தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

பட்டு போன்ற மேனி!

பட்டு போன்ற மேனி!
பிரீமியம் ஸ்டோரி
News
பட்டு போன்ற மேனி!

பியூட்டி

திருமணம் என்பது வாழ்வில் மிக முக்கியத் தருணம். அன்றைய நாளில் மணமக்கள் மிளிரும் சருமமும், பிரகாசமான கூந்தலும், கச்சிதமான உடலமைப்பும் கொண்டிருக்க விரும்புவார்கள். அதற்கான பராமரிப்புகளை மேற்கொள்ள ஸ்பாக்களை நோக்கிக் கடைசி நேரத்தில் படையெடுப்பது நல்ல ரிசல்ட்டை, நீண்ட நாள்களுக்குத் தராது. 

பட்டு போன்ற மேனி!

``திருமணத்துக்குத் தயாராகும் மணமக்கள் முகூர்த்த நாளுக்கு 3 - 6 மாதங்கள் முன்னரே தயாராக வேண்டும். குறைந்தது ஆறு வாரங்களாவது முன்தயாரிப்பு தேவை. திருமணத்துக்குச் சில வாரங்களே இருக்கும் நிலையில் சிலர் அனைத்துவித சருமப் பராமரிப்புச் செய்முறைகளையும் செய்து பார்த்துவிடுவார்கள். அது மிகப்பெரிய தவறு. புதிதாக எந்த ட்ரீட்மென்ட்டையும் நிகழ்ச்சி நெருங்கும் வேளையில் முயற்சி செய்யாமல், உங்கள் சருமம் மற்றும் கூந்தலின் தன்மைக்கேற்ற பராமரிப்புகளையே மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார் டாக்டர் சைத்ரா வி.ஆனந்த், செலிபிரிட்டி காஸ்மெட்டிக் டெர்மாலஜிஸ்ட்டான இவர் மணமகள்களுக்கு அளிக்கும் அவசியமான அழகு டிப்ஸ் இங்கே...

பட்டு போன்ற மேனி!

திருமணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர்...

சரும மருத்துவரைச் சந்தித்து, உங்கள் சருமத்துக்கேற்ற  பராமரிப்புப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். சருமத்தில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை  சரும மருத்துவர் மூலம் அறிந்த பிறகு, அதைச் சரிசெய்யவேண்டிய வேலையில் இறங்குங்கள். பின்னர், சருமத்தின் தன்மைக்கேற்ப முகப்பொலிவுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள். லேசர் சிகிச்சை, பாடி ஸ்கல்ப்டிங் சிகிச்சை, மைக்ரோ டெர்மாப்ரேஷன், மசாஜ், ஃபேஷியல் போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். 

பட்டு போன்ற மேனி!

வீட்டிலேயே செய்யலாம்!

அரிசித் தவிட்டு மாவு (Rice Bran Powder): இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாக்கும் ஜப்பானியர்களின் பியூட்டி சீக்ரெட் இது. சருமத்தில் இருக்கும் அழுக்குகள், எண்ணெய்ப் பசையை நீக்கும். முகத்திலிருக்கும் தழும்புகளை மறைக்கும். ரைஸ் பிரான் பவுடரை பால் மற்றும் ஓட்ஸ் உடன் கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவவும்.  

ஒரு மாதத்துக்கு முன்னர்...

* சருமத்துக்கான மெடிஃபேஷியல் செய்துகொள்ளலாம்.  

* உங்கள் சருமப் பராமரிப்புக்கான பொருள்களில் ஃப்ரூட் என்சைம்ஸ், எண்ணெய்கள் என இயற்கைப் பொருள்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

பட்டு போன்ற மேனி!

வீட்டிலேயே செய்யலாம்!

சில துளி எலுமிச்சைச்சாற்றுடன் பால் சேர்த்து முகத்தில்  தடவவும். சில நிமிடங்கள் கழித்து, சாதாரணத் தண்ணீரில் கழுவிவிடுங்கள். வாரத்துக்கு இரண்டு முறை இப்படிச் செய்யலாம். இது சருமத்தின் இறந்த செல்களை நீக்கும். புதிய செல்களை உருவாக்குவதால் முகம் பொலிவாகும்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர்...

சருமத்தில் இருக்கும் நுண் துளைகளை மறைக்கவும், அழுக்குகளை நீக்கவும் சிறந்த சிகிச்சை... மைக்ரோ டெர்மாப்ரேஷன் (Micro Dermabrasion). இதை நிகழ்ச்சிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் செய்துகொள்ளலாம். திருமண நாள் அன்று ஃபேஷியல் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள்; ஒரு வாரத்துக்கு முன்னரே ஃபேஷியல் போன்ற முகப் பராமரிப்புச் சிகிச்சைகளை எடுப்பதை நிறுத்திவிடுங்கள்.

வீட்டிலேயே செய்யலாம்!

முகத்தை ஈரப்பதத்துடன் பாதுகாக்கும். கற்றாழையின் மேல் தோலை நீக்கிவிட்டு, முகத்தில் தேய்த்து, சில நிமிடங்கள் உலரவிட்டுக் குளிர்ந்த நீரில் கழுவவும். இது சருமத்தை மென்மையாக்கும்.

பட்டு போன்ற மேனி!

ஒரு வாரத்துக்கு முன்னர்...

ஒரு வாரத்துக்கு முன்னரே திருமணத்துக்கான சடங்குகள், நிகழ்ச்சிகள் தொடங்கிவிடும். எனவே, முகத்துக்கான சக்தியைத் தரும் மெடிஃபேஷியல் மட்டுமே போதுமானது. இது தேனிலவு வரையிலான அடுத்த மூன்று வாரங்களுக்கு முகப்பொலிவைத் தக்கவைக்கும்.

பட்டு போன்ற மேனி!

வீட்டிலேயே செய்யலாம்!

2 டீஸ்பூன் முல்தானி மட்டி, 2 டீஸ்பூன் கிராம்பு எண்ணெய், ஒரு டீஸ்பூன் சந்தனத்தூள், ஒரு டீஸ்பூன் வேப்பிலை விழுது... இவற்றை நன்கு கலந்து பரு இருக்கும் இடங்களில் மட்டும் தடவி, அப்படியே உலரவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். மன அழுத்தத்தால் பரு ஏற்பட்டிருந்தால் இது உங்களுக்குக் கைகொடுக்கும்.

மூன்று நாள்களுக்கு முன்னர்... 

அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். உப்பின் அளவைக் குறைக்கவும். குறைந்தது ஏழு மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம். ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள். அன்பு நிறைந்த சிரிப்பை எப்போதும் முகத்தில் வைத்திருங்கள். அதைவிடச் சிறந்த தெரபியோ, சிகிச்சையோ கிடையாது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.