Published:Updated:

“குழந்தைகளைப் பாதுகாப்போம்!”

“குழந்தைகளைப் பாதுகாப்போம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“குழந்தைகளைப் பாதுகாப்போம்!”

“குழந்தைகளைப் பாதுகாப்போம்!”

குழந்தைகள் கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை போன்றவற்றுக்கு எதிரான செயற்பாடுகளில்  முன்வரிசையில் நிற்பவர்களில் ஒருவர் சமூக ஆர்வலர் கன்யா பாபு.  சமீபத்தில், சென்னைச் சேத்துப்பட்டில் காங்கிரஸ் கட்சி சார்பாக நடந்த, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் கடத்தல் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில், அக்கட்சியின் லோக் சபா உறுப்பினர் சசிதரூருடன் மேடையைப் பகிர்ந்துகொண்டு பேசினார் கன்யா. குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஆத்மார்த்தத்துடன் செயல்பட்டுவரும் கன்யாவை மாலைப் பொழுதொன்றில் சந்தித்தேன்.

“குழந்தைகளைப் பாதுகாப்போம்!”

‘`சின்ன வயசுல ஓர் ஆண்கிட்ட நான் சந்திச்ச பாலியல் தொல்லைதான், இப்படியும் உலகத்துல பிரச்னை இருக்குன்னு எனக்குத் தெரியப்படுத்துச்சு. அவனைப் பார்த்தாலே பயத்துல ஓடுவேன். காதல் திருமணத்துக்குப் பின், கணவர் செய்துகிட்டிருந்த சமூக சேவைகளில் என்னையும் இணைச்சுக்கிட்டேன். அவரும் அவர் நண்பர்களும் சேர்ந்து உருவாக்கிய ட்ரஸ்ட் மூலமாக, வசதியில்லாத குழந்தைகளுக்கான கல்விச்செலவு மாதிரியான உதவிகளைச் செஞ்சுட்டு வந்தாங்க. ஒரு கட்டத்துல வேலைப்பளு காரணமா என் கணவரால இதைத் தொடர முடியாமப்போக, நான் களத்துல இறங்கினேன். இதுக்காக கலெக்டர்ஸ், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள்னு நிறைய பேரை சந்திக்க வேண்டியிருந்தது. இப்படி அரசாங்கம், அதிகாரிகள்னு பல பேர்கிட்ட முறைப்படி விண்ணப்பிச்சு குழந்தைகளுக்கான உதவிகளைச் செய்தப்போதான், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், குழந்தைகள் கடத்தல்னு பல பகீர் விஷயங்கள் அவற்றின் ஆழம்வரை தெரியவந்தது’’ என்கிற கன்யா, சென்னையில் குழந்தைகளைக் கடத்துகிற கும்பல்களைப் பற்றி விவரித்தபோது மனதுக்குள் மிகப்பெரிய பயப்பந்து உருள ஆரம்பித்தது.

“சேத்துப்பட்டு ஸ்டாப்பர் ஸ்டாப் கடையில் ஷாப்பிங் பண்றதுக்காக என் ரெண்டு பசங்களோட அதுக்குப் பக்கத்துல இருக்கிற பிளாட்பாரத்துல நடந்துபோயிட்டிருந்தேன். கையில் ஒரு குழந்தையோட ஒரு லேடி பிச்சை கேட்டுச்சு. அந்தக் குழந்தைக்கும் அந்த லேடிக்கும் சம்பந்தமே இல்லாம இருந்ததால, ‘இது யார் குழந்தை?’ன்னு கேட்டேன். அந்தம்மா உடனே பதற்றமா, ‘ஏன், என் கொழந்ததான்’னு சொல்லுச்சு. உடனே என் செல்போனை எடுத்து அந்தக் குழந்தையை போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். திடீர்னு எங்கிருந்தோ ஒரு ஆள் தபதபன்னு ஓடி வந்து, ‘புள்ளைய போட்டோ புடிக்கக் கூடாது’ன்னு என்கிட்ட சொன்னவன், ‘யாரும் போட்டோவெல்லாம் பிடிக்காமப் பாத்துக்கணும்னு சொல்லியிருக்கேன்ல?’ என்று அந்த லேடிகிட்ட கோபப்பட்டான். ‘அப்படீன்னு யாரு சொல்லியிருக்கா? நீ யாரு?’ன்னு நான் அடுத்தடுத்து கேள்வி கேட்க, அவன் திருட்டு முழி முழிச்சான். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“குழந்தைகளைப் பாதுகாப்போம்!”

நான் இன்னும் குரலை உயர்த்தி, ‘இது யாரோட குழந்தை? குழந்தைகளைக் கடத்துறவங்களா நீங்க?’ன்னு கேட்டதும், ஏழெட்டுப் பேர் எங்கிருந்து வந்தாங்கன்னே தெரியலை, அப்படியே என்னையும் என் பிள்ளைகளையும் சுற்றி வளைச்சுட்டானுங்க. அதுல ஒருத்தன், ‘இந்தா, எதா இருந்தாலும் எங்கண்ணன்கிட்ட வந்து பேசு’ன்னு சொல்றான். இந்த கேப்புல அந்தப் பிச்சைக்கார அம்மாவையும் குழந்தையையும் காணலை. கையில் ரெண்டு குழந்தைகளோட அத்தனை ரௌடிப் பசங்க நடுவுல மாட்டிக்கிட்டிருந்ததுல நான் பயந்துட்டேன். ரெண்டு பிள்ளைகளையும் கையில் இறுக்கமா பிடிச்சுக்கிட்டு அவனுங்ககிட்ட  சண்டை போட்டுக்கிட்டே ஸ்டாப்பர் ஸ்டாப் கடைக்குள்ள நுழைஞ்சிட்டேன். அவனுங்க ரொம்ப நேரம் வெளியே நின்னுக்கிட்டிருந்தானுங்க. அன்னைக்கு அவனுங்களை ஏமாத்திட்டு ஆட்டோ பிடிச்சு வீடு வந்து சேர்றதுக்குள்ளே நடுங்கிப்போயிட்டேன்.  மறுநாள் போலீஸ்ல புகார் கொடுத்து, அவங்களோடு அதே இடத்துக்குப் போனால் அந்தக் கும்பலில் ஒருத்தனைக்கூடக் காணோம். அந்தக் குழந்தையோட நிலைமை என்னாச்சு என்றும் தெரியலை. பிச்சை எடுக்கிறதுக்காகக் கடத்தப்படுற குழந்தைகள் கைமாறிட்டே இருக்காங்க’’ என்கிற கன்யாவின் குரலில் இப்போதும் பதற்றம் மிஞ்சியிருக்கிறது. 

 “பெண் குழந்தைகள் மட்டுமில்லீங்க, ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லைகள் நடந்துட்டுதான் இருக்கு. குட் டச், பேட் டச்  சொல்லிக் கொடுத்தா மட்டும் போதாது. சீக்ரெட் டச்னு ஒரு விஷயம் இருக்கு. புரிகிற மாதிரி சொல்லணும்னா ‘16 வயதினிலே’ படத்துல வர்ற டாக்டர் கேரக்டர், ஸ்ரீதேவியை வசியப்படுத்த ட்ரை பண்ணுவார்ல... அதுதான் சீக்ரெட் டச். குழந்தைகளை உடல்ரீதியாகத் துன்பப்படுத்தாம பாலியல் வக்கிரங்களைத் தீர்த்துக்கிறாங்க. சைல்டு போர்னோகிராபி இங்கே கொட்டிக்கிடக்கு. வாட்ஸ்அப்ல சர்வ சாதாரணமா அவையெல்லாம் வலம் வந்துட்டிருக்கு. இதை எல்லாப் பெற்றோர்களும்  தெரிஞ்சுக்கணும்; மத்தவங்களுக்கும் சொல்லணும். அதைத்தான் நான் கடந்த சில வருடங்களா ஒவ்வொரு ஸ்கூலா போய் சொல்லிக்கிட்டிருக்கேன். சசிதரூர் சாரோட நடந்த அந்தக் கருத்தரங்கிலும் நான் இவற்றையெல்லாம்தான் பேசினேன். நம்ம குழந்தைகள் பாதுகாப்பா இருக்கணும்னா நாமதான் பேசணும். யாரோ ஒரு ஆட்டோ டிரைவர் ஒரு குழந்தையை மடியில் உட்காரவெச்சிட்டு ஆட்டோ ஓட்டினா, வண்டியை நிறுத்திக் கேள்வி கேளுங்க. நீங்க யாரோ ஒருத்தரோட குழந்தையைப் பாதுகாத்தால், இன்னொருத்தர் நம்ம குழந்தையைப் பாதுகாப்பாங்க!”

ஆ.சாந்தி கணேஷ் - படம்: சி.ரவிக்குமார்