Published:Updated:

மகன்களுக்கு மொட்டை அடித்த ஆசிரியை! ஆச்சர்யப்படுத்தும் காரணம்!

"நானும் தலைமை ஆசிரியரும் மட்டுமே பணிபுரியும் ஈராசிரியர் பள்ளி. எப்போதுமே கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுக்க நான் தயங்கியதே இல்லை. அருகில் இருக்கும் மாவட்டங்களுக்குச் செல்வது மட்டுமல்ல, சென்னையில் நடக்கும் போராட்டங்களிலும் கலந்துகொண்டிருக்கிறேன்."

மகன்களுக்கு மொட்டை அடித்த ஆசிரியை! ஆச்சர்யப்படுத்தும் காரணம்!
மகன்களுக்கு மொட்டை அடித்த ஆசிரியை! ஆச்சர்யப்படுத்தும் காரணம்!

னவரி 22-ம் தேதி தொடங்கியது ஆசிரியர், அரசு ஊழியர்கள் போராட்டம். ஜாக்டோ - ஜியா பேரமைப்பு ஒருங்கிணைத்த இப்போராட்டம் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியது. இவர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூகத்தில் கருத்துகள் பரிமாறப்பட்டன. போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தைக்கு வரவே இல்லை. போராட்டத்தை முடித்துக்கொண்டு, பணிக்குத் திரும்ப வலியுறுத்தவும் செய்தது. மேலும், போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் மீது கைது மற்றும் 17 பி உள்ளிட்ட பிரிவுகளில் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது அரசு. இப்போராட்டத்துக்கு ஆதரவு அளித்த அமைப்புகள், கட்சிகளும்கூட மாணவர்களுக்குத் தேர்வு நேரம் என்பதால், போராட்டத்தை முடித்துக்கொள்ள வலியுறுத்தின. நேற்று முன்தினம், ஜாக்டோ ஜியோ அமைப்பின் பொறுப்பாளர்கள், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இந்த நிலையில், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை அழகுராணி தன் மகன்களுக்கு மொட்டை அடித்து, தன் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை அறிந்து அவரிடம் பேசினேன். 

``நான் தேனி மாவட்டத்தில், சின்ன கிராமத்தில் பிறந்து, படித்து ஆசிரியர் பணியை நேசித்து வேலைக்கு வந்தேன். தேனியிலேயே ஐந்தரை ஆண்டுகள் குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்த்தேன். இப்போது, தாராபுரம் பெத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன். நானும் தலைமை ஆசிரியரும் மட்டுமே பணிபுரியும் ஈராசிரியர் பள்ளி. எப்போதுமே கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுக்க நான் தயங்கியதே இல்லை. அருகில் இருக்கும் மாவட்டங்களுக்குச் செல்வது மட்டுமல்ல, சென்னையில் நடக்கும் போராட்டங்களிலும் கலந்துகொண்டிருக்கிறேன். இப்போதும் சரி, முந்தைய அரசாக இருந்தபோதுமே. அப்படித்தான், எங்கள் சங்கத்தின் அறிவிப்பின் பேரில், இம்மாதம் 22-ம் தேதி தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் முழு ஈடுபாட்டோடு கலந்துகொண்டேன். சங்கத்தின் அறிவிப்புகளை ஏற்று நடந்துகொண்டிருந்தேன். செவ்வாய்க் கிழமை வரை என் நிலை அப்படியேதான் இருந்தது. அடுத்த நாள், எங்கள் பகுதி ஆசிரியர்கள் பணிக்குத் திரும்புவதாகக் கேள்விப்பட்டு, நானும் பணிக்குத் திரும்பினேன். வெற்றி, தோல்வி என்பதெல்லாம் இதைப் பார்க்கவில்லை. போராட்டம் என்றால் எல்லாமும்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

பணிக்குத் திரும்பினாலும், போராட்டத்தில் ஈடுபட்டு சிறையிலும் நடவடிக்கைகளிலும் பாதிக்கப்பட்ட சக ஆசிரியர்கள் பற்றி நினைவே என் மனதில் நிறைந்திருந்தது. அதனால், என்னுடைய இயல்பான வேலைகளைக்கூடச் செய்ய முடியவில்லை. என் கணவர் மற்றும் பிள்ளைகளின் அனுமதியுடன் ஒரு முடிவெடுத்தேன். சிறையில் இருக்கும் நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கஷ்டத்தில் நாங்கள் பங்கு பெறுகிறோம் என்பதை வெளிக்காட்டும் விதமாக, என் மகன்களுக்கு மொட்டை அடித்தோம். என் மூத்த மகன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். சின்ன பையனுக்கு இரண்டு வயதாகிறது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட உறவினர்கள் எனக்கு போன் பண்ணும்போது, அவர்களிடம் பேசும் என் பிள்ளைகள் 'எங்களுக்கு வருத்தமில்லை; சந்தோஷமாகத்தான் இருக்கிறோம். அம்மாவுக்காகத்தான் மொட்டை அடிச்சுகிட்டோம்' எனத் தைரியமாகப் பேசுகிறார்கள்.

எங்களுடைய நண்பர்கள் பலரும் நேற்று இரவுதான் ஜாமினில் வெளியே வந்தார்கள். அவர்களைப் போல தமிழகம் முழுவதும் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்களோ... அவர்களின் குடும்பம் இதை நினைத்துக் கஷ்டப்படும் இல்லையா... அதில் நாங்களும் பங்கு பெறுகிறோம் என்பதைக் காட்டும் விதமான ஓர் அடையாளம்தான் இது. ஆசிரியர்களின் ஒற்றுமையை எல்லோருக்கும் வெளிக்காட்டும் விதமாக இதைப் புரிந்துகொண்டால் மகிழ்ச்சி" என்கிறார் ஆசிரியை அழகுராணி.