தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

எதிர்க்குரல்: ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன வேறுபாடு?

எதிர்க்குரல்: ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன வேறுபாடு?
பிரீமியம் ஸ்டோரி
News
எதிர்க்குரல்: ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன வேறுபாடு?

தாராபாய் ஷிண்டேஓவியம் : கார்த்திகேயன் மேடி

1800 முடிவில் சூரத்துக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்துக்கு உள்ளூர் காவலர் ஒருவர் அனுப்பிவைக்கப்பட்டார். சிறிது காலமாக அந்தப் பகுதியிலிருந்து திபுதிபுவென்று ஒரு வதந்தி கிளம்பி ஊரைத் தாண்டி வேக வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. விஜயலஷ்மி என்னும் 24 வயது பெண் கர்ப்பமடைந்திருக்கிறார் என்பதுதான் வதந்தி. தன் கணவனை இழந்து ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு பெண் கர்ப்பமடைவதைக் காட்டிலும் மேலதிக தீமை இந்த உலகில் நடந்துவிடுமா, என்ன? இதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காக அந்தக் காவலர் அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். நேரில் சென்று பார்த்து, `இது வதந்தியல்ல, உண்மைதான்' என்னும் தகவலை அவர் மாவட்ட நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தார்.

எதிர்க்குரல்: ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன வேறுபாடு?

மார்ச் 1881-ல் அதே கிராமத்தில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது அந்த வழக்கைத் துப்புத் துலக்கவேண்டிய அவசியமே ஏற்படவில்லை. விஜயலஷ்மியை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றி சூரத்துக்குக் கொண்டுசென்றது காவல் துறை. `ஆம், சமையலறை கத்தியைக் கொண்டு நான்தான் என் குழந்தையைக் கொன்றேன்' என்று ஒப்புக்கொண்டார் விஜயலஷ்மி. என் குழந்தை என்னைப் போலவே அவமானத்தால் மெள்ள மெள்ள சாகடிக்கப்படுவதை என்னால் பார்க்க இயலாது. அடுத்த மாதம் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது விஜயலஷ்மி ஒரு விவாதப் பொருளாக மாறியிருந்தார். மும்பைக்கு வழக்கு கொண்டுசெல்லப் பட்டபோது அங்கு எழுந்த எதிர்ப்பலைகள் காரணமாக மரண தண்டனை கைவிடப்பட்டு, விஜயலஷ்மி நாடு கடத்தப்பட்டார்.

தாராபாய் ஷிண்டே எழுதவந்த பின்னணி இதுதான். 1850-ம் ஆண்டு பெரார் மாகாணத்தில் (இன்றைய மகாராஷ்டிரா) பிறந்தவர் தாராபாய். நான்கு மகன்கள் இருந்தாலும் தன் மகளான தாராபாய்மீது அன்பும் கவனமும் செலுத்தி வளர்த்தார் பாபுஜி ஹரி ஷிண்டே. பெண்களுக்கான பள்ளி எதுவும் இல்லை என்பதை ஒரு குறைபாடாகக் கொள்ளாமல் தாராபாய்க்கு மராத்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்பித்ததோடு கூடுதலாக நிறைய நூல்கள் படிக்கவும் ஊக்கமளித்தார் அவர். மற்ற தந்தையர்களைப் போலில்லாமல் இப்படி அவர் இருந்ததற்குக் காரணம் ஜோதிபா புலே நடத்திவந்த ‘சத்யஷோதக் சமாஜ்’ என்னும் இயக்கத்தின் உறுப்பினராக இருந்ததுதான். அப்போதைய வழக்கப்படி தாராபாய்க்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்து முடிந்துவிட்டது. இருப்பினும், வழக்கத்துக்கு விரோதமாக, புகுந்த வீட்டில் கட்டுண்டு கிடப்பதற்கு மாறாக, தன் கணவருடன் இணைந்து தந்தையின் வீட்டிலேயே வசித்துவந்தார் தாராபாய்.

விஜயலஷ்மி குறித்து தாராபாய் அறிந்து கொள்ள நேர்ந்தது அப்போதுதான். ஒரு பழைமைவாத பத்திரிகையொன்றில் விஜயலஷ்மியைக் காட்டமாக விமர்சித்து எழுதப்பட்ட சில கட்டுரைகளை தாராபாய் வாசித்தார். ‘காலம் ரொம்பவே கெட்டுவிட்டது; பாருங்கள் விதவைகளுக்கெல்லாம் குழந்தை பிறக்கிறது’ என்னும் அங்கலாய்ப்போடு வந்திருந்த கட்டுரைகள் தாராபாயைக் கொதிப்படையச் செய்தன. பெண்களின் ‘ஒழுக்கம்’, ‘நடத்தை’ ஆகியவற்றைப் பற்றிய குதர்க்கமான விளக்கங்கள் அவரை வருத்தமடையச் செய்தன. ‘தவறிழைக்கும் பெண்’, ‘ஆண்களை வசியம் செய்யும் பெண்’, ‘முற்றும் துறந்த முனிவர்களையும் சபலத்துக்கு ஆட்படுத்தும் பெண்’, ‘ஆசைகளை அடக்கிக்கொள்ளத் தெரியாத பெண்’ போன்ற சொற்றொடர்கள் நச்சு அம்புகளாகப் புறப்பட்டுவந்து தாராபாயைத் தாக்கின.

எதிர்க்குரல்: ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன வேறுபாடு?

எது இவர்களை  இப்படியெல்லாம் பிதற்ற வைக்கிறது? விஜயலஷ்மி இப்படியொரு நிலைக்குத் தள்ளப்படவேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டது என்பதை ஏன் ஒருவரும் ஆராய விரும்பவில்லை? கணவனை இழந்த ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? மறுமணம் செய்துகொண்டால் அவள் சமூகத்தின் விதிகளை மீறிவிடுகிறாள். கணவனின் உறவினர்களால் வேட்டையாடப்பட்டு, கர்ப்பம் அடைந்துவிட்டால் அவள் ‘நடத்தை தவறியவளாக’ ஆகி
விடுகிறாள். எனக்குத் தெரிந்து தனிமையில் கிடக்கும் பல பெண்கள் இப்படிச் சுரண்டப்பட்டிருக்கிறார்கள். தங்களுக்கு நேர்ந்ததை வெளியில் சொன்னால் சமூகம் சுட்டெரித்துவிடும் என்று அவர்களுக்குத் தெரியும். எப்படியும் அவள் சொல் அம்பலம் ஏறப்போவதில்லை. என்ன கதறினாலும் குற்றம் அவளுடையது மட்டும்தான். இந்தப் பழிபாவத்துக்கு அஞ்சி அவள் எல்லா அவமானங்களையும் உள்ளுக்குள் போட்டுப் புதைத்துக்கொள்ள வேண்டும். விஜயலஷ்மிக்கு நடந்ததும் இதுதானா? பாவத்தைப் புதைத்துக் கொள்ளலாம். குழந்தையை என்ன செய்வது? இந்தக் கேடுகெட்ட சமூகத்தின் கோரப் பிடியிலிருந்து தன் குழந்தையைக் காப்பாற்றும் பொருட்டுதான் அவள் கொலை செய்யத் துணிந்தாளா?

விஜயலஷ்மிக்கு என்ன நடந்திருக்கிறது என்பதை இந்தப் பத்திரிகைகள் ஒருபோதும் பேசப் போவதில்லை. விஜயலஷ்மிகளின் தவறுகள் மட்டும்தான் இவர்கள் கண்களுக்குத் தெரியும். ஏனென்றால், இந்தப் பத்திரிகைகள் ஆண்களின் கைகளால் எழுதப்படுபவை; ஆண்களின் மூளைகளால் சிந்திக்கப்படுபவை; ஆண்களின் கண்களால் வாசிக்கப்படுபவை.

பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக நடத்தப்படும் பத்திரிகையொன்றும் 1877-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, மகாராஷ்டிராவில் நடத்தப்பட்டுவந்ததை தாராபாய் அறிவார். `பெண் குழந்தைகளுக்குக் கல்வி வேண்டும், கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்ள வேண்டும், சதி ஒழிக்கப்பட வேண்டும்' போன்ற முழக்கங்களுடன் கூடிய கட்டுரைகள் அதில் வெளிவருவதை அவர் கண்டிருக்கிறார். ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாத நிலையில் இந்தச் சொற்களெல்லாம் எப்படிப் பெண்களின் காதுகளை அடையப் போகின்றன? தவிரவும், சூழலின் அவசியத்தைப் புரிந்துகொள்ளாமல் மிக மிக மிருதுவாக, மிக மிக மென்மையாக அல்லவா இந்தப் பெண்கள் பத்திரிகை பேசிக்கொண்டிருக்கிறது?

நாம் உண்மையில் எதைப் பற்றிப் பேச வேண்டும் தெரியுமா? பெண்களைப் பொது வெளியில் கீழ்த்தரமாக விமர்சிக்கும் உரிமை எப்படி ஆண்களிடம் சென்று சேர்ந்தது? இந்த ஏகபோக உரிமை அவர்களிடம் இன்னமும் இருந்ததாக வேண்டுமா? இந்தச் சமூக அமைப்பு ஏன் அதன் இயல்பிலேயே பெண்களுக்கு எதிரானதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது? `ஏ ஆண் சமூகமே, எங்களை ஏன் இப்படி நடத்துகிறாய்' என்று இறைஞ்சிக் கேட்கும் நிலையில் ‘அபலைப் பெண்கள்’ ஏன் இருக்க வேண்டும்? `இதை அனுமதி, அதைக் கொடு, இப்படிச் செய்யாதே' என்றெல்லாம் கை வலிக்க விண்ணப்பம் எழுதி அனுப்பி காத்திருக்கவேண்டிய துர்பாக்கிய நிலை நமக்கேன் ஏற்பட வேண்டும்? எதிர்க்குரலைக் கூடவா இப்படி மிருதுவாக ஒலிக்க விடுவது? 

வருத்தமும் கோபமும் ஆற்றாமையும் வெடித்துப் பொங்க, ‘ஸ்திரி புருஷ் துல்னா’ (ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வேறுபாடு) என்னும் முதல் மற்றும் ஒரே மராட்டிய நூலை எழுதிமுடித்தார் தாராபாய்.  பூனாவில் அச்சிடப்பட்ட அந்த 52 பக்க நூலுக்கு ஒன்பது அணா விலை வைக்கப்பட்டது. 1882-ம் ஆண்டு, வெளிவந்த இந்நூலைக் கவனமாக மீட்டெடுத்து, மொழிபெயர்த்து நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தியிருப்பவர் புகழ்பெற்ற சமூகவியல் ஆய்வாளரான, ரோஸாலிண்ட் ஓஹான்லன்.

இறை நம்பிக்கையுள்ள பெண் என்ப தால் தனது தாக்குதல் கணைகளைக் கடவுளிடமி ருந்து தொடங்கி அத்தனை ஆண்களுக்கும் விரிவுபடுத்துகிறார் தாராபாய். அவற்றிலிருந்து சில கணைகள் மட்டும் இங்கே...

•  கடவுள்களே, உங்களையெல்லாம் ஒன்று கேட்க வேண்டும். நீங்கள் எங்கும் நிறைந்திருப்பவராம், எல்லோராலும் அணுகக்கூடியவராம். பாரபட்சமற்று நடந்துகொள்வது உங்கள் இயல்பு என்கிறார்கள். எனக்குப் புரியவில்லை. நீங்கள்தானே ஆணையும் பெண்ணையும் உருவாக்கியிருக்கிறீர்கள்? ஆண்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி, பெண்களுக்குத் தீரா துயரம். இதுதானே உங்கள் படைப்பு? இதில் எங்கே இருக்கிறது பாரபட்சமற்ற நிலை?

• ஆண்களே, உங்களை நீங்களே புத்திசாலிகள் என்று அழைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக்கொள்கிறீர்கள். ஒரு வாதத்துக்கு அதை நான் ஒப்புக்கொள்வதாகவே வைத்துக்கொள்வோம். உங்கள் அறிவுக்கூர்மையைக் கொண்டு நீங்கள் உருவாக்கிய இந்த உலகில் ஏன் இத்தனை தீமைகளும் அக்கிரமங்களும் பாவங்களும் நிறைந்திருக்கின்றன? சிறைச்சாலைகளுக்குச் சென்று பார்த்தால் அங்கே ஆண்களே நிறைந்திருக்கிறார்கள். வெட்டுக் குத்து,  தகராறு, கொலை என்று எல்லாக் குற்றங்களையும் நீங்கள்தான் செய்து வைத்திருக்கிறீர்கள். உங்கள் உலகம். உங்கள் பெருமிதம். உங்கள் குற்றங்கள். பிறகு ஏனய்யா எதற்கெடுத்தாலும் பெண்களைக் குற்றம் சாட்டுகிறீர்கள்?

• பெண்களுக்குப் புத்தியில்லை என்கிறீர்கள். அவர்களுடைய புத்திக்கூர்மையை நீங்கள் எப்போது எங்கே வைத்துப் பரிசோதித்துப் பார்த்தீர் என்று சொல்லமுடியுமா? பிறந்த வீட்டில் ஒரு பூட்டு, புகுந்த வீட்டில் ஒரு பூட்டு என்று அடைத்து வைத்தால் எப்படி அவர்கள் பள்ளிக்கூடம் செல்வார்கள், படிப்பார்கள், புத்தியை வளர்த்துக்கொள்வார்கள்? பூட்டைப் போட்டு அவர்களைத் தடுத்துவிட்டு, போட்டியின்றி வெற்றி பெற்ற உங்கள் அறிவுக்கூர்மையை என்னென்பது?

• முனிவர்களும் புனிதர்களும் தேவலோக அரசர்களும் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று உங்கள் சாஸ்திரங்களை நீங்களே ஒருமுறை புரட்டிப் பார்த்தால் ஒழுக்கம் பற்றிப் பெண்களுக்கு வகுப்பெடுக்க மாட்டீர்கள். பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு உங்கள் சின்னஞ்சிறு மகளை ஒரு வயோதிகருக்குத் திருமணம் செய்துகொடுத்துவிட்டு, தர்மம் பற்றி எப்படி உங்களால் கதைக்கமுடிகிறது? உங்கள் மனைவி இன்னொரு ஆடவனை ஆசைப்பட்டு மணந்துகொண்டால் சும்மா இருப்பீர்களா? நீங்களோ இவள் என் இரண்டாவது மனைவி என்று பெருமையோடு சமூகத்துக்கு அறிமுகப்படுத்துகிறீர்கள். உங்கள் நடத்தை பற்றியெல்லாம் நாங்கள் வாயே திறக்கக் கூடாது. எனக்கு அழகான பெண் வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம். எனக்கு அழகான ஆண் வேண்டும் என்று ஒரு பெண் சொன்னால், ‘ஆசைகளை அடக்கிக்கொள்ளத் தெரியாத பெண்’ என்று ஏசுவீர்கள்.  கணவனை இழந்த பெண் செத்துவிடவேண்டும் அல்லது சாகும் வரை தனித்திருக்க வேண்டும். நீங்களோ வாரம் ஒரு திருமணம் செய்துகொள்ளவும் தயார். இதற்கிடையில் பதிவிரதைகளைக் கண்காணிக்கவும் உங்களுக்கு நேரம் இருந்திருக்கிறது, பாருங்கள்!

• `அப்படியானால் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துகொள்ளலாம் என்கிறாயா' என்று சீறிப் பாய்ந்து வராதீர்கள். `நான் ஆணுக்குச் சமம்' என்று பெண் உணர்ந்தால் போதும், வேறொன்றும் தேவையில்லை. `எனக்கும் பலம் உண்டு' என்பதை அவள் உணர்ந்தால் போதும். அந்தப் பலம் அவள் அறியாமையை, அச்சத்தை, துயரத்தைப் போக்கிவிடும். அந்தப் பலம் மட்டும் போதும் அவளுக்கு.

விஜயலஷ்மி கையிலெடுத்த ஆயுதத்தைக் காட்டிலும் தாராபாயின் ஆயுதம் கூர்மையானதாக இருந்ததால் பல்வேறு மூலைகளிலிருந்தும் இந்நூலுக்கு எதிர்ப்புகள் கிளம்பிவந்தன. முதல் 500 பிரதிகளுக்குப் பிறகு இந்நூலை அச்சிட ஒருவரும் முன்வரவில்லை. எதிர்ப்புகளையும் வசவுகளையும் மீறி அன்போடு தாராபாய் ஷிண்டேவை அள்ளி அணைத்துக்கொண்டது ஓர் ஆண் குரல். ‘தாராபாய் என் அன்பு மகளைப் போன்றவள். இந்தப் பிரசுரத்தை நான் எல்லோருக்கும் சிபாரிசு செய்வேன்’ என்றார் ஜோதிபா புலே.

-மருதன்