Published:Updated:

எப்படி இருக்கிறார் கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள்?

எப்படி இருக்கிறார் கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள்?
பிரீமியம் ஸ்டோரி
எப்படி இருக்கிறார் கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள்?

எப்படி இருக்கிறார் கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள்?

எப்படி இருக்கிறார் கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள்?

எப்படி இருக்கிறார் கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள்?

Published:Updated:
எப்படி இருக்கிறார் கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள்?
பிரீமியம் ஸ்டோரி
எப்படி இருக்கிறார் கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள்?

‘‘மணம் முடிக்கவில்லை. குழந்தையைப் பெற்றெடுக்கவில்லை. ஆனால், கரகத்தை என் தலையில் சுமப்பதால், தாய்மையை உணர்கிறேன். செம்மரக் கடத்தல்காரர் என்று சொன்னார்கள். அந்த வலி இன்னும் போகவில்லை. தினம் தினம் அழுகிறேன்’’ - என்கிறார், மோகனாம்பாள். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம், ஆந்திரம் என இரு மாநிலங்களை உலுக்கிய செம்மரக்கட்டைகள் கடத்தல் விவகாரத்தில் அடிபட்ட கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள்தான் இவர். வேலூர் வசந்தபுரத்தில், தான் நடத்திவரும் பெட்டிக்கடையில் அமர்ந்திருந்த அவரிடம் பேசினோம்.

சிறிய முன் அறிமுகம். காட்பாடி தாராபடவேடு பகுதியில் மோகனாம்பாள் வீட்டில், 2014-ம் ஆண்டு போலீஸார் சோதனை நடத்தினர். நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம், 73 பவுன் தங்க நகைகள் சிக்கின. செம்மரக் கடத்தலில் மோகனாம்பாளுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. வேலூர் நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். அவரின் அக்கா நிர்மலா, அக்கா மகன் சரவணன் ஆகியோருடன் சிறையில் அடைக்கப்பட்டார் மோகனாம்பாள். ‘கரகாட்டம் ஆடியது மற்றும் அதனால்  கிடைத்தப் பணத்தை வட்டிக்கு விட்டது, வீடு மற்றும் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டது போன்றவற்றால் இவ்வளவு பணம், நகைகளைச் சம்பாதித்தேன்’ என்று மோகனாம்பாள் நீதிமன்றத்தில் தெரிவித்தார். விசாரணைக்கும் ஒத்துழைப்பு கொடுத்தார். ஜாமீனில் வெளிவந்த மோகனாம்பாளுக்கு சிக்கல்கள் தொடர்ந்தன. அவரிடம் இருக்கும் பணம், நகைகளைப் பறிக்க ரவுடி கும்பல்கள் திட்டமிட்டன. அக்கா மகன் சரவணனை ரவுடி கும்பல் கடத்திச்சென்று கொன்றது.

நீதிமன்றம், காவல் நிலையம், சிறை என நான்கு ஆண்டுகளைக் கழித்த  மோகனாம்பாள், இப்போது மீண்டும் கரகாட்டம் ஆடுகிறார். அதுவும், வேலூரில் காவல் துறையினரின் பொங்கல் கொண்டாட்டத்தில், மோகனாம்பாள் கரகாட்டக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைப் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

எப்படி இருக்கிறார் கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள்?

இந்த நிலையில்,வேலூர் வசந்தபுரத்தில்   தனது பெட்டிக்கடையில் இருந்த மோகனாம்பாளைச் சந்தித்தோம்.

‘‘என் அப்பா, ராணுவத்தில் சுபேதராகப் பணியாற்றியவர். எனக்கு மூன்று அக்காள்கள். நான்தான் கடைசி. என் குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தது. மூத்த அக்கா நிர்மலா, நாட்டியம் கற்றுக்கொண்டார். அக்கா மூலம் நானும் நாட்டியம் பழகினேன். 1974-ல் தான் முதன்முதலில் மேக்கப் போட்டு மேடை நிகழ்ச்சியில் ஆடினேன். பிறகு, கரகாட்டக் கலையைக் கற்றுக்கொண்டேன். மான் கொம்பு சுற்றுவேன். பொய்க்கால் குதிரை கட்டுவேன்.

படித்தது ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே என்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் சரளமாகப் பேசுவேன். இங்கிலீஷ் கொஞ்சம் புரியும். மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா எனப் பல மாநிலங்களில் கலைக்குழுவை அழைத்துச்சென்று நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன்.

இளம் வயதில் என்னைத் திருமணம் செய்துகொள்வதற்கு பலர் விரும்பினர். காதலிப்பதாகச் சுற்றிச் சுற்றி வந்தனர். ஆனால், கரகம் ஆடும் பெண்களை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஊர் பெரிய மனிதர்கள் படுக்கையில் வீழ்த்தத் துடிப்பார்கள். என்னையும் அப்படி அழைத்தார்கள். இதனால், எனக்கு ஆண்கள்மீது பெரிதாக நம்பிக்கை இல்லை. திருமணம் செய்துகொள்ளவும் பிடிக்கவில்லை. அக்காள்களுக்குத் திருமணமாகிவிட்டது. இப்போது மூன்று அக்காள்களின் குடும்பத்தினர் மூன்று வேளையும் எனக்கு உணவு கொடுக்கிறார்கள். எனக்கு எந்தச் செலவும் இல்லை. எனக்குக் கிடைக்கும் வருமானத்தைச் சேமித்துவைக்கிறேன். இப்போது 53 வயதாகிறது. ஆடி ஆடிக் கால் முட்டித் தேய்ந்துவிட்டது. ஆனாலும், இன்னும் ஆடுகிறேன்” என்றவர் தன் மீதான வழக்குகள் பற்றியும் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்படி இருக்கிறார் கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள்?

“காலம் என்னைத் திசைதிருப்பியது உண்மை தான். அதுவே வழக்கு, சிறை என்று என் வாழ்க்கையைக் குலைத்துப்போட்டுவிட்டது. பிரச்னையைச் சந்தித்தபோது, அவமானமாக இருந்தது. தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், ‘திருடவில்லை, பொய் சொல்லவில்லை... அப்புறம் ஏன் சாக வேண்டும்’ மனதைத் தேற்றிக்கொண்டேன். இதோ அந்த வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக வெளியே வந்துவிட்டேன்’’ என்றார்.

காவல்துறை அதிகாரிகளிடம் மோகனாம்பாள் பற்றி விசாரித்தபோது, ‘‘குற்றச்சாட்டுக்கு ஆளானவரே தவிர... மோகனாம்பாள் குற்றவாளி என்று சொல்ல முடியாது. அவரிடம் கைப்பற்றிய கணக்கில் வராத பணம், நகைகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்தோம். இவர் மீது அந்த ஒரே ஒரு வழக்கு மட்டும்தான் உள்ளது. அது தொடர்பான ஆவணங்களை அமலாக்கத் துறையிடம் ஒப்படைத்துவிட்டோம். அவர்கள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை, வழக்கில் மிகவும் நல்ல முறையில் அவர்  ஒத்துழைத்தார். சட்டத்தை மதித்தார். எனவே, அவரை ஒரு கலைஞராக மட்டுமே நாங்கள் பார்க்கிறோம் அதனால்தான், எங்களின் பொங்கல் விழாவில் அவர் கலை நிகழ்ச்சி நடத்தினார். அதில் தவறு ஒன்றுமில்லை’’ என்றனர்.

- கோ.லோகேஸ்வரன், படம்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism