தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

இந்த உலகை வெல்ல என்ன வேண்டும்? - பன்மொழி வித்தகி ஜான்ஹவி பன்ஹர்

இந்த உலகை வெல்ல என்ன வேண்டும்? - பன்மொழி வித்தகி ஜான்ஹவி பன்ஹர்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்த உலகை வெல்ல என்ன வேண்டும்? - பன்மொழி வித்தகி ஜான்ஹவி பன்ஹர்

வாவ் பெண்கள்

14 வயது பெண், எட்டு மொழிகளில் புலமைபெற்று அசத்துகிறார், கல்லூரியில் இளங்கலை பயில்கிறார், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம்களில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு எழுச்சி உரை நிகழ்த்துகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஹரியானா மாநிலம், மால்பூரில் வசிக்கும் ஜான்ஹவி பன்ஹரைச் சந்தியுங்கள்!

‘`என் தந்தை பள்ளி ஆசிரியர். தாய் ஹோம்மேக்கர். சிறு வயதில் மற்ற குழந்தைகளைப்போல எனக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்ததில்லை. குறுக்கெழுத்துப் புதிர்களும், படங்கள் நிறைந்த பாடப் புத்தகங்களும்தாம் என்னை வசீகரித்தன. டி.வி-யில் கார்ட்டூன்கள், செய்திகள் ஆகியவற்றிலும்கூட அவர்கள் பேசும் ஆங்கிலத்தையே என் மனம் கவனிக்கும். 

இந்த உலகை வெல்ல என்ன வேண்டும்? - பன்மொழி வித்தகி ஜான்ஹவி பன்ஹர்

என் பெற்றோர், குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசிப் பழக்கமில்லை. அக்கம்பக்கத்தில் வசித்தவர்களும் பெரும்பாலும் இந்தி அல்லது ஹரியான்வி மொழியிலேயே பேசுவார்கள். டெல்லி செங்கோட்டையைப் பார்க்கச் சென்றிருந்தபோது, அங்கு வந்திருந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடம் ஆங்கிலத்தில் நான் பேசியதைக் கேட்ட என் பெற்றோர் பிரமித்தனர். ஸ்கூலில், என்னை `சீனியர் கேஜி’ வகுப்பில் சேர்த்துக்கொள்ள, எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் ஆரம்பித்தது என் பள்ளி வாழ்க்கை. அடுத்தடுத்த வருடங்களில், பள்ளி நிர்வாகம் என்னை இரண்டு வகுப்புகளுக்கான தேர்வையும் சேர்த்து எழுதப் பரிந்துரைத்து, டபுள் புரொமோஷன் கொடுத்தது. இப்படி பன்னிரண்டாம் வகுப்புவரை விரைந்து படித்து முடித்தேன்.

என் தந்தை யூடியூப் மற்றும் இணையதளங்களில் இருந்து ஸ்போக்கன் இங்கிலீஷ் வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்து கொடுத்தார். மொழி அறிவை மேலும்  பட்டை தீட்டும் விதமாக மொழியியல் வல்லுநர் ஒருவரிடம் பல மொழிகளை உச்சரிப்பு விதிகளுடன் முறைப்படி பயின்றேன். டெல்லியில், பன்னாட்டுத் தூதரகங்கள் நடத்தும் மொழிப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பினேன்.

16 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் அதில்  சேர முடியும் என்று கூறி, எனக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டனர் தூதரக அதிகாரிகள். மனம் தளராது, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆங்கில உச்சரிப்புகளை ஆன்லைனில் கற்றேன். இன்னும் பல மொழி களை இணையதளங்கள் மூலமே பயின்று மொழி அறிவை வளர்த்துக்கொண்டேன்.

11 வயதுக்குள் எட்டு மொழிகளில் பேசப் பழகினேன். இதனால் ‘Wonder Girl of India’ என்ற சிறப்பு என்னைத் தேடிவந்தது'' என்கிற ஜான்ஹவி, தொடர்ந்து பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுவருகிறார். இவை மட்டுமல்ல... ஜான்ஹவி இனிமையாகப் பாடுவார். பகவத் கீதையின் 18 அத்தியாயங்களும் இவருக்கு அத்துபடி!

``பிபிசி செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிவதே என் லட்சியம்'' என்கிற ஜான்ஹவி, அதற்காகவே மாஸ் கம்யூனிகேஷன் கோர்ஸ் படிக்க விரும்புகிறார். 

``என் தந்தையின் மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி இருக்கும் சூழ்நிலையிலும், என் பெற்றோர் என் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பது என் மிகப்பெரிய பலம்'' என்று நன்றி நவில்கிறார் ஜான்ஹவி.

ஆம்... கடின உழைப்பு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு... இவை இருந்தால் போதுமே இந்த உலகை வெல்வதற்கு!

- ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்