Published:Updated:

''இப்ப எனக்காக வாழுறேன்!" - பேருந்து நிறுத்தத்தை வீடாக்கிய பவளக்கொடி அம்மா இப்போது...

"`புள்ளைகளுக்கு நல்லதுபொல்லது செய்யணும், கணவருக்கு இதை வாங்கணும்'ன்னு அவங்களுக்காக கால்ல சக்கரம் கட்டிக்கிட்டு வாழ்ந்த அந்த வறட்டு வாழ்க்கை கொடுத்த ரணம் இல்லாததுன்னு இப்போதான் எங்க வாழ்க்கையை எங்களுக்காக நாங்க வாழ ஆரம்பிச்சிருக்கோம். எனக்காக வாழ்க்கையை நான் இந்த வயசுலதான் வாழ ஆரம்பிச்சிருக்கேன்."

''இப்ப எனக்காக வாழுறேன்!" - பேருந்து நிறுத்தத்தை வீடாக்கிய பவளக்கொடி அம்மா இப்போது...
''இப்ப எனக்காக வாழுறேன்!" - பேருந்து நிறுத்தத்தை வீடாக்கிய பவளக்கொடி அம்மா இப்போது...

உறவுகளால் துச்சமென மதித்துத் தூக்கி வீசப்பட்டு, டெம்போ வேன் மோதி கால் முறிந்து, பேருந்து நிறுத்தத்தையே வீடாக்கி வாழ்ந்து வந்த பவளக்கொடி அம்மாவின் அல்லல் பற்றி விகடன் இணையதள வாசகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. 

விகடன் சார்பில் அவரை அன்புக்கரங்கள் என்ற ஹோமில் சேர்க்க ஏற்பாடு செய்திருந்தோம். `இப்போது பவளக்கொடி அம்மா எப்படி இருக்கிறார்?' என்று பார்த்து வரச் சென்றோம். அதற்கு முன்பாக, படிப்போரின் கண்களில் கண்ணீரை ஊற்றெடுக்க வைக்கும் பவளக்கொடி அம்மாவின் சோகம் படிந்த முன்கதையைத் தெரிந்துகொள்வோம்.

பவளக்கொடி அம்மாவுக்குச் சொந்த ஊர், கரூர் மாவட்டத்தில் உள்ள கொப்பம்பட்டி. சுப்பிரமணியன் என்ற கணவரும், இரண்டு மகன்கள், ஒரு மகள் என்று அவருக்குக் குடும்பம் இருக்கிறது. ஆனால், கடந்த ஐந்து வருடங்களாக அவரை அவரது பிள்ளைகள் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். கணவரோடு தனியாக வசித்து வந்திருக்கிறார். ஆனால், குடிகாரரான கணவரும் தினமும் குடித்துவிட்டு வந்து, பவளக்கொடியை அடித்துத் துவைத்திருக்கிறார். கூலி வேலை பார்த்து பவளக்கொடி கொண்டு வரும் சொற்ப வருமானத்தையும் அடித்துப் பிடுங்கி இருக்கிறார். அதோடு, இவர்கள் குடியிருந்த வீட்டையும் `குடி'க்காக கணவர் விற்கப் பார்த்திருக்கிறார். `போதும்யா... உன்னோட வாழ்ந்த பொசக்கெட்ட வாழ்க்கை' என்றபடி, கணவர் என்ற உறவையும் உதறித் தள்ளிவிட்டு மனம் போன போக்கில் நடந்திருக்கிறார். கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் புத்தாம்பூர் என்ற பகுதியில் வந்தபோது, பவளக்கொடியை டெம்போ வேன் ஒன்று மோதித்தள்ளிவிட்டுப் போய் இருக்கிறது. தூக்கி வீசப்பட்ட பவளக்கொடியின் இடதுகால் முறிந்து போனது. அதைச் சரிபண்ணாமல், துணியால் கட்டுப்போட்டபடி, அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தையே வீடாக்கிக் கொண்டு வாழத் தொடங்கினார். 

உடைந்த இடதுகாலில் சீழ் வைத்து, ஈக்கள் மொய்க்க, அந்தப் பக்கமாக வருவோர் போவோரிடம், `அய்யா, அம்மா... வங்கொலையா பசிக்குது. யாராச்சும் டீ, பொரை வாங்கிக் கொடுங்க' என்று யாசகம் பெற்று உயிர் வாழ்ந்து வந்தார். தனது நிலைமை பற்றிக் குடும்பத்தினருக்குத் தகவல் அனுப்பி இருக்கிறார். ஆனால், கல் மனம் படைத்த பிள்ளைகளோ, `அந்த மூதேவி அங்கேயே கெடந்து சாவட்டும்' என்று இதயத்தில் ஈரமே இல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். இருந்தாலும், `உறவுகள் வந்து என்னைப் பார்க்கும் வரை காலுக்கு வைத்தியம் பார்க்கப் போவதில்லை' என்று வைராக்கியமாக வாழத் தொடங்கினார் பவளக்கொடி. வேறு வேலையாக புத்தாம்பூர் சென்ற நமது கண்களில் பவளக்கொடி அம்மா படவே, அவரைப் பற்றி விகடன் இணையதளத்தில் கட்டுரை எழுதினோம். கடந்த 07.07.2018 ம் தேதி, ``அவ அப்படியே சாகட்டும்னு பிள்ளைகச் சொல்லிடுச்சுங்க!" - பேருந்து நிலையத்தில் குடியிருக்கும் பவளக்கொடி' என்ற தலைப்பில் வெளியானது. பவளக்கொடி அம்மாவுக்கு நமது புகைப்படக்காரர் ரொட்டி, டீ,பொரை என்று வாங்கித் தந்தார். இருந்தாலும், பவளக்கொடி அம்மாவை நமக்கு அப்படியே விட்டுவிட்டு வர மனமில்லை. `இணைந்த கைகள்' என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி என்பவர் மூலமாக கரூரில் இயங்கி வரும் `அன்புக்கரங்கள்' என்ற ஹோமில் பவளக்கொடியைச் சேர்க்க ஏற்பாடு செய்திருந்தோம்.

இனி, ஓவர் டு அன்புக்கரங்கள் ஹோம்...

துக்கங்களை மட்டுமே நெஞ்சில் தாங்கி வாழ்ந்து வந்த பவளக்கொடியின் நிலைமை இப்போது தலைகீழாக மாறி இருக்கிறது. தனது ரத்த உறவுகள் தன்னைக் காகிதமாகத் தூக்கி எறிந்த கொடுமை அவரது மனதை விட்டு முற்றாக நீங்கி இருக்கிறது. காரணம், அவருக்கு இங்கே கிடைத்திருக்கும் புதுபுது உறவுகளின் அரவணைப்புகள்தாம். ஆறுதல் வார்த்தைகள்தாம். தன்னைப்போலவே தங்களது உறவுகளால் தள்ளி வைக்கப்பட்டு, இங்கே வந்திருக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட தோழிகளின் சோகக்கதை கடலுக்குள் தனது கதையையும் பெருங்காயமாகக் கரைத்துவிட்டு, சந்தோஷ முத்தெடுத்திருக்கிறார் பவளக்கொடி. அவரது முகத்தில் உற்சாகம் பூத்திருக்கிறது இப்போது. விபத்தில் அவருக்கு அடிப்பட்ட இடது கால் சரிசெய்யப்பட்டிருக்கிறது. நம்மை சடுதியில் அடையாளம் கண்டுகொண்ட பவளக்கொடி, ஓடோடி வந்து நம் கைகளைப் பற்றிக் கொள்கிறார். 

``உங்களையும், உங்க பத்திரிகையையும் என் மிச்ச வாழ்நாளைக்கும் மறக்கமாட்டேன் தம்பி. அதேபோல், இங்கே கொண்டு வந்து என்னைச் சேர்த்த சாதிக் அலி தம்பியையும் என்னால மறக்க முடியாது. `ஒட்டும் இல்லை; உறவும் இல்லை'ன்னு என்னைத் தூக்கி எறிந்த ரத்த உறவுகளுக்காக ரெண்டு வருஷமா அந்தப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். `அவங்க வர்ற வரைக்கும் காலை சரிபண்ணமாட்டேன்'னு வைராக்கியமாக் காத்திருந்தேன். ஆனா, யாரும் வரலை. நீங்கதான் வந்தீங்க. இன்னைக்கு எனக்குப் புது வாழ்வு, புது உறவுகள், புது நம்பிக்கை கிடைச்சிருக்கு. அன்னக்கிளி, ஏலம்மாள், மாரியம்மாள்ன்னு எனக்கு இப்போ முப்பது தோழிங்க இருக்காங்க. எல்லாருக்கும் ஒரு சோகக் கதை இருக்கு. ஆனா, `அந்தச் சோகக் கதையை ஏற்படுத்திய உறவுகளை நினைக்க நினைக்கத்தான் அது பாரமா நெஞ்சை அழுத்துது. 

'அதைவிட்டு வெளியே வந்துருவோம்'ன்னு மொத்தப் பேரும் இப்போ புது வாழ்க்கைக்குப் பழக்கப்படுத்திக்கிட்டோம். ஒண்ணா உட்கார்ந்து பேசுறது, எல்லோரது வாழ்க்கையிலும் நடந்த சந்தோஷ சம்பவங்களை மட்டுமே பகிர்ந்துகொள்வது, மனசுக்குப் புடிச்ச வேலையைச் செய்றது, `புள்ளைகளுக்கு நல்லதுபொல்லது செய்யணும், கணவருக்கு இதை வாங்கணும்'ன்னு அவங்களுக்காக கால்ல சக்கரம் கட்டிக்கிட்டு வாழ்ந்த அந்த வறட்டு வாழ்க்கை கொடுத்த ரணம் இல்லாததுன்னு இப்போதான் எங்க வாழ்க்கையை எங்களுக்காக நாங்க வாழ ஆரம்பிச்சிருக்கோம். எனக்காக வாழ்க்கையை நான் இந்த வயசுலதான் வாழ ஆரம்பிச்சிருக்கேன்.

வேளாவேளைக்குச் சாப்பாடு, சின்னக்காய்ச்சல்ன்னு படுத்தாலே ஓடோடி வந்து கவனிக்குற நிர்வாகி சேகர்ன்னு இப்போதுதான் என் வாழ்க்கையில் வசந்தம் பூத்திருக்கு. இனி என் ரத்தச் சொந்தங்கள் வந்து ஒத்தக்கால்ல நின்னு கூப்புட்டாலும், நான் அவங்களோட போகப் போறதில்லை. என் உயிர் இங்கேயே, என்னோட புது உறவுகளோட மடியிலேயேதான் போகணும். இவங்கள்ல யாராச்சும் ஒருத்தர்தான் எனக்குக் கொள்ளிப் போடணும்" என்று முடித்தபோது, அவரது கன்னங்களில் கண்ணீர் சொட்டுகள் உதிர்ந்தோடிய தடம்.
பவளக்கொடி அம்மாவின் இந்த சந்தோஷம் நீண்ட நெடிய காலம் நிலைக்கட்டும்!.