Published:Updated:

இந்தியாவின் முதல் பெண் குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரி - அன்னா ராஜம் மல்ஹோத்ரா

இந்தியாவின் முதல் பெண் குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரி - அன்னா ராஜம் மல்ஹோத்ரா
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் முதல் பெண் குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரி - அன்னா ராஜம் மல்ஹோத்ரா

முதல் பெண்கள்ஹம்சத்வனி - ஓவியம் : கார்த்திகேயன் மேடி

இந்தியாவின் முதல் பெண் குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரி - அன்னா ராஜம் மல்ஹோத்ரா

முதல் பெண்கள்ஹம்சத்வனி - ஓவியம் : கார்த்திகேயன் மேடி

Published:Updated:
இந்தியாவின் முதல் பெண் குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரி - அன்னா ராஜம் மல்ஹோத்ரா
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் முதல் பெண் குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரி - அன்னா ராஜம் மல்ஹோத்ரா

“என்னைப் பெட்டிக்குள் வைத்துப் புதைக்க வேண்டாம். எரித்துவிடுங்கள். சாம்பலை எங்காவது நல்ல இடத்தில் கரைத்துவிடுங்கள்” - இறப்பதற்குமுன் தன் உதவியாளரான சுஜித் தாமோதரிடம் இப்படித்தான் சொல்லிவைத்திருந்தார் 91 வயது மூதாட்டி அன்னா ராஜம். கடந்த செப்டம்பர் 17 அன்று மரணமடைந்த அன்னாவின் அஸ்தி, அவர் ஆசைப்படியே ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பெண் குடிமைப்பணி அதிகாரியான அன்னாவின் வாழ்க்கை, ஒவ்வோர் அடியிலும் போராடி ஜெயித்த ஒரு சாதாரணப் பெண்ணின் சாகசக் கதை!

இந்தியாவின் முதல் பெண் குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரி - அன்னா ராஜம் மல்ஹோத்ரா

1927 ஜூலை 17 அன்று கேரளத்தின் ஆலப்புழை நீராணம் பகுதியில் பிறந்தார் அன்னா ராஜம். தந்தை ஒட்டவெலில் ஜார்ஜ், தாய் அன்னா பால். கோழிக்கோட்டில் இளநிலை பட்டப்படிப்புக்குப் பின், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில முதுநிலைப் பட்டம் பெற்றார் அன்னா. 1950-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடிமைப்பணித் தேர்வுகளில் தன் 23-வது வயதில் தேர்வானார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவின் முதல் பெண் குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரி - அன்னா ராஜம் மல்ஹோத்ராஅன்றைய காலகட்டத்தில் குடிமைப் பணி தேர்வு என்பது பெண்களுக்கு மாபெரும் சவாலாகவே இருந்தது.  அதோடு, இத்தேர்வில் வென்ற பெண்களுக்கு ஏற்ற பணிகளாக வெளிநாட்டுப் பணி, மத்தியப் பணி ஆகிய இரண்டு மட்டுமே பார்க்கப்பட்டன. அன்னாவோ, தனக்குக் குடிமைப்பணிதான் வேண்டும் என்று பிடிவாதமாக நின்றார். “என் சகோதரி போராடி, குடிமைப்பணி பெற்றது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது” என்று இப்போது நினைவுகூர்கிறார் அன்னாவின் சகோதரி கிரேஸ்.

ஆண் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது போல குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல் என எல்லாப் பயிற்சிகளும் அன்னாவுக்கும் அளிக்கப்பட்டன. பயிற்சி முடிந்து மதராஸ் கேடர் வந்து சேர்ந்தார் அன்னா. குடிமைப்பணி போன்ற முக்கியப் பணிகளில் பெண்களைப் பணியமர்த்துவதில் நாட்டம் இல்லாதவராக அப்போது இருந்தார் அன்றைய மதராஸ் மாநில முதல்வர் ராஜாஜி.

“ஆண், பெண் என்று பிரித்துப் பார்க்க வேண்டாம். ஓர் அதிகாரியாக மட்டுமே பாருங்கள். களத்தில் பணி கொடுங்கள். என் வேலையைப் பார்த்துவிட்டு முடிவுக்கு வாருங்கள்” என்று வாதிட்ட அன்னாவை, ஓசூர் மாவட்ட உதவி ஆட்சியராக நியமித்தார் ராஜாஜி. ஓசூரில் அப்போது மின்சாரம்கூட இல்லை. மாவட்டத்தின் மக்களைச் சரிவர கவனிக்க மின்சாரம் முக்கியம் என்று அன்னா வலியுறுத்த, ராஜாஜி துணையுடன் ஓசூர் ஒளிர்ந்தது. இன்னொருமுறை கொள்ளையர் சிலரைப் பிடிக்க, ஓட்டுநர் மற்றும் ஒரு பணியாளருடன் அவர் சென்ற விஷயம் தெரியவர, ஆட்சியர் கடும் கோபம் கொண்டு, அன்னாவைக் கடிந்துகொண்டதோடு, கையில் எப்போதும் ரிவால்வர் வைத்திருக்கும்படி வலியுறுத்தி, அனுமதியும் அளித்தார்.

பின்னொரு நாளில் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் “அன்னா மிகவும் திறமை வாய்ந்த அதிகாரி, சிறந்த பெண்ணுக்கு உதாரணம்” என்று ராஜாஜியே பாராட்ட நேர்ந்ததுதான் அன்னாவின் வெற்றி. ஓசூர் உதவி ஆட்சியர் குதிரையில் ஏறி அலுவலகம் சென்றதும், பாதுகாப்புக்காகக் கையில் ரிவால்வர் வைத்திருந்ததும் அன்று மக்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியிருந்தது. காட்டுக்குள்ளிருந்து தப்பிவந்த யானைக் கூட்டத்தை விரட்ட துப்பாக்கியால் சுடுவதாக உயர் அதிகாரிகள் சிலர் ஆலோசித்திருந்தனர். யானைகள் மீது பற்றுகொண்டதால் குறுக்கிட்ட அன்னா, அவற்றுக்கு எந்தத் தீங்கும் இழைக்காமல் விரட்டிச் சென்று காட்டுக்குள் பத்திரமாகக் கொண்டு சேர்த்தது மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

அன்னா தன் பணிக் காலத்தில் ஏழு முதல்வர்களின் கீழ் பணிபுரிந்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது விவசாயத்துறையில் அப்போது பணியில் இருந்த அன்னா, இந்திராவுடன் எட்டு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், சுளுக்கிய காலில் இறுக்க கட்டு போட்டபடி! பயணம் முடியும் வரை இந்திராவிடம் தனக்கு நேர்ந்ததைச் சொல்லவில்லை அன்னா. அத்தனை மன உறுதி! ராஜீவ் காலத்தில், அன்னாவுக்கு விளையாட்டுத்துறைப் பணி கிட்டியது. 1982-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின்போது கட்டப்பட்ட ஃபிளாட்கள், பாலங்கள், மேம்பாலங்கள் ஆகியவை அன்னாவின் மேற்பார்வையில் கட்டப்பட்டவையே.

இந்தியாவின் முதல் கணிப்பொறியால் இயக்கப்படும் துறைமுகம் மும்பை நவசேவாவில் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராக இருந்தவர் அன்னா. இவரது திறமைக்குக் கிடைத்த பரிசு 1989-ம் ஆண்டு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருது.

வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் போராட்டத்தைச் சந்தித்த அன்னா, தன் ஐம்பதாவது வயதில் திருமணம் செய்துகொண்டார். 25 ஆண்டு கால காதலை அன்னாவும், அவர் கணவர் ஆர்.என்.மல்ஹோத்ராவும் தங்களுக்குள் பொத்தி பாதுகாத்து வைத்திருந்தனர். குடிமைப்பணி பயிற்சியில் தொடங்கிய காதல், மொழி, மத வேறுபாடுகளால் மனதின் ஓரத்தில் அமிழ்ந்தே இருந்திருக்கிறது இருவருக்கும். அப்போது பணியில் சேரும் பெண் அதிகாரிகளுக்குத் திருமணம் தடை செய்யப்பட்டிருந்தது.அன்னா பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இந்தச் சட்டம் மாற்றப்பட்டது. ரிசர்வ் வங்கியின் கவர்னரான மல்ஹோத்ரா பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இந்து, அன்னாவோ கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவர். இருவரும் ஒரு வழியாக வாஷிங்டனில் திருமணம் முடித்தனர். “மல்ஹோத்ரா அருமையான மனிதர், நான் இத்தனை காலம் காத்திருந்தது வீண் போகவில்லை” என்று கூறியிருக்கிறார் அன்னா.

பணி ஓய்வுபெற்ற பிறகு மும்பையின் பிரபல ஹோட்டல் நிறுவனமான லீலா ஹோட்டல்ஸில் `போர்டு மெம்பர்’ பதவி வகித்தார் அன்னா. கணவர் 1997-ம் ஆண்டு மறைந்துவிட, அன்னா தன் 91-வது வயதில் மறைந்தார். “என்னைப் போல பல அதிகாரிகள் அப்போது உண்டு” என்று தன்னடக்கத்துடன் கூறிவந்த அன்னா ராஜம், நிச்சயம் போற்றப்பட வேண்டிய முதல் பெண்! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism