Published:Updated:

இந்தியாவின் முதல் பெண் விமானி - உஷா சுந்தரம்

இந்தியாவின் முதல் பெண் விமானி - உஷா சுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் முதல் பெண் விமானி - உஷா சுந்தரம்

முதல் பெண்கள்ஹம்சத்வனி - ஓவியம் : கார்த்திகேயன் மேடி

இந்தியாவின் முதல் பெண் விமானி - உஷா சுந்தரம்

முதல் பெண்கள்ஹம்சத்வனி - ஓவியம் : கார்த்திகேயன் மேடி

Published:Updated:
இந்தியாவின் முதல் பெண் விமானி - உஷா சுந்தரம்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் முதல் பெண் விமானி - உஷா சுந்தரம்

விமானம் ஓட்டுதலில் உலக சாதனையாளர், புளூ கிராஸ் அமைப்பைத்
தன் கணவருடன் இணைந்து தொடங்கியவர்

“பெண்கள் போர் விமானங்களை  இயக்க வேண்டும். ஆண்களைவிட அவர் களால்  இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும்” என்றார் அந்தப் பெண்மணி. “இப்போது நீங்கள் காக்பிட்டில் பணியாற்றுவீர்களா?” என்ற அடுத்த கேள்விக்கு, “ஏன் முடியாது? விமானம் ஓட்டத் தயாராகவே இருக்கிறேன். 17 வயதில் எனக்குத் திருமணமாகும்போது ஒரு விமானியைத் திருமணம் செய்துகொள்வேன் என்றோ, விமானத்தை நான் ஓட்டுவேன் என்றோ நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இப்போதும் வானில் ஜெட் விமானங்கள் வரைந்து செல்லும் கோடுகளை வெகுநேரம் ரசிக்கிறேன்” என்று கூறினார் அந்த 80 வயது சூப்பர் சீனியர்!

1924-ம் ஆண்டு கோவை அரசு கலைக்கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய டி.எஸ். கிருஷ்ணமூர்த்திக்கு மகளாகப் பிறந்தவர் உஷா. சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த உஷாவை, 1941-ம் ஆண்டு 25 வயதான வி.சுந்தரத்துக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். சுந்தரம் இங்கிலாந்தில் விமானம் ஓட்டப் பயிற்சி  பெற்றவர். 1937-ம் ஆண்டு கராச்சியில் இருந்து சென்னை வரை விமானம் ஓட்டி வந்து கமர்ஷியல் பைலட் உரிமம் பெற்றவர் சுந்தரம். பிறகு, மெட்ராஸ் ஃப்ளையிங் கிளப்பில் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார். இரண்டாம் உலகப் போர் மூண் டிருந்த அந்த நேரத்தில் ஆங்கிலேய மற்றும் ஜெர்மானிய போர் வீரர்களுக்கு விமானம் ஓட்டும் பயிற்சியளித்து வந்தார். 1945 முதல் 1951 வரை இந்தியாவின் பெரும் தலைவர்கள் பலருக்கு விமானம் ஓட்டினார்.

இந்தியாவின் முதல் பெண் விமானி - உஷா சுந்தரம்

உஷாவுக்கும் விமானங்கள் மீது ஈடுபாடு இருந்தது. கணவரிடம் காக்பிட்டுக்குள் நுழையும் தன் ஆசையைச் சொல்லவே, மனைவிக்குப் பயிற்சி தர ஆரம்பித்தார் அவர். மைசூர் மன்னருக்கு விமானம் ஓட்டும்போது, கோ-பைலட்டாக, கணவர் அருகிலிருந்து கவனித்து விமானம் ஓட்டக் கற்றுக்கொண்டார் உஷா.

இந்தியா விடுதலை பெற்றதும் விறுவிறுவென இந்தியாவின் மன்னராட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை முடுக்கிவிட்டார் நேரு. விமானத்திலேயே பறந்துகொண்டிருந்தார் சர்தார் வல்லபபாய் படேல். படேலின் பயணங்களில் பெரிதும் துணை நின்றது இந்தக் கணவன்  மனைவி ஜோடி!

1948-ம் ஆண்டு ஜக்கூரில் நாட்டின் முதல் அரசு விமானப் பயிற்சி மையத்தைத் தொடங்க வழிசெய்தார் மைசூர் மன்னர். அதில் பயின்ற முதல் மாணவியாகத் தேறியவர் உஷா! பயிற்சி முடித்த கையோடு, நேருவை டகோட்டா டிசி-3 ரக விமானத்தில் ஜக்கூரில் இருந்து மைசூருக்குத் தனி விமானியாக அழைத்துச் சென்றார். அதுதான் இந்தியாவில் முதன்முதலில் பெண் விமானி ஒருவர் தனியே ஓட்டிய விமானப் பயணம். 1936-ம் ஆண்டு சரளா தக்ரால் என்ற பெண் கராச்சியில் விமானத்தை  இயக்கியிருந்தாலும், விடுதலையான இந்தியாவில் விமானம் ஓட்டிய முதல் பெண் உஷாதான்.  `விமானம் ஓட்டிய முதல் இந்தியப் பெண்' என்று இவரைப் பாராட்டி 2001 டிசம்பரில் கௌரவித்தது பெங்களூரைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக் லேபரட்டரீஸ்.

நாக்பூரிலிருந்து டெல்லிக்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லாத சர்தார் வல்லபபாய் படேலை விமானத்தில் அழைத்துச் செல்லும் பணி உஷாவுக்குத் தரப்பட்டது. ஏற்கெனவே நெஞ்சுவலியால் அவதியுற்ற படேலை, அழுத்தமற்ற விமானமான டகோட்டாவில் வெறும் 3000 அடி உயரத்திலேயே பயணித்துப் பத்திரமாகக் கொண்டு சேர்த்தார் உஷா.

இந்தியாவின் முதல் பெண் விமானி - உஷா சுந்தரம்புத்திக்கூர்மையும் கருணையுள்ளமும் கொண்ட வர்களாக இருந்த உஷா - சுந்தரம் தம்பதி, சில காலம் இங்கிலாந்தில் வசித்தனர். இவர்கள் லண்டனிலிருந்து சென்னைக்கு ஒரு லகுரக பிஸ்டன் இன்ஜின் விமானத்தை வெறும் 23 மணி நேரத்தில் ஓட்டிவந்து சாதனை  படைத்தார். உலக சாதனையாக அறியப்பட்ட இந்தப் பயண நேரத்தை இன்றுவரை யாரும் எட்டவில்லை என்பது வியக்கத்தக்க செய்தி!

1959-ம் ஆண்டு ஒரு மழை நாளில் சென்னை - தி.நகர் பகுதியில் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த இரண்டு நாய்க்குட்டிகள்தாம் இன்றைய `புளூ கிராஸ்' என்ற பெரும் ஆலமரத்துக்கு விதை. அவற்றை வீட்டுக்குத் தூக்கி வந்தார் சுந்தரம். மூன்று குழந்தைகளுடன் பசுல்லா ரோட்டில் வசித்து வந்த தம்பதி, தங்கள் வீட்டில்தான் ஆதரவற்ற விலங்குகளுக்கு அடைக்கலம் தந்தனர். இப்படி வீட்டில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட `புளூ கிராஸ்' இன்று நாய்கள், பூனைகள், மாடுகள், குரங்குகள், பிற விலங்குகள் என்று தனித்தனியாக ஐந்து ஷெல்டர்களை நடத்துகிறது.

ஆதரவற்ற தெரு நாய்களுக்கான கருத்தடை முறையை அறிமுகப்படுத்தியது புளூ கிராஸ்தான். அரசே இந்தத் திட்டத்தை இப்போது நாடு முழுவதும் செயல்படுத்துகிறது. 1977-ம் ஆண்டு `ரீசஸ் மங்கி' எனப்படும் குரங்கை வாங்கவோ, விற்கவோ முடியாதபடி சட்டம் கொண்டுவரச் செய்தது புளூ கிராஸ் அமைப்பு.

2009-ம் ஆண்டு தமிழகத்தை `ரேபீஸ் அற்ற மாநில'மாக அரசு அறிவிக்கக் காரணம் இந்த அமைப்புதான். 1999-ம் ஆண்டு உஷா மற்றும் குடும்பத்தினர், பூனைகளுக்குத் தனி ஷெல்டர் அமைக்க, கிண்டி பகுதியில் 600 ஏக்கர் நிலத்தைத் தந்து உதவினர்.

1997-ம் ஆண்டு சுந்தரம் மறைந்தார். ஆனாலும், தன் பணியை இறுதிவரை தொடர்ந்தார் உஷா. 2010 ஏப்ரல் 4 அன்று மரணமடைந்த அவரின் கண்கள் சங்கர நேத்ராலயாவுக்குத் தானமாக வழங்கப்பட்டன. இருந்தபோதும், இறந்தபோதும் தானம் கொடுத்த உஷா, என்றும் போற்றப்படவேண்டிய முதல் பெண்!