தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நீங்களும் ஆகலாம் - ஐ.ஏ.எஸ்!

நீங்களும் ஆகலாம் - ஐ.ஏ.எஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீங்களும் ஆகலாம் - ஐ.ஏ.எஸ்!

வழிகாட்டி வைஷ்ணவி சங்கர்

.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ், குரூப்-ஏ மற்றும் குரூப்-பி போன்ற பணியிடங்களுக்காக நடத்தப்படும் இந்தியக் குடிமைப் பணி (Union Public Service Commission) தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, ஒன்பது லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் இந்த ஆண்டு அதைவிட அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பெண்கள் இந்தியக் குடிமைப் பணி தேர்வுகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கான அவசியம் மற்றும் அதற்கான வழிகாட்டல்களைச் சொல்கிறார், சென்னை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் வைஷ்ணவி சங்கர்.

நீங்களும் ஆகலாம் - ஐ.ஏ.எஸ்!

“பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மொத்த விண்ணப்பதாரர்களில் பெண்களின் எண்ணிக்கை 30% மட்டுமே. விண்ணப்பித்த பெண்களில் முதன்மைத் தேர்வை 40% பேர் மட்டுமே எழுதுகின்றனர். அவர்களில்  2% - 3% பெண்கள் மட்டுமே நேர்முகத்தேர்வு வரை சென்று வெற்றி பெறுகின்றனர். மற்ற துறைகளையெல்லாம்விட குடிமைப்பணிகளில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதற்கு, தேர்வுக்குத் தயாராக எடுத்துக்கொள்ளும் கால அளவு, திருமண வயதால் குடும்பத்தில் கொடுக்கப்படும் நிர்பந்தங்கள், வெளி மாநிலங்களில் பணிபுரிவதில் வரும் தயக்கம், தேர்வு குறித்த சரியான விழிப்புணர்வின்மை, பொருளாதாரச் சூழல் இப்படிப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றையெல்லாம் களைய அவர்கள் முன்வர வேண்டும்.

குடிமைப்பணித் தேர்வின் மூலம் நிரப்பப்படும் பணியிடங்கள்

பலரும், யு.பி.எஸ்.சி தேர்வு என்பது ஐ.ஏ.ஏஸ் பணிக்கான தேர்வு என்றே எண்ணுகின்றனர். உண்மையில் இது, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட 24 பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வு.

தேர்வு முறை

குடிமைப் பணிகளுக்கான தேர்வானது முதன்மைத்தேர்வு, எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படும். ஒவ்வொரு கட்டத் தேர்விலும் வெற்றிபெறுபவர்களே அடுத்தடுத்த கட்டத் தேர்வு களை எழுத முடியும். ஒவ்வொரு தேர்வுக்கும் குறைந்தது 45 நாள்கள் இடைவெளி இருக்கும்.

முதன்மைத்தேர்வு

ஒரே நாளில் காலை இரண்டு மணி நேரம், மதியம் இரண்டு மணி நேரம் என மொத்தம் நான்கு மணி நேரம் தேர்வு நடைபெறும். காலையில் நடத்தப்படும் தேர்வில் வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், நடப்புச் செய்திகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட கேள்விகள் கேட்கப்படும். சரியான விடையைத் தேர்வுசெய்யும் அப்ஜெக்டிவ் வகையில் வடிவமைக்கப்பட்ட 100 வினாக்களுக்கு 200 மதிப்பெண் என்ற முறையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டிருக்கும். தவறாக எழுதும் ஒவ்வொரு வினாவுக்கும் 0.66 நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும். முதன்மைத் தேர்வைப் பொறுத்தவரை 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மெட்ரிக், சி.பி.எஸ்.சி புத்தகங்களைப் படித்தால் போதுமானது.

மதியம் நடைபெறும் தேர்வில் 200 மதிப் பெண்ணுக்கு ஆப்டிட்யூட் வினாக்கள் கேட்கப்படும். இதிலும் தவறாக எழுதும் ஒவ்வொரு வினாவுக்கும் 0.66 நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும். மதியம் எழுதும் ஆப்டிட்யூட் பேப்பர்தான் முதலில் திருத்தப்படும். இதில் 67 மதிப்பெண் பெறுபவர்களே தேர்ச்சிப் பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்கு மட்டுமே காலை எழுதிய தேர்வின் வினாத்தாள் திருத்தப்பட்டு, மெயின் தேர்வு எழுத மதிப்பெண் பட்டியலிடப்பட்டு, அடுத்தகட்டத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மெயின் தேர்வு

நான்கு ஜெனரல் பேப்பர், தமிழ், ஆங்கிலம், ஆப்ஷனல், எஸ்ஸே ரைட்டிங் என மொத்தம் ஒன்பது பேப்பர்கள். காலை, மதியம் என ஐந்து நாள்கள் நடத்தப்படும் தேர்வில், ஒவ்வொரு பேப்பருக்கும் மூன்று மணி நேரம் வழங்கப்படும். ஒன்பது பேப்பரையும் சேர்த்து மொத்தம் 1,750 மதிப்பெண்ணுக்குத் தேர்வு நடத்தப்படும். மொழிப் பாடங்களான தமிழ், ஆங்கிலம் தாள்கள்தான் முதலில் திருத்தப்படும். அதில் 25% மதிப்பெண் எடுத்தவர்களின் விடைத்தாள்கள் மட்டுமே மற்ற பாடங்களுக்கும் திருத்தப்படும். ஆப்ஷனல் பேப்பரில், விருப்பப்பாடமாக எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.

இன்டர்வியூ

மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 45 நாள்கள் கழித்து நேர்காணல் நடத்தப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது நீங்கள் கொடுத்த உங்களுடைய பர்சனல் ரெஸ்யூமில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இது மொத்தம் 275 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். மெயின் தேர்வு, இன்டர்வியூவில் நீங்கள் எடுத்த மொத்த மதிப்பெண்ணைச் சேர்த்து ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். காலிப் பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ரேங்க் பட்டியலில் முதலில் இருக்கும் நபர்கள் பயிற்சிக்குப் பின் குடிமைப் பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.

தயார் செய்யும் முறை

*குடிமைப் பணித் தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் இரண்டாம் ஆண்டிலிருந்தே முதன்மைத் தேர்வுக்கு உங்களைத் தயார்படுத்தத் தொடங்கலாம்.

*நீங்கள் முடித்த பட்டப்படிப்புடன் தொடர்புடைய ஆப்ஷனல் பேப்பரைத்தான் மெயின் தேர்வில் தேர்வு செய்ய வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை.

*24 மணி நேரமும் படித்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற எண்ணத்தை உடைத்து, படிக்கும் நேரத்தில் தெளிவாகவும் ஆழமாகவும் படியுங்கள்.

*அவ்வப்போது மாதிரித் தேர்வுகள் எழுதிப்பார்ப்பது அவசியம்.

*முதன்மைத் தேர்வில் தேர்வாகி மெயின் தேர்வில் தோற்றால், அடுத்தமுறை மீண்டும் முதன்மைத் தேர்வில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

*ஒரே அட்டெம்ப்ட்டில் தேர்வாவது ஒருவரின் திறமையைப் பொறுத்தது. தவறுபவர்கள் நம்பிக்கை யோடு அடுத்தடுத்து முயலுங்கள்.

*வீட்டிலிருந்தே தயார் செய்தாலும், அறிவும் திட்ட மிடலும் கடின உழைப்பும் இணைந்தால் நீங்களும் வெற்றியாளர்தான்.

வாழ்த்துகள்!

- சு.சூர்யா கோமதி