Published:Updated:

இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி... முதல் பெண் குடிமைப் பணி அதிகாரி இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி.முத்தம்மாள்

இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி... முதல் பெண் குடிமைப் பணி அதிகாரி இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி.முத்தம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி... முதல் பெண் குடிமைப் பணி அதிகாரி இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி.முத்தம்மாள்

முதல் பெண்கள்! ஹம்சத்வனி, ஓவியம் : கார்த்திகேயன் மேடி

இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி... முதல் பெண் குடிமைப் பணி அதிகாரி இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி.முத்தம்மாள்

முதல் பெண்கள்! ஹம்சத்வனி, ஓவியம் : கார்த்திகேயன் மேடி

Published:Updated:
இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி... முதல் பெண் குடிமைப் பணி அதிகாரி இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி.முத்தம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி... முதல் பெண் குடிமைப் பணி அதிகாரி இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி.முத்தம்மாள்

ர்நாடக மாநிலத்தின் கூர்க் பகுதியைச் சேர்ந்த விராஜ்பேட் கிராமத்தில் 1924, ஜனவரி 24 அன்று பிறந்தார் முத்தம்மாள். உடன் பிறந்தவர்கள் மூன்று பேர். வனத்துறை அதிகாரியான தந்தை சிறு வயதிலேயே இறந்துவிட, அன்னையின் அரவணைப்பில், கிடைத்த கல்வியை மட்டுமே இறுகப் பற்றிக்கொண்டு வளர்ந்தார் முத்தம்மாள். மடிகேரி செயின்ட் ஜோசப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தவர், சென்னை மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை மூன்று தங்க மெடல்களுடன் வெற்றிகரமாக முடித்தார். மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தவர், 24-வது வயதில் யு.பி.எஸ்.சி குடிமைப் பணிக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றார்.

நேர்முகத் தேர்வு நாள் வந்தது. `விருப்பப்பணி என்ன?' என்ற கேள்விக்கு, `வெளியுறவுத்துறை' என்ற முத்தம்மாளின் பதில்தான் அவரது வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. `வெளியுறவுத்துறை பெண்களுக்கு ஏற்றதல்ல' என்று அப்போதைய நேர்முகத் தேர்வுக் கமிட்டி அறிவுறுத்த, அதுதான் தன் விருப்பம் என்று விடாப்பிடியாக நின்றார் முத்தம்மாள். வேறு வழியின்றி மிகக் குறைந்த மதிப்பெண்ணை அவருக்கு வழங்கியது தேர்வுக் குழு. அப்படியும், இந்திய வெளியுறவுத்துறை பணிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் முத்தம்மாள். முத்தம்மாள் ஐ.எஃப்.எஸ் கையெழுத்திட்ட முதல் கோப்பு - `பணிக்காலத்தில் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்’ என்கிற உறுதிமொழி!

ஃபிரான்ஸில் தன் பணியைத் தொடங்கினார் முத்தம்மாள். அடுத்தடுத்து ரங்கூன், இங்கிலாந்து ஆகிய இடங்களில் தூதரக அதிகாரியாகவும், டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்தில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க `டெஸ்கு'களிலும் பணியாற்றினார். `நீங்கள்தான் இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி' என்ற பாராட்டுக்கு அவரது பதில்... `யாரோ ஒருவர் முதல் பெண்ணாக இருக்க வேண்டும். அந்த இடத்தில் நிற்கும் அளவுக்கு நான் வயது முதிர்ந்தவளாக இருந்தேன்' என்பதாகவே இருந்தது!

இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி... முதல் பெண் குடிமைப் பணி அதிகாரி இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி.முத்தம்மாள்

செய்யும் பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தும், ஏனோ அரசு தூதர் பதவி மட்டும் முத்தம்மாளுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. அவருக்குப் பின் பணியமர்ந்த ஆண்கள் சரசரவெனப் பதவி உயர்வு பெற்றுச் செல்ல, தனக்கான பதவி உயர்வு ஏன் இன்னும் வரவில்லை என்று ஆராயத் தொடங்கினார் முத்தம்மாள். 1961-ம் ஆண்டு முதல் அமலில் இருந்த வெளியுறவுத்துறை பணி விதிகளில், பெண் வெளியுறவுத்துறை அதிகாரி திருமணம் செய்ய அரசின் முன் அனுமதி வாங்க வேண்டும்; எப்போதாவது அவரது திருமண உறவோ, அதனால் விளையும் சிக்கல்களோ அவரது அலுவலகப் பணியை பாதிக்கும் என்று அரசுக்குத் தெரியவந்தால், பணியை ராஜினாமா செய்துவிட வேண்டும். இவை போன்ற கடும் விதிமுறைகள் இருந்தன. சிறு வயது முதலே நீதியையும் நேர்மையையும் நம்பி இருந்தவருக்கு இது கடும் மன உளைச்சலைத் தரவே, நீதிமன்றத்தை அணுகினார் முத்தம்மாள்.

1978-ம் ஆண்டு முதல் நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்குள், ஹங்கேரி நாட்டுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப் பட்டார் முத்தம்மாள். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும், நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்குள்ளானது மத்திய அரசு. `அரசியல் சாசனம் பெண்ணுக்கு வழங்கும் சமத்துவத்தை மத்திய அரசு வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு மறுக்கிறது' என்று தெளிவாகத் தீர்ப்பளித்தார் ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர். `திருமணமான ஆண் அதிகாரிகளால் நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகம் வராதபோது, எப்படி பெண் அதிகாரிகளால் மட்டும் தீங்கு நேரும்?' என்று கேள்வி எழுப்பினார். `விடுதலை பெற்று, கால் நூற்றாண்டுக்குப் பின்னரும் உயர் பதவியில் உள்ள பெண் அதிகாரிக்கே இந்த நிலை என்றால், நாட்டில் சாமானியப் பெண்களின் நிலை என்ன?' என்றும் கேள்விக்கணை தொடுக்க, விதிமுறைகள் மாற்றி எழுதப்பட்டன. இறுதியாக நெதர்லாந்தில் அரசுத்தூதராகப் பணியாற்றி 1982-ம் ஆண்டு ஓய்வு பெற்றார் முத்தம்மாள்.

பணி ஓய்வுக்குப் பின்னர், ஸ்வீடன் நாட்டின் பிரதமர் ஓலஃப் பாம் அமைத்த ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்புக்கான அரசு சாராத அமைப்பில் இந்தியப் பிரதிநிதியாகத் தொண்டாற்றினார். காந்தியால் கவரப்பட்ட முத்தம்மாள், 1984-ம் ஆண்டில் நடைபெற்ற சீக்கியருக்கு எதிரான வன்முறையிலும், 2002-ம் ஆண்டு பாப்ரி மசூதி இடிப்பின்போதும், சிறுபான்மையினருடன் துணைநின்றார்.  `மக்களிடமே ஆட்சிப் பொறுப்பு இருத்தல் வேண்டும். மக்களாட்சி என்ற பெயரில் கட்சிகள் நாட்டை ஆள்வது சரியல்ல’ என்ற வாதத்தை தன் புத்தகத்தில் முன்வைத்தார்.

வாழ்க்கை முழுக்க ஆணாதிக்கத்துடன் போராடியதாலோ என்னவோ, முத்தம்மாள் திருமணம் செய்துகொள்ளவில்லை. `எசென்ஷியல் கொடவா குக்புக்' என்கிற குடகு நாட்டு குடவர்களின் சமையல்கலை புத்தகத்தையும் எழுதினார் முத்தம்மாள். டெல்லியில் இருந்த தனக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை அன்னை தெரசாவின் `மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ அமைப்புக்கு வழங்கினார். இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு, கொனிகொப்பல் பள்ளிக்கு ஒரு நூலகம் அமைக்கவும், விராஜ்பேட்டிலுள்ள மேலாண்மை கல்லூரிக்குக் கட்டடம் கட்டவும் நிதியுதவி வழங்கினார். 2009-ம் ஆண்டு தன் 85-வது வயதில், பெங்களூரில் காலமானார் முத்தம்மாள்.

“என்னைச் சுட்டாலும் பரவாயில்லை... நான் இந்த நாட்டில்தான் என் இறுதி மூச்சு வரை இருப்பேன். இங்கு எந்த அரசியல் கட்சிக்கும் மதத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அவசியம் இல்லை!”


- சி.பி.முத்தம்மாள் எழுதிய `ஸ்லெயின் பை தி சிஸ்டம்’ நூலில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism