
நீங்களும் செய்யலாம்: பாத்திரம் தேய்க்கும் சோப் மற்றும் பவுடர் - கலைச்செல்வி
வீடுகளின் மாதாந்தர மளிகைப்பட்டியலில் முக்கிய இடம் வகிப்பது பாத்திரம் தேய்க்கும் சோப் அல்லது பவுடர். சில வீடுகளில் இரண்டுமே இடம்பெறும். சோப்போ, பவுடரோ தீர்ந்துபோயிருக்கும். புதிது வாங்க மறந்திருப்பார்கள். காலைநேரப் பரபரப்பில் கடைக்குச் செல்ல நேரமின்றி, பாத்திரங்களைக் கழுவ வேறு வழியின்றித் தவிப்பதும் பல வீடுகளில் நடக்கும். பாத்திரம் தேய்க்கும் சோப்பையும் பவுடரையும் நாமே வீட்டில் தயாரித்து ஸ்டாக் வைத்துக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம் என்கிறார் கலைச்செல்வி. சென்னையைச் சேர்ந்த சுய தொழில்முனைவோரான இவர், வீடுகளின் அன்றாடப் பயன்பாட்டுக்கான ஃப்ளோர் க்ளீனர், ரூம் ஸ்பிரே, லிக்விட் சோப் போன்றவற்றையும் தயாரிக்கிறார்.

வீட்டுத் தேவைக்கு மட்டுமன்றி, சிறிய அளவிலான பிசினஸாகச் செய்ய ஆர்வமுள்ளோருக்கும் டிஷ் வாஷிங் சோப் மற்றும் பவுடர் தயாரிப்பு பற்றி விளக்குகிறார் கலைச்செல்வி.
என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு?
பாம் ஆயில், தேங்காய் எண்ணெய், கலர், வாஷிங் சோடா, சென்ட், சில கெமிக்கல்கள், சிலிகான் மோல்டு போன்றவை பாத்திரம் தேய்க்கும் சோப்புக்குத் தேவை. கால்சைட் பவுடர், வாஷிங் சோடா உள்ளிட்டவை பவுடருக்கு அவசியம். கெமிக்கல்கள் விற்பனை செய்யுமிடங்களில் எல்லாமே கிடைக்கும். இரண்டுக்குமான முதலீடு 500 ரூபாய் போதும். இந்த இரண்டுமே கைகளால் தயாரிக்கப்படுபவை. மெஷின்களோ, பெரிய பாத்திரங்களோ தேவையில்லை. கைகளுக்கு ஏதாவது ஆகுமோ என்று பயப்பட வேண்டாம். கிளவுஸ் அணியாமல் கரண்டி வைத்தே பக்கெட்டில் மிக்ஸ் செய்யலாம்.

எவ்வளவு தயாரிக்கலாம்... எத்தனை நாள்கள் தேவை?
இந்த முதலீட்டில் டிஷ் வாஷிங் சோப் என்றால் 100 எண்ணிக்கையும், பாத்திரம் தேய்க்கும் பவுடர் என்றால் 50 கிலோவும் தயாரிக்கலாம்.
பவுடரை ஒரே நாளில் தயாரித்து உடனே பயன்படுத்தலாம். சோப், செட்டாகவே 8 மணி நேரமாகும். அதன்பிறகு 25 நாள்கள் கழித்துதான் உபயோகிக்க முடியும். அத்தனை நாள்கள் அனுமதித்தால்தான் அது சரியான பதத்துக்கு மாறும். வெயிலில் வைக்கத் தேவையில்லை.
எதில் கவனம் தேவை?
கலவைதான் இதில் முக்கியம். அளவு கூடினாலோ, குறைந்தாலோ பார் செட் ஆகாது. கொழகொழவென்றிருக்கும். கெமிக்கல் அளவு கூடினால் கைகளில் அலர்ஜி ஏற்படுத்தலாம். பவுடரை சரியாகக் கலக்காவிட்டால் கட்டிகள் உருவாகும்.

விற்பனை வாய்ப்பு? லாபம்?
வெளியில் கடைகளில் டிஷ் வாஷிங் பார் 10 முதல் 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதையே நாம் 8 முதல் 10 ரூபாய்க்குத் தரலாம். கடைகளில் ஒரு கிலோ பவுடர் 35 ரூபாய்க்கு விற்கிறார்கள். நம் தயாரிப்பின் அடக்கவிலை 8 - 10 ரூபாய்தான். அதை 15 ரூபாய்க்கு விற்றாலே லாபம்தான்.
பயிற்சி?
ஒரே நாள் பயிற்சியில் டிஷ் வாஷிங் சோப் மற்றும் பவுடர் தயாரிக்கக் கற்றுக்கொள்ளலாம். கட்டணம் 500 ரூபாய்
-சாஹா
படங்கள் : வீ.நாகமணி