பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
அறிவியல் கல்வி... ஆண் பெண் பேதம் வேண்டாம்!
புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்தின் வான் அறிவியலாளராகப் பணிபுரியும் பிரியம்வதா நடராஜன் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“அறிவியலும் கணிதமும் மாணவர் அனைவருக்கும் அவசியம் தேவை. `பெண் என்றால் கணிதம் சற்று சிரமம்தான்' என்று கூறும் ஆசிரியர்கள்தாம் இன்று அதிகம் உள்ளனர். இதன் காரணமாகவே அறிவியல் மற்றும் கணிதத்திலிருந்து பெருமளவு குழந்தைகள் விலகியே இருக்கின்றனர். நம் கல்வித் திட்டத்தில் மாற்றம் வேண்டும். ஆணோ பெண்ணோ, குழந்தைகள் அனைவரும் பிறக்கையிலேயே அறிவியல் வல்லுநர்கள்தாம் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும். குழந்தைகளின் ஆர்வத்தை உயிர்ப்பாக வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார் பிரியம்வதா.
ஆசிரியர்களுக்கு ஒரு பாடம்!
வாழிடமற்ற மக்களுக்கு ஹோட்டல் அறை!
அமெரிக்காவில் சில பகுதிகளில் நிலவிவரும் கடுங்குளிர் அங்குள்ள நீர்நிலைகளை உறையச் செய்திருக்கிறது. ஜனவரி மாத இறுதியில் ஜீரோ டிகிரிக்கும் கீழே வெப்பநிலை செல்ல, சிகாகோ நகரைச் சேர்ந்த கேண்டிஸ் பேய்ன் என்ற பெண்மணி, ஆதரவற்ற 100 பேருக்கு அந்த நகரின் ஆம்பர் இன் ஹோட்டலில் அறைகள் முன்பதிவு செய்துதந்தார். ஓர் அறைக்கு தலா 70 டாலர் என்ற வாடகையைத் தன் கையிருப்புகொண்டு கட்டினார். வீடற்ற மக்களை அவர்கள் தங்கியிருந்த டென்ட் பகுதிகளிலிருந்து ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல உதவுமாறு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேண்டிஸ் வேண்டுகோள் விடுக்க, கர்ப்பிணி உட்பட பலரும் உதவிக்கரம் நீட்டத் தொடங்கினர். “அந்த நேரத்தில் ஏனோ சட்டென அவர்களுக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது. மைனஸ் 25 டிகிரி குளிரில் ஐஸின் மீது படுத்திருக்கும் அவர்களது நிலை என்னைக் கவலைகொள்ளச் செய்தது” என்று கூறும் கேண்டிஸ், 4,700 டாலர் சொந்தப் பணத்தைச் செலவு செய்து, அவர்களுக்கு உணவு, லோஷன், குளிருக்குப் போர்வைகள் என்று வாங்கிக் குவித்தார்.

உணவகங்களும் இந்த மக்களுக்கு இலவச உணவு வழங்க, கேண்டிஸின் வங்கிக் கணக்குக்கு மக்கள் பணம் அனுப்பத் தொடங்கினர். 30 அறைகள் 60 அறைகளாக விரிவடைந்தன. 10,000 டாலர் கேண்டிஸின் வங்கிக் கணக்கில் சேர்ந்தது. ஆனால், தான் மிகச் சாதாரண நபர் என்றும், இன்னும் தன்னால் இயன்ற உதவியைச் சமூகத்துக்குச் செய்யவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் கேண்டிஸ்.
கருணைக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
`ஃபேட் ஷேமிங்' - பதிலடி தந்த நேஹா!
பாலிவுட் நடிகை நேஹா தூபியா 2002-ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்றவர். `கயாமத்', `ஷூட் அவுட் அட் லோகண்ட்வாலா', `சிங் ஈஸ் கிங்' போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர். சமீபத்தில் ஃபெமினா இதழ் நடத்திய ஸ்டைலிஸ்டா வெஸ்ட் 2019 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவரது தோற்றம் குறித்து `மகப்பேற்றுக்குப் பின் அதிர்ச்சிகரமாக எடை கூடியிருக்கும் நேஹா' என்று ஃபேஷன் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட, அதற்குத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலடி தந்தார் நேஹா.

“இத்தகைய ஃபேட் ஷேமிங் என்னை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. எனினும், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். செலிப்ரிட்டிகளை மட்டுமல்லாமல் எல்லாப் பெண்களையும் இந்த விமர்சனங்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. ஒரு தாயாக, என் மகளுக்காக நான் ஃபிட்டாக, உடல்நலத்துடன், முழு ஆற்றலுடன் இருக்கவே ஆசைப்படுகிறேன். அதற்காகவே உடற்பயிற்சி செய்கிறேன். சமூகம் சொல்லும் `ஃபிட்னஸ்' வரையறைக்காக அல்ல; என் சொந்த உடல்நலனுக்காக. இனிவரும் காலத்திலாவது இதுபோல யார் மனதையும் புண்படுத்த வேண்டாம்” என்று பதில் கொடுத்திருக்கிறார் நேஹா.
நம் உடல்... நம் உரிமை!
இஸ்லாமியப் பெண் காஜி நடத்திவைத்த திருமணம்!
மும்பை நகரில் தகவல் தொடர்பு ஆலோசகராகப் பணிபுரிந்து வரும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் மாயா ரேச்சல் மேக்மானஸ். இவர் மும்பையைச் சேர்ந்த ஷாமான் அகமது என்ற நடிகரைக் காதலித்து வந்தார். இந்த ஜோடி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்துகொள்வது என முடிவெடுத்தது. ஆனால், இந்தத் திருமணத்தை நடத்திவைக்க இஸ்லாமியப் பெண் காஜி ஒருவர் இவர்களுக்குக் கிடைக்கவே இல்லை. 2016-ம் ஆண்டு அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் இரண்டு பெண் காஜிகளை நியமித்தது. ஆனால், இவர்கள் பணி கவுன்சலிங் மட்டுமே என்றானது. ஆண்களுக்கு மதரசாக்கள் இருப்பதுபோல பெண்களைத் தயார் செய்ய போதுமான கட்டமைப்பு இல்லை என்பது பெண் காஜிகளின் வருத்தம்.

முத்தலாக் சட்டத்துக்குப்பின் நிறைய மாறுதல்கள் நிகழ்ந்திருப்பதாகக் கூறுகிறார்கள் இந்தப் பெண் காஜிகள். இஸ்லாத்தில் பெண் காஜிகளுக்கு இடம் இல்லை என்று பரவலாகச் சொல்லப்பட்டு வரும் நிலையில்தான் இந்த மும்பை ஜோடிக்கு, கிட்டத்தட்ட ஒரு மாதம் கடுமையாக உழைத்து, திருமணம் செய்துவைத்திருக்கிறார் ஹக்கீமா காத்தூன் என்ற 40 வயது பெண் காஜி. மெஹர் (திருமணத்தின்போது பெண்ணுக்கு ஆண் தரும் பரிசுத்தொகை), அடையாள அட்டைகளைச் சரிபார்த்தல், விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்தல், திருமண ஜோடிக்குச் சடங்குகளை விளக்குதல் என்று அனைத்து வேலைகளையும் எடுத்துச் செய்தார் ஹக்கீமா. ஹௌரா நகரைச் சேர்ந்த ஹக்கீமா, 2016-ம் ஆண்டு பயிற்சி தரப்பட்ட 29 பெண் காஜிகளில் ஒருவர்.
எங்கும் பெண் எதிலும் பெண்!
சிறப்பு ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போகும் கைவிடப்பட்ட பவர் லிஃப்டர்
2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடுங் குளிரில் அமிர்தசரஸ் நகரின் தெருக்களில் அழுது திரிந்த ஐந்து வயது பெண் குழந்தையை போலீஸார் மீட்டு பத்மினி ஸ்ரீவாஸ்தவா பணிபுரிந்த தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தனர். 19 ஆண்டு களுக்கு முன் கைவிடப்பட்ட, ஷல்லு என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, அபுதாபியில் நடைபெறவிருக்கும் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் ‘பவர் லிஃப்ட்டிங்’ விளையாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறாள்.

இன்னமும் அமிர்தசரஸின் பிங்கல்வாரா பகுதியின் ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் ஷல்லு, பல பவர் லிஃப்டிங் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்றிருக்கிறார். முதலில் அத்லெட்டிக்ஸில் ஆர்வம்காட்டிய ஷல்லு, அதன்பின் கால்பந்து விளையாடத் தொடங்கினார். ஆனால், விளையாட்டு ஒன்றில் அவர் தவறு எதுவும் இல்லாமல் ஃபௌல் ஆக்கப்பட, அந்தக் கோபத்தில் மீண்டும் பவர் லிஃப்ட்டிங் பக்கம் கவனத்தைத் திருப்பினார். அதன்பின் ஏறுமுகம்தான். பேச்சுக் குறைபாடும் சிறிது புரிதல் குறைபாடும் கொண்ட ஷல்லு, “கடின உழைப்பாளி, இந்தியாவுக்கு நிச்சயம் தங்கம் வென்று தருவார்” என்று சொல்கிறார் பத்மினி.
உன் முயற்சி வெல்லும்... ஷல்லு!
-நிவேதிதா லூயிஸ்
அவள் செய்திகள்!
* புனே நகரில் மகாத்மா ஜோதிபாய் புலே நிர்மாணித்த `சத்யசோதக திருமணம்' செய்துகொண்டனர் சச்சின் ஆஷா சுபாஷ் - சுரேகா அருண் ஜோடி. கடந்த குடியரசு தினத்தன்று சாதி, மதச்சடங்குகளை ஒதுக்கி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது ஆணையாக இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். விருந்தினர்களை தலா ஒரு புத்தகம் பரிசளிக்கவும் வேண்டுகோள் வைத்தனர். அவை நூலகங்களுக்கு வழங்கப்பட்டன.
* பெண் படைப்பாளிகளை ஊக்கு விக்க மலையாளத் திரை உலகின் `விமன் இன் சினிமா கலெக்டிவ்' (டபிள்யு.சி.சி.) அமைப்புக்கு மூன்று கோடி ரூபாயை மாநில பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது கேரள மாநில அரசு. “மூன்று கோடி ரூபாய் பெரிய தொகை அல்ல; ஆனால், பெண் படைப்பாளிகளுக்கு எங்களால் இயன்ற ஊக்கம் தர வேண்டும் என்றே பரீட்சார்த்த முயற்சியாக இந்தப் பணம் வழங்கப்படுகிறது'' என்று தெரிவித்திருக்கிறார் மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக்.
* வெளிநாட்டில் வாழும் இந்தியர்களால் கைவிடப்படும் திருமணமான பெண்களின் உரிமையை மீட்டெடுக்க அரசு உருவாக்கியிருக்கும் புதிய சட்ட வரைவு, நாடாளுமன்ற மேலவையில் சமீபத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜால் தாக்கல் செய்யப்பட்டது.
* புனே ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின் டீனான, 58 வயதாகும் மேஜர் ஜெனரல் மாதுரி கனித்கர், லெப்டினன்ட் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். இந்தப் பதவிக்கு வரும் இந்திய ராணுவத்தின் மூன்றாவது பெண்ணும், முதல் குழந்தைகள்நல மருத்துவரும் இவரே.