Published:Updated:

பொள்ளாச்சி வக்கிரம் - பாலியல் வன்கொடுமையா, பாலியல் கலவரங்களா?

பொள்ளாச்சி வக்கிரம் - பாலியல் வன்கொடுமையா, பாலியல் கலவரங்களா?
பிரீமியம் ஸ்டோரி
பொள்ளாச்சி வக்கிரம் - பாலியல் வன்கொடுமையா, பாலியல் கலவரங்களா?

டி.எல்.சஞ்சீவிகுமார்

பொள்ளாச்சி வக்கிரம் - பாலியல் வன்கொடுமையா, பாலியல் கலவரங்களா?

டி.எல்.சஞ்சீவிகுமார்

Published:Updated:
பொள்ளாச்சி வக்கிரம் - பாலியல் வன்கொடுமையா, பாலியல் கலவரங்களா?
பிரீமியம் ஸ்டோரி
பொள்ளாச்சி வக்கிரம் - பாலியல் வன்கொடுமையா, பாலியல் கலவரங்களா?

சில ஆண்டுகளுக்கு முன்பு வட மாநிலம் ஒன்றுக்குச் சென்றிருந்தபோது அங்கு கேட்ட நிஜக்கதைகள் பலநாள்கள் தூக்கத்தைப் பறித்தன. எந்தச் செயலை செய்தாலும்... என்ன வேலையில் மூழ்கினாலும் மனதில் ஒரு மூலையில் அந்தக் கதைமாந்தர்களின் துயரங்கள், விடாமல் அரற்றிக்கொண்டே இருந்தன. கதைகளின் தன்மை அப்படி.

முழுமையாக இங்கு சொல்லவிரும்பவில்லை. ஒன்றிரண்டை மட்டும் சொல்கிறேன்... “கையில் சூலாயுதங்களுடனும், பெட்ரோல் கேனுடனும் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல், எங்கள் முன்னால், அவர்களின் ஆடைகளை ஒவ்வொன்றாகக் களைந்துவிட்டு, அம்மணமாக நின்றது. பின்பு எங்களையும் அதேபோல செய்யச்சொல்லி அனைவரையும் பலாத்காரம் செய்தது. அந்தச் சம்பவத்தின்போது எங்கள் பாட்டி வலி தாங்காமல் இறந்துபோனார்” என்றார்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள். இப்போது அவர்கள் பெண்கள் அமைப்பு ஒன்றில் தீவிரமாக இயங்குபவர்கள். இன்னொரு சமூகச் செயற்பாட்டாளரைச் சந்தித்தபோது, “வீட்டில் வயதான தாய், தந்தையரின் முன்னிலையில் நிறுத்தி, அவர்களைப் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி, குழந்தைகளையும் சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். பின்பு பெற்றோரின் முன்னாலேயே இரும்புத்தடியால் அந்தச் சிறுமிகளை மண்டையில் ஓங்கி அடித்துக்கொன்றிருக்கிறார்கள். ஒரு பெண்ணின் தலையில் சுத்தியலால் அடித்து ரத்தம் ஒழுக... அவர் உயிர் பிரியும் தருணத்தில் - அந்தத் தருணத்துக்காகவே காத்திருந்து, ஒருவன் அந்தப் பெண்ணை வன்புணர்ந்திருக்கிறான். இன்னொருவன் அந்தப் பெண் இறந்தப் பின்பும் புணர்ந்திருக்கிறான்” என்றார். அப்போது கேட்டபோதும்... இப்போது எழுதும்போதும் கைகள் நடுங்குகின்றன. அதன் பிறகு அதேபோன்றதொரு பதற்றத்தை... நடுக்கத்தை மீண்டுமொருமுறை இப்போது நெஞ்சில் விதைத்திருக்கிறது ‘விட்ருங்க அண்ணா’ என்று அலறும் அந்தப் பெண்ணின் குரல்.

பொள்ளாச்சி வக்கிரம் - பாலியல் வன்கொடுமையா, பாலியல் கலவரங்களா?

தமிழகம் முழுவதும் மாணவர்கள், பெண்கள் அமைப்பினரின் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. வழமையாக நிகழ்த்தப்படும் கோரிக்கைகளுக்கான போராட்டங்கள்போல் அல்லாமல், கொந்தளிப்பால் எழும்  அரிதான தன்னெழுச்சிப் போராட்டங்கள் இவை. பாதிக்கப்பட்ட பெண்களின் கதறல் நாட்டையே உலுக்கியிருக்கிறது - நம் ஆட்சியாளர்களைத் தவிர. இங்கே இயல்பாக ஒரு கேள்வி எழுகிறது. எதிராளி, அவள் ஒரு பெண், அதுவும் தன்னைவிட பலவீனமானவள், தனித்துவந்து சிக்கிக்கொண்டிருக்கிறாள், அதுவும் காதலின் பெயரால், நட்பின் பெயரால் நம்பிவந்து துரோக வலையில் சிக்கிக்கொண்டிருக்கிறாள், அவளுக்கு எதிரே ஒரு கும்பலே மிருகங்களைப்போல வேட்டையாடக் காத்திருக்கிறது, அவள் கதறி அழுகிறாள், கூனிக்குறுகிக் கெஞ்சுகிறாள், அதைப் பொருட்படுத்தாமல் பெல்ட்டால் விளாசுகிறான் ஒருவன், பலவந்தப்படுத்தி ரசிக்கிறது ஒரு கூட்டம். அதை வீடியோ எடுக்கிறது இன்னொரு கூட்டம்.

அந்தப் பெண்ணைச் சூறையாடியக் குற்றவாளிகள் சிலரை, அவர்களின் குடும்பத்தினருடன் சேர்ந்திருந்தபடியான புகைப்படங்களைப் பார்க்க நேரிட்டது. பலர் தாய் மடியிலும் சகோதரிகளின் தோளிலும் சாய்ந்திருக்கிறார்கள். இந்தக் கொடுங்குற்றத்தை நிகழ்த்திய நாள் அன்றும்கூடக் குற்றத்துக்கு முன்பும் பின்பும் தங்கள் சகோதரியையோ தாயையோ பார்த்துவிட்டு, பேசிவிட்டு, அவர்கள் கையால் உணவருந்திவிட்டுத்தானே வந்திருப்பார்கள்? அப்படியானால் எப்படி, எங்கிருந்து வந்தது இப்படியொரு வக்கிரம்? எப்படி கொஞ்சமும் இரக்கமும் உறுத்தலும் அச்சமும் இல்லாமல் இப்படி அத்துமீற முடிகிறது? இடைவிடாமல் புழுக்களாய் மூளைக்குள் நெளிந்து வலிக்கவைக்கின்றன கேள்விகள்.

வரலாற்றின் வழிநெடுகிலும் இப்படியான வக்கிரம் சூழ்ந்த சம்பவங்கள் நடந்துவருகின்றனதான். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போதும், ஈழப் போர் மற்றும் குஜராத் கலவரங்களின்போதும், இப்படியெல்லாம் நடந்தன. கூட்டுணர்ச்சி தரும் அளவற்ற போதையில் எதார்த்தங்கள் கலைந்து, இப்படியான வெறியாடல்கள் அரங்கேறுவதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், உலக உளவியல் இயல்புகளில் ஒன்று என்று எடுத்துக்கொள்ளலாம். உலக வரலாற்றில் நடந்த அத்தனை கலவரங்களுக்கும் பெண்கள்மீதான கூட்டு வன்முறைகளுக்கும்... ஏன்? கூட்டுத் தற்கொலைகளுக்கும், ஒட்டுமொத்தமாக மக்களை அழிக்கும் தீவிரவாதச் செயல்களுக்குமேகூடக் காரணம், பிரமாண்ட வெகுமக்களின் கூட்டுணர்ச்சி உளவியலே. ஆனால், இப்போது பொள்ளாச்சி என்கிற அழகிய சிறு நகரத்தில், கட்டமைக்கப்பட்ட அமைதியான சமூகத்தில், அதுவும் பல நூறு ஆண்டுகளாகக் குடும்பம் என்கிற உறவுகளின் கட்டமைப்பில் வளர்ந்துவரும் சமூகத்தில் இப்படியான ஒரு கூட்டுவன்புணர்வு நடந்ததை எப்படி எடுத்துக்கொள்வது?

கலவரப் பாலியல் பலாத்காரங்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில் நடந்திருக்கும் பலாத்காரச் சம்பவங்கள் ஒன்று... இரண்டல்ல... நூற்றுக்கணக்கான அத்துமீறல்களை இந்தக் கும்பல் அரங்கேற்றியிருக்கிறது என்று தகவல்கள் வருகின்றன. அத்தனை பேரும் மாணவிகள், சிறுமிகள், குடும்பப் பெண்கள். தினம் ஒருசில வீடியோவாவது இதுதொடர்பில் கசிகின்றன. நூற்றுக்கணக்கான பெண்கள் சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுவும் தனிநபராக அழைத்துச்சென்று ஆசை வார்த்தை சொல்லியோ... சூழல் காரணமாகவோ உணர்வுகளால் உந்தப்பட்டோ சம்பந்தப்பட்ட பெண்ணின் இணக்கத்துடனோ உடல்கூடல் நடக்கவில்லை. ஒவ்வொரு சம்பவத்திலும் திட்டமிட்டு மூளைச்சலவை செய்திருக்கிறார்கள். அதன் பின்பு அந்தப் பெண்ணை நம்ப வைத்து வரவழைத்திருக்கிறார்கள். அதன் பின்பு அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள். பின்பு மிரட்டப்பட்டு, அந்தப் பெண்ணின்மீது கடுமையான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு, கும்பலாகச் சேர்ந்து,  வன்புணர்வு செய்திருக்கிறார்கள். அதன் பின்னரும் பாதிக்கப்பட்ட பெண்களை பல மாதங்களாக, பல வருடங்களாகத் தொடர்ச்சியாக மிரட்டி, பலருக்கும் அனுப்பி மீண்டும் மீண்டும் வன்புணர்வு செய்திருக்கிறார்கள். பணம் பறித்திருக்கிறார்கள். இதன் நீட்சியாக சில பெண்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. அவை உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவையெல்லாம் கொலைகள்தானே... கார் விபத்து ஒன்றில் பலியான கல்லூரிப் பெண் விவகாரம்கூட இதன் பின்னணியில் சந்தேகங்களை எழுப்புகின்றன. வரிசையாக எத்தனை எத்தனைக் குற்றங்கள்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொள்ளாச்சி வக்கிரம் - பாலியல் வன்கொடுமையா, பாலியல் கலவரங்களா?

இதற்கு காவல்துறை தொடங்கி, அதிகார வர்க்கம்வரை துணைபோயிருக்கின்றன. இப்போதும் குற்றங்களின் பின்னணியில் இருப்பவர்களை மறைக்கத் துணைபோகிறது. அப்படியெனில், கலவரங்களில் நடக்கும் கொத்துக்கொத்தான பாலியல் வக்கிரங்களுக்கும், கொலைகளுக்கும் இப்போது நடந்து முடிந்திருக்கும் நூற்றுக்கணக்கான பெண்களின் பலாத்காரங்களுக்கும் வன்முறைகளுக்கும் பெரியதாக என்ன வித்தியாசம் இருக்கிறது? அந்த வகையில் நிச்சயமாகச் சொல்ல முடியும், பெண்களின் உடல்களின்மீது ஏழாண்டுகளாகத் தொடர்ந்து, கூட்டாக வன்புணர்வுகளை நிகழ்த்திய பொள்ளாச்சி சம்பவங்கள், சத்தமில்லாமல் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய கலவரப் பாலியல் பலாத்காரங்களே.

இதற்கு மக்களை, பெண்களைப் பாதுகாக்க வேண்டிய - பெண்ணின் பெயரைச் சொல்லி ஆட்சி செய்யும் அரசாங்கம் எடுத்த எதிர் நடவடிக்கைகள் என்ன? பெண்களுக்குப் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் பெற்றுத்தர வேண்டிய காவல் அமைப்பு, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை, முகவரியை அதிகாரபூர்வமாக வெளியிட்டு, அத்துமீறலை, மிரட்டலை நீட்டித்திருக்கிறது. அதைக் கண்டித்து, தண்டித்திருக்க வேண்டிய அரசாங்கமோ, ஒருபடி மேலே சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் விவரங்களுடன் அரசாணையே வெளியிட்டிருக்கிறது. காறி உமிழக் கொதிக்கிறது மனம். நாடு போற்றும் காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் ஒரு முதல்வர், தனது காவல் துறையால் இந்த வழக்கை விசாரிக்கத் திராணி இல்லை என்று சொல்லும் வகையில் மத்திய அரசாங்கத்தின் விசாரணை அமைப்பான சி.பி.ஐ-க்கு தள்ளிவிட்டு, தனது பொறுப்பைத் தட்டிக்கழித்திருக்கிறார் அல்லது தப்பிக்க நினைக்கிறார். வீதிக்கு வந்து போராடும் மாணவர்களிடம் பொறுப்பானவர்களைவிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தாமல் அடாவடியாக அடக்க முற்படும் காவல் துறை, இன்னொரு பக்கம் குற்றத்தில் தொடர்புடையதாகச் சந்தேக வளையத்துக்குள் இருக்கும் ‘பார்’ நாகராஜ் என்பவரின் வீட்டுக்கு காவலர்களைப் பாதுகாப்புக்கு நிறுத்துகிறது. 

முதல்வர் தொடங்கி அதிகாரிகள் மற்றும் நாம் அனைவருமே இந்த விஷயத்தை எந்தளவுக்கு உள்வாங்கிக்கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. வெளியே நிகழும் குற்றங்களை, கலவரங்களை, கொத்துக்கொத்தாக உயிர்கள் மடிந்ததை, இனமே அழித்தொழிக்கப்பட்ட கொடூரங்களை எப்போதுமே நமக்கேதும் பாதிப்பு இல்லாத பாதுகாப்பு எல்லைக்குள் நின்றுகொண்டு பார்க்க, விமர்சிக்க, கருத்துச் சொல்ல மட்டும் பழகிக்கொண்டுவிட்டோமா? ஒரு பெண்ணின் கதறலோ... அல்லது ஒரு ஜல்லிக்கட்டு கோஷமோதான் அரிதினும் அரிதாக ஒரு சிறு கூட்டத்தையேனும் வெளியே அழைத்துவர வேண்டியிருக்கிறதா? அப்போதும் முழுதாக வரவில்லையே நாம். எத்தனைப் பேர் வந்தார்கள், என்னென்ன பங்களிப்பை அளித்தார்கள் என்பதெல்லாம் விவாதத்துக்கு உரியவைகளாகத்தானே இருக்கின்றன. பாதிக்கப்பட்டது ஒரு பட்டியலினத்தவர் என்றால், பட்டியலின அமைப்புகள் மட்டும்தான் போராட வேண்டுமா? பாதிக்கப்பட்டது ஒரு பெண் என்றால் பெண்கள் அமைப்பினர்கள் மட்டும்தான் குரல் கொடுக்க வேண்டுமா? பாதிக்கப்பட்டது ஒரு மாணவி என்றால், மாணவர்கள் மட்டும்தான் வீதிக்கு வர வேண்டுமா? அக்கிரமங்கள் சார்ந்த வெகுஜன பிரமாண்டக் கூட்டுணர்ச்சிகள் கலவரமாக உருவெடுக்கும்போது, அறம் சார்ந்த வெகுஜன பிரமாண்டக் கூட்டுணர்ச்சிகள் அமைதி காப்பதை, தனித்தனியாகப் பிரிந்து நிற்பதை எந்த வகையிலான சுயநலத்தில் சேர்ப்பது.

இப்போது நடத்தப்பட்டிருக்கும் பொள்ளாச்சி சம்பவங்களுக்கும் நம் ஒவ்வொருவருக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்ல முடியாது. நம் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள். பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பமுமே, பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏதோவொரு வகையில் குரல் கொடுக்கலாம். வீதியில் இறங்கினால்தான் போராட்டம் என்றில்லை. குரல் கொடுக்க, எதிர்ப்பைப் பதிவுசெய்ய ஏராளமான வழிகள் உண்டு. சமூக ஊடகங்களில் ஒரே குரலாக நாம் அனைவரும் ஓங்கி ஒலிக்கலாம். உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் மொத்த இணையத்தையுமே எதிர்ப்புக்குரலால் ஆக்கிரமிக்கலாம், முடக்கிப்போடலாம். இந்த நிமிடம் நினைத்தால்கூட ஒரேசமயத்தில் லட்சம், கோடி மின்னஞ்சல்களை முதல்வருக்கு, பிரதமருக்கு, ஜனாதிபதிக்கு, சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு அனுப்பலாம். நாம் நினைத்தால் இன்னும் நிறைய வழிகள் இருக்கின்றன. உணர்ச்சி வேகத்தில் இதை எல்லாம் சொல்லவில்லை. நம் வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்கள். பெண் குழந்தைகள் எனில் அவர்களைப் பாதுகாத்து, வழிநடத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஆண் குழந்தைகள் எனில் பெண்களை மதிக்கச் சொல்லி அறத்தைப் போதிக்கும் மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

ஓவியம்: பிரேம் டாவின்சி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism