Published:Updated:

``மகிமா ஆரோக்கியமாதான் இருந்தா!'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை

``நாங்க எல்லாம் வெயிட் பண்ணிக்கிட்டே இருந்தோம். 15 நிமிஷம் கழிச்சு வந்து, `ஸாரி, பல்ஸ் போயிடுச்சு. ஷி இஸ் நோ மோர்'னு சொல்லிட்டார்.''

``மகிமா ஆரோக்கியமாதான் இருந்தா!'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை
``மகிமா ஆரோக்கியமாதான் இருந்தா!'' - சென்னையில் உயிரிழந்த மாணவியின் தந்தை

தாம்பரம் தனியார் கல்லூரியில், பேஸ்கட் பால் விளையாடும் போது மயங்கி விழுந்து மாரடைப்பால் மரணமடைந்த மாணவி மகிமா பற்றிய செய்தி, பலருடைய மனங்களையும் திடுக்கிட வைத்துவிட்டது. மாணவியைக் கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தி விளையாட வைத்ததால்தான் அவர் உயிரிழந்தார் எனச் செய்திகள் வருகின்ற இந்த நேரத்தில், நடந்தது என்ன என்று தெரிந்துகொள்ள மகிமாவின் அப்பா லூர்து ஜெயராஜ் அவர்களிடம் பேசினோம்.  

``அவள் நார்மலான, ஆரோக்கியமான குழந்தைங்க. அவள் ஹெல்த்துல எந்தப் பிரச்னையும் இல்லை. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லணும்னா, மகிமா கடந்த 6 மாதங்களில் ஹாஸ்பிட்டலுக்குப் போனதில்லை. 

டாக்டர்ஸ், என் மகளுக்கு நடந்ததை `அபூர்வத்திலும் அபூர்வமாக இப்படி நடக்கும்' என்கிறார்கள். விளையாட்டு வீரர்ளுக்கு மட்டுமே வரக்கூடிய பிரச்னைன்னு சொல்றாங்க. அதுலேயும் விளையாடிக்கிட்டு இருக்கும்போதே இப்படி நடக்கிறதுக்கு எப்போதாவதுதான் வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. டாக்டர்ஸ் சொன்ன விஷயங்களையெல்லாம், நெட்டில் போட்டுப் பார்த்தேன். அவங்க சொன்னதெல்லாம்தான் கூகுளிலும் வருது. இதுக்கு மேலே நான் என்ன பண்றதும்மா?'' என்று  விரக்தியாகப் பேசியவர், சம்பவத்தைக் கம்மலான குரலுடன் விவரிக்க ஆரம்பித்தார். 

``நேத்து கிளம்பும்போதே சொன்னேன். `மகிமா, நீ இதுல சாம்பியன்ஷிப் எல்லாம் வாங்கப் போறது கிடையாது.  ஜஸ்ட் விளையாடச் சொல்றாங்க. சிம்பிளா விளையாடு. ரொம்ப ஹார்ட் வொர்க் எல்லாம் செய்யாதே'ன்னு சொல்லித்தான் அனுப்பினேன். நான் அப்படிச் சொல்லும்போது, மகிமாவுடைய ஃப்ரெண்டும் கூட இருந்தாங்க. மகிமாவும் அவ ஃப்ரெண்டும் எங்க வீட்டில் லன்ச் சாப்பிட்டுட்டு, 3 மணி வாக்கில்தான் காலேஜ்க்குக் கிளம்பினாங்க. அங்கே போனதும் கொஞ்ச நேரம் ரன்னிங் பண்ணியிருக்கா. அதுக்கப்புறம், 'விருப்பப்படுறவங்க விளையாடுங்க. மத்தவங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க'ன்னு சொல்லியிருக்காங்க. ஆனா, மகிமா ரெஸ்ட் எடுக்காம அடுத்த லெவலா பேஸ்கட் பால் விளையாடப் போயிருக்கா'' என்றவரிடம், மகிமா பேஸ்கட் பால் பிளேயரா என்றோம். 

``நோ நோ..  ஷி இஸ் அ பாட்மின்ட்டன் பிளேயர். 2 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் பாட்மின்ட்டனில் மகிமா மாவட்ட லெவலில் நிறைய மெடல்கள் வாங்கியிருக்கா. பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கிறப்போ, கவனம் முழுக்கப் படிப்பில் இருக்கணும்கிறதுக்காக மகிமா விளையாட்டை விட்டுட்டா. அதோட நேற்றைக்குத்தான் அவள் மறுபடியும் விளையாடியிருக்கா. காலேஜ் போனதும், அங்கே விளையாட்டும் `பார்ட் ஆஃப் ஒன் புரோகிராம்' அப்படிங்கிறதால விளையாடி இருக்கா. ஆனா, அதுதான் அவ கடவுள்கிட்ட போய் சேர்றதுக்கும் காரணமாகிடுச்சு'' என்றவரின் குரல் கம்முகிறது. 

``மகிமா திடீர்னு ஓவரா விளையாடி இருக்கக் கூடாது. மயக்கம் போட்டு விழுந்ததும் ரொம்பவும் பயந்துபோயிட்டிருக்கா. காலேஜ்லேயே பல்ஸ் செக் பண்ணியிருப்பாங்க போல. அங்கேயே பல்ஸ் டவுன் ஆனது தெரிஞ்சதும்தான் வேக வேகமா ஹாஸ்பிட்டலுக்குத்  தூக்கிட்டுப்போயிருப்பாங்க போலிருக்கு. 

அதுக்குள்ள எனக்குத் தகவல் தெரிஞ்சு நானும் ஹாஸ்பிடலுக்கு ஓடினேன். அங்கே என் கண்ணு முன்னாடிதான், அவ நெஞ்சில் பிரஷர் கொடுத்தாங்க. செக்கப் பண்ணாங்க. அப்புறம் டாக்டர் என்கிட்ட, `இப்ப எதுவும் சொல்ல முடியாது'ன்னு சொன்னார். நாங்க எல்லாம் வெயிட் பண்ணிக்கிட்டே இருந்தோம். 15 நிமிஷம் கழிச்சு வந்து, `ஸாரி, பல்ஸ் போயிடுச்சு. ஷி இஸ் நோ மோர்'னு சொல்லிட்டார். நான் எல்லாத்தையும் கடவுள்கிட்ட ஒப்படைச்சுடுவேன். அதனால்தான், என்னால உங்கக்கிட்டப் பேச முடிஞ்சது. ஆனா, என் மனைவி உடைஞ்சுப்போயிட்டாள். அழுதுகிட்டே இருக்கிறா. இந்த வலியை எங்களால தாங்க முடியலைம்மா'' என்றவர் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.