றும் அடக்குமுறையைத் தடுக்க இந்தப் பணம் உதவட்டும் என்கிறார் அவர்.

`பொறுத்தார் பூமியாள்வார்'னு சும்மாவா சொன்னாங்க!

14 நாள்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தோல்வியிலும் நிமிர்ந்து நின்ற செரீனா!

மீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் மகளிர் இறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவினார் நடப்பு சாம்பியனான செரீனா வில்லியம்ஸ். ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகாவிடம் 2-6, 4-6 என்ற செட் கணக்கில் தோற்றார் செரீனா. ஆட்டம் முழுக்கப் பதற்றத்துடனே ஆடிய செரீனா, இரண்டாவது கேமில் அவரின் பயிற்சியாளர், கோச்சிங் சைகை செய்ததாக அம்பயர் கார்லோஸ் ராமோஸ் சுட்டிக்காட்ட, ஒரு பாயின்ட் இழந்தார் செரீனா.

கோபத்தில் டென்னிஸ் மட்டையைத் தரையில் ஓங்கி அடிக்க, அது உடைந்ததால் மீண்டும் ஒரு புள்ளியை அவரிடமிருந்து பறித்தார் அம்பயர். உடனே செரீனா அம்பயரிடம் சென்று வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதத்துக்கும் ஒரு புள்ளியைப் பறித்தார் ராமோஸ். இறுதியில் 4-6 என்ற செட் கணக்கில் தோற்றார் செரீனா. அரங்கம் அதிர்ச்சியில் உறைந்தாலும், வெற்றி பெற்ற நவோமியை ஏளனம் செய்து கோஷமிட ஆரம்பித்தனர் ரசிகர்கள். கண்ணில் நீர் மல்க செய்வதறியாமல் நின்றார், செரீனாவை தன் ஆதர்ச ஆட்ட நாயகியாக வரித்துக்கொண்ட நவோமி. “நவோமி அருமையாக விளையாடினார். வெற்றி பெற்றவருக்கு உரிய மரியாதையை நாம் தர வேண்டும். அவருக்கெதிராகச் சத்தம் எழுப்ப வேண்டாம்” என்று செரீனா கூற, அரங்கம் அமைதியானது. இந்தப் போட்டியில் வென்றதன் மூலம், கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் கோப்பை ஒன்றைக் கைப்பற்றியிருக்கும் முதல் ஜப்பானியர் ஆகிறார் நவோமி!

ஹ்ம்ம்ம்…அமெரிக்காவுலயும் இப்படி!

14 நாள்கள்

மனம் போற்றும் மனிதம்!

மும்பை நகரில் இரண்டு மனநல கிளினிக்குகள் தொடங்கி நடத்தி வருகிறார் நீரஜா. “உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் 7.5% இந்தியர் பல்வேறு மன நோய்களால் அவதியுறுகிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. பெரும்பாலானோர் இதுபோன்ற நோய்கள் குறித்த சரியான மருத்துவ அறிவு இல்லாததாலும், இது குறித்து வெளிப்படையான விவாதங்கள் இல்லாததாலும், பேசத் தயங்கி, நோய் முற்றிய பிறகே சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். வெளிப்படையாக மன நோய் குறித்த விவாதங்கள் வேண்டும் என்பதாலும், அது பற்றிய விழிப்பு உணர்வை மக்களுக்குத் தர வேண்டும் என்பதாலும்தான் `எம்பவர்' என்ற அமைப்பைத் தொடங்கினோம். சைக்கிள் பயணம், இசை நிகழ்ச்சி போன்றவற்றின் மூலம் விழிப்பு உணர்வு அளித்துவருகிறோம். சிறந்த கவுன்சலர்கள் மற்றும் மனநல மருத்துவர்களைக் கொண்டு எம்பவர் கிளினிக்குகளில் சிகிச்சை தரப்படுகிறது.

இந்தியாவின் மிகப் பிரபல மருத்துவமனைகளில்கூட மன நல வார்டுகள் தனியாக இல்லை. பிட்ஸ் பிலானி நிறுவனத்தின் கோவா கேம்பஸில் எம்பவர் செல் ஒன்று தொடங்கியிருக்கிறோம். பிரதம் ஃபவுண்டேஷன் மூலம் மும்பையை அடுத்த தானே நகரின் காவல் நிலையங்களில் தனி செல்கள் தொடங்க உள்ளோம். பிற நகரங்களிலும் கிளைகள் தொடங்கும் எண்ணம் உள்ளது. அதைவிட முக்கியமாகச் சிறு கிராமங்களில் கிளைகள் தொடங்கவே எனக்கு ஆசை” என்று கூறுகிறார், பெரும் தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லாவின் மனைவியான நீரஜா.

நல்ல முயற்சிகள் சிறக்கட்டும்!

14 நாள்கள்

சாதனை மேல் சாதனை!

லங்கை கல்லேயில் நடைபெறும் ஒருநாள் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி இரண்டு உலகச் சாதனைகள் புரிந்துள்ளது. அணியின் தலைவர் மித்தாலி ராஜ், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தலைமையேற்று விளையாடியிருக்கிறார். மொத்தம் 118 மேட்சுகள்! அதேபோல ஜுலான் கோஸ்வாமி சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெறுகிறார்.

ஸ்ரீலங்காவின் கல்லே நகரில் செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்தச் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மித்தாலி ராஜ் சென்னையைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி!

அடிச்சு ஆடுங்க அம்மணிகளே!

14 நாள்கள்

கிட்னியும் தருவாள் தோழி!

டந்த செப்டம்பர் 3 அன்று கொல்கத்தா ஃபோர்டிஸ் மருத்துவமனையில் 32 வயதே ஆன மார்ஷ்னில் சின்ஹா என்ற பெண்ணுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மார்ஷ்னில், பெங்களூரில் உள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்தபோது அவரின் சீனியராக அதே நிறுவனத்தில் பணியாற்றியவர் 40 வயதான தித்தி லஹிரி. திடீர் உடல்நலக் குறைவால் மார்ஷ்னில், சொந்த ஊரான பொகாரோவுக்குத் திரும்ப, அவரது உடல்நலம் குறித்த தகவல்களைக் கண்காணித்து வந்தார் தித்தி. மார்ஷ்னிலுக்குச் சிறுநீரகங்கள் சுருங்கிவிட்டதாகவும், தற்காலிகமாக பிளட் டிரான்ஸ்ஃப்யூஷன் செய்யப்படுவதாகவும் தித்திக்குத் தகவல் கிடைத்தது. நிலைமை இன்னும் மோசமாக, மாற்று சிறுநீரகம் பொருத்துவதே ஒரே தீர்வு என்று மருத்துவர்கள் குழு அறிவித்தது.

மார்ஷ்னிலின் பெற்றோர் வயது முதிர்ந்தவர்களாகவும், மருத்துவச் சிக்கல்களுடனும் இருந்ததால், அவர்களால் தானம் செய்ய முடியவில்லை. திருமணத்துக்குக் காத்திருக்கும் மார்ஷ்னிலின் தங்கை வழங்க முன்வந்ததையும் மார்ஷ்னில் தடுத்துவிட்டார். மனம் சோர்ந்திருந்த குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு பேசினார் தித்தி. தான் சிறுநீரகம் தானம் செய்ய முன்வருவதாகவும் தெரிவித்த கையோடு, கொல்கத்தாவுக்கு பயணமானார். சில அடிப்படை மருத்துவத் தேர்வுகள், சட்டச் சிக்கல்கள் எல்லாவற்றையும் சமாளிக்க ஒன்பது மாதங்கள் பிடித்தன. உறவினர் அல்லாதோர் உறுப்பு தானம் செய்வதை இன்று அனுமதிக்கும் ஒரே மாநிலமாக மேற்கு வங்கம் இருப்பது தோழிகளுக்கு மிகவும் வசதியாகிவிட்டது. ஒரு வழியாக அறுவை சிகிச்சை முடிந்து, தோழிகள் இருவரும் கொல்கத்தா மருத்துவமனையில் உடல்நலம் தேறிவருகின்றனர்.

சிறிய பொருள்களைக்கூட கொடுத்து உதவத் தயங்கும் காலத்தில் கிட்னி தானம்... பேஷ்!

14 நாள்கள்

மிகவும் மதிப்புள்ள விளையாட்டு வீரர்!

மீபத்தில் இந்தோனேசியா நாட்டின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், `எம்.வி.பி' எனப்படும் மிகவும் மதிப்புள்ள விளையாட்டு வீரர் என்ற சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார் ஜப்பானைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை ரிகாகோ ஐக்கீ. நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், நீச்சல் தனிநபர் பிரிவில் ஆறு தங்கப்பதக்கங்களும், ரிலே என்ற குழுப் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் வென்றிருக்கிறார் ரிகாகோ. இந்த எம்.வி.பி. பரிசைப் பெறும் முதல் பெண் இவரே. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபராக அதிகப் பதக்கங்களை வென்றதும் ரிகாகோதான். பான் பசிஃபிக் போட்டிகளில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்ற கையோடு ஜகார்த்தாவில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார், 18 வயதான ரிகாகோ.

விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாளன்று இந்தப் பரிசை அறிவித்தது ஆசிய ஒலிம்பிக் கவுன்சில். “எம்.வி.பி விருது இந்த ஆண்டு இல்லை என்று முதலில் தெரியவந்ததும் வருத்தமாக இருந்தது. இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படுகிறது என்ற தகவலை அடுத்து, இந்த அருமையான விருது எனக்குக் கிடைத்தது, மிகுந்த மகிழ்வைத் தருகிறது” என்று தெரிவித்தார் ஐக்கீ. சுழற்கோப்பையும், ஐம்பதாயிரம் டாலர் பரிசுப் பணத்துக்கான காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது. இன்னும் இரண்டாண்டுகளில் நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்தாம் தன் அடுத்த இலக்கு என்று அறிவித்திருக்கும் ஐக்கீ, இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தன்னைப் பலப்படுத்திக்கொண்டு சொந்த மண்ணில் பதக்கங்கள் வெல்லப்போவதாகவும் தெரிவித்தார்.

வாழ்த்துகள் ரிகாகோ!

- நிவேதிதாலூயிஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism