Published:Updated:

``கைக்குழந்தையோட கஷ்டப்படுறோம்... ஆனாலும் விடமாட்டோம்!'' - ஆசிரியர்களின் தில் போராட்டம்

``கைக்குழந்தையோட கஷ்டப்படுறோம்... ஆனாலும் விடமாட்டோம்!'' - ஆசிரியர்களின் தில் போராட்டம்
``கைக்குழந்தையோட கஷ்டப்படுறோம்... ஆனாலும் விடமாட்டோம்!'' - ஆசிரியர்களின் தில் போராட்டம்

மிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள், `சம வேலைக்குச் சம ஊதியம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்திவருகின்றனர். சென்னைப் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை தற்போது ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்திருக்கிறார்கள் காவல்துறையினர். ஏற்கெனவே, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 1.6.2009-ம் ஆண்டு வெளியான தமிழ்நாடு அரசின் 7-வது ஊதியக் குழுவின் அரசாணையை எதிர்த்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வில்லியம், ஆசிரியர் :

``குடும்பத்தோடு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். சாப்பிடாம, தண்ணீர் கூடக் குடிக்காமதான் இந்தப் போராட்டத்தை நடத்திட்டு இருக்கோம். இப்போ போலீஸ் அதிகாரிங்க, யார் ஆசிரியர்களோ அவங்க மட்டும் போராட்டத்தில் கலந்துக்கோங்க. மத்தவங்க வெளியில் போங்கன்னு சொல்றாங்க. அதுமட்டுமல்லாமல், கணவன், மனைவி ரெண்டு பேரும் ஆசிரியர்கள் என்றால், குழந்தைகளை வெளியில் யாரிடமாவது கொடுத்துட்டுப் போராடுங்கன்னு சொல்றாங்க.

2009 ஜூன் மாதத்துக்கு முன் வேலைக்குச் சேர்ந்தவருக்கும், அதன் பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கும் இடையே 3,770 ரூபாய் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இந்த ஊதிய முரண்பாட்டைக் களையச் சொல்லி ஏற்கெனவே பலமுறை உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டோம். ஒரே பணி, ஒரே தகுதி இருந்தும் எங்களுக்கு சம்பளத் தொகை குறைய என்ன காரணம்? தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களுக்கிடையே ஒரு மாசத்துக்குக் கிட்டத்தட்ட 15,000 ரூபாய்க்கு அதிகமாக ஊதிய முரண்பாடு இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அந்தச் சமயத்தில் கல்வி அமைச்சர் பரிந்துரை கடிதம் கொடுத்தாங்க. நாலு நாள் போராட்டத்துக்குப் பிறகு அவங்களுடைய பரிந்துரைக் கடிதத்தை வாங்கிட்டு போராட்டத்தை வாபஸ் வாங்கினோம். டிசம்பர் 8ம் தேதி கல்வி அமைச்சர், இடைநிலை ஆசிரியர்களின் ஊதியமுரண் கலையப்படும்'னு மீடியாவில் பேட்டி கொடுத்தார். ஆனா ஒண்ணுமே நடக்கலை.

நாங்கள்லாம் கூடிப்பேசி இந்த மாசம் 23ம் தேதி போராட்டம் நடத்த தேதி குறிச்சோம். அதைக் கேள்விப்பட்டு பேச்சுவார்த்தைக்குக் கூப்பிட்டாங்க. பத்து மணிக்கு வாங்கனு சொன்னவங்க, மதியம் மூணு மணிக்கு உள்ள கூப்பிட்டதோட இல்லாம, புதுசா விஷயத்தை கேட்குற மாதிரி ஒருவித அலட்சியத்தோட குறைகளைக் கேட்டாங்க. அதுல எங்களுக்கு உடன்பாடில்லாததால் நேத்திக்குப் போராட்டத்தை ஆரம்பிச்சோம். கிட்டத்தட்ட 6000க்கும் மேற்பட்டவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறோம். இன்னும் நிறைய ஊர்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்!'' என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மதுரையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரிடம் பேசினோம். 

`நான் மதுரையிலிருந்து வந்துருக்கேன். என்னுடைய மூணு பசங்களையும் கூட்டிட்டு வந்துருக்கேன். என்னை மாதிரி இங்கே நிறைய டீச்சர்ஸ் கைக்குழந்தைங்களோட வந்திருக்காங்க. இங்கே பெண் ஆசிரியர்கள் நிறைய பேர் இருக்கோம். எங்களுக்குப் போதுமான அளவு கழிப்பிட வசதி இல்லை. குழந்தைங்க எல்லோரும் பண்டிகை தினம், விடுமுறை தினத்தைக் கொண்டாட முடியாம எங்க கூட கூட்டத்துக்கு மத்தியில உட்கார்ந்திருக்காங்க. அம்மா எப்போ வீட்டுக்குப் போவோம்னு என் பையன் கேட்டுட்டே இருக்கான். இதுவரை அரசாங்கம் எங்களைக் கண்டு கொள்ளவே இல்லை. ஒரே ஒரு கோரிக்கை.. ஒரே ஒரு நம்பிக்கை.. அது கிடைக்காம நாங்க யாரும் இங்கிருந்து போகுறதா இல்லை. `சம வேலைக்குச் சம உரிமை' கொடுங்கன்னுதான் கேட்கிறோம். இன்னைக்கு நிறைய பேர் கடன் வாங்கிட்டுதான் இந்தப் போராட்டத்துக்கே வந்திருக்கிறோம். அப்படித்தான் எங்க குடும்பச் சூழ்நிலை இருக்கு. இப்போ வரை எந்த அதிகாரிகளும் எங்களைப் பார்க்க வரலை! எங்க போராட்டத்துக்கு ஒரு முடிவு தெரியுற வரைக்கும் நாங்க யாரும் இங்கிருந்து போகப் போறது இல்ல!' என்றார்.