Published:Updated:

முதல் பெண்கள்: இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர்கள்!

முதல் பெண்கள்: இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
முதல் பெண்கள்: இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர்கள்!

சக்குபாய் ராமச்சந்திரன் - என்.கல்யாணிஹம்சத்வனி, ஓவியங்கள் : கார்த்திகேயன் மேடி

முதல் பெண்கள்: இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர்கள்!

சக்குபாய் ராமச்சந்திரன் - என்.கல்யாணிஹம்சத்வனி, ஓவியங்கள் : கார்த்திகேயன் மேடி

Published:Updated:
முதல் பெண்கள்: இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
முதல் பெண்கள்: இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர்கள்!

1952-ம் ஆண்டு வெளிவந்த அன்றைய மதராஸ் கால்நடைக் கல்லூரியின் ஆண்டு மலரின் முன்னுரை: `குமாரிகள் என்.கல்யாணி மற்றும் பி.சக்குபாய் ஆகிய இரு பெண்களும் வெற்றிகரமாக இந்த ஆண்டு பட்டப்படிப்பை முடித்துள்ளனர் என்பதை அறிவிப்பதில் பெருமைகொள்கிறோம். இவர்கள், இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர்கள். அவர்களை வாழ்த்துகிறோம்!’

அடுத்த சில பக்கங்களைப் புரட்டினால், அமைதி தவழும் முகத்துடன் கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் புன்னகைக்கிறார் ஒரு பெண். குமாரி என்.கல்யாணி, `பணிக்கர் தங்க மெடல்' பெற்றவர், முதல் பெண் கால்நடை மருத்துவர் என்கிற குறிப்புடன்.

முதல் பெண்கள்: இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர்கள்!

இரண்டு பெண்கள். இருவரும் ஒரே ஆண்டு கால்நடை மருத்துவம் பயின்று வெளியேறுகிறார்கள். ஆனால், அவர்களில் ஒருவர், அதன் பின் பொது வெளிக்கு வரவே இல்லை. தங்க மெடல் வென்ற கல்யாணி அம்மாள், அதன்பின் மருத்துவப்பணி எதுவும் மேற்கொள்ளவில்லை. ராணுவத்தில் பணியாற்றிய கணவருடன் பயணப்பட்டுவிட்டார். ``எவ்வளவு முயன்றும் கல்யாணி அம்மாளைத் தொடர்புகொள்ள முடியவில்லை, அவர் எங்கு இருக்கிறார் என்கிற தகவலே இல்லை'' என்று வருந்துகிறார் ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் பி.எஸ்.லலிதா.

சக்குபாய் என்ற அற்புதப் பெண்ணின் பயணம் அதன்பின்பே வேகம் எடுக்கிறது. ஆந்திரப்பிரதேச மாநிலம் ஏலுருவை அடுத்த கோபவாசம் என்ற ஊரில், 1931-ம் ஆண்டு ஜனவரி 12 அன்று பிறந்தார் சக்குபாய். 11 வயதில் கிட்டத்தட்ட படிப்பு நிறுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டார். வீட்டை சுத்தம் செய்வது, மாடுகளைக் கவனிப்பது, அம்மாவுக்கு சமையலறையில் உதவுவது என்று எந்தப் பணியிலும் ஈடுபாடு இல்லாத குழந்தைக்கு அந்த சிறு கிராமத்தில் இருந்த பள்ளிக்குச் செல்வதே பேரானந்தம். திருமணம் என்ற பேச்சு வந்ததும் துவண்டுபோனாள் குழந்தை. படிப்பு அவளை ஈர்த்த அளவுக்கு வீடோ, அதன் வேலைகளோ கவரவில்லை. அவளது அதிர்ஷ்டம், காந்தியடிகள் 1942-ம் ஆண்டு `வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தைத் தொடங்கினார். குடும்பத்தைத் தாங்கி நின்ற அவள் அக்காவின் கணவர் வழக்கறிஞர் பணியைத் துறந்துவிட்டு, முழுமூச்சாக விடுதலைப் போராட்டத்தில் குதித்துவிட்டார்.

திருமணம் செய்விக்க போதுமான பண உதவி செய்யும் நிலையில் அக்காவின் கணவர் இல்லாத காரணத்தால் திருமணம் தடைப்பட்டது. மீண்டும் பள்ளிக்கு குதூகல மாகத் திரும்பினாள். அரசியல் ஆர்வமும் கைகோத்துக்கொள்ள, மகிளா காங்கிரஸில் இணைந்து விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டாள். கணக்கிலும் அறிவியலிலும் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார் சக்குபாய். பள்ளிக் கல்வி முடித்து `இன்டர்மீடியட்’டும் வெற்றிகரமாக முடித்தவருக்கு, 1948-ம் ஆண்டு மேல்படிப்புக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. ஒன்று - சென்னையின் கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பு. மற்றொன்று, வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை மருத்துவம் பயில வாய்ப்பு. 1948-ம் ஆண்டுதான், பெண்களுக்கு கால்நடை மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது அரசு. அதுவரை அந்தக் கல்லூரிக்குள் பெண்கள் அடியெடுத்து வைத்ததில்லை. அதனால், சற்றே குழப்பத்தில் ஆழ்ந்தார் சக்குபாய். பின்னர், உறவினர்கள் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். காரணம், இவர் இல்லாவிட்டால் படிப்பைக் கைவிடும் எண்ணத்தில் இருந்த தோழி கல்யாணி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் பெண்கள்: இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர்கள்!

ஒருவருக்கு மற்றவர் துணையாக இரு பெண்களும் ஒன்றாகவே கல்லூரிக்குள் நுழைந்தார்கள். இரு பெண்களும் கல்லூரிக்குள் நுழைய இன்னொரு காரணம், அன்றைய கல்லூரி முதல்வர். மகிளா காங்கிரஸ், விடுதலைப் போராட்டம் என சமூகப் பணியாற்றிவரும் ஒரு பெண்மணி, நாட்டின் முதல் பெண் கால்நடை மருத்துவராக வெளிவருவது நாட்டுக்கு எவ்வளவு பெரிய உதவியாக இருக்கும், பெருமையாக இருக்கும் என்று பேசியே சக்குபாயை சம்மதிக்கவைத்தார் அவர். 1952-ம் ஆண்டு, இரண்டு பெண்களும் வெற்றிகரமாகப் படிப்பை முடித்தார்கள்.

படிப்பை முடித்ததும் சூழல் காரணமாக கல்யாணி பணிபுரியாமல் கைவிட, சக்குபாயோ அதே ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் குமான் மலைப்பகுதியில் இருந்த முக்தேஷ்வர் எனும் இடத்தில் உள்ள இந்தியக் கால்நடை ஆய்வு நிலையத்தில் ஆய்வாளராகப் பணியேற்றார். அப்போது, இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மலைப்பகுதிகளில் ஒன்றான முக்தேஷ்வர் செல்ல வேண்டும் என்றால், போலீஸாருக்குத் தகவல் தர வேண்டும். அவர்கள் உடன் வந்தால் மட்டுமே பாதுகாப்பு. 1950-களில் சென்னையிலிருந்து மொழி தெரியாத உத்தரப்பிரதேச மாநிலத்துக்குத் துணிவுடன் பயணப்பட்டார்; பணியைத் தொடங்கினார். படிப்பின் மீது இருந்த காதல் அவரை மேல்படிப்பைத் தொடர ஊக்கப்படுத்தவே, சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1961-ம் ஆண்டு பட்டமேற்படிப்பை முடித்தார். இந்தியக் கால்நடை ஆய்வு நிலையத்தின் பணியையும் செவ்வனே செய்துவந்தார். ‘வைராலஜி’ துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு சர்வதேச அரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். அவரது திறன் அறிந்த ஸ்வீடன் நாட்டின் ஸ்வீடிஷ் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஏஜென்சி, ஊக்கத்தொகை வழங்கி ஸ்டாக்ஹோம் நகரில் உயிரணு வளர்ப்பியல் (செல் கல்ச்சர்) ஆய்வுக்கு அழைப்பு விடுத்தது.

1966-ம் ஆண்டு, ஸ்வீடன் சென்ற சக்குபாய், அங்கு ஓராண்டு ஆய்வுப் பணிக்குப்பின் இந்தியா திரும்பினார். பிரபல கால்நடை மருத்துவரும் ஆய்வாளருமான டாக்டர் எஸ்.ராமச்சந்திரனை தற்செயலாக சக்குபாய் சந்திக்க, காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு பிரிவினராக இருந்தும், 1969 மார்ச் 16 அன்று காதல் மணம் புரிந்தனர். கணவருடன் இணைந்து ஆய்வுப் பணியில் ஈடுபடத் தொடங்கினார் சக்குபாய். கணவரின் ஊக்கம் கைகொடுக்க, 1971-ம் ஆண்டு எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ‘வெட்னரி வைராலஜி’ குறித்து ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். இஸ்ஸத் நகர் கால்நடை ஆய்வு நிலையத்தில் சிறிது காலம் இருவரும் பணியாற்றினர். அதன்பின்னர் ஐ.நா சபை, அதன் உணவு மற்றும் வேளாண் அமைப்பு போன்றவற்றில் குறுகிய காலப் பணியாக ராமச்சந்திரன் இந்தோனேஷியா, சூடான் போன்ற நாடுகளுக்குச் செல்லும்போது, அவருடன் பயணமானார் சக்குபாய். அறிவியல் ஆய்வுகளில் கணவருக்குக் கைகொடுத்த மனைவி அவர்! மூன்றாம் உலக நாடுகளில் அப்போது பெரும் அச்சுறுத்தலாக இருந்த, ரிண்டர்பெஸ்ட் என்ற கால்நடையைத் தாக்கும் நோய்க்கு சரியான நிவாரணத்தைக் கண்டடைந்து பயன்படுத்தியது இந்த ஜோடி. கணவன் - மனைவி இணையராக ஆய்வுக்கட்டுரைகள் எழுதி, இந்தியாவின் முக்கிய ஆய்வு நிலையங்கள் மற்றும் உலகின் பல பல்கலைக்கழகங்களில் வழங்கிவந்தனர்.

1991-ம் ஆண்டு ராமச்சந்திரனைப் புற்றுநோய் தாக்க, கணவரை கவனித்துக்கொள்ள தன் கால்நடை ஆய்வு நிலையப் பணியைத் துறந்தார் சக்குபாய். மனைவியின் துணையுடன் நோயை ஜெயித்த ராமச்சந்திரன், அதன்பின் 10 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார்.

ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் 1999-ம் ஆண்டு வரை ராமச்சந்திரன் பணியாற்ற, அங்கும் பெங்களூரிலும் மாறி மாறி வசித்துவந்தனர். மாணவர்களுக்கு வழிகாட்டவோ, உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் ஆய்வாளர் களுடன் தகவல் பரிமாறிக்கொள்ளவோ என்றுமே இந்த இணையர் தயங்கியதில்லை. 2000-ம் ஆண்டு தங்கள் பணியை முடித்து பெங்களூரு திரும்பினர். அதே ஆண்டு மே 30 அன்று, நோயின் தாக்கத்தால் மரணமடைந்தார் ராமச்சந்திரன்.

ஆந்திராவில் வாழ்ந்துவரும் சக்குபாய், கணவரின் நினைவாக `ராமச்சந்திரன் - சக்குபாய் எண்டோமென்ட் டிரஸ்ட்' என்ற சேவை அமைப்பை நிறுவியுள்ளார். ராமச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றை `லெட்டர்ஸ் பை தௌசண்ட்ஸ்’ என்ற நூலாகவும், ரிண்டர்பெஸ்ட், கனைன் டிஸ்டெம்பர் போன்ற நோய்கள் பற்றிய இருவரது ஆய்வு முடிவுகளைத் தொகுத்தும், இரண்டு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். `லெட்டர்ஸ் பை தௌசண்ட்ஸ்' நூலில், நண்பர்கள், மாணவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களுடன் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை ஆவணப்படுத்தி யிருக்கிறார் சக்குபாய்.தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் பட்ட மேல்படிப்பில் சிறந்து விளங்கும் மாணவன்/மாணவிக்கு சக்குபாய் ராமச்சந்திரன் தங்க மெடல் இன்றும் வழங்கப்படுகிறது. இந்தியக் கால்நடை நோயியல் சங்கத்தின் மூலம், 2005-ம் ஆண்டு முதல் சிறந்த புற்றுநோய் மருத்துவருக்கான டாக்டர் எஸ்.ராமச்சந்திரன் நினைவுப் பரிசும் வழங்கிவருகிறார் சக்குபாய்.

“ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நம் சமூகத்தின் மேல் எனக்கு கடும் கோபம் வரும். ஆனால், நம் பணியை நாம் எப்படியாவது செய்தே ஆக வேண்டும் என்றால், எப்படியோ அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்துதான் ஆக வேண்டும். பார்ப்போர் அனைவரும் நம்மை பற்றிக் கொள்ளும் பிம்பத்துக்கு ஏற்ப நம்மை நாம் மாற்றிக்கொள்ள முடியாது. ஒவ்வொரு நாளும் `நேற்றைவிட இன்று நன்றாக இருந்தது’ என்ற நினைப்பு நமக்குள் வந்தாலே போதும்... மனதில் நிம்மதி நிலைக்கும்!”

- சக்குபாய் (2006)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism