Published:Updated:

சந்நிதானத்தில் நுழைந்த 2 பெண்கள்! - நடையைச் சாத்தி நடந்த பரிகார பூஜை

சந்நிதானத்தில் நுழைந்த 2 பெண்கள்! - நடையைச் சாத்தி நடந்த பரிகார பூஜை
சந்நிதானத்தில் நுழைந்த 2 பெண்கள்! - நடையைச் சாத்தி நடந்த பரிகார பூஜை

ஐம்பது வயதுக்கும் குறைவாக உள்ள இரு பெண்கள் இன்று அதிகாலை சபரிமலை சந்நிதானத்துக்குள் சென்றதால் கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து (44), மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா (42) ஆகிய இரு பெண்களும் இன்று அதிகாலை போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சந்நிதானத்துக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர். இவர்கள் இருவரும் போலீஸாரின் பாதுகாப்புடன் மாற்று வழியில் நேற்று இரவு மலை ஏறத் தொடங்கி பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்த நேரத்தில் அதாவது அதிகாலை 3:45 மணிக்கு தரிசனத்தை முடித்துவிட்டு ஐந்து மணிக்குள் கீழே இறங்கியுள்ளனர். இரு பெண்கள் சபரிமலை சென்றது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பிந்து மற்றும் கனகதுர்கா ஆகியோர் இன்று அதிகாலை சபரிமலை சந்நிதானத்தில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். இருமுடி கட்டுகள் இல்லாமல், 18-ம் படி ஏறாமல் வேறு வழியாகச் சென்று அவர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதையடுத்து சந்நிதானத்தில் சுத்தி கிரிய பூஜை செய்வதற்காக காலை 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பூஜை முடிந்து 11.30 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாகவும் பரிகாரம் செய்வது தொடர்பாகவும் சபரிமலை தந்திரி ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. கோயிலில் உள்ள பக்தர்கள் அனைவரையும் காவலர்கள் வெளியேற்றி வருகின்றனர். பம்பை முதல் சந்நிதானம் வரையிலும், கோயிலைச் சுற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக பேசியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், `` இரு பெண்களும் கோயிலுக்குள் நுழைந்தது உண்மைதான். அவர்கள் இருவருக்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று மாலை வழிபாட்டுத் தலங்களில் பாலின சமத்துவம் வேண்டும் ஆண், பெண் இருபாலரும் சமம் என்பதை வலியுறுத்தி ஆளும் கட்சி சார்பில் கேரளாவில் மனிதச் சுவர் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஐம்பது லட்சம் பெண்கள் கலந்துகொண்டனர். அவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை சுமார் 620 கி.மீ தூரத்துக்கு இந்தப் பெண்கள் சாலை ஓரங்களில் அணிவகுத்து நின்றனர்.  இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு இன்னும் 24 மணி நேரம் கூட முடியவில்லை அதற்குள் இரு பெண்கள் சபரிமலைக்குள் சென்றது கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இரு பெண்களை கோயிலுக்குள் அனுப்பியது அரசுதான் எனப் பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள கேரள சட்டத் துறை அமைச்சர் ஏ.கே பாலன், ``அந்த இரு பெண்களையும் கேரள அரசு அனுப்பவில்லை. நாங்கள் அனுப்ப வேண்டும் என நினைத்திருந்தால் இப்படி யாருக்கும் தெரியாமல் அனுப்பமாட்டோம். அந்த இரு பெண்களும் ஏற்கெனவே ஒரு முறை சபரிமலைக்கு வந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள். அப்போதே  ‘நாங்கள் திரும்பி வருவோம்’  என இருவரும் தெரிவித்திருந்தனர். அப்படியிருக்க இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.