Published:Updated:

25 கிலோ சாதம்... தினம் சிக்கன்... தெரு நாய்களைக் கொஞ்சி வளர்க்கும் கலா!

எங்க வீட்டு ஓனரு எங்களை காலி பண்ணச் சொல்லலை. `உங்களுக்குப் பிள்ளைக இருக்கிற மாதிரிதான் அந்த அம்மாவுக்கு அந்த நாய்ங்கள்லாம். அவங்க இங்கதான் இருப்பாங்க. புடிக்காதவங்க வேணா வீட்டைக் காலி பண்ணிட்டுப் போங்க' ன்னு சொல்லி எங்களுக்கு சப்போர்ட் பண்ணினாரு.

25 கிலோ சாதம்... தினம் சிக்கன்... தெரு நாய்களைக் கொஞ்சி வளர்க்கும் கலா!
25 கிலோ சாதம்... தினம் சிக்கன்... தெரு நாய்களைக் கொஞ்சி வளர்க்கும் கலா!

சென்னை தண்டையார்பேட்டை லட்சுமி கோயில் அருகே உள்ள அந்த வீட்டைச் சுற்றிலும் முப்பது நாற்பது நாய்கள் அங்குமிங்கும் சுற்றித் திரிகின்றன. ஆனாலும், அந்த வழியாகச் செல்லும் எவரையும் பார்த்து அவை குரைக்கவோ பயமுறுத்தவோ இல்லை. அந்த வீட்டைக் கடந்து செல்பவர்களும் மிகச் சாதாரணமாகவே போய் வருகிறார்கள். ஆனால், நமக்கு மட்டும் உள்ளுக்குள் சின்ன உதறல். இரண்டு வீடு தள்ளியே நின்றுகொண்டிருந்தோம். “என் பிள்ளைங்க யாரும் உங்களை எதுவும் பண்ணமாட்டாங்க. பயப்படாம வாங்க தம்பி” வீட்டு வாசலில் நின்றபடியே குரல்கொடுத்தார் கலா. 

கலாவின் வீட்டிலிருந்த நாய்களில் சிலவற்றுக்குக் கால் முறிந்திருந்தது. சில நாய்களுக்குக் கண் பார்வை இல்லாமல் இருந்தது. பராமரிப்பின்றி தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் மீது இரக்கம் கொண்டு அவற்றை அன்போடு ஆதரித்து வரும் கலாவின் வீட்டுக்குள் சென்றதிலிருந்து நாமும் நாய்களைப் பிள்ளைகள் என்றே அழைக்கத் தொடங்கினோம். 

“அதோ அவன்தான் தம்பி செல்வா. ரொம்ப சுட்டி. துறுதுறுன்னு இருப்பான். அங்கே படுத்திருக்கிறது பட்டு. கண்ணகி நகராண்ட இருந்து அழைச்சிட்டு வந்தேன். இவங்க எல்லாரும் வீடில்லாம தெருவுல சுத்திட்டு இருந்த குழந்தைங்க. இப்போ என் வீட்டுல பாதுகாப்பா இருக்கிறாங்க” என்கிறார் கனிவான குரலில். நாய்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போது வந்தது என்றோம். புன்னகைத்தபடியே, “தம்பி நான் ஒண்ணு சொல்றேன். தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ். இனிமே என் செல்லங்களை நாய்னு சொல்லாதீங்க. அதுங்களை நான் ஒருநாளும் அப்படிச் சொன்னதில்ல” என்ற வேண்டுகோளோடு தொடர்ந்தார். 

“நான் பொறந்தது வளந்தது எல்லாமே சென்னைலதான். என் அப்பா நிறைய சோஷியல் ஒர்க் பண்ணிட்டு இருந்தாங்க. யாராச்சும் ரோட்டுல அடிபட்டுக் கிடந்தா அவங்களுக்கு உதவுறது, அநாதையா யாராச்சும் இறந்து கிடந்தா அவங்களை அடக்கம் பண்றதுன்னு அவங்களால முடிஞ்ச சேவையைச் செஞ்சிட்டு இருந்தாங்க. சின்ன வயசில் இருந்தே அப்பாவோட அந்தச் செயல்பாடுகளை எல்லாம் பார்த்துப் பார்த்து வளர்ந்ததால எனக்கும் கஷ்டப்படுறவங்களுக்கு உதவணும்ங்கிற எண்ணம் இருந்துச்சு. ஒருமுறை என் அண்ணனோட சூளைமேட்டுல ஒரு துக்க வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போ ஒரு செல்லப்பிராணி ரோட்டுல கிடந்த எதையோ சுரண்டி திண்ணுட்டு இருந்துச்சு. வயிறு ஒட்டிப்போய் எலும்பா நின்னுட்டு இருந்ததைப் பார்த்து எனக்கு அழுகையே வந்துடுச்சு. அப்போதான் முடிவு பண்ணினேன். ரோட்டுல எத்தனையோ செல்லப்பிராணிகள் அநாதையா திரியுதுங்க. நம்மளால முடிஞ்சா ஒருவேளை சாப்பாடு அதுங்களுக்குக் கொண்டு வந்து கொடுக்கலாம்னு தோணுச்சு. ஆரம்பத்துல ஒரு கிலோ சோறு பொங்கி அக்கம் பக்கத்துத் தெருவுல இருக்கிற பிள்ளைகளுக்குப் போயி சாப்பாடு போட்டுட்டு வந்தேன். அப்போ நான் வெட்டிங் கார்டு ரெடி பண்ற வேலை பார்த்துட்டு இருந்தேன். அதுல கிடைக்கிற காசை வச்சுதான் சோறு பொங்கிப் போட்டேன். நான் செல்லப்பிராணிகளுக்கு உதவுறதைப் பாத்துட்டு என் வீட்டுக்காரருக்கு என் மேல காதல் வந்துடுச்சு. அவரு கவர்மென்ட் பஸ்ல கண்டக்டரா இருக்காரு. எனக்கும் அவரைப் புடிச்சிருந்தது. ரெண்டு பேரும் 2009-ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணத்துக்குப் பிறகு அவரும் எனக்கு நிறைய சப்போர்ட் பண்றாரு. அதுமட்டுமல்லாம என் மாமியாரும் நாத்தனாரும்கூட எனக்கு உதவியா இருக்காங்க. கல்யாணமாகி 10 வருஷம் ஆகப்போகுது. எங்களுக்கு இன்னும் குழந்தை இல்லை. ஆனா, அதுபத்தி அவரோ இல்ல மாமியாரோ ஒரு வார்த்தைகூட கேட்டதில்ல. நானும் அதுபத்தி வருத்தப்பட்டதே இல்ல. ஏன்னா எங்க ரெண்டு பேருக்குமே இதுங்க எல்லாம்தான் பிள்ளைங்க” என்றதும் பக்கத்தில் அமர்ந்திருந்த குபேந்திரன் கலாவின் கைகளை இறுகப் பற்றுகிறார். 

“கலாவுக்கு இரக்கக் குணம் ஜாஸ்தி. அவங்க இப்போ வீட்டவிட்டு வெளிய போனா போதும் தெருவுல திரியிற அத்தனை செல்லப்பிராணிகளும் ஓடி வந்து அவங்ககிட்ட ஒட்டிக்கும். ஜாலியா விளையாடும். அதைப் பாத்துதான் நான் அவங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவெடுத்தேன். 10 வருஷம் ஆகுது அவங்களைக் கல்யாணம் பண்ணி. இப்போ வரை வாழ்க்கையிலயும் சரி மனசளவுலயும் சரி எந்தக் கஷ்டமும் வந்ததில்ல. நாங்க முன்னே ஒரு வீட்டுல குடி இருந்தோம். அங்ககூட அக்கம் பக்கத்துல இருந்தவங்களால நிறைய பிரச்னை வந்துச்சு. 'தெருவுல திரியிற செல்லப்பிராணிகளை எல்லாம் கூட்டிட்டு வந்து வீட்டுல வளர்த்தா நாங்க எப்படிக் குடி இருக்கிறது. அவங்களை வீட்ட காலி பண்ணச் சொல்லுங்க'ன்னு நிறைய பேர் சொன்னாங்க. ஆனாலும், எங்க வீட்டு ஓனரு எங்களைக் காலி பண்ணச் சொல்லலை. `உங்களுக்குப் பிள்ளைக இருக்கிற மாதிரிதான் அந்த அம்மாவுக்கு அந்த நாய்ங்கள்லாம். அவங்க இங்கதான் இருப்பாங்க. புடிக்காதவங்க வேணா வீட்டைக் காலி பண்ணிட்டுப் போங்க' ன்னு சொல்லி எங்களுக்கு சப்போர்ட் பண்ணினாரு. அதுக்குப் பிறகுதான் இந்த வீட்டுக்கு வந்தோம். இங்கே வந்து ஒரு வருஷம் ஆகப்போகுது. இது தனி வீடுங்கிறதுனால பெருசா எந்தப் பிரச்னையும் வரலை. எங்களைப் பத்தி நியூஸ்ல செய்தி வந்ததைப் பார்த்துட்டு சிங்கப்பூர்ல இருக்கிற முகம் தெரியாத ஒருவர்தான் இந்த வீட்டை எங்களுக்கு முடிச்சுக் கொடுத்தாரு. இப்போ வரை அவருதான் வாடகையும் கொடுக்கிறாரு. புள்ளைங்களுக்கு சாப்பாடு கொடுக்கிறதுக்கும், ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போக வரவும் சிரமம் இருந்ததால போன மாசம் புதுசா ஆம்னி வேணும் வாங்கிக் கொடுத்துட்டாரு. நானும் கலாவும் எங்கேயாச்சும் வெளியே போனாகூட தனியா ஒரு பக்கெட்ல சாப்பாடு சமைச்சு எடுத்துக்கிட்டுப் போவோம். போற இடத்துல ஏதாவது செல்லப்பிராணி இருந்துச்சுன்னா சாப்பாடு கொடுத்துட்டு வருவோம். இதை நாங்க ரொம்ப வருஷமா கடைப்பிடிக்கிறோம்ங்க. அதோட, கலாவுக்கு அசைவம் பிடிக்காது. ஆனாலும், பிள்ளைகளுக்காக அசைவம் சமைக்கிறாங்க. அவங்களைப் பொறுத்தவரை அதுங்களுக்கு ஒண்ணுன்னா துடிச்சுப் போயிடுவாங்க” என்கிறார் கலாவின் கணவர் குபேந்திரன். 

“நாம நாய்ன்னு பொதுவா சொல்லிட்டுப் போயிடுறோம் தம்பி. ஆனா, மனுஷங்களைவிட அது ரொம்ப ஒசத்தியானது தெரியுமா. மனுசங்க இறந்துபோயிட்டா அடுத்த செகண்டே எப்போ பாடி எடுக்கணும், பொணம் வந்துடுச்சான்னுதான் கேட்பாங்க. உசுரு போன அடுத்த நிமிஷமே நம்ம பேரும் நம்மளைவிட்டுப் போயிடும். ஆனா, நாய் இறந்து போச்சுன்னா அங்க ஒரு நாய் செத்துக் கிடக்குப்பான்னுதான் சொல்லுவாங்க. பொணம் கெடக்குன்னு சொல்ல மாட்டாங்க. அதேபோல, நாய்க் குட்டிப் போட்டுச்சுன்னா அதுங்களை ரெண்டு மாசத்துக்கு தூக்கி சுமக்கும். குட்டிங்க கண்ணு முழிக்க 15 நாள் ஆகும். ஆனாலும், அதுங்க தாயைத் தேடிப் போயி பால் குடிக்குங்க. அந்த அறிவு அதுங்ககிட்ட மட்டும்தான் தம்பி இருக்கு. ஆரம்பத்துல நான் ரோட்டுல அடிபட்டுக் கிடந்த செல்லப் பிராணிகளைத் தூக்கிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுவேன். அப்போ வலியில என்னையே கடிச்சிடுங்க. அதுங்க வலியில கடிச்சாக்கூட நாம ஊசி போட்டுக்கலாம். ஆனா, அதுங்க உசுர எப்படியாவது காப்பாத்திடணும்னு நினைப்பேன். அந்த மாதிரி ரெண்டு தடவை என் பிள்ளைங்க என்னைக் கடிச்சிருக்கு. எனக்குப் பெருசா எதுவுமே ஆகலை. அதுவும் உசுருள்ள ஜீவன்தானே. வலியில என்ன செய்யுறோம்னு அதுங்களுக்குத் தெரியாதுங்களே” என்றபோது கலாவின் முகத்தில் கருணை நிரம்பியிருந்தது. அவரிடம் தினமும் உங்கள் வேலை என்ன என்று கேட்டோம். 

“காலையில 6 மணிக்கெல்லாம் 25 கிலோ சாதம் வடிச்சிடுவேன். மதியம் ஒரு மணிக்கெல்லாம் கறிக்கடையில் இருந்து சிக்கன் வந்துடும்.  35 கிலோ வேகுற மாதிரி பெரிய குக்கர் ஒண்ணு வாங்கி வெச்சிருக்கேன். அதுல சிக்கனை அவிச்சி எடுத்து சாதத்தோடு ஒண்ணா கலந்துடுவேன். முதல்ல வீட்டுல உள்ள பிள்ளைகளுக்குக் கொடுத்துட்டு அப்புறமா நானும் அவரும் வெளியில கிளம்பி வீடுக இல்லாத, பிள்ளைகளுக்குச் சாப்பாடு கிடைக்காத ஏரியாவா போய் அங்க திரியுற பிள்ளைகளுக் சாப்பாடு கொடுத்துட்டு வருவோம். நல்லா இருக்கிற பிள்ளைகளுக்கு சாப்பாடு மட்டும் கொடுத்துட்டு வருவேன். கால்ல அடிபட்டு நடக்கவே முடியாத பிள்ளைகளை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போய் கட்டுப் போட்டுவிட்டு வீட்டுக்குத் தூக்கிட்டு வந்துடுவேன். அப்படி வந்த பிள்ளைங்கதான் இவங்க எல்லாரும். பாருங்க எவ்வளவு சந்தோஷமா இருக்குதுங்க” என்றவாறே அங்கிருந்த செல்லப்பிராணிகளை முகத்தோடு முகம் வைத்துக் கொஞ்சுகிறார் கலா. தூரத்திலிருந்து கலாவையும் அங்கிருந்த செல்லப் பிராணிகளையும்  ரசிக்கிறார் குபேந்திரன். 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவன் வாக்கிக்கேற்ப அன்பொன்றை மட்டுமே கொண்டு வாயில்லாத ஜீவன்களுக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் இந்தக் காதல் தம்பதியர் நம் எல்லோருக்கும் முன்னுதாரணம்.