Published:Updated:

இது காதலின் சாட்சியம் மட்டுமில்லை!

இது காதலின் சாட்சியம் மட்டுமில்லை!
பிரீமியம் ஸ்டோரி
இது காதலின் சாட்சியம் மட்டுமில்லை!

ஓவியம்: பாரதிராஜா

இது காதலின் சாட்சியம் மட்டுமில்லை!

ஓவியம்: பாரதிராஜா

Published:Updated:
இது காதலின் சாட்சியம் மட்டுமில்லை!
பிரீமியம் ஸ்டோரி
இது காதலின் சாட்சியம் மட்டுமில்லை!

தீண்டுவது பாவச்செயல், தீண்டுவது பெருங்குற்றமாகப் பார்க்கப்படுவதற்கு இந்த நூற்றாண்டிலும் தொடரும் ஆணவக் கொலைகள் அத்தாட்சி. சாதிவெறிக்குப் பலிகொடுக்கப்பட்ட தமிழகத்தின் இளவரசன், சங்கர் வரிசையில் தெலங்கானாவின் பிரணய்.  

இது காதலின் சாட்சியம் மட்டுமில்லை!

2018 செப்டம்பர் மாதம் 14ந் தேதி ஆறுமாதக் கர்ப்பிணியாக,  நல்கொண்டாவின் ஜோதி மருத்துவமனைக்கு காதல் இணையர் பிரணய்யுடன் சென்ற அம்ருதா தன் தந்தையே அடியாட்களை ஏவித் தன் கணவனைக் கொலை செய்வார் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.  அரிவாளால் தாக்கப்பட்டதால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார் பிரணய். அம்ருதா வைஸ்ய சமூகத்தைச் சேர்ந்தவர், பிரணய் தலித் கிறித்துவர். பிறப்பால் அமைந்த சாதி மட்டுமே பிரணய் மனிதராகக் கருதப்படாமல் கொல்லப்படக் காரணம். பத்து சதவிகித இடஒதுக்கீட்டுக்கான அத்தனை நியாயங்களையும் முன்வைத்து அவசரச் சட்டம் இயற்றப்படும் அதேவேளையில் ஆணவப்படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படாதது துயரமே. அம்ருதாவைச் சந்திக்க தெலங்கானாவின் மிர்யாளகுடாவிற்குச் சென்றேன்.

 வீட்டு வாசலில் இருபத்து நான்கு மணி நேரமும் பின் முதுகில் துப்பாக்கி ஒன்றை மறைத்தபடி காவலர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். ஆளுயர மாட்டப்பட்டிருக்கும் பிரணய்யின் புகைப்படத்தின் அருகே நின்றபடி் நம்மை வரவேற்கிறார் பிரணய்யின் தந்தை  பாலசுவாமி  .. வீட்டின் இடதுபக்கம் தூசு படிந்த நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் ராயல் என்பீஃல்டு, நீண்ட நாட்களாக உபயோகிக்கப்படாத நிலையிலிருந்தே அது பிரணய்யுடையது என்று உணர்ந்துகொள்ள முடிகிறது.  ‘என் மகனுக்காக ஆசையாக வாங்கிய வண்டி.எடுக்க மனசு வரலை’ என்று அதனை வருடிக் கொடுத்தபடியே பேசுகிறார் பாலசுவாமி. வலதுபுறம் ்கொடியில் வெய்யிலில் உலர்த்தப் பட்டிருந்த குழந்தையின் துணிகள் அத்தனையும் வீட்டில் வாழ்வு மீண்டும் துளிர்த்துக் கொண்டிருப்பதற்கான சாட்சியம். மரணம் கவ்விக் கொண்டிருக்கும் அந்த வீட்டைத் தற்போது உயிர்ப்புடன் வைத்திருப்பது நிஹான் பிரணய்யின் அழுகைச் சத்தம் மட்டும்தான். பிறந்து நாற்பது நாள்கள் ஆகின்றன. வீட்டு வாசலிலேயே காவலர் இருந்தாலும் கண்களில் அத்தனை அச்சத்துடனும் குரல் திக்கித் திக்கிப் பேசுகிறார் அம்ருதா. கண்முன்னே கண்ட காதலின் மரணம் புதியவர்கள் எவரைக் கண்டாலும் அவரை அப்படி அச்சம் கொள்ள வைக்கிறது. மிர்யாளகுடாவில் இருக்கும் பிரணய் வீட்டில்தான் தற்போது பிரணய்யின் தாய் தந்தையுடன் வசித்துக் கொண்டிருக்கிறார்.

“எங்களின் திருமணநாளில் பிறந்தவன்!.பிரணய் என்றால் காதல், நிஹான் என்றால் உள்ளுறைந்திருப்பது. இவன் எனது உள்ளுறைந்திருக்கும் காதல்”, என்றபடியே பேசத் தொடங்குகிறார்.

பிரணய் இறந்தபோதும் முன்பின் தெரியாதவர் கள்தான் அவரைக் கொன்றார்கள். அதனால் முன்பின் தெரியாதவர்கள் யார் வீட்டுக்கு வந்தாலும் தனது மருமகளுடன் பிரணய்யின் தந்தையும் பாதுகாப்புக்காக அமர்ந்துகொள்கிறார். சாதிக்காக மற்றொரு உயிரை பலிகொடுக்க அந்தக் குடும்பம் தயாராக இல்லை. அம்ருதாவைப் புகைப்படம் எடுக்கக் கேமிராவை எடுத்ததும் பதற்றத்துடன் போட்டோ வீடியோ எதுவும் வேண்டாம் என மறுக்கிறார் அம்ருதா.  அவர் அச்சத்தில் இருக்கும் நியாயத்தை உணர முடிகிறது.

அச்சம் இளக இளக அம்ருதாவே தொடர் கிறார், “நம் வாழ்வின் சரிபாதியாக இருப்பவர்களை ஒரே இரவில் பறிகொடுத்துவிட்டு அதற்கு அடுத்து வரும் நாட்களைக் கடத்துவதெல்லாம் மிகக் கடினம். எனக்கும் இந்த வாழ்க்கை கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் நிஹான் இருக்கிறான். அவன் பிறந்தபோது சொல்லமுடியாத அளவுக்கு மகிழ்ச்சி அடைந்தேன். என் பிரணய்யின் கொலை தூக்கிச்சென்ற மகிழ்ச்சியின் துளியொன்று, எங்களோட திருமண நாளிலேயே என் கையில் கிடைத்தது. பிரணய்க்கு என் மேல் ஆயிரம் மடங்கு அன்பு அதிகம். எட்டு வருஷமா எங்கள் இருவருக்கும் பழக்கம். எங்க அப்பாவுக்குப் பிரணய்யை நன்றாகவே தெரியும்.அவருக்கும் என் மேல அத்தனை அன்பு இருக்குனுதான் நினைச்சேன்...” என்று சொல்லிவிட்டு பிரணய்யின் தந்தையைப் பார்த்துவிட்டு தலையைக் குனிந்துகொள்கிறார்.

நல்கொண்டாவின் பெரும்பாலான இடங்களில் அம்ருதா பெயரிலான ரியல் எஸ்டேட்கள் நம் கண்ணில் தென்பட்டது. தன் மகளின் மீது அத்தனை பாசத்தைக் கொட்டிவளர்த்தவரால் இத்தனைக் கொடூரத்தைச் செய்யமுடியுமா?, தலைநிமிர்ந்த அம்ருதா, “அன்பைவிட அவருக்குச் சாதிதான் முக்கியமாக இருந்தது. சாதிவெறிதான் அவரைக் கொலைசெய்ய வைத்தது. இங்கே தெலங்கானாவில் 99 சதவிகிதம் சாதிவெறி வேரூன்றி இருக்கிறது. நான் கல்லூரி செல்லும் காலம் வரை அது எனக்குப் புரியவில்லை. ஆனால் நான் நேசித்த ஒரு உயிரின் மரணம் அதுவும் என் தந்தையின் கரங்களாலேயே ஏற்பட்டிருப்பது சாதிவெறியின் ஆழத்தை எனக்கு உணர்த்தியிருக்கிறது.இந்த இழப்பு என் மனதில் அத்தனை  துயரத்தை விட்டுச் சென்றிருக்கிறது. தற்போது அவர்களுக்கு எதிராகப் போட்டிருக்கும் வழக்கில் நீதி வெற்றிபெறவேண்டும்.  பிரணய்க்கும் எனக்குமாக சில கனவுகள் இருந்தன. வெளிநாடு செல்வதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தோம். ஒருவேளை இந்த மரணம் நிகழ்ந்திருக்காவிட்டால் இந்நேரம் நாங்கள் வெளிநாட்டில் இருந்திருப்போம். நிஹானின் பிறப்பை நாங்கள் இருவருமாக கொண்டாடியிருப்போம். தற்போது அவன் தந்தையைப் பற்றிய அத்தனையும் நிஹானுக்கு கருவிலிருந்தே சொல்லி வருகிறேன்.அவன் நாற்பது நாள் குழந்தைதான். ஆனால் அவனது தந்தை எதனால் இறந்தார் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். ஒரு வருடம் நிஹானை வளர்ப்பதற்கான  நேரத்தை எடுத்துக்கொண்டு, பிறகு எனது படிப்பைத் தொடர வேண்டும். இந்தச் சாதி வெறி பிடித்தவர்களை எதிர்க்க எனது கல்வியும் காதலும்தான் எனக்கு ஆயுதம்” என்று சொல்லும்போதே நிஹானின் அழுகைச் சத்தம் கேட்கவும் நம்மிடமிருந்து விடைபெற்றுச் செல்கிறார்.

நாம் அந்த வீட்டிலிருந்து விடைபெற்று நகரும்போது நம்மை எதிர்மறிக்கும் அந்த வீட்டுப் பணியாளர் மங்கம்மா, “மனசு அமைதி கிடைச்சாலே அம்மாயி நல்லபடியா இருப்பா. இப்போதைக்கு சின்ன அப்பாயிதான் அந்த பொண்ணுக்கு உலகமே’ என்கிறார்.

சாதிய மேட்டிமையைத் தக்கவைத்துக்கொள்ள காதலை அழிப்பதுதான் உங்கள் வழியென்றால் சாதியை வேரறுக்கக் காதல்தான் ஆயுதம்.

ஐஷ்வர்யா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெரிக்கப்படும் நீதி

தெ
லங்கானாவில் நடக்கும் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராகச் செயல்பட்டுவரும்  தலித் பெண் செயற்பாட்டாளர் சூரப்பள்ளி சுஜாதா கூறுகையில்,”அம்ருதா-பிரணய் ஆணவக் கொலை வழக்கில் சிசிடிவி கேமிராதான் அவர்களுக்கான முக்கியமான சாட்சியம். அதுதான் குறைந்தபட்சம் அவரது தந்தையை குற்றவாளி என முடிவு செய்யவும் உதவியிருக்கிறது. தற்போது வாராங்கல் மத்திய சிறையில் அவர் இருக்கிறார். குற்றவாளி என முடிவு செய்யப்பட்டாலும் அவருக்கான தண்டனையைப் பெறுவதில் சிக்கல் இருக்கிறது. ஏனெனில் அதிகாரத்தில் இருப்பவர்கள் அவரது தரப்பில் இருக்கிறார்கள். அம்ருதாவின் தற்போதைய மன அழுத்தமும் பயமும் அதனால்தான். கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 34 சாதிய ஆணவக் கொலைகள் இங்கே தெலங்கானாவில் அரங்கேறி இருக்கின்றன. இவை அத்தனையும் காவல் துறையிடம் புகார் செய்யப்பட்டவை மட்டுமே. தன் வீட்டுப் பெண் வேறு ஒரு சமூகத்து ஆணிடம் பேசுகிறாள் என்று தெரிந்தாலே அது காதலா இல்லையா என்று அவர்கள் இருவரும் உணர்வதற்கு முன்பே அந்த பெண் வீட்டில் அவளைக் கொன்று விடுகிறார்கள். ஆனால் அது பற்றிய புகார்கள் எதுவும் வெளியே வராது. அண்மையில் கரீம்நகரில் கூட அப்படியான மர்ம மரணம் ஒன்றை ஆணவக் கொலை என்று கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்துவருகிறோம். ஆனால் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா என்பது சந்தேகமே. பாலியல் வன்முறை வழக்குகள் எப்படி அலட்சியமாக இந்த தேசத்தில் கையாளப்படுகிறதோ அதே அலட்சியத்துடன்தான் ஆணவக் கொலை வழக்கு களும் கையாளப்படுகின்றன” என்றார்.