Published:Updated:

இது மகளிர் மட்டும்! - சென்னையில் இன்று முதல் `பிங்க் ஆட்டோ’

இது மகளிர் மட்டும்! - சென்னையில் இன்று முதல் `பிங்க் ஆட்டோ’
இது மகளிர் மட்டும்! - சென்னையில் இன்று முதல் `பிங்க் ஆட்டோ’

சென்னையில், பெண்களுக்காகப் பெண்களே ஓட்டும் `பிங்க் ஆட்டோ' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் பாதுகாப்புக்காகவும் சென்னையில் மற்றுமொரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர், ரோட்டரி குழுமம் சார்ந்த பெண்கள் அமைப்பினர். இந்த பிங்க் ஆட்டோ சேவை, திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதனின் மனைவி நல்லம்மை ராமநாதனால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் பாதுகாப்புக்காகவும் பல்வேறு முயற்சிகள் அரசாங்கத்தாலும் தனியார் அமைப்புகளும் தொடர்ந்து முன்னெடுக்கின்றன. 

அந்த வகையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், அவர்களின் வாழ்வில் சுயதொழில் மூலம் முன்னேற, இந்த பிங்க் ஆட்டோ திட்டம் உறுதுணையாக இருக்கும். இந்த வாய்ப்பு, சுயதொழிலில் ஆர்வமுள்ள அனைத்து தரப்பு பெண்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையை விக்ரம் பிரபு தொடங்கிவைத்தார். காவல்துறை இணை ஆணையர் சி.மகேஸ்வரி, இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் சுப்பு பஞ்சு, டைமண்ட் பாபு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதன், முதல் ஆட்டோவை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இந்த பிங்க் ஆட்டோக்கள், சென்னையில் சில முக்கிய பஸ் ஸ்டாண்டுகள், மெட்ரோ ரயில் நிலையங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும். இதில், ஓட்டுநரின் முழுவிவரம், இலவச WiFi, FM, ஜி.பி.எஸ் மற்றும் மீட்டர் ஆகிய அம்சங்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, கூடுதல் சிறப்பாக இந்த Pink Auto சேவையைப் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். பெண்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக, இந்த பிங்க் ஆட்டோ சேவையை டெல்லி நொய்டா பகுதிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்கமே தொடங்கி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சில வட மாநிலங்களில் இந்த சேவை இருந்தாலும், தென்னிந்தியாவுக்கு இந்தச் சேவை இப்போதுதான் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.