Published:Updated:

``மூணு படுபாவிங்களோட குடி, எங்க குடியைக் கெடுத்துட்டே..." - கரூர் சோகம்

``மூணு படுபாவிங்களோட குடி, எங்க குடியைக் கெடுத்துட்டே..." - கரூர் சோகம்
``மூணு படுபாவிங்களோட குடி, எங்க குடியைக் கெடுத்துட்டே..." - கரூர் சோகம்

"என் குடும்பத்தைப் போல எத்தனை குடும்பம் இப்படிக் குடியால, நடுத்தெருவுல நிக்கும். இந்த அரசாங்கம் ஏன் இன்னமும் இந்த மதுக்கடைகளை நடத்துது? என் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்புபோல, குடியால வேற யாருக்கும் ஏற்படக் கூடாது."

`குடி குடியைக் கெடுக்கும்' என்பார்கள். அப்படித்தான், கரூர் மாவட்டத்தில் மூன்று இளைஞர்களின் குடிப்பழக்கம், நன்றாக வாழ்ந்த ஒரு குடும்பத்தைச் சிதைத்து நட்டாற்றில் தள்ளிவிட்டிருக்கிறது.

``கண்ணுக்கு முன்னாடியே விபத்து நடந்து, பெத்த அப்பா துடிதுடிச்சுச் செத்ததையும், பெத்த தாய் ரத்த வெள்ளத்தில் மிதந்ததையும் என் சின்ன பேரன் இன்னும் மறக்கலைங்க. அவனுக்கு மூணு வயசுதான் ஆகுது. அந்த விபத்தோட கோரம் இன்னமும் அவனை `பிரமை' பிடிச்சாப்லயே வச்சிருக்கு. பொறுப்பில்லாத பயலுங்க மூணு பேர், சாலையோரமாக வண்டியில போன என் மகனையும், மருமகளையும் இடிச்சுத் தள்ளியதோடு, பிணமாக்கிட்டுப் போயிட்டாங்க. என் குடும்பமே இப்போ சிதைஞ்சு போச்சே.." என்று துக்கத்தை ஆற்றமாட்டாமல் கண்ணீருடன் கதறுகிறார் பாக்கியம்.

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா பொம்மகவுண்டனூரைச் சேர்ந்தவர்தான் இந்தப் பாக்கியம். இவரின் மகன் ஜெயபால், மருமகள் திலகவதி இருவரும் சமீபத்தில் பைக் விபத்தில் உயிரிழந்துவிட, மொத்தக் குடும்பமும் இடிவிழுந்து கிடக்கிறது. அவர்களுடன் பைக்கில் சென்று, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும், அந்த விபத்தைப் பார்த்த அதிர்ச்சி இன்னமும் கண்களில் மீதமிருக்கிறது ஜெயபாலின் இளைய மகன் கிரிதரனுக்கு. ஜெயபாலும், திலகவதியும் டெய்லர் தொழில் செய்து, அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில்தான், அவர்களின் குடும்பம் கழிந்தது. ஆனால், இந்தக் கோர விபத்து, நொடியில் பாக்கியம் குடும்பத்தைப் புரட்டிப் போட்டிருக்கிறது.

இரண்டு பேரன்களையும் அணைத்தபடி நம்மிடம் தொடர்ந்து பேசிய பாக்கியம், ``என் மகனைப் போல ஒரு புள்ளையப் பார்க்க முடியாது. அவன் போன்ற புள்ளை யாருக்கும் கிடைக்காது தம்பி. மருமகளும் அப்படித்தான்... கரூரில் தனியார் நிறுவனத்தில் பகல் பூரா உழைச்சுட்டு, வீட்டுல பழைய மெஷினை வாங்கிப் போட்டு, இரவுல அதுலயும் மாடு மாதிரி ரெண்டு பேரும் உழைச்சாங்க. `மகன்கள் இருவரையும் நல்லாப் படிக்க வைக்கணும், உன்னை நல்லா வச்சுக்கணும். அதுக்குத்தான் இப்படி உழைக்கிறோம்'னு என்கிட்ட சொல்வான். தன்னோட பெரிய மகன் தரனேஷை சக்தியை மீறி தனியார் பள்ளிக்கூடத்துல சேர்த்து படிக்க வச்சான். 

சம்பவம் நடந்த அன்னைக்கு சிலிண்டர் வாங்குறது சம்பந்தமா கரூருக்கு மனைவி திலகவதியைக் கூட்டிக்கிட்டு, சின்னப் பேரன் கிரிதரனையும் அழைச்சுக்கிட்டு பைக்கில் புறப்பட்டனர். சந்தோஷமா போனாங்க. ஆனா, அந்த சந்தோஷம் ரொம்பநேரம் நீடிக்கல. உப்பிடமங்கலத்தைத் தாண்டி, லிங்கத்தூர் நோக்கி ஓரமாப் போய்க்கிட்டு இருந்த என் புள்ளை வண்டி மீது, புலியூர்ல இருந்து வேகமா வண்டியில வந்த மூணு பசங்க, மோதிட்டாங்க. என் மகன் உட்பட மூணு பேரும் தூக்கி வீசப்பட்டிருக்காங்க. என் மகன் அங்கேயே துடிதுடிச்சு இறந்துட்டான். என் மருமக, ரத்த வெள்ளத்துல உயிருக்குப் போராடி இருக்கா. என் பேரன் மட்டும் தலையில் லேசான காயத்தோட, ரோட்டு ஓரத்துல கிடந்திருக்கான். விசயத்தைக் கேள்விப்பட்டு அலறியடிச்சுக்கிட்டு ஓடினோம். `மருமகளையாச்சும் காப்பாத்துவோம்'னு எல்லா சாமிகளையும் வேண்டிக்கிட்டு, அவளத் தூக்கிட்டு ஓடினோம். தனியார் மருத்துவமனையில் பத்து லட்சம் செலவாகும்னாங்க. முழுசா ஐம்பதாயிரத்தை பார்க்காத நான், அவ்வளவு பணத்துக்கு எங்கே போவேன்? விதி விட்ட வழின்னு நினைச்சு, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனா, மறுநாள் அவளும் இறந்துபோய்ட்டா. எனக்கு உலகமே காலுக்குக் கீழ நழுவுனாப்புல இருந்துச்சு. சம்பவம் நடந்து ஒருவாரம் ஆயிருச்சு. அக்கம்பக்கத்துல உள்ளவங்க, சொந்தக்காரங்க எல்லாம், `மனசை தேத்திக்க. விதியை மாத்த முடியுமா?'ன்னு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிட்டு, அவங்கங்க பொழப்பப் பார்க்கப் போய்ட்டாங்க. 55 வயசான நான் இரண்டு சின்னப் பசங்களை வச்சுக்கிட்டு, எதிர்காலம் எப்படி போகப் போவுதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். கையில காசும் இல்லை. நினைச்சு, நினைச்சு ராத்திரியில கண்ணுல பொட்டுத் தூக்கம் இல்லை. 

என் குடும்பத்தைச் சிதைச்ச அந்த மூணு பசங்களும் தலைவரைக்கும் போதை ஏறுகிற அளவுக்கு புலியூர்ல குடிச்சுட்டு, அங்க சண்டை போட்டிருக்காங்க. அதுல பிரச்னையாகி, அங்குள்ளவங்க அந்த மூணு பேரையும் அடிக்கத் துரத்தி இருக்காங்க. அவங்களுக்கு பயந்துகிட்டு, அவங்க பைக்குல கண்ணுமண்ணு தெரியாம வந்தபோதுதான், என் மகனோட வண்டியில மோதியிருக்காங்க. பாவிப் பசங்க. என் குடும்பத்தைப் போல எத்தனை குடும்பம் இப்படிக் குடியால, நடுத்தெருவுல நிக்கும். இந்த அரசாங்கம் ஏன் இன்னமும் இந்த மதுக்கடைகளை நடத்துது? என் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்புபோல, குடியால வேற யாருக்கும் ஏற்படக் கூடாது. இனிமேல மூணு வேளை சோத்துக்கே எங்களுக்கு வழியில்ல. என் காலத்துக்குப் பிறகு இவனுங்களை யார் பார்த்துப்பா" என்றார் வேதனையுடன். 

சிறுவர்கள் இருவரும், வீட்டில் இருந்த தையல் மெஷினை சோகம் கப்பிய முகத்தோடு வெறிக்கப் பார்க்கிறார்கள். அவர்களின் கண்களில், `இதில் அப்பாவோ, அம்மாவோ வந்து அமர்ந்து தைக்கமாட்டார்களா?' என்ற ஏக்கம் தெரிந்தது.

அடுத்த கட்டுரைக்கு