Published:Updated:

எதிர்க்குரல்: பெண்களுக்கான பொற்காலம் எது?

எதிர்க்குரல்: பெண்களுக்கான பொற்காலம் எது?
பிரீமியம் ஸ்டோரி
எதிர்க்குரல்: பெண்களுக்கான பொற்காலம் எது?

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

எதிர்க்குரல்: பெண்களுக்கான பொற்காலம் எது?

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
எதிர்க்குரல்: பெண்களுக்கான பொற்காலம் எது?
பிரீமியம் ஸ்டோரி
எதிர்க்குரல்: பெண்களுக்கான பொற்காலம் எது?

‘அடடா, என்ன இருந்தாலும் பழங்காலம் போல வருமா... பெண்களுக்கான பொற் காலமாக அல்லவா அது இருந்தது... உலக நாகரிகங்கள் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு ஒப்பிட்டுப் பாருங்கள், அப்போது தெரியும் நம் பாரதத்தின் மேன்மை. பெண்களைக் கடவுளாக மதித்து, வழிபட்ட புண்ணிய மண் இது. சம்ஸ்கிருத புனித நூல்களையும் சாஸ்திரங்களையும் காவியங்களையும் எடுத்துப் பாருங்கள். பெண்கள் எப்படியெல்லாம் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியும். பிற்காலத்தில், அந்நியர்கள் உள்ளே நுழைந்து படையெடுப்புகள் நடத்தி எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார்கள். அது மட்டும் நடக்காமல் போயிருந்தால், அந்தப் பொற்காலம் இன்றுவரை உயிர்த்திருக்கும். என்ன செய்வது, நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்.’

இப்படியொரு சித்திரம் உருவானதற்கு நாம் மட்டுமல்ல; பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும்கூட ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கிறார்கள். வேதங்களையும் உபநிஷத்துகளையும் அபிக்ஞான சாகுந்தலத்தையும் இன்னபிற சம்ஸ்கிருத, பாலி மொழிப் பதிவுகளையும் கண்டெடுத்து மொழிபெயர்த்த அவர்கள், `ஆஹா இதுவன்றோ அற்புத தேசம்' என்று இந்தியாவைக் கொண்டாடித் தீர்த்தார்கள். `கிரேக்கம் அல்ல, இந்தியாவே உலக நாகரிகங்களுக்கெல்லாம் தாய்; லத்தீன் அல்ல, சம்ஸ்கிருதமே உயர்ந்த மொழி' என்று ஆர்ப்பரித்தார்கள்.

எதிர்க்குரல்: பெண்களுக்கான பொற்காலம் எது?

இதே சம்ஸ்கிருதப் பதிவுகளின் அடிப்படையில் இன்னொரு தரப்பினர், இந்தியா பிற்போக்கான தேசம், மூடநம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் தேசம், நாகரிகமற்ற தேசம் என்னும் முடிவுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களுக்குப் பதிலடி கொடுக்க தேசியவாத உணர்வுகொண்ட இந்தியர்கள் வெகுண்டெழுந்து, ‘பாரதத்தின் பழம்பெருமை தெரியுமா உங்களுக்கு?’ என்று ஒரு பொற்காலத்தை, கடந்த காலத்தில் கட்டமைக்க ஆரம்பித்தனர். மொத்தத்தில் இந்தியர்களும் பிரிட்டிஷாரும் போட்டி போட்டு உருவாக்கிய சித்திரம் இது.

ஆனால், உண்மை என்ன? ஒரே பதிவுகளைக் கொண்டு இரண்டு எதிரெதிர் தீர்ப்புகள் வழங்கப்பட்டது எப்படி? உண்மையிலேயே நம் கடந்த காலம் எப்படி இருந்தது? பெண்களுக்கான பொற்காலம் என்று அதனை அழைக்க முடியுமா? உமா சக்கரவர்த்தி, கும்கும் ராய், ரொமிலா தாப்பர் மூவரும் மேற்கொண்ட ஆய்வுகள் இந்த இரண்டு தீர்ப்புகளையும் நிராகரித்து, மிதமான நடைமுறை சாத்தியமுள்ள ஒரு சித்திரத்தை நமக்கு வழங்குகிறது. இதே வேதங்களை, இதே சாஸ்திரங்களை, இதே காவியங்களைக் கொண்டு இந்த மூவரும் முன்வைக்கும் வாதங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் வரலாற்றில் எந்தக் காலத்திலும் நடத்தப்பட்ட தில்லை. ஓர் அரசர், தன் ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த எந்தவொரு பெண் மீதும் காதல் வயப்படலாம். அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு செல்லலாம். அரசர் விரும்பிவிட்டார் என்பதற்காகத் தன் மனைவியை அவருக்கு அன்பளிப்பாக அளித்த கணவன்கள் இருந்திருக்கிறார்கள். அதிகாரத்தின் கீழ்நிலையில் இருக்கும் ஒரு கிராமத் தலைவனும் தன் கட்டுப்பாட்டின் கீழுள்ள பெண்களை இதேபோல அபகரித்துக் கொள்ளமுடியும்.

பெண்கள் சொத்து வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. மாறாக, பெண்ணைச் சொத்தாகக் கருதும் போக்கு இருந்திருக்கிறது. நகைகள், நிலம், ஆபரணங்கள், கால்நடைகள் ஆகியவற்றோடு பெண்களும் சொத்துகளாகப் பட்டியலிடப்பட்டிருக்கிறார்கள்.

வீட்டுப் பெண்களே அதிகம் என்றாலும் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் பெண் களைப் பற்றிய குறிப்புகள், சம்ஸ்கிருதப் பதிவுகள், புத்த ஜாதகக் கதைகள், சங்க இலக்கியம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. மண்பாண்டம், கைவினைப் பொருள்கள் உருவாக்கியிருக்கிறார்கள். வேளாண் கூலிகளாக இருந்திருக்கிறார்கள். ஆனால், இதே தொழில்களை மேற்கொள்ளும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குக் குறைவான ஊதியமே அளிக்கப்பட்டிருக்கிறது. குறைவான அங்கீகாரமும். சமூகத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்த வணிகம், வட்டித் தொழில் ஆகியவற்றில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.

பாலியல் தொழில் நகர வாழ்வோடு பின்னிப்பிணைந்திருந்தது. இதில் ஈடுபடும் பெண்களை அரசு கவனமாகக் கண்காணித்து, கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறது அர்த்தசாஸ்திரம். பாலியல் நாட்டம் கொண்ட ஓர் ஆண் எத்தகைய பெண்களையெல்லாம் அணுகலாம் என்பதை காமசூத்திரம் விவரிக்கிறது. வீட்டு வேலை செய்யும் பெண்கள், அடிமைகள், மக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள், தவறிழைத்த அல்லது குற்றச்செயல்களில் ஈடுபட்ட பெண்கள், தங்களுடைய உருவத் தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அலங்கரித்துக் கொள்ளும் பெண்கள் ஆகியோரை இந்தப் பட்டியலில் வாத்சாயனார் சேர்க்கிறார்!

சம்ஸ்கிருத காவியமான மிருச்சகடிகத்தின் மையப் பாத்திரமான வசந்தசேனை நடனப் பெண்ணாகவும் கணிகையராகவும் இருக்கிறார். அவளிடமிருந்த செல்வம் விரிவாக விவரிக்கப்பட்டிருப்பதை வைத்துப்பார்க்கும்போது, குடும்பப் பெண்களைக் காட்டிலும் நடனப் பெண்கள் சொத்துரிமை பெற்றவர்களாக இருந்தது தெரிகிறது. ஒப்பீட்டளவில் அவர்கள் சுதந்திரமானவர்களாகவும் காட்சியளிக்கிறார்கள். இதே மிருச்சகடிகத்தில் அடிமைப் பெண்கள் பற்றிய குறிப்புகளையும் பார்க்க முடிகிறது.சமூகத்தின் அடிப்படை, குடும்பம் (கிரஹம்). குடும்பத்தின் தலைவர், கிரஹபதி. சொத்துகளையும் இல்லத்திலுள்ள பெண்களை யும் நிர்வகிக்கும் பொறுப்பு கிரஹபதியைச் சேரும். குடும்பம், வர்ணம், சாதி ஆகிய அமைப்புகள் பெண்களை மையப்படுத்தி இயங்கிவந்தன. பெண்கள் ஒழுக்கமாக இருக்கும்வரை இந்த அமைப்புகள் சரியாக இயங்கும். அவர்கள் தவறிழைத்தால், அது அமைப்பைப் பாதிக்கும். ஓர் ஆண் தன் பிறப்பை, குலத்தை, ஆத்மாவை, தர்மத்தைக் காக்கவேண்டுமானால், பெண்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்கிறது மனுஸ்மிருதி.

கன்னியாதானம் மூலம் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்குச் செல்லும் பெண், கிரஹபதி யின் மாண்பைக் கவனத்தோடு காக்க வேண்டும். சடங்குகள், மரபுகள், கட்டுப்பாடுகள் அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். நம்முடைய நடத்தை குடும்பத்தை மட்டுமல்ல, சமூகத்தையே பாதிக்கும் என்பதை அவள் நினைவில் வைத்திருக்க வேண்டும். ஒரு நல்ல பதிவிரதையாக ஏற்கப்படுவதைக் காட்டிலும் உயர்வான அங்கீகாரம் அவளுக்கு வேறில்லை.

இந்த விதிமுறைகளை மனைவி ஒழுங்காகப் பேணுகிறாளா என்பதை அவ்வப்போது கண்காணிப்பது கணவனின் கடமையாகிறது. உன் நிலத்தைப் பாதுகாப்பது போல உன் வீட்டுப் பெண்ணைப் பாதுகாக்க வேண்டும். உன் குழந்தையை உலகுக்குக் கொண்டுவந்து சேர்க்கும் வாகனம் அவள். உன் சுத்தமான குருதியை மட்டுமே அந்தப் பாத்திரம் தாங்கியிருக்க வேண்டும் என்பதில் நீ கவனமாக இருக்க வேண்டும். உன்னுடைய குலம் தூய்மையாக இருக்கவேண்டியது அவசியம். பெண்களை நம்பமுடியாது. அவர்கள் சஞ்சல மனம் படைத்தவர்கள். அவர்களிடம் எந்த ஆயுதமும் இல்லையே என்று நினைக்காதே. அழகே அவர்களுக்கொரு ஆயுதம்தான். உன் மனைவிக்கு ரகசியக் காதலன் இருக்கிறானா என்பதைக் கண்டுபிடி. அப்படி ஒருவன் இருந்தால் அவனால் உன் உயிருக்கே ஆபத்து நேர்ந்துவிடும் என்று மனுஸ்மிருதிக்கு எழுதப்பட்ட ஓர் உரை எச்சரிக்கிறது!

கர்ப்பிணிகளைப் பாதுகாக்க பல ஆலோசனைகளை மனுஸ்மிருதி அளிக்கிறது. ஒரு கர்ப்பிணியிடமிருந்து சுங்க வரி வசூலிக்கக் கூடாது. பயணக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அவரிடமிருந்து மட்டுமல்ல, உதவிக்காக அவருடன் வருபவர்களிடமிருந்தும். ஒரு கர்ப்பிணி தவறிழைத்தால், அபராதம் விதிக்கக் கூடாது. கைதுசெய்யவோ சித்திரவதை செய்யவோ கூடாது. கொலைக்குற்றம் செய்தாலும் தண்டிக்கக் கூடாது. என்ன இருந்தாலும் அவள் நம் வாரிசைக் கொண்டுவருபவள். நம் குலம் தொடர உதவும் முக்கியமான கருவியல்லவா?

குழந்தை என்றால் ஆண் குழந்தை. பெண் குழந்தை இருக்கும் வீடு, ‘ஆண் குழந்தையில்லா வீடு’ என்றே அழைக்கப்பட்டது. எந்த வீட்டில் ஆண்களே இல்லையோ, அந்த வீட்டில் திருமணத் தொடர்புகள் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. எனக்கு வீரமிக்க ஆண் குழந்தை வேண்டும் அல்லது என் எதிரிக்கு வீரமிக்க ஆண் குழந்தை பிறக்கக் கூடாது ஆகியன வேண்டுதல்களாக இருந்தன.

காளிதாசரின் விக்ரமோர்வஸ்யம் என்னும் காவியத்தில், புரூரவனின் காலில் ஊர்வசி பலமுறை விழுந்து வணங்குகிறார். இது இயல்பானது என்பதால் போகிற போக்கில் காளிதாசர் இதைக் குறிப்பிட்டிருப்பார். விதிவிலக்காக ஓரிடத்தில் கோபமுற்றிருக்கும் ஊர்வசியைச் சமாதானப்படுத்த புரூரவன் அவள் கால்களைத் தொட்டு வணங்குகிறான். இந்த நிகழ்ச்சி அசாதாரணமானது என்பதால் உணர்ச்சிபூர்வமாக காளிதாசர் இதை விவரித்திருப்பார். நடக்கக்கூடாத ஒன்று நடந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தியிருப்பார்.

ஊர்வசி எத்தனை முறை தன் கணவனை வணங்கினாலும் அதனால் எந்த மாற்றமும் காவியத்தில் நிகழ்ந்துவிடவில்லை. ஆனால், ஒரேயொருமுறை புரூரவன் வணங்கியதைத் தொடர்ந்த ஊர்வசி தன்னுடைய கோபத்தைக் கைவிட்டுவிட்டு, `இனி நான் இவ்வாறு இருக்கமாட்டேன்; ஒரு நல்ல மனைவியாக அடங்கியிருப்பேன்' என்று புரூரவனிடம் விண்ணப்பித்துக்கொள்கிறாள். இதே உத்தியை காளிதாசர் தன்னுடைய மற்றொரு காவியமான மாளவிகாக்கினிமித்திரத்திலும் கையாண்டிருப்பார். அரசர் தன் காலைத் தொட்டு வணங்கியதைத் தொடர்ந்து ஐராவதியிடம் பெரும் மனமாற்றம் ஏற்படுகிறது. `ஒரு பெண் கோபம்கொள்வது தவறு; கணவனை பகைத்துக்கொள்வது அதைவிடவும் தவறு. சாதாண பெண்ணாக இருந்தாலும் சரி, அரசியாக இருந்தாலும் சரி... விட்டுக்கொடுத்துப் போவதே தன்னைப் போன்ற பெண்ணுக்கு அழகு' என்பதை ஐராவதி உணர்ந்து திருந்துகிறார்.

பொதுவாக காவியங்களில் சம்ஸ்கிருதம், பாலி ஆகிய இரு மொழிகளும் கலந்தே இருக்கும். ஆனால், அதில் ஒரு கணக்கு இருக்கிறது. அரசர்கள், அமைச்சர்கள், பிராமணர்கள், வணிகர்கள் உள்ளிட்டவர்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருதத்திலும் பணியாளர்கள், பெண்கள் ஆகியோர் பாலி மொழியிலும் உரையாடுவது வழக்கம். இந்த விதி தளர்த்தப்பட்டிருக்கிறது என்றாலும் உயர்மொழி ஆணுக்கு, கீழ்மொழி பெண்ணுக்கு என்பதே ஒப்புக்கொள்ளப்பட்ட பொது மரபாக இருந்திருக்கிறது. ஆண்களிலேயே கீழ்ச்சாதியினருக்கு உயர் மொழி அளிக்கப்படவில்லை. அதே நேரம் ஒரு பெண் உயர் குடியைச் சேர்ந்தவராக இருந்தாலும் காவியத்தில் அவர் பாலியே பேசினார். பெண் கடவுள், அப்சரஸ் ஆகியோருக்கும் இது பொருந்தும்.

இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில், மூன்று வரலாற்றாசிரியர்களும் வந்தடைந்த முடிவு இதுதான். ‘நமக்குக் கிடைத்திருக்கும் பதிவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, `பெண்களுக்குப் பொற்காலம் என்றொன்று எந்தக் காலத்திலும் இருந்ததில்லை' என்பது தெரிகிறது. பொற்காலம் என்னும் கருத்தே தவறானது. வேத காலம், குப்தர் காலம், மௌரியர் காலம் என்று தொடங்கி, இன்றுவரை எல்லா காலகட்டங்களிலும் பெண்கள் இரண்டாம் பாலினமாகவே கருதப்பட்டிருக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக ஒரு பொற்காலத்தை நாம் உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால், அது வரலாற்று உண்மை ஆகிவிடாது.

நாம் எவ்வளவு வளர்ந்திருக்கிறோம் அல்லது வளரவில்லை என்பதையும் எவ்வளவு மாறியிருக்கிறோம், மாறவில்லை என்பதையும் கடந்தகாலப் பதிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

-மருதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism