Published:Updated:

ஒரு சமூகத்துக்குச் சிகிச்சை அளிப்பது எப்படி? - எலிஸபெத் பிளாக்வெல்

ஒரு சமூகத்துக்குச் சிகிச்சை அளிப்பது எப்படி? - எலிஸபெத் பிளாக்வெல்
பிரீமியம் ஸ்டோரி
ஒரு சமூகத்துக்குச் சிகிச்சை அளிப்பது எப்படி? - எலிஸபெத் பிளாக்வெல்

எதிர்க்குரல்

ஒரு சமூகத்துக்குச் சிகிச்சை அளிப்பது எப்படி? - எலிஸபெத் பிளாக்வெல்

எதிர்க்குரல்

Published:Updated:
ஒரு சமூகத்துக்குச் சிகிச்சை அளிப்பது எப்படி? - எலிஸபெத் பிளாக்வெல்
பிரீமியம் ஸ்டோரி
ஒரு சமூகத்துக்குச் சிகிச்சை அளிப்பது எப்படி? - எலிஸபெத் பிளாக்வெல்

ந்த விண்ணப்பத்தைக் கண்டதும், ஜெனிவா மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அதைக் கிழித்து எறிந்துவிடத்தான் முதலில் விரும்பியது. ஆனால், செய்யவில்லை. மாணவர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி உருவாகியிருந்த நேரம் அது. இந்தச் சிக்கலைத் தீர்க்க, ஏன் இந்த விண்ணப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது? உடனடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார்கள்.

`மாணவர்களே, நம் கல்லூரியில் இணைந்து படிப்பதற்காக வந்திருக்கும் ஒரு விண்ணப்பம் இது. இவரை நாம் சேர்த்துக்கொள்ளலாமா என்பதை முடிவுசெய்ய வேண்டியவர்கள் நீங்கள். உங்கள் முடிவுக்கு நிர்வாகம் கட்டுப் படும் என்று உறுதியளிக்கிறோம்.'

அந்த விண்ணப்பத்தைப் பார்த்த மாணவர்கள் சிரித்தார்கள். இதை நாம் நிராகரிப்போம் என்று நிர்வாகத்துக்கு நன்கு தெரியும். நாம் ஏன் நிர்வாகத்தை அவமானப்படுத்த இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது? `இந்த விண்ணப்பத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இவரை நாம் அனுமதிக்க வேண்டும்' என்று சிபாரிசு செய்து அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.  இது நடந்தது 1847-ம் ஆண்டு.

எலிஸபெத் பிளாக்வெல் நெஞ்சம் நிறைய கனவுகளுடன் உற்சாகமாக வகுப்பறைக்குள் நுழைந்தபோது, மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். விளையாட்டு வினையாகி விட்டதா? நிஜமாகவே இந்தப் பெண் நம்முடன் இணைந்து படிப்பதற்காகத்தான் வந்திருக்கிறாரா? தயக்கத்துடன் நெருங்கிச் சென்று கேட்டார்கள். `ஆமாம்' என்று மகிழ்ச்சியுடன் தலையசைத்தார் எலிஸபெத். ``சிறியது, பெரியது என்று வேறுபாடில்லாமல் எல்லா மருத்துவக் கல்லூரிகளுக்கும் விண்ணப்பம் அனுப்பி அனுப்பி ஓய்ந்திருந்த நேரத்தில், இந்தக் கல்லூரி மட்டும் பெருந்தன்மையுடன் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிர்வாகத்துக்கு நான் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். உங்களோடு இணைந்து பயில்வது எனக்கொரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்'' என்று கள்ளம்கபடமில்லாமல் கைநீட்டிய எலிஸபெத்தை என்ன செய்வ தென்று அவர்களுக்குத் தெரியவில்லை.

ஒரு சமூகத்துக்குச் சிகிச்சை அளிப்பது எப்படி? - எலிஸபெத் பிளாக்வெல்

மருத்துவக் கல்லூரிகள் மட்டுமல்ல, அமெரிக்கச் சமூகத்துக்குமேகூட அது புதிதுதான். ஒரு பெண்ணால் எப்படி மருத்துவம் கற்றுக்கொள்ள முடியும்? எப்படி அதில் தேர்ச்சிபெற முடியும்? எப்படி மருத்துவமனையில் பணியாற்ற முடியும்? இந்த நினைப்போடுதான் எலிஸ பெத்தின் விண்ணப்பங்கள் அனைத்தும் குப்பைத்தொட்டிகளைச் சென்றடைந்தன. ஆனால், அவர் வீட்டிலிருந்து எந்தவித எதிர்ப்பும் வரவில்லை. சிறு முணுமுணுப்புகூட இல்லை. அவர்களுடைய அச்சமெல்லாம்
எலிஸபெத்தைத் தொடர்ந்து படிக்க வைப்பதற்கான வசதி இருக்குமா என்பது மட்டும்தான். 

வறுமை என்றால் என்னவென்று பிளாக்வெல் குடும்பத்துக்கு நன்றாகத் தெரியும். அதை நமக்குள் வைத்துக்கொள்வோம்; வீடு முழுக்க நிறைந்திருக்கும் நம் குழந்தைகள் (மொத்தம் ஒன்பது குழந்தைகள்) கவலையின்றி இருக்கட்டும் என நினைத்தனர் சாமுவேல், ஹன்னா இருவரும். அது அவ்வளவு எளிதானதாக இல்லை. ``இனி நமக்கு நல்லகாலம்தான் ஹன்னா'' என்றபடி சாமுவேல் ஏதோ ஒரு தொழிலை உற்சாகமாக முன்னெடுப்பார். படுத்துவிடும். போகட்டும் என இன்
னொன்றைப் பிடிப்பார். அதிலும் சுணக்கம் ஏற்படும். இடம்மாற்றிப் பார்க்கலாம் எனக் குடும்பத்தோடு குடிபெயர்வார்கள். அங்கும் இதே கதைதான். ஒருகட்டத்தில் `பிரிட்டனே வேண்டாம்' என முடிவெடுத்து அமெரிக்காவுக்குக் குடி
பெயர்ந்தது பிளாக்வெல் குடும்பம். அப்போது எலிஸபெத் பிளாக்வெலுக்கு 11 வயது.

எலிஸபெத்தின் முதல் ஆசிரியர் அப்பாதான். சுதந்திரமாகச் சிந்திப்பதற்கு ஊக்கப்படுத்தியவர் அவர்தான். அவர் மறைவுக்குப் பிறகு வீட்டு நிலைமை மேலும் சிக்கலடைந்தது. அவற்றுக்கு இடையிலும் தன் மருத்துவக் கனவைப் பத்திரப்படுத்திப் பாதுகாத்திருந்தார் எலிஸபெத். வீட்டுத் தேவைகளைச் சமாளிக்க, தன் சகோதரிகளுடன் இணைந்து பள்ளிக்கூடம் ஒன்றைத் தொடங்கினார். அது ஓரளவுக்கு உதவியது. மற்றொரு பக்கம் மருத்துவக் கல்லூரிகளுக்கு வரிசையாக விண்ணப்பம் அனுப்பிக்கொண்டிருந்தார். சிறிய கல்லூரி, பெரிய கல்லூரி என்று வேறுபாடில்லாமல் அனைத்தும் அவர் விண்ணப்பத்தைத் திருப்பி அனுப்பின, நிராகரித்தன அல்லது பதிலளிக்காமல் அமைதி காத்தன.

ஜெனிவா கல்லூரியில் இடம் கிடைத்ததும் எல்லா துயரங்களும் முடிவுக்கு வந்துவிட்டதைப் போலிருந்தது எலிஸபெத்துக்கு. உற்சாகமாக வகுப்பறையை வலம்வந்தார். கேளிக்கை, கிண்டல் எதற்கும் இடம்கொடுக்காமல் விழுந்து விழுந்து படித்தார். இருப்பினும், அவரை தம்மில் ஒருவராகக் காண்பதற்கு மாணவர்கள் தயங்கினார்கள். `ஒரு பெண்ணுடன் சேர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே' என்று பலர் வெட்கப்படும் நிலையும் ஏற்பட்டது. `இது
எங்கள் இடம், நீ அங்கே போ' என்று ஒதுக்கிக்கொண்டே இருந்தார்கள். பரிசோதனைச்சாலையில் எலிஸபெத்தைச் சேர்த்துக்கொள்ளத் தயங்கினார்கள். குழு குழுவாக மாணவர்கள் ஒன்றுசேர்ந்து படிக்கும் இடங்களில் எலிஸபெத்தைக் காண முடியாது.

நூலகத்தில் இருப்பவர்கள் எலிஸபெத்தை ஒதுக்கிவைத்தனர். இந்தத் தனிமை தொடக்கத்தில் எலிஸபெத்தை வாட்டியது உண்மை. ஆனால், அதை ஓர் அனுகூலமான நட்புசக்தியாக அவர் மாற்றியமைத்துக்கொண்டார். `எனக்குத் தேவை, படிப்பதற்கு ஓரிடம். என் குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு. மற்றவர்கள் ஒதுக்கிவைப்பதைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?'

பேராசிரியர்கள் தன்னைப் புழுவைப்போல பார்ப்பதையும், பரிகாசத்துடன் நடத்துவதையும் கண்டுகொள்ளாமல் இருக்கப் பழகிக்கொண்டார். ஆனால், இது நீண்டகாலத்துக்கு நீடிக்கவில்லை. எலிஸபெத்தின் அறிவாற்றல் அசாதாரணமானது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டியிருந்தது. எலிஸபெத் தோடு கரம்சேர்த்துக்கொள்ளாமல்போனால் நாம் இழப்பதுதான் அதிகமாகயிருக்கும்; கொஞ்சம் தயக்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு இந்தப் புத்திசாலிப் பெண்ணிடம் நட்பு கொண்டால் நமக்குத்தானே நன்மை என மாணவர்கள் தாமாகவே நெருங்கிவந்து எலிஸபெத்தின் மென்மையான விரல்களைப் பற்றிக்கொண்டனர். தனது படிப்பை முடித்துக்கொண்டு எலிஸபெத் எம்.டி பட்டம் பெற்ற
போது மாணவர்கள் மட்டுமல்லர்; நிர்வாகத்தினரும் மனநிறைவோடு அவருக்கு விடைகொடுத்து அனுப்பிவைத்தனர். இனி உன்னை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று சகோதரிகளும் தோழிகளும் உற்சாகக்குரல் கொடுத்தபோது, எலிஸபெத் அடக்கமாகச் சொன்னார், ``இருங்கள், இருங்கள்... பாதி பாலத்தைத்தான் கடந்திருக்கிறேன்.''

அவர் அஞ்சியதைப்போலவே கனவின் மற்றொரு பகுதியை நிறைவேற்றுவதிலும் சிக்கல்கள் முளைத்தன. ஒரு மருத்துவராக எலிஸபெத்தை ஏற்றுக்கொள்ள மருத்துவ மனைகள் முன்வரவில்லை. `மன்னிக்கவும், எங்களுக்குப் பெண் மருத்துவர்கள் தேவைப்பட மாட்டார்கள்' என்று பெரிய மருத்துவமனைகள் கைவிரித்தன. `என்னது, நிஜமாகவே நீங்கள் எம்.டி பட்டம் வாங்கிவிட்டீர்களா!' என்று ஆச்சர்யப்பட்டவர்கள்கூட அவரை பணியில் இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. `எப்படியோ படித்துவிட்டீர்கள். சரி, அதற்காக ஆண் மருத்துவர்களுக்குச் சமமாக நீங்களும் சிகிச்சை அளிக்கத் தொடங்கிவிடலாம் என்று நினைத்துவிடாதீர்கள்' என்று சிலர் வெளிப்படையாகவே அறிவுறுத்தினார்கள். `இது உயிர் காக்கும் பணி. தெய்விகமானது. உன்னைப் போன்ற நளினமான, பலவீனமான பெண்ணால் இங்கு தாக்குப்பிடிக்க முடியாது. நிஜமாகவே கத்தியைக் கையில் பிடித்து ஒரு நோயாளியின் உடலைக் கீறிப்பார்க்க முடியும் என்று நீ நம்புகிறாயா எலிஸபெத்? உன்னை நம்பி ஒருவர் அவர் உயிரை, உடலை அளிக்க முன்வருவார் என்றா கருதுகிறாய்?'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு சமூகத்துக்குச் சிகிச்சை அளிப்பது எப்படி? - எலிஸபெத் பிளாக்வெல்

சவால்களும் தடைகளும் பெருகப் பெருக அவர் மன உறுதியும் வலுப்பட ஆரம்பித்தது. எலிஸபெத்தின் கனவுகள் வளரத் தொடங்கின. 1849, மே மாதம் மேல்படிப்புக்காக ஐரோப்பா சென்றார் எலிஸபெத். மருத்துவ ராக மட்டுமின்றி, அறுவை சிகிச்சை நிபுண ராகவும் வளர விரும்பினார் அவர். இந்த நளினமான கைகளில் கத்தி நிற்குமா, நிற்காதா என்பதை தானும் இந்த உலகமும் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? அங்கும் எலிஸபெத் ஒரு நட்சத்திரம்போல மின்னினார். அதேநேரம், ஒரு விபத்தையும் அவர் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. ஒரு குழந்தையின் கண்நோயைக் குணப்படுத்த முயன்றபோது, நோய்க்கிருமிகள் தவறுதலாக அவர் கண்களுக்குள் புகுந்துவிட்டன. ஒரு கண் பார்வை பறிபோய்விட்டது.  `அச்சச்சோ அப்படியானால், இனி நீ அறுவை சிகிச்சையே செய்ய முடியாதா? உன் மருத்துவ வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிடுமா?' என்று மிகையாக உச்சுக்கொட்டியவர்களின் தோளைத் தட்டிக்கொடுத்தார் எலிஸபெத். ``கவலைப்படாதீர்கள், அத்தனை சுலபமாக நான் நம்பிக்கை இழப்பதில்லை!''

லண்டனுக்குச் சென்று தன் படிப்பைத் தொடர்ந்த எலிஸபெத், மீண்டும் அமெரிக்கா வுக்குத் திரும்பிவந்தபோது நன்கு அறியப்பட்ட ஓர் ஆளுமையாக வளர்ச்சி பெற்றிருந்தார். அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவர் என்று மக்கள் ஆச்சர்யத்துடன் பேசிக்கொண்டார்கள். `நீங்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றலாமே, உங்களுக்குத் தேவைப்பட்ட வசதிகளை நாங்கள் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்' என்று மருத்துவமனைகள் அடக்கத்துடன் கடிதங்கள் எழுதின. கிட்டத்தட்ட இதே நேரத்தில்தான் பிளாரென்ஸ் நைட்டிங்கேலின் அறிமுகமும் எலிஸபெத்துக்குக் கிடைத்தது. அரசியலை, சமூகத்தை, சமூகத்தில் பெண்கள் வகித்த இடத்தை முதன்முறையாக ஆழமாக அவதானிக்கும் வாய்ப்பும் உருவானது. எஸிஸபெத் பிளாக்வெல் தன் வாழ்வின் இரண்டாவது பெரிய அடியை எடுத்து வைத்தார்.

`இந்தச் சமூகம் ஏன் பெண்களை இரண்டாம் பாலினமாக நடத்துகிறது? ஏன் ஒரு பெண்ணால் ஆணைப்போல சுதந்திரமாக இருக்க முடிவதில்லை? மருத்துவம் மட்டுமல்ல, எந்த ஒரு துறையிலும் ஏன் ஒரு பெண் ஆணைப்போல இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை? ஏன் பல கதவுகள் அவளுக்குப் பூட்டப்பட்டிருக்கின்றன?' இந்தக் கேள்விகளுக்கு விடை தேடாமல் மனிதகுலம் அடுத்தகட்ட வளர்ச்சியை அடையாது.

எலிஸபெத் எழுதத் தொடங்கினார். பெண்கள் தங்கள் உரிமைகளை எப்படி மீட்டெடுத்துக்கொள்ள வேண்டும்? எப்படிப் போராட வேண்டும்? எத்தகைய அரசியல் பாதையை அவர்கள் வகுத்துக்கொள்ள வேண்டும்?  கருத்தடை, பாலியல் உரிமை, மருத்துவச் சட்டம், பெண் கல்வி, திருமண வாழ்க்கை என்று பலவற்றைக் குறித்து எலிஸபெத் சிந்திக்க ஆரம்பித்தார். அவருடைய பல கருத்துகள் இன்றைய தேதிக்குப் பிற்போக்கானவை என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும்,  தன் தேடலின் முடிவில் அவர் வந்தடைந்த ஒரு முடிவு இன்றைக்கும் பொருத்தமானதே. பெண்களை ஒரு சமூகம் எப்படி நடத்துகிறது என்று பாருங்கள். அதைப் பொறுத்துதான் அந்தச் சமூகம் ஆரோக்கியமாக இருக்கிறதா அல்லது நோயுற்றிருக்கிறதா என்பதைக் கண்டறிய முடியும். உடல் நோயைவிட, சமூக நோய் ஆபத்தானது.

- மருதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism