Published:Updated:

``தூக்கம் வந்தா பெட்ல போய் படுங்க'ன்னு சொன்னேன். ஆனா, அவர்கிட்ட எந்தப் பதிலும் இல்ல'' - பேராசிரியை இளம்பிறை மணிமாறன்

``அவரோட உடம்பைக் குளிப்பாட்டும்போது, அவருடைய சட்டை பாக்கெட்டில் ஒரு பேப்பரை மடிச்சு வைச்சிருந்ததைப் பார்த்துட்டு, எடுத்து என்கிட்ட கொடுத்தாங்க. அதில் என்ன எழுதியிருந்தது தெரியுமா?''

``தூக்கம் வந்தா பெட்ல போய் படுங்க'ன்னு சொன்னேன். ஆனா, அவர்கிட்ட எந்தப் பதிலும் இல்ல'' - பேராசிரியை இளம்பிறை மணிமாறன்
``தூக்கம் வந்தா பெட்ல போய் படுங்க'ன்னு சொன்னேன். ஆனா, அவர்கிட்ட எந்தப் பதிலும் இல்ல'' - பேராசிரியை இளம்பிறை மணிமாறன்

ல வருடங்களாக இலக்கியம் மற்றும் ஆன்மிக வட்டாரங்களில் `இளம்பிறை மணிமாறன்' என்றே நமக்கு அறிமுகமாகி இருந்த அந்தப் பெயரில், மணிமாறன் என்ற ஒரு பாதி மரணித்துவிட்டது என்ற செய்தியை ஒரு வாரத்துக்கு முன்னால் கேள்விப்பட்ட போது, நடு நெஞ்சில் துக்கம் பந்தாக எழுந்ததை கன்ட்ரோல் செய்யவே முடியவில்லை. வெற்றி பெற்ற பெண்களின் பின்னால் அதற்குக் காரணமாக இருக்கிற ஆண்கள் இங்கே அபூர்வம். அப்படியொரு அபூர்வ மனிதர்தான் மணிமாறன். மனைவி பேராசிரியை இளம்பிறையின் ஆன்மிகச் சொற்பொழிவு, இலக்கியச் சிந்தனை, எழுத்து, பட்டிமன்றப் பேச்சு என அத்தனை திறமைகளுக்கும் ஒற்றை முதுகெலும்பாக 43 வருடங்கள் உறுதியாக நின்றிருந்தவர் மணிமாறன்தான். இணையை இழந்த அன்றில் பறவையின் துக்கத்துடன் ஒடுங்கிப் போயிருந்த இளம்பிறை அவர்களிடம் பேசினோம். 

(ஃபைல் படம்)

``பார்த்துக்கொண்டிருந்த அரசாங்க வேலையை எனக்கு உறுதுணையா இருக்கணும் என்ற காரணத்துக்காக ரிசைன் செய்துவிட்டு, சொந்தத் தொழில் ஆரம்பித்தவர் அவர். நான் வெளியூர்களில் சொற்பொழிவாற்றப் போகும்போதெல்லாம் கூடவே வருவார். சொற்பொழிவு முடிச்சிட்டுச் சென்னைக்குத் திரும்பும்போது, மறுநாள் நான் வேலைக்குப் போகணும் என்பதால், என்னைத் தூங்க வைச்சுட்டு, அவர் இரவெல்லாம் கண் விழித்தபடியே டிரைவர்கிட்ட பேசிக்கிட்டு வருவார். நாங்க ரெண்டு பேருமே தூங்கிட்டா டிரைவருக்கும் தூக்கம் வந்துடும் என்பதால் இப்படிச் செய்வார். அவரில்லாத இந்த ஒரு வாரத்துல யோசிச்சுப் பார்த்தா, அவர் எனக்காகவே வாழ்ந்திருக்கிறார்னு புரியுது. மரணமடையும்போது அவருக்கு 71 வயசு. எங்களுடைய திருமணத்துக்கு 43 வயசு. இத்தனை வருடங்களில் அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லைம்மா. தவறு செய்கிற மனிதர்களைக்கூட, `பாவம் அவனுக்கு என்ன சூழ்நிலையோ... அப்படி செஞ்சுட்டான்' என்றுதான் சொல்வார். அவர் இயல்பு அப்படி'' என்றவர் சம்பவம் நடந்த நாளை மெல்லிய குரலில் நினைவுகூர ஆரம்பித்தார். 

``அவரு ஹாஸ்பிட்டல் போனதே இல்லை. அந்தளவுக்கு ஆரோக்கியமா இருந்தவர்தான். கடந்த சில வருடங்களாக கடுமையான தலைவலி வந்த பிறகு நிலைமையே மாறிடுச்சு. ஏதோ நரம்புலப் பிரச்னை இருக்குதுன்னு ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க டாக்டர்ஸ். அதற்கப்புறம் நல்லாதான் இருந்தார். போன வாரம் வியாழக்கிழமை நடுபகல் ஒரு மணி இருக்கும். அந்த நேரத்துல காபி கேட்டு வாங்கி குடிச்சிட்டு சேரில் சாய்ந்து உட்கார்ந்துக்கிட்டு இருந்தார். அவர் சோர்வாக இருக்கிறார்னு நினைச்சுக்கிட்டு, `தூக்கம் வந்தா பெட்ல போய் படுங்கப்பா'ன்னு சொன்னேன். ஆனா, அவர்கிட்ட இருந்து எந்தப் பதிலும் இல்லை. பயந்துட்டு உடனே டாக்டருக்கு போன் பண்ணினேன். அவர் வந்து பார்த்துட்டு, `சார் நம்மளை விட்டுப் போய் கால் மணி நேரம் ஆயிடுச்சும்மா' என்றார்'' - இந்த இடத்தில் இளம்பிறை அவர்களின் குரல் துக்கத்தில் நடுங்க ஆரம்பித்துவிட்டது. சில ஆறுதல் வார்த்தைகளுக்குப் பிறகு தன்னைத் தேற்றிக்கொண்டு தன் கணவர் பற்றி அவர் சொன்ன தகவல்கள், இதுவரை மணிமாறன் குறித்து நாம் அறியாதவை.

``அவருக்கு ஜோதிடக் கலை மேலே ரொம்ப இன்ட்ரஸ்ட் இருந்தது. அதுவும் அவர் இயற்பியல் படிச்சவர் என்பதால், கிரகங்களை அறிவியல்பூர்வமா அணுகுவார். இந்த முறையில் நிறைய பேருக்கு ஜோதிடமும் பார்த்திருக்கார். அவரோட மரணத்தைக்கூட முன்கூட்டியே கணிச்சிருக்கார் என்றால் பார்த்துக்கோங்க. அவரோட உடம்பைக் குளிப்பாட்டும்போது, அவருடைய சட்டை பாக்கெட்டில் ஒரு பேப்பரை மடிச்சு வைச்சிருந்ததைப் பார்த்துட்டு, எடுத்து என்கிட்ட கொடுத்தாங்க. அதில் என்ன எழுதியிருந்தது தெரியுமா? `நான் ஒரு குருவாரத்துல (வியாழக்கிழமை)தான் இறப்பேன். அப்படி இறந்தவுடனே என் உடம்புக்கு அன்னிக்கே எல்லா காரியங்களையும் பண்ணிடுங்க. மறுநாள் வரைக்கும் என் உடம்பை வீட்டில் வைச்சிருக்கக் கூடாது'ன்னு எழுதி வைச்சிருந்தார். 

அதே மாதிரி வியாழன் நண்பகல் அவர் இறந்தார். அவர் விருப்பப்பட்ட மாதிரியே மாலை 6 மணிக்குள்ள அவருக்கான எல்லா காரியங்களையும் செஞ்சு முடிச்சிட்டோம். எங்க சொந்தக்காரங்க அத்தனை பேரும் சென்னையிலேயே இருந்ததால், யாருக்காகவும் நாங்க காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போயிடுச்சு. இதையெல்லாம்விட முக்கியமான விஷயம், அவர் இறந்ததுக்கு மறுநாள் தை வெள்ளி. பெண்களுக்கு விசேஷமான நாள். அந்த நாளில் யாருக்கும் கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னுதான் அதுக்கு முந்தைய நாளே கிளம்பியிருக்கார். தன்னோட மரணத்தை முன்கூட்டியே அவர் தெரிஞ்சு வைச்சிருக்கார்'' என்றவர், குரல் உடைந்து கணவர் நினைவில் கண்ணீர்விட ஆரம்பித்தார். யாதுமாகி நின்ற வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மட்டுமே அந்தக் கண்ணீரின் வலி புரியும்.