Published:Updated:

இரண்டு கிட்னிகளும் இழந்த வள்ளி, தற்கொலை செய்துகொண்ட கணவர்... பரிதவிக்கும் பிள்ளைகள்!

ரெண்டு தடவை இப்படி முயற்சி பண்ணியும் ஃபெயிலியராகிடுச்சு. நான் வேற ஆஸ்பத்திரியில கஷ்டப்படுறதைப் பாத்துட்டு இருந்தவரு என்ன நெனைச்சாரோ தெரியலைணா ஏப்ரல் ஒண்ணாந்தேதி தற்கொலை பண்ணிக்கிட்டாரு. 

இரண்டு கிட்னிகளும் இழந்த வள்ளி, தற்கொலை செய்துகொண்ட கணவர்... பரிதவிக்கும் பிள்ளைகள்!
இரண்டு கிட்னிகளும் இழந்த வள்ளி, தற்கொலை செய்துகொண்ட கணவர்... பரிதவிக்கும் பிள்ளைகள்!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்தவர் வள்ளி மாரி. காதல் கணவர், ஒரு மகள், ஒரு மகன் என நிம்மதியாக வாழ்ந்தவர். வறுமையில்லாத வாழ்வும், குறைவில்லாத மகிழ்வுமாக வாழ்ந்துவந்தவரை காலம் அப்படியே புரட்டிப் போட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் உடல் நிலை சரியில்லை என மருத்துவமனை சென்றவருக்கு இரண்டு கிட்னியும் ஃபெயிலியர் என்று வந்த தகவல் தம்பதியரின் தலையில் இடியாய் வந்து விழுந்திருக்கிறது. ஐசியூவில் மனைவி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்க துயர் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார் பாக்யராஜ். 

``எனக்கு 2008 ல தான் அண்ணா மேரேஜ் ஆச்சு. நானும் அவரும் காதலிச்சோம். அவர் இந்தியன் ஆயில்ல டேங்கர் லாரி ஓட்டிட்டு இருந்தாரு. ரெண்டு பேரோட வீட்டுலயும் சம்மதம் வாங்கிதான் கல்யாணம் பண்ணினோம். லவ் மேரேஜூங்கிறதுனால எந்தக் குறையும் இல்லாம என்னை சந்தோஷமா வெச்சிருந்தார். பெரியவ விஷ்வரூபிணி, அஞ்சாவது படிக்கிறா. சின்னவன் கோபிநாத், ரெண்டாவது படிக்கிறான். போன மார்ச் மாசம் எனக்கு உடம்பு சரியில்லைனு ஆஸ்பத்திரிக்குப் போனோம். அடுத்த பத்து நாள்ல டெஸ்ட் எடுத்துப் பாத்துட்டு கிட்னி ஃபெயிலியர்னு சொல்லிட்டாங்க. 24 ம் தேதி டாக்டர் என்கிட்டஇந்த விவரத்தைச் சொன்னாங்க. ஆனா, அதுக்கு முன்னாடியே அவர்கிட்ட சொல்லிட்டாங்களோ என்னவோ தெரியலை. ஆளு ரொம்ப நொந்து போயி இருந்தாரு. அந்த நேரத்துலதான் ட்ரீட்மென்ட்டுக்காக சென்னை ஸ்டான்லிக்கு வந்திருந்தோம். ஒரு கிட்னியாவது வெச்சுக் காப்பாத்திடலாம்னு சொல்லி என் அம்மாவோட கிட்னியை எடுத்து எனக்கு வெச்சாங்க. ஆனா, என் நரம்பு சப்போர்ட் பண்ணலை. சரி இனி அதை அம்மாவுக்கே வெச்சிடலாமான்னு கேட்டப்போ அம்மாவுக்கும் திரும்ப வைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ரெண்டு தடவை இப்படி முயற்சி பண்ணியும் ஃபெயிலியராகிடுச்சு. நான் ஆஸ்பத்திரியில கஷ்டப்படுறதைப் பாத்துட்டு இருந்தவரு என்ன நெனைச்சாரோ தெரியலைணா ஏப்ரல் ஒண்ணாந்தேதி தற்கொலை பண்ணிக்கிட்டாரு. 

எனக்குன்னு அவரு மட்டும்தான் இருந்தாரு. நான் படுத்த படுக்கையா கிடக்குற இந்த நேரத்துல இப்படிப் பண்ணிட்டாரேன்னு நினைச்சு அழுது பொலம்புனேன். நாமளும் இன்னும் கொஞ்ச நாள்ல போயி சேந்துடுவோம். அதுக்கப்புறம் இந்தப் புள்ளைகளை அவரு பாத்துப்பாருன்னு நினைச்சேன். ஆனா, எம்மேல உசுரையே வெச்சிருந்தவரால நான் கஷ்டப்படுறதைப் பாக்க முடியாம இப்படிப் பண்ணிட்டாருணா” என்று சொல்லியபடியே கண் கலங்குகிறார். 

``அவரு இருக்கும்போது கூடவே இருந்த சொந்தக்காரங்களும் அவர் போனதுக்குப் பிறகு வந்து எட்டிக்கூட பார்க்கலை. புள்ளைங்களும் பயந்துபோயி கெடக்குதுங்க. அவங்களுக்காகவாவது எதையாவது செஞ்சிடணும்னு மனசு கெடந்து தவிக்குது. டயாலிசிஸ் பண்றதுக்குக் கூட வசதி இல்ல. எங்க போகுறதுன்னு தவிச்சிட்டு இருந்தப்போதான் சுத்தமல்லியில இருக்கிற என் வீட்டுக்காரரோட தம்பி வீட்டுக்கு வந்தேன். ஆனா, என் மாமியார் பக்கத்துலயே ஒரு வீடு எடுத்துத் தங்க வெச்சிட்டாங்க. அவங்களுக்கும் வயசாகிடுச்சு. அதனால, அவங்களைச் சொல்லியும் ஒரு குறையும் இல்லண்ணு நினைச்சுக்கிட்டேன். இப்போ தங்கியிருக்கிற வீட்டுக்குப் பக்கத்துல ஒரு மெஸ் இருக்கு. அங்கதான் காலைல எங்களுக்கு சாப்பாடு கொடுக்கிறாங்க. மதியத்துக்கு புள்ளைங்க ரெண்டு பேரும் பள்ளிக்கூடத்துலயே சத்துணவு சாப்பிட்டுப்பாங்க. அதுபோக அக்கம் பக்கத்துல உள்ளவங்களும் முடிஞ்ச அளவுக்கு உதவுறாங்க. அரசோட காப்பீடு மூலமா வாரம் ரெண்டு முறை எனக்கு டயாலிசிஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன் அண்ணா. இனி இன்னைக்கோ இல்ல நாளைக்கோன்னு நாள்களை எண்ணி எண்ணி வாழ்ந்துட்டு இருக்க வேண்டியிருக்குணா” என்றவர் குரல் விம்மி நிற்கிறது. 

``அண்ணா, எனக்கு ஒரே ஒரு உதவிணா. எம்பொண்ணு ரொம்ப நல்லா படிப்பா அண்ணா. தங்கமானவ. அவளுக்கு மியூஸிக்ல ரொம்ப ஆர்வம். சின்னவன் இப்போதான் டிராயிங் வரையப் பழகுறான். ரெண்டு பேருமே நல்லா படிக்கிற புள்ளைங்கதான் அண்ணா. நாளைக்கே எனக்கு ஏதாவது ஒண்ணு நடந்துடுச்சுன்னா அந்தப் புள்ளைங்க நடு ரோட்டுல நின்னுடக்கூடாதுண்ணா. எம் பொண்ணுக்கு இன்னும் பத்து வருஷத்துல நல்ல விவரம் தெரிஞ்சிடும். அதுக்கப்புறம் அவளையும் அவ தம்பியையும் பத்திரமாப் பாத்துப்பா. இப்போ எம்புள்ளைங்களுக்கு மட்டும் ஏதாவது உதவி கிடைக்கணும்ணா” என்கிறார். 

 நோயின் பிடியில் தவித்துக்கொண்டிருக்கும் அந்தத் தாயின் குரலுக்கு எங்கிருந்தாவது உதவி வந்து சேரட்டும்.