Published:Updated:

`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க!' - அரசு வேலையால் நெகிழும் கீதா

`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க!' - அரசு வேலையால் நெகிழும் கீதா
`திடீர்னு என் கையில வேலைக்கான லெட்டரைக் கொடுத்துட்டாங்க!' - அரசு வேலையால் நெகிழும் கீதா

டந்த சுதந்திர தினத்தன்று அதிகாலையில் தன் வீட்டின் வெளியே கழிவுநீர்க் கால்வாயில் கிடந்த பச்சிளம் குழந்தையை துரிதமாகச் செயல்பட்டு மீட்டவர்  கீதா. பிறந்த சில மணி நேரங்களே ஆகியிருந்த ஆண் குழந்தையை கீதா குளிப்பாட்டி அழகுபார்த்த படங்கள் எல்லாம் அன்றைய தேதியில் செம வைரல். சுதந்திர தினத்தன்று குழந்தை காப்பாற்றப்பட்டதால் குழந்தைக்கு 'சுதந்திரம்' என்று அவரே பெயர் வைத்தார். பொதுமக்களும் கீதாவின் இந்தச் செயலைப் பாராட்டினார்கள். பல மேடைகள் அவரை அழைத்து விருதுகளும் வழங்கிக் கௌரவப்படுத்தின. அப்போதெல்லாம் நம்மைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மகிழ்ச்சியோடு அந்தத் தகவலை நம்மிடம் பகிர்வார். வழக்கம்போல இன்று காலை அவர் நம்மைத் தொலைபேசியில் அழைக்கக் குரலில் வழக்கத்துக்கு மாறாக உற்சாகம் வெளிப்பட்டது. 

``தம்பி, நான் இப்போ எழும்பூர்ல குழந்தைகள் ஆஸ்பத்திரியில் இருக்கிறேன். நேத்து நடந்த ஒரு விருது வழங்குற நிகழ்ச்சியில வெச்சு அமைச்சர் விஜயபாஸ்கர் சார் எனக்கு கவர்மென்ட் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லியிருந்தாங்க. திடீர்னு இன்னிக்குக் காலையில என்னைய ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லி, போன் வந்துச்சு. வந்து பாத்தால், வேலையில சேர்வதற்கான அப்பாயின்மென்ட் லெட்டரை என் கையில கொடுத்துட்டாங்கப்பா. ஆஸ்பத்திரியில குழந்தைங்களைப் பார்த்துக்கிற வேலையாம். எனக்கு இந்தச் சந்தோஷத்தை எப்படிக் கொண்டாடுறதுன்னே தெரியல. இத்தனை வருஷம் கழிச்சு எனக்கு இப்படியொரு நல்லது நடந்துருக்கு. அதுவும் குழந்தைகளைப் பாத்துக்கிறது மாதிரியான வேலைனா நான் சந்தோஷமா செய்வேன்” என்றவரின் குரலில் பூரிப்பு. அந்தப் பூரிப்பு மாறாமல் தொடர்ந்தவர், 

``கொஞ்ச நாளைக்கு முன்னால என்னைய சிங்கப்பூருக்கு வேலைக்குக் கூப்பிட்டாங்க. அங்கேயும் குழந்தைகளைப் பாத்துக்கிற வேலைதான். ஏற்கெனவே நான் பார்த்த வேலைதான் அது. ஆனாலும், சிங்கப்பூருக்குப் போக எனக்கு மனசில்ல. 45 வயசு ஆகிடுச்சு. இனிமே அங்க போய் நான் என்ன சம்பாதிக்கிறது. இங்கேயே என் பொண்ணோட இருந்தாதானே எனக்கு சந்தோஷம். அதனால, நான் வரலைனு சொல்லிட்டேன். இப்போ நம்ம ஊருலயே எனக்கு வேலை போட்டுக் கொடுத்திருக்கிறதை நினைச்சா ரொம்பவே சந்தோஷமா இருக்கு. 45 வயசுல எனக்கு கவர்மெண்ட் வேலை கிடைக்கணும்னு இருந்திருக்கு. இதுக்கெல்லாம் காரணம், சுதந்திரம்தான். அவன் வந்த பிறகுதான் என் வாழ்க்கையில நிறைய மாற்றங்கள் நடந்திருக்கு. ஆனா இப்போ அவன் என்கூட இல்லைன்னு நினைக்கும்போது மனசு கஷ்டமா இருக்கு. அவனை யாரோ தத்து எடுத்துக்கிட்டாங்கலாம். இப்போ சுதந்திரம் எங்க இருக்கான்னே தெரியல. இந்த நேரத்துல அவன் இங்க இருந்திருந்தா போய் பாத்து தூக்கிக் கொஞ்சி இருப்பேன். ஆனாலும், பரவாயில்லை அவன் எங்க இருந்தாலும் சந்தோஷமா இருப்பான். அவன் மூலமாதான் இந்த வேலை எனக்குக் கிடைச்சிருக்கு. அவனுக்கும் இந்த அரசாங்கத்துக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது” என்றவர் இறுதியாக,

``இவ்வளவு நாள் நான் சுதந்திரத்துக்கு மட்டும் பாட்டியா இருந்தேன். இனி நிறைய குழந்தைகளுக்குப் பாட்டியா இருக்கப் போறேன். அதை நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார் புன்னகையோடு.