Published:Updated:

முதல் பெண்கள்: மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் முனைவர் - கடம்பி மீனாட்சி

முதல் பெண்கள்: மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் முனைவர் - கடம்பி மீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
முதல் பெண்கள்: மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் முனைவர் - கடம்பி மீனாட்சி

மதராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் முதுகலை வரலாறு பட்டம் பெற்ற முதல் பெண்ஹம்சத்வனி

முதல் பெண்கள்: மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் முனைவர் - கடம்பி மீனாட்சி

மதராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் முதுகலை வரலாறு பட்டம் பெற்ற முதல் பெண்ஹம்சத்வனி

Published:Updated:
முதல் பெண்கள்: மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் முனைவர் - கடம்பி மீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
முதல் பெண்கள்: மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் முனைவர் - கடம்பி மீனாட்சி

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ். ஆகஸ்ட் 2, 1938... `பெண்கள் Vs ஆண்கள்' என்கிற தலையங்கத்துக்குக் கீழே இந்தச் செய்தி - `இந்திய அரசுப் பணிகளில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நேற்று தெளிவாக உணர முடிந்தது. திருச்சிராப்பள்ளி வானொலி நிலைய இயக்குநர் பணிக்கு விண்ணப்பித்த ஒன்பது பேரில் இரண்டு பேர் பெண்கள். டெல்லியைச் சேர்ந்த திருமதி சீதாராமும் சென்னையில் தொல்லியல் ஆய்வு மேற்கொண்டிருக்கும் டாக்டர் சி.மீனாட்சியும்தான் அவர்கள்.'

வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்ற மீனாட்சி, தேர்ந்த இசைக் கலைஞரும்கூட. அன்றைய மதராஸின் முன்னணி பாரம்பர்ய இசைப் பாடகிகளில் ஒருவராக மேடைக் கச்சேரிகள் செய்துவந்தார். இசையின் மீதான ஆர்வமே அவரை இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கத் தூண்டியது.

1905 செப்டம்பர் 12 அன்று, காஞ்சிபுரத்தில் கடம்பி பாலகிருஷ்ணனுக்கும் மங்களம் அம்மாளுக்கும் மகளாகப் பிறந்தார் மீனாட்சி. மதராஸ் உயர் நீதிமன்றத்தில் `பெஞ்சு கிளார்க்'கான தந்தை பாலகிருஷ்ணன் சிறு வயதிலேயே இறந்துவிட, தாய் மங்களம் அம்மாள் மற்றும் மூன்று சகோதரர்களின் அரவணைப்பில் வளர்ந்தார். வரலாற்றின் மீது அதீத ஆர்வம்கொண்டிருந்த மீனாட்சி, கல்வி கற்க முனைந்ததற்காக தன்மீது எழுந்த எல்லா விமர்சனங்களையும் புறந்தள்ளினார்.

1929-ம் ஆண்டு, மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்து முடித்தவர், மதராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் முதுகலை வரலாறு படிக்க விண்ணப்பித்தார். அன்றைய காலகட்டத்தில் முதுகலை வரலாற்றுப் படிப்பு இருந்த சில கல்லூரிகளில் ஒன்று அது. ஆனால், அதுவரை அந்தக் கல்லூரியில் பெண்கள் யாரும் பயிலாத காரணத்தைச் சுட்டிக்காட்டி அவருக்கு அனுமதி மறுத்தது கல்லூரி நிர்வாகம்.

முதல் பெண்கள்: மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் முனைவர் - கடம்பி மீனாட்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதே கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய மீனாட்சியின் சகோதரர் லட்சுமிநாராயணன், தன் தங்கையைத் தானே பத்திரமாகப் பார்த்துக்கொள்வதாகவும், அவரது பாதுகாப்புக்கு எந்தத் தீங்கு வந்தாலும் முழுப் பொறுப்பும் தன்னுடையது என்றும் கைப்பட எழுதித் தந்த பின்புதான் மீனாட்சி கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அங்கு, எட்வர்டு கோர்லி போன்ற அறிஞர்களிடம் கற்றார். அதன்பின், மதராஸ் பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் முனைவர் பட்டப்படிப்பில் சேர்ந்தார் மீனாட்சி. 1931-ம் ஆண்டு, அவரது வரலாற்று ஆய்வுக்கென கல்வி உதவித் தொகை அறிவித்தது பல்கலைக்கழகம். தமிழக வரலாற்று ஆய்வாளர்களில் தலை சிறந்தவர்களில் ஒருவர் என்று அறியப்படும் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிதான், மீனாட்சியின் ஆய்வுப்படிப்புக்கு வழிகாட்டி.

அதன்பின் தொடங்கியது மீனாட்சி என்ற பெண் ஆய்வாளரின் வரலாற்று வேட்டை! புதுக்கோட்டை, மன்னார்குடி, விழுப்புரம், காஞ்சிபுரம், மாமல்லபுரம் என்று தமிழகம் முழுக்கப் பயணப்பட்டார் மீனாட்சி. துணைக்கு அவரின் தாயும் சென்றார். மீனாட்சியைப் போல பல்லவர் வரலாற்றை ஆவணப்படுத்திய ஆய்வாளர் யாரும் இல்லை என்று இன்றும் சொல்வோர் உண்டு. குடுமியான்மலை இசைக் கல்வெட்டை மீனாட்சி அளவுக்கு அதன்பின் படியெடுத்து ஆராய்ந்தவர் மிகச் சிலரே. தன் முனைவர் பட்ட ஆய்வுக்கென மீனாட்சி தேர்ந்தெடுத்த தலைப்புகள் மூன்று - வைகுண்டப்பெருமாள் கோயில் சிற்பங்கள், கைலாசநாதர் கோயில் சிற்பங்கள் மற்றும் பல்லவர்களது நிர்வாகம் மற்றும் அவர்கள் கீழ் சமூக வாழ்க்கை. முனைவர் பட்ட ஆய்வறிக்கைகளைப் பரிசீலித்த குழுவின் உறுப்பினரான ஏ.என்.தீட்சித், `அவரது ஆய்வுகள் அத்தனை நுணுக்கமானவை' என்று எழுதியிருக்கிறார். 1934-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். மதராஸ் மாகாணத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் அவர்தான்.

1938-ம் ஆண்டு `பல்லவர்கள் நிர்வாகம் மற்றும் பல்லவர் ஆட்சிக்காலத்தில் சமூக வாழ்க்கை'யைப் புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டது மதராஸ் பல்கலைக்கழகம்.

1937-ம் ஆண்டு மதராஸ் பல்கலைக்கழகம் அளித்த ஊக்கத்தொகையில் தென்னிந்தியாவில் பௌத்தம் குறித்த ஆய்வுகளை மேற் கொண்டார் மீனாட்சி. அதே ஆண்டு தொல்லியல் துறை, காஞ்சி வைகுண்டப் பெருமாள் மற்றும் கைலாசப் பெருமாள் கோயில் சிற்பங்கள்குறித்து ஆய்வுசெய்ய மீனாட்சியைப் பணித்தது. தன் துறை சார்ந்த அறிஞர்களிடம் விவாதிப்பதில் அதிக ஆர்வம்கொண்டிருந்தார் மீனாட்சி. திராவிட கட்டடக் கலைகுறித்து அதிகம் எழுதியும் பேசியும் வந்த பிரெஞ்சு தொல்பொருள் ஆய்வாளர் ஜோவோ துப்ரேலுடன் காஞ்சி கைலாசநாதர் கோயில் தோற்றம்குறித்த விவாதங்களில் ஈடுபட்டார்.

பெண்கள் அதிகம் பணிபுரியாத அந்தக் காலத்தில், முனைவர் பட்டம் பெற்ற மீனாட்சியின் நிரந்தர வேலை தேடும் படலம் தொடங்கியது. அன்றைய மாகாண முதலமைச்சர் ராஜாஜி முதல், மைசூரு மன்னர் வரை அனைவருக்கும் தன் புத்தகத்தை அனுப்பினார். அவரது விடாமுயற்சி வெற்றிபெற்றது. 1939-ம் ஆண்டு மைசூரின் திவான் மிர்சா இஸ்மாயில் கையில் மீனாட்சி எழுதிய புத்தகம் கிடைக்க, புத்தகம் கிடைத்தமைக்கு நன்றி தெரிவித்தும், ஒற்றை வரி பாராட்டுடனும் கடிதம் அனுப்பினார். சில மாதங்கள் கழித்து, இஸ்மாயிலின் முயற்சியால், பெங்களூரு மகாராணி கல்லூரியில் துணை விரிவுரையாளர் பணிக்கு மீனாட்சியை நியமித்திருப்பதாகக் கடிதம் வந்தது. தன் தாயுடன் ஆகஸ்ட் மாதம் பெங்களூருக்குப் பயணமானார் மீனாட்சி.

திடீரென மார்ச் 5, 1940 அன்று தன் 34-வது வயதில், பெங்களூரில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் மீனாட்சி. அவரது மரணத்துக்குப் பின் அவர் எழுதிய காஞ்சி கைலாசநாதர் கோயில் சிற்பங்கள், காஞ்சி மற்றும் தென்னிந்தியாவில் பௌத்தம் மற்றும் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரன் சம்ஸ்கிருதத்தில் எழுதிய `பாகவதஜுகம்' என்ற நாடகத்தின் தமிழ் மொழியாக்கம் ஆகிய புத்தகங்கள் வெளிவந்தன. அவரது பழம் நாணயத் தொகுப்பு திருவனந்தபுரம் திருவிதாங்கூர் கல்லூரிக்குக் குடும்பத்தினரால் அளிக்கப்பட்டது.

`இந்தியாவின் தலைசிறந்த பெண் தொல்லியல் நிபுணர்களில் ஒருவர் மீனாட்சி. அவரது மரணம் இந்தியத் தொல்லியல் துறைக்குப் பெரும் இழப்பு' என்று கூறியிருக்கிறார், தொல்லியல் துறை நிர்வாக இயக்குநர் கே.என்.தீட்சித்.

`நம் நாட்டில் ஆண்கள் எங்கு செல்லவும் தடையில்லை. ஆனால், பெண்கள் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறார்கள். எந்த விதத்திலும் பெண் ஆணுக்குச் சளைத்தவளில்லை. ஆனால், பெண் படிப்பதையோ, பணியாற்றுவதையோ இங்கு யாரும் உற்சாகப்படுத்துவதில்லை.'

- சி.மீனாட்சி (கலைமகள்/1939)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism