Published:Updated:

"ஹெச்.ஐ.வி. ரத்தத்தால் எங்கள் வாழ்க்கையே அழிந்துவிட்டது!" - கண்ணீர் வடிக்கும் கர்ப்பிணிப் பெண் கணவர்

"இது, எங்களுக்குள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைமீது எனக்கு நம்பிக்கை இல்லை. என் மனைவிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்."

"ஹெச்.ஐ.வி. ரத்தத்தால் எங்கள் வாழ்க்கையே அழிந்துவிட்டது!" - கண்ணீர் வடிக்கும் கர்ப்பிணிப் பெண் கணவர்
"ஹெச்.ஐ.வி. ரத்தத்தால் எங்கள் வாழ்க்கையே அழிந்துவிட்டது!" - கண்ணீர் வடிக்கும் கர்ப்பிணிப் பெண் கணவர்

``தவறான சிகிச்சையால் ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றி எங்கள் வாழ்க்கையையே கெடுத்துவிட்டனர்" எனச் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் விரக்தியுடன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 23 வயது மனைவிக்கு ஏற்கெனவே 3 வயது பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது முறையாகக் கர்ப்பமடைந்துள்ளார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள அவர், சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார். அப்போது அவருக்கு ரத்தம் குறைவாக இருந்ததால், சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்தவங்கியிலிருந்து ரத்தம் ஏற்றப்பட்டது. அன்றைய தினமே அவருக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் 5-ம் தேதி அவர் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவருக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையடுத்து, டிசம்பர் 17-ம் தேதி சிகிச்சைக்காக மீண்டும் சாத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.

அதன்பின்னர் மருத்துவர்கள், டிசம்பர் 18-ம் தேதி அவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது அவருக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விருதுநகர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக விசாரணை நடத்திய இணை இயக்குநர் மனோகரன், சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்தார்.

இந்நிலையில், ``ஹெச்.ஐ.வி. நோய் வருவதற்குக் காரணமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ரத்த வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உறவினர்கள் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அப்போது சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் ரத்தவங்கி ஊழியர்கள் மீதும், பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் மருத்துவப் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆட்சியர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி மனுவைப் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனிடமும் மனு அளித்தனர்.

இதுகுறித்து பெண்ணின் கணவர் கூறும்போது, ``டிசம்பர் 3-ம் தேதி என் மனைவிக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. அப்போதிருந்தே அவருக்குக் குளிர்காய்ச்சல் மற்றும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. டிசம்பர் 18-ம் தேதிதான் அவருக்கு ஹெச்.ஐ.வி. பாதித்த நபரின் ரத்தம் ஏற்றப்பட்டதே தெரியவந்தது. தவறாக ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதால் எங்கள் வாழ்க்கையே அழிந்துவிட்டது. இது, எங்களுக்குள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைமீது எனக்கு நம்பிக்கை இல்லை. என் மனைவிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்" என்றார்.

தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், ``கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்தச் சம்பவத்தை நியாயப்படுத்த முடியாது. ஒவ்வொரு யூனிட் ரத்தமும் நன்றாகப் பரிசோதனை செய்தபின்பே ஒருவருக்குத் தானமாக வழங்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவமனை ஊழியர்கள் வளர்மதி, கணேஷ்பாபு, ரமேஷ் ஆகிய 3 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேற்பார்வையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டரீதியாக வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனவரி 30-ம் தேதி குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பரவாமல் தடுப்பதற்கான அனைத்து மருந்துகளும் உண்டு. குழந்தைக்கு வராமல் 99 சதவிகிதம் தடுக்க முடியும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பெண்ணுக்குச் சரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என அவரது கணவர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி உயர்தர சிகிச்சை அளிக்கப்படும். அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படும். விருதுநகரில் அவர் சிகிச்சை பெற விரும்பவில்லை. தற்போது ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கே திருப்திகரமாக இல்லாவிட்டால், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இது சம்பந்தமாக விசாரணை செய்வதற்காகச் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரத்த வங்கிகளில் முழுமையாக ஆய்வுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் அனைத்து ரத்தமும் பாதுகாப்பற்றது என எண்ண வேண்டாம். தமிழ்நாடு முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான 1,800 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது" என்றார்.