Published:Updated:

முதல் பெண்கள்: தமிழின் முதல் இஸ்லாமியப் பெண் எழுத்தாளர், நாவலாசிரியர்

முதல் பெண்கள்: தமிழின் முதல் இஸ்லாமியப் பெண் எழுத்தாளர், நாவலாசிரியர்
பிரீமியம் ஸ்டோரி
News
முதல் பெண்கள்: தமிழின் முதல் இஸ்லாமியப் பெண் எழுத்தாளர், நாவலாசிரியர்

சித்தி ஜுனைதா பேகம்ஹம்சத்வனி, ஓவியம் : கார்த்திகேயன் மேடி

“நான் புத்தகம் எழுதிய காலத்தில் முஸ்லிம் பெண்கள் மட்டுமல்லாது, எந்தப் பெண்களிலும் நல்ல எழுத்தாளர்கள் அதிகம் இல்லை. எழுத்தாளர் மட்டுமென்ன... ஒரு முஸ்லிம் பெண்கள் பள்ளிக்கூடமும் இல்லை. சரியான ஆசிரியைகள் இல்லாத ஒரு முஸ்லிம் கோஷா பள்ளிக்கூடம் இருந்தது. இந்துக்கள் - முஸ்லிம்கள் பெரிதும் ஒற்றுமையோடு வாழ்ந்துகொண்டிருந்த அந்தக் காலத்திலேயே ஒரு முஸ்லிம் சிறுமியை, நாகூரில் இந்துக்கள் வசிக்கும் பகுதியிலிருந்த ஒரு பெண் பள்ளிக் கூடத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார்கள்.”

- சித்தி ஜுனைதா பேகம் `முஸ்லிம் முரசு’க்கு அளித்த பேட்டி. வெளியான ஆண்டு 1999.

முதல் பெண்கள்: தமிழின் முதல் இஸ்லாமியப் பெண் எழுத்தாளர், நாவலாசிரியர்

1917-ம் ஆண்டு, நாகூரில் ஷரீப் பேய்க் - முத்துக்கனி தம்பதிக்கு மகளாகப் பிறந்தார்  சித்தி. சிறு வயது முதலே எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். சரியான பள்ளிக்கூட வசதி இல்லாத காரணத்தால், மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. தன் இறுதி நாள்கள் வரை சரிவர படிக்க இயலாமல் போன வருத்தம் அவரிடம் இருந்தது. 12 வயதில் பகீர் மாலிமார் என்பவருக்குத் திருமணம் செய்துகொடுக்கப்பட்டார். கூடவே மனதுக்குப்பிடித்த எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். சிற்றன்னையின் ஊக்கத்தால் `தாருல் இஸ்லாம்’ இதழுக்குச் சிறுகதை, கட்டுரை எழுதி அனுப்பினார். 1929-ம் ஆண்டு அவை வெளிவந்தன.

“அச்சில் வெளிவந்த என் முதல் எழுத்துக்குச் சொந்த ஊரான நாகூரில் கிடைத்த எதிர்ப்பு என்னவென்றால்... ஊரே திரண்டு கும்பலாக என்னைப் பார்க்க வந்து கேலி செய்தது” என்று பின்னாளில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் சித்தி.

சித்தி - பகீர் தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் பிறந்தன. வேலைவாய்ப்பு தேடி மலேசியா பயணமானார் பகீர். இரண்டாம் உலகப்போர் நேரத்தில், பெரிபெரி நோய் கண்டு அங்கேயே இறந்துபோனார். அவ்வப்போது எழுதிக்கொண்டிருந்த சித்தியின் கவனம் எழுத்தின் பக்கம் தீவிரமாகத் திரும்ப, இந்த சொந்தத் துயரமும் காரணம். தன் சகோதரர் அன்வர் பேய்க்கின் மொழிநடையைப் பின்பற்ற முயற்சி செய்ததாகவும், சொந்த நடையே பின்னாளில் பழகிவிட்டதாகவும் கூறியிருக்கிறார் சித்தி. கணவரின் மரணத்துக்குப்பின் பெண் குழந்தைகளின் படிப்புக்காக நாகூரிலிருந்து நாகப்பட்டினத்துக்குக் குடிபெயர்ந்தார் சித்தி ஜுனைதா.

இந்த நிலையில்தான், 1938-ம் ஆண்டு `காதலா… கடமையா?’ என்ற தன் முதல் நாவலை தன் இயற்பெயர், முகவரி, புகைப்படத்துடன் பதிப்பித்தார். அப்போதே இஸ்லாமியப் பெண் ஒருவரின் பெரும் புரட்சியாகப் பேசப்பட்டது நாவல். தமிழ் முஸ்லிம் பெண் ஒருவர் எழுதிய முதல் தமிழ் நாவல் அது. அதற்கு மதிப்புரை எழுதியது தமிழ்த் தாத்தா உ.வே.சா. `நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய `காதலா கடமையா?’ என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது, எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார் உ.வே.சா அவர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முதல் பெண்கள்: தமிழின் முதல் இஸ்லாமியப் பெண் எழுத்தாளர், நாவலாசிரியர்

வெளிநாடுகளிலும் `காதலா கடமையா?’ புதினத்துக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. ஆங்கிலம் மற்றும் தமிழ்ப் பத்திரிகைகள், சிங்கப்பூரின் `தமிழ் முரசு’ போன்றவை இவரது நாவலைப் பாராட்டி எழுதின. சுரேந்திரன் என்னும் இளைஞனின் கதையைச் சொல்லிச் செல்கிறது நாவல். உழுபவனுக்கே நிலம் சொந்தம், ஐந்து வயது முதல் கட்டாயக் கல்வி, கலப்புத் திருமணம் செய்வோருக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், ஏழை பணக்காரர் வேறுபாட்டை நீக்குதல் என்று அப்போதே சமூகப் புரட்சி பேசியது `காதலா... கடமையா?’ நாவல்!

வெளியே வரவேற்பு... சொந்த ஊரிலோ நிலைமை தலைகீழ். வெள்ளைத் துப்பட்டி அணிந்த பெண்கள், கூட்டம் கூட்டமாக இவரது வீட்டுக்கு வந்து துக்கம் விசாரிப்பதைப்போல பார்த்துச் சென்றிருக்கிறார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாத சித்தி, தொடர்ந்து `தாருல் இஸ்லாம்’ பத்திரிகையில் ‘மலை நாட்டு மன்னன்’ என்ற தொடர்கதை, `மகிழம்பூ’ என்ற நாவல், `செண்பகவல்லி தேவி’ என்ற வரலாற்று நாவல்; `செம்பிறை’, `ஷாஜஹான்’, `தாருல் இஸ்லாம்’ போன்ற இதழ்களில் கட்டுரைகள்; `பெண் உள்ளம்’, `ஹலிமா’, `நாகூர் ஆண்டவர் வாழ்க்கை வரலாறு’ என்று தொடர்ந்து எழுதிவந்தார். இவை தவிர, தன் வாழ்க்கைக் குறிப்புகளை டைரியிலும் எழுதி வந்தார் சித்தி ஜுனைதா.

இஸ்லாமிய மக்கள், பிற்காலத்தில் அவரைக் கொண்டாடினார்கள். முதல் இஸ்லாமிய தமிழ்ச் சிற்றிலக்கிய மாநாட்டில் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார்கள். ஏனோ, அரசும் பிற அமைப்புகளும் பெரிய அளவில் அவரது எழுத்துக்கு உரிய மதிப்பைத் தரவில்லை.

எழுத்தில் லயித்திருந்தவரை 1980-ம் ஆண்டு புற்றுநோய் தாக்கியது. ஆங்கில மருத்துவத்தை நாடாமல், சித்த மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். மனத்திடத்தால் மட்டுமே மீதமுள்ள வாழ்நாளை அவரால் கழிக்க முடிந்தது. தன் 81-வது வயதில், 1998-ம் ஆண்டு, மார்ச் 19 அன்று காலமானார், இஸ்லாமிய எழுத்தாளர் சித்தி ஜுனைதா.

“நீங்கள் உங்களுக்காக மட்டும் வாழ விரும்பாதீர்கள். உங்கள் நாட்டுக்காக - உங்கள் இனத்துக்காக - உங்கள் சமுதாயத்துக்காக - உங்கள் மக்களுக்காக வாழுங்கள். இந்த எளியேனின் புத்திமதி இதுதான். தனக்கென வாழாது பிறர்க்குரியவராகத் திகழுங்கள்.”

- சித்தி ஜுனைதா பேகம்