தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
பிரீமியம் ஸ்டோரி
News
14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்

ஐ.எம்.எஃப் தலைமைப் பொருளாதார ஆலோசகராகும் முதல் பெண்!

ஐ.எம்.எஃப் எனப்படும் சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார் கீதா கோபிநாத். 1971-ம் ஆண்டு மைசூரில் பிறந்து, டெல்லி பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த கீதா, அமெரிக்க குடியுரிமையும் இந்தியாவின் வெளிநாட்டுக் குடியுரிமையும் பெற்றவர். 2001-ம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டுகள் பணியாற்றியபின் 2005-ம் ஆண்டு முதல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேச கல்வி மற்றும் பொருளாதாரத்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கேரள மாநிலத்தின் பொருளாதார ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார் கீதா. புகழ்பெற்ற அமெரிக்கன் `எக்னாமிக் ரெவ்யூ’ மற்றும் `ஹேண்ட்புக் ஆஃப் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ்’ இதழ்களின் துணை ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்.

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

“உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களில் கீதாவும் ஒருவர். சர்வதேச அளவில் கல்வித்துறை சார் அனுபவமும் கொண்டவர். எங்கள் ஐ.எம்.எஃப்-இன் ஆய்வுக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அத்தனை தகுதியும் கொண்டவர் கீதா” என்று கூறியிருக்கிறார் ஐ.எம்.எஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்ட். இந்த ஆண்டின் இறுதியில் ஓய்வுபெறும் இப்போதைய தலைமைப் பொருளாதார ஆலோசகர் மவுரீஸ் ஆப்ஸ்ஃபெல்டின் பணிக்காலம் முடியும்போது பொறுப்பேற்கவுள்ளார் கீதா. இந்தப் பதவிக்கு வரும் முதல் பெண் இவரே. இதற்குமுன் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனும் இந்தப் பதவியை வகித்திருக்கிறார். அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும், 1996-ம் ஆண்டு குடிமைப்பணி தேர்வுகளில் முதலிடம் பிடித்த இக்பால் தலிவாலை மணந்திருக்கும் கீதா, அமர்த்தியா சென்னுக்குப் பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இரண்டாவது இந்தியர்!

வாழ்த்துவதில் பெருமைகொள்கிறோம் கீதா!

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

சவுதி அரேபியாவின் முதல் பெண் வங்கித் தலைவர்!

2004-ம் ஆண்டு ஜித்தாவில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் தலைமையுரையாற்ற எழுந்தார் அந்தப் பெண். சவுதியில் பெண்கள் எதிர்கொள்ளும் பணி சார்ந்த பிரச்னைகள் குறித்தும், இன்னும் அதிக பெண்கள் வெளியே பணிக்கு வரவேண்டிய அவசியத்தைக் குறித்தும் பேசினார். ஆனால், சற்றே விலகிவிட்ட அவரது தலையை மூடியிருந்த ஸ்கார்ஃப் குறித்துதான் வாரக்கணக்கில் நாளிதழ்களும் சவுதி மக்களும் விவாதித்தனர். பெண்களுக்கு கூடுதல் உரிமை குறித்து அவர் பேசியது எதுவும் அச்சேறவே இல்லை. “என்னை மிகவும் சோர்வுகொள்ளச் செய்த நிகழ்வு அது. என் வார்த்தைகள் யாரையும் சென்று சேரவே இல்லை” என்று சொல்லும் லுப்னா அல் ஒலயன்தான் இன்று சவுதியின் மூன்றாவது பெரிய வங்கியான (இப்போது ஒன்றிணைந்த) `சாப்’ என்ற சவுதி பிரிட்டிஷ் பேங்க் மற்றும் அலவ்வால் பேங்க்கின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிறருக்கு உதாரணமாக விளங்கும் லுப்னாவின் வருகையால், சவுதி நிதித்துறையிலும் புதிய வங்கியிலும் பல மாற்றங்கள் வரும், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் சவுதிப் பெண்கள். அதுவே தன் லட்சியமும் என்கிறார் லுப்னா.

லட்சியம் நிறைவேற வாழ்த்துகள் லுப்னா!

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

ரயில்களில் சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்!

கடந்த காந்தி ஜெயந்தி நாள் முதல் புவனேஸ்வரைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் கிழக்குக் கடற்கரை ரயில்வே, 63 ரயில்களிலுள்ள 90 பெட்டிகளில் தானியங்கி சானிட்டரி வெண்டிங் மெஷின்களை அமைத்திருக்கிறது. ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றைச் செலுத்தினால், ஒரு நாப்கின் வெளிவரக்கூடிய இந்த மெஷின், ஒரே நேரத்தில் 75 நாப்கின்கள் வரை தரக்கூடியது. முதன்முறையாக புவனேஸ்வர் - ஜகதல்பூர் ஹிராகண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் அமைக்கப்பட்ட இந்தக் கருவிகள் பெண்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றதையடுத்து, புவனேஸ்வர் - பெங்களூரு பிரஷாந்தி எக்ஸ்பிரஸிலும் அமைக்கப்பட்டன. `ஸ்வச் பாரத்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பெண்களின் அவசரத் தேவைக்கு உதவும் வகையிலும், சுகாதாரத்தைப் பேணவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கிழக்குக் கடற்கரை ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த ரயில்வேயில் மட்டுமே ரயில்களில் இவ்வகை கருவிகளைப் பொருத்தும் சோதனை முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. பிற ரயில்வேக்களில் ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த சேவை உள்ளது. கிழக்குக் கடற்கரை ரயில்வே மகளிர்நல அமைப்பினர் ரயில் நிலையங்களில் உள்ள மெஷின்களுக்கும், 25 ரயில்களிலுள்ள மெஷின்களுக்கும் நிதியளித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் போபால் ரயில் நிலையத்தில் இந்திய ரயில்வேயின் முதல் நாப்கின் வெண்டிங் மெஷினான `ஹேப்பி நாரி’ அமைக்கப்பட்டது. தென்னக ரயில்வேயிலும் முக்கிய நகரங்களிலுள்ள ரயில் நிலையங்களில் இதுபோன்ற வெண்டிங் மெஷின்கள் நிறுவப்பட்டுள்ளன. அனைத்து ரயில்களிலும் கூடிய விரைவில் இவை செயல்பாட்டுக்கு வர வேண்டும். பெண்களுக்கான மிக அத்தியாவசிய தேவை இந்தக் கருவிகள்!

இது ஒரு பேருதவி!

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பதக்கம் குவிக்கும் இந்திய அணி!

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்றன. மூன்றாவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள், இந்த ஆண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற அதே அரங்குகளிலும், மைதானங்களிலும் நடைபெற்றன. அக்டோபர் ஆறாம் தேதி நடைபெற்ற கண்கவர் தொடக்க நிகழ்ச்சியில், இந்தோனேசிய அதிபர், பிரதமர் மற்றும் மலேசிய நாட்டு முன்னாள் பிரதமரான அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டனர். 18 விளையாட்டுப் பிரிவுகளில் 43 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் இந்த விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். 193 பேர் கொண்ட குழு இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டுள்ளது. நடிகர் ஷாரூக் கான் இந்த அணியினரை உற்சாகப்படுத்தி வழியனுப்பினார்.

7 தங்கம், 13 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களுடன் இந்திய அணி கடந்த அக்டோபர் 10-ம் தேதி கணக்கின்படி ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. பட்டர்ஃபிளை பாணி நீச்சல் போட்டியில் தேவான்ஷி சத்தியவான் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார் ராஜு ரக்ஷிதா. இவை மட்டுமல்ல... ஈட்டி எறிதல், பளு தூக்குதல், கிளப் த்ரோ உள்பட இன்னும் பல போட்டிகளில் நம் பெண்கள் பதக்கங்களை வென்றிருக்கிறார்கள்.

திறமைகுன்றா மாற்றுத்திறன் தோழிகளுக்கு வாழ்த்தும் அன்பும்!

14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

உள்ளத்தில் இருக்கிறது உண்மை அழகு!

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த சுஜித் பக்தன் பிரபலமான பிளாகர். இவர் மனைவி ஸ்வேதா. கணவர் சுஜித்போலவே மனைவி ஸ்வேதாவும் மிக ஜாலியான அம்மணி. தன் மனைவியின் எடை குறித்து அடிக்கடி ரசிகர்கள் கிண்டல் செய்து பதிவுகளும் பின்னூட்டங்களும் இட்டதால், அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க எண்ணிய சுஜித், தன் மனைவியுடன் சேர்ந்து ஒரு நிமிட காணொலி ஒன்றை வெளியிட்டார். அதற்கு அமோக வரவேற்பு! பத்தனம்திட்டா லைவ் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்தக் காணொலியைக் கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் கண்டுள்ளனர். ஏறத்தாழ 4 லட்சம் பேர் பகிர்ந்துள்ளனர். அப்படி வைரலாக என்னதான் சொன்னார் சுஜித்?

“நானும் என் மனைவியும் கொஞ்சம் ‘தடி’தான். ஆனால், என் மனைவி குண்டாக இருப்பது இங்கு சிலருக்கு உறுத்தலாக இருக்கிறது. அதனால் என்னை விட்டுவிட்டு அவரை மட்டும் கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த உடலுக்குள் ஒரு அழகிய மனது இருக்கிறது; அது மிகவும் தூய்மையானது” என்று கூறும் சுஜித், “குண்டாக இருப்பவர்களும் வாழ வேண்டும்தானே? குறைந்த எடை கொண்டவர்கள் மட்டுமே அழகல்ல. எல்லோரும் அழகுதான். உண்மை அழகு ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது” என்கிறார். “என் மனைவியை இங்கு நிறைய பேர் கிண்டல் செய்வது வருந்தத்தக்கது” என்று சுஜித் சொல்ல, ஸ்வேதாவோ, “அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை” என்று பெருந்தன்மையாகச் சொல்லிப் புன்னகைக்கிறார்.

உடல் தாண்டிய அழகை எப்போது பார்க்கப் போகிறோம்…?

- நிவேதிதா லூயிஸ்