Published:Updated:

`ஏங்கினோம், தற்போது ஆனந்தமாக இருக்கிறது!’ - வளைகாப்பால் நெகிழ்ந்த 43 ஏழை கர்ப்பிணிகள்

`ஏங்கினோம், தற்போது ஆனந்தமாக இருக்கிறது!’ - வளைகாப்பால் நெகிழ்ந்த 43 ஏழை கர்ப்பிணிகள்
`ஏங்கினோம், தற்போது ஆனந்தமாக இருக்கிறது!’ - வளைகாப்பால் நெகிழ்ந்த 43 ஏழை கர்ப்பிணிகள்

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ பரிசோதனைக்காக வாரந்தோறும் வந்துசெல்லும் ஏழை கர்ப்பிணிப் பெண்களின் விவரங்களைப் பெற்று, அதில் மிகவும் ஏழ்மையான 43 பெண்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கெல்லாம் இன்றைய தினம் மிக விமரிசையாகச் சீமந்த வளைகாப்பு வைபவத்தை நடத்தியிருக்கிறார்கள் திருப்பூர் எலைட் ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்தவர்கள். 

காதல் திருமணம், கலப்புத் திருமணம் செய்துகொண்டதால் உறவுகளால் விலக்கப்பட்ட தம்பதியர், அரவணைக்க ஆட்கள் இல்லாமல் பிழைப்புத்தேடி திருப்பூருக்கு வந்து வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் தம்பதியர் என ஒவ்வொருவருக்கும் பின்னால் வெவ்வேறு கண்ணீர்க் கதைகள் நிரம்பிக் கிடக்கின்றன. பெரும் போராட்டத்துக்குப் பிறகு, திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தபோதும், இதுபோல வளைகாப்பு நடத்தி வைக்க உறவுகள் யாருமில்லையே என ஏங்கித் தவித்த அந்த 43 கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்றைய தினம் திருப்பூர் அங்கேரிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. கர்ப்பிணிகளுக்குப் பட்டுப் புடவைகளும் கணவன்மார்களுக்குப் பட்டு வேட்டி சட்டைகளும் வழங்கி உடுத்த வைத்து, தம்பதியர் அனைவரையும் மேடையில் ஏற்றி அமர வைத்தனர். பின்னர் அப்பெண்களுக்கு நெற்றியில் திலகமிட்டு, கையில் வளையல்களை அணிவித்து, வாய் நிறைய இனிப்புகளை ஊட்டி ஆனந்தமாக அரங்கேறியது இந்த வளைகாப்பு வைபவம்.

வளைகாப்பு நிகழ்ச்சி குறித்து எலைட் ரோட்டரியின் ஆலோசகர் குமார் என்பவரிடம் பேசினோம், ``எங்களது ரோட்டரி அமைப்பு தொடங்கப்பட்டு 114  ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. எங்களது அமைப்பில் மொத்தம் 43 பேர் இருக்கிறார்கள். எனவே, இந்தாண்டு ரோட்டரி விழாவை வித்தியாசமான முறையில் கொண்டாட விரும்பினோம். சாதாரணமாகவே அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழைகளுக்கு அவ்வப்போது எங்களால் முடிந்த உதவிகளைச் செய்துகொடுத்து வருகிறோம். அம்மாதிரியான தருணங்களில் வீட்டின் அரவணைப்பு இல்லாமல் தனியாகச் சிரமப்படும் தம்பதிகளைக் காணும்போது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கும். அப்படியான சூழலில்தான் இந்த ஆண்டு ரோட்டரி விழாவில் ஏழைப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தலாம் என்ற யோசனை ஏற்பட்டது. உடனேயே எங்களது அமைப்பின் சக நண்பர்களிடம் இந்தத் திட்டம் குறித்துத் தெரிவித்தேன். அனைவருமே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்கள்.

நண்பர்கள் நாங்கள் இணைந்து கடந்த 2 மாதங்களாகவே இதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினோம். அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஏழ்மையில் வாடும் கர்ப்பிணிப் பெண்கள் குறித்த விவரத்தைத் திரட்டினோம். இன்றைய வளைகாப்பு நிகழ்ச்சியின் மூலம் அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினோம். அத்துடன் குறிப்பாக எங்களது அமைப்பில் சில மருத்துவர்களும் இருக்கிறார்கள். எனவே, இந்தக் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவ காலத்தில் என்ன உதவித் தேவைப்பட்டாலும்கூட செய்துகொடுக்கத் தயாராகவே இருக்கிறோம். குழந்தைகள் பிறந்த பின்னரும் அக்குழந்தைகளுக்கு வேண்டிய பரிசுப் பொருள்களை வழங்கக் காத்திருக்கிறோம்’’ என்றார்.

வளைகாப்பு விழாவில் கலந்துகொண்ட யுவப்பிரியா என்ற கர்ப்பிணிப் பெண் பேசும்போது, ``காதல் திருமணம் செய்துகொண்டு உறவுகளைப் பிரிந்து இங்கே திருப்பூரில் தனியாக வாழ்ந்து வருகிறோம். கர்ப்பமடைந்த நாள் முதலே நமக்கெல்லாம் வளைகாப்பு நடத்த யார் இருக்கிறார்கள் என ஏங்கியிருக்கிறேன். ஆனால் என்னுடைய ஏக்கத்தைப் போக்கி, எங்களைப் போன்ற பலருக்கும் ஒரு குடும்பமாக உறுதுணையாக இருந்து வளைகாப்பு நடத்தி வைத்தது அத்தனை ஆனந்தமாக இருக்கிறது’’ என்றார். 

இதே மகிழ்ச்சிதான் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அத்தனை பெண்களுக்கும் இருந்தது.