Published:Updated:

தேவை அதிக கவனம்: பாலியல் வன்கொடுமை... ஆபாச வீடியோ... பெண்கள் பாதுகாப்புக்கு என்ன வழி?

தேவை அதிக கவனம்: பாலியல் வன்கொடுமை... ஆபாச வீடியோ... பெண்கள் பாதுகாப்புக்கு என்ன வழி?
பிரீமியம் ஸ்டோரி
News
தேவை அதிக கவனம்: பாலியல் வன்கொடுமை... ஆபாச வீடியோ... பெண்கள் பாதுகாப்புக்கு என்ன வழி?

நிபுணர்கள் அலசுகிறார்கள்

பொள்ளாச்சியில், அப்பாவிப் பெண்கள் ஆபாச வீடியோக்களில் சிக்கியுள்ள சம்பவம் மாநிலத்தை உலுக்கியுள்ளது.

தேவை அதிக கவனம்: பாலியல் வன்கொடுமை... ஆபாச வீடியோ... பெண்கள் பாதுகாப்புக்கு என்ன வழி?

ஓர் அறை. ஓர் ஆண் நின்றுகொண்டிருக் கிறான். ஓர் இளம்பெண் மேலாடை இல்லாத தன் உடலை இரண்டு கைகளாலும் மறைத்துக்கொண்டு, ‘நான் உன்னை பிரெண்டுனு நம்பித்தானே வந்தேன்... என்னை விட்டுடு’ என்று எதிரில் நிற்கும் ஆணிடம் கதறுகிறார். இன்னும் மூன்று ஆண்கள் கேமராவுடன் அந்த அறைக்குள் நுழைகிறார்கள். அதன் பிறகு அந்தப் பெண் ணுக்கு நடந்ததைப் பார்க்கும் அளவுக்கு நமக்கு மன திடம் இல்லை. ஆனால், அந்த இளம்பெண்ணின் கதறல் இன்னமும் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. இதுபோல ஒன்றல்ல, இரண்டல்ல... நூற்றுக்கணக்கான பெண் களைப் பாலியல் சித்ரவதை செய்து, ஆபாச வீடியோக்கள் எடுத்திருக்கிறார்கள். தங்களிடம் மாட்டியவர்கள் வசதிபடைத்த பெண்கள் என்றால், அவர்களுடைய ஆபாச வீடியோவைக் காட்டிப் பணம் பறித்திருக் கிறார்கள். அழகான பெண்கள் என்றால், `வீடியோவை வெளியிட்டு விடுவேன்' என்று பயமுறுத்தியே அவர்களை சமூகத்தில் உயர்ந்தவர்களாக, அரசியல்வாதிகளாக இருப்பவர்கள் பலரிடமும் அனுப்பி, தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி, பெண்களை மயக்கி பாலியல் சித்ரவதை செய்துவந்த அந்தக் கும்பலில் 20 இளைஞர்கள் வரை இருக்கிறார்கள்.  அத்தனை பேரும் விலையுயர்ந்த கார், பைக், உடைகளில்தான் வலம் வந்திருக் கிறார்கள். இந்தக் கும்பலில் இருக்கிற ஐந்து இளைஞர்கள்தாம், பெண்களைக் காதல், நட்பு என்ற பெயரில் வலைவீசிப் பிடிப்பவர்கள். சமூக வலைதளங்களில்  ஆக்ட்டிவ்வாக இருக்கும் இளம்பெண்களே இவர்களின் முதல் டார்கெட். அடுத்து, தங்கைகளுடன் படிப்பவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் மூலமாக அறிமுகமாகும் பெண்கள் என இவர்கள் வலைவிரிக்கும் தந்திரத்தைக் கேட்பதற்கு நெஞ்சம் நடுங்குகிறது. பெண்கள் மனதில், இவர்களின் மேல் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக,  தங்களுடைய தோட்டத்து பங்களாஅல்லது ரிசார்ட்டுக்கு அழைத்துச்சென்று, அங்கு வேலைபார்க்கும் ஏதோ ஒரு பெண்ணிடம், ‘அம்மா... இவதான் உன் மருமகள்’ என்று கூட அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். `அம்மாவிடமே அறிமுகப்படுத்திவிட்டாரே' என்று நம்பி, அந்தப் பெண்கள் இவர்கள் கூப்பிடும் இடத்துக்குப் போயிருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தேவை அதிக கவனம்: பாலியல் வன்கொடுமை... ஆபாச வீடியோ... பெண்கள் பாதுகாப்புக்கு என்ன வழி?

இந்தக் கயவர்கள், பெரும்பாலும் பெண் களை ஏமாற்றி அழைத்துச் செல்வது வேலை நாள்களில்தான். இந்தக் கும்பலிடம் இதுவரை ப்ளஸ் டூ படிக்கும் மாணவியிலிருந்து கல்லூரிப் பெண்கள், திருமணமான இளம்பெண்கள் எனப் பலரும் சிக்கியுள்ளனர். இந்தக் கொடுமை கடந்த ஏழு வருடங்களாக பொள்ளாச்சியில் நடந்துவந்திருக்கிறது. சில பெண்கள் தற்கொலை செய்துகொள்ள, சில பெண்கள் தங்களுடைய ஆபாச வீடியோவை வெளியிட்டுவிடுவார்களோ எனப் பயந்து, இவர்கள் கேட்கும் போதெல்லாம் பணம் தந்திருக்கிறார்கள். இன்னும் பலர் பயத்தில் மெளனமாக இருக்க, ஒரு கல்லூரி மாணவி கொடுத்த புகார் மூலமாக எல்லா விஷயங்களும் வெளியே வந்துவிட்டன. இந்த விஷயத்தில் அரசும் காவல்துறையும் சட்டமும் என்ன செய்யப் போகின்றன என்பது இனிமேல்தான் தெரியவரும். அதற்கு முன்பு, நமக்கு இதுபோன்ற ஆபத்துகளில் பெண்கள் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான பாதுகாப்பு வழிகளைச் சொல்லித்தந்தே ஆகவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. இதுதொடர்பாக நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஆண்கள் அழகா பேசினா அலர்ட்டாகிடுங்க!

மனநல ஆலோசகர் ஷாலினி

தேவை அதிக கவனம்: பாலியல் வன்கொடுமை... ஆபாச வீடியோ... பெண்கள் பாதுகாப்புக்கு என்ன வழி?

``காதல், கல்யாணம்னு வந்துட்டா எதையும் ஒரு கை பார்த்துடலாம்கிற போக்கு பெண்களிடம் வந்துடும். சராசரி ஆண்களே இதை அவங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும்போது, திட்டம் போட்டு பெண்களை வீழ்த்திய அந்த 20 பொள்ளாச்சி ஆண்களைப் பற்றி என்ன சொல்வது? காதலனாக இருந்தாலும் அவன் கூப்பிட்டா எங்கே கூட்டிட்டுப் போறான்னு கூட தெரியாமப் போகாதீங்க. சில பெண்கள், ‘எனக்கெல்லாம் இந்த மாதிரி ஆபத்து எதுவும் நடந்துடாது’னு ஓவர் கான்பிடன்ட்டா இருப்பாங்க. இது மிகப்பெரிய ஆபத்து.  இன்னும் சில பெண்கள், ‘அவன் எப்படியிருந்தாலும் என் மேலே எனக்கு நம்பிக்கை இருக்கு’னு நம்பிப் போவாங்க. இது முட்டாள்தனம். கொஞ்சம் நுட்பமா கவனிச்சீங்கன்னா, இந்த மாதிரி ஆபத்துகளில் பயந்தாங்கொள்ளி பொண்ணுங்க பெரும்பாலும் மாட்டிக்கிறது இல்லை. தங்களைத் தைரியசாலியா காட்டிக்கிற பொண்ணுங்கதான் அதிகமா மாட்டிக்கிறாங்க. பொள்ளாச்சி குற்றத்தில் தொடர்புடைய வக்கிர ஆண்களைப் போன்றவர்களைக் கண்டு பிடிக்கிறதுக்கு ஒரு ட்ரிக் சொல்லித் தர்றேன். பொதுவா, ஆண்களுக்கு அழகாகப் பேசத் தெரியாது.  அவங்க மூளையில் இருக்கிற மொழி மையத் தோட அமைப்பு அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கு. அதனால, ஓர் ஆண், நீங்க எப்படிக் கேள்வி கேட்டாலும் துல்லியமாகப் பேசு றான்னா, அவனுக்கு நிறைய பெண்களிடம் பேசிய அனுபவம் இருக்குன்னு அர்த்தம். அவன்கிட்ட உஷாரா இருக்கணும். அவனைத் தவிர்க்கிறதுதான் பாதுகாப்பு’’ என்கிறவர், பாலியல் சிக்கல், ஆபாச வீடியோ போன்ற பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளும் பெண்களின் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங் களையும் விவரிக்கிறார்.

‘`இது மாதிரியான சம்பவங்களில் மாட்டிக்கொண்ட பெண்கள், எப்பவும் தனியா இருப்பாங்க. ஒருவிதமான பயத்தோடு நாலு பேருக்கு நடுவிலேயே இருக்கிற பெண்களும் உண்டு. திடீர்னு படிப்புல கவனம் குறையும். சில பொண்ணுங்க ஸ்கூலுக்கோ, காலேஜுக்கோ போகமாட்டேன்னு அடம்பிடிப்பாங்க. நல்லா டிரஸ் பண்றவங்க, `இதுதானே பிரச்னைக்குக் காரணம்’னு அதை அவாய்டு பண்ணுவாங்க. சிலர், மேக்கப் போடுறதையே விட்டுடலாம். திருமணமான பெண்கள் என்றால், கணவர், குழந்தைகளிடம் முன்புபோல நெருக்கமாக இருக்க மாட்டாங்க, சரிவரத் தூங்க மாட்டாங்க...’’

வீடியோ எடுத்து மிரட்டினால் என்ன செய்வது?

வனிதா ஐ.பி.எஸ்

தேவை அதிக கவனம்: பாலியல் வன்கொடுமை... ஆபாச வீடியோ... பெண்கள் பாதுகாப்புக்கு என்ன வழி?

‘`சமூக வலைதளம் வழியாக எந்த நேரத்தில் எந்த எதிரி வருவான்... நம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கையைக் கெடுப்பான் என்றே தெரியாத உலகத்தில் வாழ்ந்துட்டிருக்கோம். அதனால், சென்ற தலைமுறை அம்மாக்கள் போல உங்கள் பிள்ளைகளை முடிந்தவரை கண்காணித்துக்கொண்டே இருங்க.

இளம்பெண்கள், ஒருவேளை எல்லா பாதுகாப்பையும் மீறி, பொள்ளாச்சி சம்பவம் போன்ற பயங்கரத்தில்  மாட்டிக்கொண்டாலும், தற்கொலை முடிவைக் கையிலெடுக்காதீங்க. ‘அவ்வளவுதான், வாழ்க்கையே போயிடுச்சு’ என்றோ, ‘ஒருத்தன் தொட்டுட்டான்’ என்பது மாதிரியான குற்றவுணர்ச்சிக்கோ ஆளாகாதீங்க. ஏன்னா, நீங்க தெரிந்தே இதுபோன்ற கயவன்கிட்ட சிக்கலை. அதனால, அதிலிருந்து மீண்டு வருவதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கு. மோசமான ஆண்களிடம் மாட்டிக்கிறவங்க ஏதோ ஒரு வகையில அப்பாவிப் பெண்கள்தாம் என்பது காவல்துறைக்கு நன்கு தெரியும். அதனால, பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப் பட்டாலும் அல்லது அதை யாராவது வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி னாலும் பயப்படாதீங்க.

காவல்துறையில் ‘இன்வெஸ்ட்டிகேஷன் யூனிட் பார் க்ரைம் அகைன்ஸ்ட் வுமன் அண்டு சில்ட்ரன்’ என்று பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க தனித்துறையே இருக்கு. காவல்துறையில் இப்போ நிறைய பெண் அதிகாரிகளும் இருக்கோம். நாங்களும்  உங்களுக்கு அம்மாதான், அக்காதான்.

24 மணி நேரமும் எங்ககிட்ட நீங்க பேசலாம். தமிழ்நாடு காவல்துறையின் அத்தனை உயரதிகாரிகளின் நம்பரும் இணையத்தில் இருக்கு. நீங்க நடுராத்திரியில் போன் செய்தாலும் எடுப்போம். உங்க பிரச்னையும் ரகசியமாவே வைக்கப்படும். அதனால துணிந்து காவல்துறையை நாடுங்க...”

ஒருநாள் செய்தியால் வாழ்க்கையே போயிடாது!

டிடெக்டிவ் யாஸ்மின்

தேவை அதிக கவனம்: பாலியல் வன்கொடுமை... ஆபாச வீடியோ... பெண்கள் பாதுகாப்புக்கு என்ன வழி?

‘`முன்னாடியெல்லாம் நூத்துக்கு அஞ்சு பொண்ணுங்க இப்படி ஏமாந்தாங்கன்னா, இப்ப 50 பொண்ணுங்க ஆண்களிடம் ஏமாந்து போறாங்க. இந்த மாதிரி நிறைய வழக்குகள் என்கிட்டே வருது. இந்தச் சூழல்ல, பெண்களுக்கு நான் சொல்ல விரும்புறது ஒண்ணுதான். ஓர் ஆணால் பாதிக்கப்பட்டீங்கன்னா, தற்கொலை முடிவை எடுக்காதீங்க. போலீஸில் புகார் கொடுத்தா நியூஸ் பேப்பரில் வந்துடும் என்றும் பயப்படாதீங்க. ஒரு நாள் செய்தியால் வாழ்க்கையே போயிடாது.

உலகம் பொள்ளாச்சி குற்றவாளிகள் போன்ற ஆண்களால் மட்டுமே நிரம்பியது இல்லை. நிறைய நல்லவர்கள் இருக்காங்க. அவங்க உங்களைப் புரிஞ்சுப்பாங்க’’ என்கிறவர், தன் அனுபவத்திலிருந்து எந்த மாதிரி பெண்களை மோசமான ஆண்கள் குறிவைக்கிறார்கள் என்பதையும் பகிர்கிறார்.

‘`இந்த மாதிரி பசங்க, பாதிக்கப்பட்ட பொண்ணுங்ககூடப் படிக்கிறவன் அல்லது அவனுடைய பிரெண்டா இருப்பான். அல்லது கூட வேலைபார்க்கிறவன் அல்லது அவனுடைய பிரெண்டா இருப்பான். இவனுங்களுக்கு தாங்கள் குறிவைக்கிற பெண்களோட பேமிலி பேக்கிரவுண்டு நல்லா தெரியும். ரொம்ப செல்லமா இருக்கிற பொண்ணுங்களுக்கு பொள்ளாச்சி சம்பவம் மாதிரி பிரச்னை வர்றதுக்கு வாய்ப்புகள் அதிகம். ஏன்னா, அந்தப் பொண்ணுங்களுடைய பெற்றோர் மகளுக்காக என்ன வேணும்னாலும் செய்வாங்களே. அதே மாதிரி தைரியமான பொண்ணுங்களையும் டார்கெட் பண்றாங்க. வீட்டில் சரியா கவனிப்பு இல்லாத கேர்ள்ஸை, ரொம்ப அன்பா இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டு, யூஸ் பண்ணிடுவாங்க. இன்னும் சிலர், ‘ஏற்கெனவே என்னை ஒருத்தி ஏமாத்திட்டா. நீயும் என்னை விட்டுட்டுப் போயிடுவியோனு பயமா இருக்கு’னு அனுதாபம் வர்ற மாதிரி பேசுவாங்க. சிலர், ‘நீ யார்கிட்டேயும் பேசக் கூடாது. நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்’னு பொசஸ்ஸிவ்வா நடந்துக்கிற மாதிரி நடிப்பாங்க. இன்னும் சில பசங்க, ‘எனக்கு அம்மா இல்லை... அந்த அன்பை நான் அனுபவிச்சதில்லை’னு சென்டிமென்ட்டா வலை வீசுவாங்க.

இப்ப, சமூக வலைதளங்களும் சேர்ந்துக்கிச்சு. அழகான பெண்கள், ரிச் காஸ்ட்யூமுடன் தங்களுடைய புகைப்படங்களை அடிக்கடி பதிவேற்றும் பெண்கள்னு வாட்ச் பண்றது, பேக் ஐ.டி மூலமா பிரெண்டு ரிக்வெஸ்ட் கொடுக்கிறது, அவங்களுடைய குடும்ப பின்புலத்தைத் தெரிஞ்சுக்கிறதுனு மோசமான ஆண்களுடைய வேலை சுலபமாயிடுச்சு.

பொள்ளாச்சி சம்பவத்தை ஒரு பாடமா எடுத்துக்கணும்... பல வருடங்கள் பழகிய ஆண்களை நம்புங்க; உங்களுக்குத் தெரிந்த அத்தனை ஆண்களையும் நம்பாதீங்க’’ என்று வேண்டுகோளுடன் முடித்தார்  டிடெக்டிவ் யாஸ்மின்.

-ஆ.சாந்தி கணேஷ்

 ஓவியம் : கோ.ராமமூர்த்தி