Published:Updated:

``பச்சைத் தண்ணிதான் எனக்குச் சாப்பாடு!" - குழந்தைகளுடன் நிர்க்கதியாக நிற்கும் சசிகலா

``பச்சைத் தண்ணிதான் எனக்குச் சாப்பாடு!" - குழந்தைகளுடன் நிர்க்கதியாக நிற்கும் சசிகலா
``பச்சைத் தண்ணிதான் எனக்குச் சாப்பாடு!" - குழந்தைகளுடன் நிர்க்கதியாக நிற்கும் சசிகலா

"100 நாள் வேலைக்குப் போறது ஒண்ணுதான் எனக்கு ஏதோ சொற்ப வருவாய் தருது. அதுவும் தொடர்ச்சியா கிடைக்காது. அதனால், எங்க வேலைக்குக் கூப்பிட்டாலும் போறேன். நடந்தேதான் அங்கெல்லாம் வேலைக்குப் போவேன்."

ன்றைய சூழ்நிலையில் கணவர் உள்ளிட்ட ஏராளமான உறவுகளின் ஆதரவும், அரவணைப்பும் இருந்தாலுமே இந்த உலகம், சாதாரண, நடுத்தரக் குடும்பத்தில் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் போராடித்தான் குடும்பத்தைக் கடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், கணவரையும், மாமியாரையும் ஒரே வருடத்தில் இழந்துவிட்டு, மாமனார் தயவில் நான்கு குழந்தைகளுடன் வசித்த ஒரு பெண், மாமனாரையும் இழக்க நேரிட்டால் என்ன நடக்கும்?. ஒரு கண்ணில் மட்டுமே பார்வை உள்ள பெண் என்றால், அந்தப் பெண்ணுக்கு இந்த உலகம் எவ்வளவு பயத்தை உருவாக்கும்? கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான சசிகலா என்ற பெண்ணின் வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது.

``எனக்கு ஒரு கண்ணுலதான் பார்வை. இரண்டு பெண், இரண்டு ஆண் என நான்கு பிள்ளைங்க. எங்களுக்குன்னு காணி நிலம் கூட கிடையாது. `நான் இருக்கேன்.. உன் குடும்பப் பாரத்தைச் சுமக்கன்னு' நம்பிக்கையா ஆறுதல் வார்த்தைகள் சொல்ல, எங்களுக்குன்னு எந்த உறவுகளும் இல்லை. 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கூலி வேலைக்குப் போறேன். அதுல, கிடைக்குற சொற்ப வருமானத்தைக் கொண்டுதான், நாங்க அஞ்சு உசிரும் மூணு வேளை கஞ்சி குடிக்கிறோம். பலநாள்களில் என் நிலைமைய நினைச்சு, ராத்திரி முழுக்க கொட்ட, கொட்ட முழிச்சுக்கிட்டு அழுதுகிட்டு இருந்திருக்கேன்" என்று தன் வாழ்க்கை நிலைமையை வார்த்தை வழியாகக் கடத்துகிறார் சசிகலா.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் தெற்கு அய்யம்பாளையம்தான் சசிகலா வசிக்கும் கிராமம். ஒன்பதாவது படிக்கும் ஜீவிதா, ஆறாவது படிக்கும் கார்த்திகா, இரண்டாம் வகுப்பு படிக்கும் இரட்டையர்களான ராம்ஜித், லட்சித் என்று நான்கு பிள்ளைகள். அவர்களை முன்பு தன் கஷ்டத்தைப் பேசக் கூடாது என்பதற்காக, பிள்ளைகளை தூர அனுப்பிவிட்டு, லேசான விசும்பலோடு மீண்டும் தொடர்கிறார் சசிகலா. 

``நான் சின்ன பிள்ளையா இருந்தபோது, விளையாண்டப்ப, என் இடது கண்ணுல கண்ணாடி கிளாஸ் குத்தினதுல ஒரு கண் பார்வை போச்சு. பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தங்கவேல் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். நாங்க ஊர்ல இருந்தோம். அவர் கோயம்புத்தூர்ல தங்கி, மில்லுல வேலை பார்த்துக்கிட்டு இருந்தார். பெருசா அவருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. அதனால், சம்பளம் முழுவதையும் எங்கிட்டக் கொண்டுவந்து கொடுத்திருவார். ஆனா, அஞ்சு வருசத்துக்கு முன்னாடி, அவருக்குச் சர்க்கரை நோய் வந்து உடல்நிலை பாதிக்கப்பட்டது. இடது காலில் புண் ஆறாம, விரல்கள எடுக்க வேண்டிய நிலைமை. ஆனா, அந்த நிலைமையோட எங்க பேச்சைக் கேட்காம மீண்டும் வேலைக்குப் போனார். அவருக்குப் பிரச்னை அதிகமாகி, திண்டுக்கல் மருத்துவமனையில் சேர்த்தோம். 2014-ம் ஆண்டு இறந்து போயிட்டார். எங்களுக்குப் பேரிடி. குடும்பத் தலைவர் இல்லைன்னா என்னென்ன பிரச்னை வருமோ அதெல்லாம் ஒவ்வொண்ணா எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அதனால, நூறு நாள் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.

கணவர் இறந்த அதே வருஷத்துல என்னோட மாமியாரும் இறந்து போயிட்டாங்க. வாழ்க்கையே சூன்யமாகி போனது. என்மீது விழுந்த குடும்பச் சுமை இன்னும் அதிகமாயிடுச்சு. இருந்தாலும், என் மாமனார் சுப்பிரமணியன், கிடைக்கிற வேலைக்குப் போய், குடும்பப் பாரத்தை ஓரளவுக் குறைத்தார். கடந்த இரண்டு வருஷமா அவருக்கு உடம்புக்கு முடியாமபோய், அதுக்காக கடன் வாங்கிச் செலவு பண்ணினேன். `பொம்பளப் புள்ளைங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் காட்சி நடக்குற வரைக்காச்சும் அவர் உயிரோட இருக்கணும்'ன்னு எல்லா சாமிக்கிட்டயும் வேண்டிக்கிட்டேன். என் மாமனாரும் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இறந்துட்டார். நிரந்தர வருமானம்னு ஏதும் இல்லை. சேமிப்பும் ஏதுமில்லை. மூணு வேளை சாப்பாட்டிற்கே ரொம்பக் கஷ்டப்படுற நிலைமைதான். எதை வெச்சு ரெண்டு பொம்பளைப் புள்ளைங்களயும் கட்டிக்கொடுக்கப் போறேன்னு மலைப்பா இருக்கு. 

100 நாள் வேலைக்குப் போறது ஒண்ணுதான் எனக்கு ஏதோ சொற்ப வருவாய் தருது. அதுவும் தொடர்ச்சியா கிடைக்காது. அதனால், எங்க வேலைக்குக் கூப்பிட்டாலும் போறேன். நடந்தேதான் அங்கெல்லாம் வேலைக்குப் போவேன். தவிர, உள்ளூர்ல தினமும் மக்கள்கிட்ட பாலைச் சேகரிச்சு வச்சு, ஒரு தனியார் கம்பெனி வேன் வரும்போது, ஏத்திவிடணும். இதுக்கு மாசம் 1500 சம்பளம் தர்றாங்க. 100 நாள் வேலைக்குப் போறதுல மாசம் 3000 வரை கிடைக்கும். இதுதான் வருமானம். மழைக்காலத்துல அதுவும் கிடைக்காது. பலநாள் என் பிள்ளைங்களுக்குக் கிடைக்கிறத வச்சு சாப்பிட வச்சுட்டு, நான் வெறும் பச்சத் தண்ணிய குடிச்சுட்டு ஒப்பேத்துறேன். என் பிள்ளைங்கள என்ன பாடுபட்டாவது ஆளாக்கிடணும்ன்னு  கிடைக்கிற வேலையைச் செய்றேன். நான் ஆதரவற்ற விதவைன்னு சான்றிதழ் வாங்கி வச்சுருக்கேன். பன்னிரண்டாவது வரை படிச்சுருக்கேன். அரசாங்கம் ஏதாவது வேலை போட்டுக் கொடுத்தா, எங்க வாழ்க்கைல ஒளி பிறக்கும் இ்வ்வளவு கஷ்டத்தையும் எதிர்கொண்டு, வாழ்க்கைய எதிர்நீச்சல் போட்டுக் கடத்திக்கிட்டு இருக்கேன்" என்று முடித்தபோது, அவரி்ன் கண்களில் ஆயிரம் நம்பிக்கை மின்னல்கள்!

கடவுளுக்குதான் கண் இல்லை:ஆனால், உங்கள் மனதில் ஆயிரம் நம்பிக்கைகள். கஷ்டங்களை கடந்து, பீடுநடை போடுங்கள் சகோதரி!

அடுத்த கட்டுரைக்கு