Published:Updated:

``இறந்த 13 பேருக்குக் கிடைச்ச நியாயம் இந்தத் தீர்ப்பு’’ - ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து ஸ்னோலின் தாய்

"100 நாள்களா நடந்த போராட்டத்துல ஒரு நாள் அரசு அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தா கலவரம், தடியடி, துப்பாக்கிச்சூடு, உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்குமா? தற்போதுகூட மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் மக்களிடம் ஓட்டு வாங்கணும்னு நினைச்சுதான், ஸ்டெர்லைட் விவகாரத்துல நீதிமன்றத்துல ஆலைக்கு எதிராக வாதங்களை முன்வச்சு அரசுத்தரப்பு வாதாடியதோன்னு நினைக்கத் தோணுது."

``இறந்த 13 பேருக்குக் கிடைச்ச நியாயம் இந்தத் தீர்ப்பு’’ - ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து ஸ்னோலின் தாய்
``இறந்த 13 பேருக்குக் கிடைச்ச நியாயம் இந்தத் தீர்ப்பு’’ - ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து ஸ்னோலின் தாய்

``இதுவரை நடைபெற்ற வழக்குகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வந்தது. முதல்முறையாக மக்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. இது நிரந்தமான மகிழ்ச்சியாக இருந்தால்தான் உயிரிழந்த 13 பேரின் இழப்புக்குக் கிடைத்த நீதியாக அமையும்” என்கின்றார் துப்பாக்கிச்சூட்டில் பலியான 17 வயது மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதா.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி ஆலையைச் சுற்றியுள்ள மக்கள் மட்டுமல்லாமல், பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பரவலாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதன் 100-வது நாள் போராட்டத்தன்று, கடந்த மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற பேரணியின்போது கலவரம் வெடித்தது. போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், ஜான்சிராணி, ஸ்னோலின், கார்த்திக், மணிராஜ், கந்தையா, ரஞ்சித்குமார், ஜெயராமன், செல்வசேகர், காளியப்பன், அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், சண்முகம் மற்றும் தமிழரசன் ஆகிய 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கடந்த மே 28-ம் தேதி ஆலை நிரந்தரமாக  மூடப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டதுடன் ஆலையைச் சீல் வைத்து மூடியது.

தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்த வேதாந்தா குழுமம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த நவம்பர் மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கலாம் எனத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இந்நிலையில், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், “தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடச் சொல்லி பிறப்பித்த அரசாணை செல்லுபடியாகும். தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் போன்றவற்றில் மட்டும்தான் விசாரணை நடத்திட முடியுமே தவிர, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அரசுக்கு எதிரான உத்தரவை விசாரணை செய்ய முடியாது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு செல்லாது. ஆலைக்குத் தடை தொடரும்” எனத் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த போராட்டக்காரர்கள், உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினர், வியாபாரிகள், மீனவர்கள், மாணவர்கள், பல்வேறு கட்சியினர் எனப் பல தரப்பினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இந்தத் தீர்ப்பு குறித்து துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் ஒருவரான 17 வயது மாணவி ஸ்னோலினின் இல்லத்துக்குச் சென்று அவரின் தாயார் வனிதாவிடம் பேசினோம், “ஸ்டெர்லைட் ஆலை இதற்கு முன்பாக பல முறை மூடப்பட்டிருக்கு. மூடப்பட்ட சில மாசங்களிலேயே திரும்பவும் திறக்க அரசாங்கமே அனுமதி கொடுத்திருக்கு. ஆலை மூடப்பட்ட போதெல்லாம் ஆலைத் தரப்பு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து மீண்டும் இயங்க அனுமதி வாங்கியிருக்கு. அதே நீதிமன்றத்துல தமிழக அரசும் வழக்கு போட்டு தன் தரப்பு வாதங்களை பலமா எடுத்து வைக்காததுனாலயும், ஆலைக்கு ஆதரவாகவே அரசும் செயல்பட்டு வந்ததுனாலயும் தீர்ப்புகள் ஆலைக்கே சாதகமாக இருந்து வந்தது.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக இதுவரை பல நீதிமன்றங்களில் நடைபெற்று வந்த வழக்குகளில் முதல்முறையாக ஆலைக்கு எதிராகவும் போராடிய மக்களுக்குச் சாதகமாகவும் ஒரு நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம். இது மகிழ்ச்சியான தீர்ப்பாக இருக்கு. ஆனா, இந்த மகிழ்ச்சி தற்காலிகமானதா இல்லாம நிரந்தரமான மகிழ்ச்சியா இருக்கணும். அப்போதான் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் இறப்புக்குக் கிடைத்த நீதியாகும். உண்மையைச் சொன்னா இறந்த 13 பேருக்கு கிடைச்ச நியாயம்தான் இந்தத் தீர்ப்பு. எங்க மகிழ்ச்சி நிரந்தரமா இருக்கணும்னா ஆலையைத் திறக்கவே கூடாது என்றவரிடம் வேதாந்தாவின் பேட்டியைப் பற்றி சொன்னோம்.

தீர்ப்பு வெளியான அடுத்த நிமிடமே, ”உச்சநீதிமன்றத் தீர்ப்பில் சொல்லியபடி, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுவோம். ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்போம்” என ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துள்ளார்.

ஸ்னோலின் அம்மா தொடர்ந்தார் ``13 அப்பாவிகளின் உயிர்கள் காவு வாங்கப்பட்ட பிறகும், ஆலையைத் திறக்க ஆலைத்தரப்பு தீவிரமாக முயற்சி செய்வதை நினைக்கும்போது மனசு ரொம்ப வேதனையா இருக்கு. இந்த அரசாங்கமும் இத்தனை நாளா ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாத்தானே இருந்துச்சு. 13 பேர் செத்துப்போன பிறகுதானே ஆலை மூடப்படுவதாக அரசாணையை வெளியிட முன்வந்துச்சு. 100 நாள்களா நடந்த போராட்டத்துல ஒரு நாள் அரசு அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தா கலவரம், தடியடி, துப்பாக்கிச்சூடு, உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்குமா? தற்போதுகூட மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் மக்களிடம் ஓட்டு வாங்கணும்னு நினைச்சுதான், ஸ்டெர்லைட் விவகாரத்துல நீதிமன்றத்துல ஆலைக்கு எதிராக வாதங்களை முன்வச்சு அரசுத்தரப்பு வாதாடியதோன்னு நினைக்கத் தோணுது. 

எந்த நீதிமன்றத்திற்குப் போனாலும், ஸ்டெர்லைட் ஆலைத் தரப்பு மேல்முறையீடு செய்யத் தயங்காது. ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களது ஒரே நோக்கம். 13 உயிர்களின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும், கை, கால் உடல் உறுப்புகளை இழந்து தவிப்பவர்கள், ஒட்டு மொத்த மக்கள் என அனைத்து தரப்பினரின் நோக்கம் ஆலையை நிரந்தரமாகத் தூத்துக்குடி மண்ணைவிட்டு அகற்ற வேண்டும் என்பதுதான். ஆலையை நிரந்தரமாக மூடிட தமிழக அரசு சட்டமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். மக்களுக்காகத்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மக்களின் நலன் மட்டும்தான் முக்கியம் என வார்த்தைக்கு வார்த்தை சொல்லி வரும் இந்த அரசு, ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்கத் தயங்குவது ஏன். ஆலையை மீண்டும் திறக்கும் நிலை ஏற்பட்டால் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும்” என முடித்தார் கண்ணீருடன்.