Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

மீண்டும் ஒருமுறை பெண் உடல்மீதும், அவள்கொண்ட நம்பிக்கைமீதும் சம்மட்டி அடி விழுந்திருக்கிறது. எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் நம் இளைய சமுதாயம் அதைக் கேட்கும் நிலையில் இல்லையா? பெற்றோராக நம் கடமையை நாம் உணர்வதும் இல்லையா?

பொள்ளாச்சிக் கயவர்கள் கொடும்பாதகச் செயலைச் செய்திருக்கிறார்கள். உண்மைக் காதல், மனதோடு காதல் என்பதெல்லாம் காணாமல்போய் பல காலம் ஆகிவிட்டதோ? ஆணின் கயமைக்குப் பெண் பலியாவது இன்னும் எவ்வளவுதான் தொடர்வது? அயர்வாக இருக்கிறது.

பெற்றோருக்குப் பணம் தேடுவது பிரதானமாக இருக்கிறது. பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது, அறிவுரை சொல்வது என அவர்களால் எதுவும் முடிவதில்லை. பணமே பிரதானம் என்று தாயும் தந்தையும் ஓடிக்கொண்டிருக்க, தாத்தா, பெரியப்பா, மாமா, சித்தப்பா, பாட்டி, பெரியம்மா, அத்தை, சித்தி என இரண்டாவதுவட்ட உறவுகள் எல்லாம் வருடம் ஒருமுறை கல்யாணம் காட்சியில் சந்திக்கும் நண்பர்கள் போல ஆகிவிடுகின்றனர். ஆக, வீடுகளில் தனித்து விடப்படும் குழந்தைகள் துணைக்கு வருவது பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டா மற்றும் டிக்டொக் மட்டுமே.

குழந்தை என்ன செய்கிறாள், எங்கே போகிறாள் என்பதைக்கூட கவனத்தில் கொள்ள முடியாத அளவுக்கு நம்மை ஆட்டி வைப்பது பணம், பெருமையாக வாழ வேண்டும் என்ற வெற்று வைராக்கியம்.

எத்தனை வீடுகளில் குழந்தை சாப்பிடவில்லை என்றால் கையில் செல்போனைத் தூக்கிக் கொடுக்கிறோம்? எந்த வயதில் கைப்பேசியைக் குழந்தைக்குத் தர வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். ஆனால், ‘பெண் குழந்தைக்கு எதற்கு செல்போன்? அதனால்தான் உலகமே குட்டிச் சுவர் ஆகிறது’ என்று பிற்போக்குத்தனமாக மகள்களின் கால்களைப் பின்னே இழுக்கவும் தேவையில்லை. ‘என்ன வேண்டுமானாலும் செய்துகொள்; உன்னை கவனிக்க எனக்கு நேரமில்லை’ என்று விடவும் வேண்டியதில்லை. நமக்குத் தேவை, மேற்பார்வையுடன் கூடிய சுதந்திரம். எதைச் செய்ய வேண்டும் என்று சொல்வதைவிட, என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதைக் கவனத்தில் கொள்வது மிக முக்கியம்.

அதேநேரம், பெண் பிள்ளைகளும் தாய் தந்தை நமக்குத் தராத அன்பை எவனோ ஒருவன் தருகிறான் என்றால் ஒரு நொடி நிதானித்து, அது நல்ல நட்பா என்று தெளிந்துகொள்ளுதல் வேண்டும். மட்டற்ற சுதந்திரம் இன்று உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதைச் சரியாகப் பயிருக்கு விட்டால்தான் செழிப்பு. இல்லையேல் விழலுக்கு இறைத்த நீர்தான் அந்த விடுதலை உணர்வு. இரு பக்கத்திலும் தெளிவு வேண்டும், புரிதல் வேண்டும்.

ஆண்பிள்ளைகளுக்குத் தனிமனித ஒழுக்கம், நேர்மை, உண்மை போன்றவற்றைக் கட்டாயம் சொல்லித் தரவேண்டிய கடமை பெற்றோருக்கு இருக்கிறது. மட்டற்ற சுதந்திரம் ஆபத்தானது என்பதை அனைவரும் உணர வேண்டும். குடும்ப அமைப்பின் சிதைவைத்தான் இந்த சம்பவம் தெளிவாக அடிக்கோல் இடுகிறது. நான்கு நபர்கள் ஒரு கூரையின் கீழ் வாழ்வதல்ல குடும்பம். நான்கு மனங்கள் ஒன்றின் மீது ஒன்று உண்மையான அக்கறையுடனும், பாசத்துடனும், கொஞ்சம் மனப்பூர்வமான பேச்சுடனும் அமைவதே நல்ல குடும்பம். நாம் நல்ல குடும்பமாக இருக்கிறோமா என்று எல்லோரும் நம்மையே கேள்விகள் கேட்டுக் கொள்வோம். தவறுகளைச் சரி செய்வோம்.

நமக்குள்ளே...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz