நம் ஒவ்வொருவருக்கும் நாமே கதாநாயகி. நம் வாழ்க்கையே சிறந்த கதை. வீழ்கிறோம்; மீண்டு எழுகிறோம்.

இந்தக் களத்தில் எத்தனை சிறிய வெற்றி என்றாலும், பெண்ணுக்கு அது பெரும் களிப்பே. முதல் புன்னகை தொடங்கி முதல் சம்பளம் வரை, இங்கு எதுவும் எளிதல்ல. வெற்றியைச்சுவைக்கும் பெண்மை போற்றுதலுக்குரியது. இதை நன்கு உணர்ந்திருக்கும் உங்கள் அவள் விகடன்... அறிந்த முகங்கள், அறியாத முகங்கள் என்று பலதளங்களிலும் வெற்றிக்கொடி பறக்கவிட்டுக்கொண்டிருக்கும் பெண்களை உச்சிமுகர்கிறது. ‘பெண்ணென்று கொட்டு முரசே!’ என வரவேற்று ‘அவள் விருதுகள்’ வழங்கி கௌரவிக்கிறது!
அவள் விகடனின் பயணத்தில் இது இரண்டாவது விருதுக்கொண்டாட்டம். கடந்த தடவை, முதல் விருதுக்கொண்டாட்டம்... மிகவும் நெகிழவைத்தது நம் அனைவரையும். உடல் உழைப்பையே மூலதனமாகக்கொண்ட பெண்கள், விடாமுயற்சியால் சிகரம் தொட்ட பெண்கள், தோல்விகளையே படிக்கட்டுகளாக மாற்றி வென்ற பெண்கள், சாகசப் பிரியைகள், மாற்றுத்திறன்கொண்டு சாதித்த சகோதரிகள் என்று தேடித்தேடி தங்கள் கதைகளின் நாயகிகளான பெண்களைப் பாராட்டி, கடந்த தடவை விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த இரண்டாவது விருதுகளுக்கும் மிகப்பொருத்தமான வெற்றி நாயகிகளைத் தேடித்தேடித் தேர்ந்தெடுத்து, உங்கள் முன் அழைத்துவந்து கௌரவப்படுத்தி மகிழவிருக்கிறோம். நீங்கள் நன்கு அறிந்த வெளிச்ச நட்சத்திரங்கள், உங்கள் கவனத்துக்கு வராத துருவ நட்சத்திரங்கள் என, பல பரிமாணங்களில் ஒளிரும் பெண்களை மேடையேற்றப்போகிறோம்.
சாதனைப் பெண்களின் வலிக்கு மருந்தாக, அவர்களின் உழைப்புக்குப் பாராட்டாக, முன்னேற்றத்துக்குத் தூண்டுகோலாக இருக்கும் இந்த விருதுகள்... நமக்கெல்லாம் உற்சாகத்தையும், இன்னும் உழைக்கும் ஆவலையும், வாழ்க்கையை ரசித்து வாழும் ஆர்வத்தையும் நிச்சயம் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.
நவம்பர் 24 அன்று சென்னையில், பிரமாண்ட மேடையில் நம் மனங்களைக் கொள்ளை கொள்ளவிருக்கிறது அவள் விகடன் விருதுகள் விழா!
உங்கள் ஒவ்வொருவரின் வாழ்த்துகளோடும் அரங்கேறவிருக்கிறது, சாதனைப் பெண்களின் இந்த சங்கம விழா!
உரிமையுடன்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆசிரியர்