Published:Updated:

‘நாடோடி மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட புதிய கடை!’ - 50 வகையான மாலைகள் விற்பனை

‘நாடோடி மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட புதிய கடை!’ - 50 வகையான மாலைகள் விற்பனை
‘நாடோடி மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட புதிய கடை!’ - 50 வகையான மாலைகள் விற்பனை

தமிழகத்திலேயே முதல் முறையாக நாடோடி மக்கள் முன்னேற்றமடைய அவர்கள் தயாரிக்கும் 50 வகையான மாலைகளை விற்கத் திருப்பத்தூரில் நகராட்சிக்குச் சொந்தமான புதிய கடை ஒதுக்கப்பட்டுள்ளது.

‘உண்ண உணவு... உடுக்க உடை... இருக்க இருப்பிடம்’ ஆகியவை ஒரு மனிதனுக்குக் கட்டாயம் தேவை. நாடு சுதந்திரமடைந்து, இத்தனை ஆண்டுகளாகியும் நாடோடி மக்கள் மட்டும் பொருளாதார முன்னேற்றமடையாமல் இருப்பதற்கு இங்குள்ள சமூக கட்டமைப்புகளே காரணம். எல்லோரையும்போல் அவர்களும் வாழ வேண்டுமென்றால் அதற்கான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் யாரும் தயாராக இல்லை. ஆனாலும், இத்தடைகளை எல்லாம் கடந்து, வாழ்வாதாரம் முன்னேற்றம் காண புதிய அடியை எடுத்து வைத்திருக்கிறார்கள், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பாய்ச்சல் என்ற கிராமத்தில் வசிக்கும் நாடோடி மக்கள். திருப்பத்தூர் தூய இருதயக் கல்லூரி மாணவ-மாணவிகள் சமுதாய பணிக்காக அளித்த பணத்திலிருந்து ரூ.10 லட்சம் வட்டியில்லாக் கடன், இந்தப் பகுதி நாடோடி பெண்களின் சுய உதவிக் குழுவுக்கு முதலில் வழங்கப்பட்டது. அத்தகையை அவர்கள் சரியாகத் திருப்பிச் செலுத்தினார்கள்.

ஆகையால், நாடோடி பெண்களின் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பல்வகையான பொருள்களை விற்பனை செய்வதற்காகத் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான ஒரு புதிய கடை அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கடைக்கான 2 ஆண்டுக்கான வாடகை மற்றும் பணி ஆட்கள் சம்பளம் ரூ.2.4 லட்சத்தை நபார்டு வங்கி மானியமாக வழங்கியுள்ளது. இந்தத் தொகையை நாடோடி மக்கள் திரும்ப செலுத்த வேண்டியதில்லை என்று வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நாடோடிப் பெண்கள் குழுத் தலைவர் ரதி கூறுகையில், ‘‘தெருத் தெருவாக ஊசி, பாசி மணிகளை விற்று வந்தோம். இப்போது நாங்களே ருத்ராட்ச மாலை, துளசி மாலை, ஸ்படிக மாலை, ஜெப மாலை, தியான மாலை உட்பட
50 வகையான மாலைகளைத் தயாரிக்கிறோம். அவற்றை இங்கிருந்து ஈரோடு, சேலம், மதுரை, கன்னியாகுமரி வரை விற்பனைக்கு அனுப்புகிறோம். கிறிஸ்துவ ஜெப மாலையை ஸ்விட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்கிறோம். எங்கள் வாழ்வாதாரம் இப்போது மேம்பட்டிருக்கிறது. 300-க்கும் மேற்பட்ட எங்கள் குடும்பத்திலிருந்து எங்களின் மூன்று பிள்ளைகள் கல்லூரியில் படிக்கின்றனர்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.