Published:Updated:

``என்கிட்ட தப்பா நடந்துகொண்டதாச் சொல்லுவேன்'' - தற்கொலைக்கு முயன்ற பெண்ணைக் காப்பாற்றிய நபரின் அனுபவம்!

``என்கிட்ட தப்பா நடந்துகொண்டதாச் சொல்லுவேன்'' - தற்கொலைக்கு முயன்ற பெண்ணைக் காப்பாற்றிய நபரின் அனுபவம்!
``என்கிட்ட தப்பா நடந்துகொண்டதாச் சொல்லுவேன்'' - தற்கொலைக்கு முயன்ற பெண்ணைக் காப்பாற்றிய நபரின் அனுபவம்!

குழந்தைகளைக் கொன்று தாங்களும் தற்கொலை செய்துகொள்கிற பெண்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இப்படியொரு கண்ணீர் செய்தியைப் படிக்காமல் ஒரு நாளைக் கடந்துவிட முடியாது என்ற நிலைமைதான் தற்போது. இந்த நிலையில் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற ஒரு பெண்ணையும் அவருடைய இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றி இருக்கிறார் மறைமலை நகரைச் சேர்ந்த முருகன் என்ற இளைஞர். அவரிடம் பேசினோம். 

``முந்தா நாள் நைட் மணி எட்டரை, ஒன்பது இருக்குங்க. வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போயிக்கிட்டிருக்கேன். அப்ப, மானம்பாக்கத்தில் இருந்து கூடுவாஞ்சேரி ரெயில்வே மேம்பாலத்தின் மேலே பைக்கில் போயிக்கிட்டு இருந்தப்போ, ஒரு லேடி போனில் யார்கிட்டேயோ சத்தம் போட்டு கோபமாப் பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க பக்கத்துல ஒரு சிறுவனும் சிறுமியும் நின்னுக்கிட்டிருந்தாங்க. இந்த நேரத்துல குழந்தைகளோட இங்கே நின்னுக்கிட்டு இருக்காங்களே என்று, `மேடம், இங்கே ஏன் நிக்கிறீங்க? நான் வேணா வீட்டுல கொண்டு போய் விடவா'ன்னு கேட்டேன். அவங்க வேண்டாம்னு மறுத்துட்டதால நானும் வண்டியை ஸ்டார்ட் பண்ணிக் கிளம்பிட்டேன். ஆனா, மனசுக்குள்ள ஏதோ தப்பு நடக்கப் போகுது தோணுச்சு. அதனால, மறுபடியும் திரும்பி வந்தேன். தூரத்துல அந்தம்மா, தன்கூட இருந்த சிறுவனை மேம்பாலத்தோட கட்டைச் சுவர் மேலே ஏத்தி நிக்க வைச்சிட்டு தானும் அந்தச் சுவர் மேலே ஏற முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கு. டிரெயினும் கொஞ்ச தூரத்துல வந்துக்கிட்டிருக்கு. டிரெயின் கிட்டக்க வரும்போது அந்தச் சிறுவனைத் தள்ளி விட்டுட்டு இந்தம்மாவும் குதிக்கப் போறாங்கன்னு எனக்கு நல்லாப் புரிஞ்சிடுச்சு. சத்தம் போட்டா அந்தம்மா, உடனே குதிச்சிடுமேன்னு, வண்டியை சத்தமில்லாம அந்தம்மா பக்கத்துல கொண்டு போய் நிறுத்தி, எட்டி அவங்களையும் அந்தச் சிறுவனையும் பிடிச்சிட்டேன்.

தற்கொலையைத் தடுத்துட்டேன் என்கிற கோபத்தில் அவங்க என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதுகூட பரவாயில்லைங்க, `நீ இப்ப என்னைத் தற்கொலை பண்ணிக்க விடலைன்னா, நீ என் கையைப் பிடிச்சு இழுத்தேன்னு சொல்லிடுவே'ன்னு கத்தறாங்க. அந்தச் சத்தத்தைக் கேட்டு கூட்டமும் கூடிடுச்சு. சிலர் உடனே மொபைல் போனை எடுத்து வீடியோ எடுக்கப் பார்த்தாங்க. உடனே, `இந்தம்மா இந்தச் சிறுவனோட தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணாங்க. நான் தடுத்து நிறுத்திட்டேன். யாராவது போலீஸுக்குத் தகவல் கொடுங்க. வீடியோ எடுக்காதீங்க ப்ளீஸ்'னு சத்தமாச் சொல்லி கெஞ்சினேன். உடனே போனை எல்லாரும் கட் பண்ணிட்டாங்க. அதுக்குள்ள தகவல் தெரிஞ்சி போலீஸ்காரங்களும் வந்துட்டாங்க'' என்று படபடப்பாகச் சொல்லி முடித்த முருகன், மறைமலை நகரில் இருக்கிற ஒரு தனியார் நிறுவனத்தில் புரொடக்‌ஷன் மேனேஜராக இருக்கிறார். பூர்வீகம் திருநெல்வேலி. தன்னுடைய முகநூல் வழியாகச் சத்தமில்லாமல் சில சமூக சேவைகளைச் செய்து வருகிறார். 

இவரைத் தொடர்ந்து, கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடமும் பேசினோம். ``விஷயம் தெரிஞ்சவுடனே ஸ்பாட்டுக்குப் போயிட்டோம். கூட்டத்தையெல்லாம் கலைந்து போகச் சொல்லிட்டு, அந்தம்மாவை சமாதானப்படுத்த முயற்சி செய்தோம். அவங்களுக்கும் குழந்தைகளுக்கும் அங்கேயே டிபன் வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்தோம். அவங்களை அந்த நேரத்துல ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போகக் கூடாது என்பதால், பக்கத்தில் ஹோல்சேல் கடை வைச்சிக்கிட்டிருக்க ஒரு மேடம்கிட்ட சொல்லி தற்கொலைக்கு முயன்ற அந்தம்மாகிட்ட பேசினோம். வழக்கமான குடும்பப் பிரச்னைதான். அப்புறம், அவங்க வீட்டுக்காரரையும் இவங்களையும் ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போய் கவுன்சலிங் கொடுத்து நல்லபடியா அனுப்பி வெச்சோம். சரியான நேரத்துல அம்மாவையும் குழந்தைகளையும் காப்பாற்றிய முருகனை ஸ்டேஷனுக்கு அழைத்து பரிசு கொடுத்து கௌரவப்படுத்தினோம்'' என்றார். 

சம்பவத்தின்போது, தற்கொலைக்கு முயன்ற அந்தப் பெண்ணுடன் இருந்த சிறுமி, அந்தப் பெண்ணுடைய சகோதரியின் குழந்தையாம். அவர் இறந்துவிட்டதால், தன் மகனுடன் சேர்த்து சகோதரியின் மகளையும் இந்தப் பெண்தான் வளர்த்து வந்திருக்கிறார். மனைவி தற்கொலைக்கு முயன்ற தகவலை அறிந்த கணவர் துடித்துப் போய்தான் வேலையிலிருந்து ஓடி வந்திருக்கிறார். சரியான நேரத்தில் மனைவியையும் மகனையும் காப்பாற்றிய முருகனுக்குக் கண்ணீர் மல்க நன்றியும் சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல்கள் எல்லாம் முருகன் நம்மிடம் பகிர்ந்துகொண்டவை.

பாராட்டுகளுக்குத் தகுதியானவர் நீங்கள்!