Published:Updated:

சாதனையாளர்களை சங்கடப்படுத்தாதீர்கள்!

சாதனையாளர்களை சங்கடப்படுத்தாதீர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சாதனையாளர்களை சங்கடப்படுத்தாதீர்கள்!

சாதனையாளர்களை சங்கடப்படுத்தாதீர்கள்!

சாதனையாளர்களை சங்கடப்படுத்தாதீர்கள்!

சாதனையாளர்களை சங்கடப்படுத்தாதீர்கள்!

Published:Updated:
சாதனையாளர்களை சங்கடப்படுத்தாதீர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சாதனையாளர்களை சங்கடப்படுத்தாதீர்கள்!

விவசாயி மகள்... தந்தையை இழந்தவர்... வறுமையில் வாடுபவர்... அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டவர்...கோமதியைப் பற்றி எத்தனை விதமான அடையாளப்படுத்தல்கள்... இப்படியாகத்தான் தமிழ்ச்சமூகத்தின் முன் பாவப்பட்ட சாதனையாளராக நிறுத்திவைக்கப்பட்டார் இந்தச் சாம்பியன். 

சாதனையாளர்களை சங்கடப்படுத்தாதீர்கள்!

போராட்டகரமான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்தான், கடினமான சூழ்நிலைகளைக் கடந்து, அனைத்து நெருக்கடிகளையும் தாண்டித்தான் வெற்றிபெற்றிருக்கிறார். அத்தகைய ஒரு வெற்றியைப் பாராட்டவேண்டியது நம் கடமை. ஆனால், விளையாட்டில் சாதித்தவரை அந்த விளையாட்டை ஒதுக்கிவிட்டுப் பாராட்டிக்கொண்டிருக்கிறோம்! இது கோமதியின் திறமைக்கும் முயற்சிக்கும் நாம் செய்யும் அநீதி இல்லையா?

பீஜிங் ஒலிம்பிக்கில் (2008) 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற உசேன் போல்ட், இலக்கைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரம் 9.69 நொடிகள். ரியோவில் (2016), 30 வயது போல்ட் எடுத்துக்கொண்ட நேரம் - 9.81 நொடிகள். இந்த நேரங்களுக்குள் வித்தியாசம் இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. வயது ஏற்படுத்தும் மாற்றம் அது.

போல்ட்டுக்கும் கோமதிக்கும், அவர்கள் பங்கேற்கும் போட்டிகளுக்கும் இடையே 700 மீட்டர் வித்தியாசம் இருக்கிறது. ஆனால், கூடும் வயதுக்கும் அது ஏற்படுத்தும் மாற்றத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. வறுமையை, சவால்களை வென்றுவிடலாம்... கூடிக்கொண்டே போகும் வயதை வெல்வது சாதாரண விஷயமில்லை.

பொதுவாக, முப்பதை நெருங்க நெருங்க, எலும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமாக ஆரம்பிக்கும். மூட்டுகள் வளைந்துகொடுக்க மறுக்கும். காயமடைந்தால், திசுக்கள் வளர்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். பயிற்சி, வொர்க் அவுட் என எல்லாம் அளவெடுத்துச் செய்யவேண்டும். இல்லையேல், முன்கூட்டியே ரிடையர்மென்ட் அறிவித்துவிட வேண்டியிருக்கும். 

சாதனையாளர்களை சங்கடப்படுத்தாதீர்கள்!

இவை ஒருபுறமிருக்க, சமூகத்தின் கேள்விகள் உங்களை வேட்டைவிலங்குகளைப்போல் வட்டமிடும். கல்யாணம் பற்றிய குடும்பத்தின் கேள்விகள், ‘செட்டில் ஆகலையா?’ என்னும் பொருளாதார நெருக்கடிகள், அடுத்தடுத்த தோல்விகளின் மேல் எழுப்பப்படும் அவமதிப்புகள் என அனைத்தையும் சமாளிக்கவேண்டும். உடலும் மனதும் போட்டி போட்டுக் கேள்வி எழுப்பத் தொடங்கும்.

இங்கே எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் முப்பது என்பது, கடைசி லேப்பிற்கு முன் எழுப்பப்படும் அபாய மணி.

“வயதுக்கும் லட்சியத்துக்கும் என்ன இருக்கிறது. இங்குதான் 30 வயது என்பது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. என்னோடு போட்டியிட்டு வெண்கலம் வென்ற கஜகஸ்தான் வீராங்கனைக்கும் என் வயதுதான். அதைக் கேட்டபோது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சாதிக்கவேண்டும் என்ற எண்ணம்தான் நமது செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது. வெற்றி தோல்வியை வயது தீர்மானிப்பதில்லை என்று நான் நம்புகிறேன்” என்று நம்மிடம் புன்னகையோடு சொன்னார் கோமதி.  

“ஒரு பெண்ணின் கனவுகளைக் கல்யாணத்தைத் தவிர வேறு எதுவும் கலைத்திடாது” என்கிறார் தீர்க்கமான குரலில். அவருக்கு, தன் வயது ஒரு பொருட்டே இல்லை. சமூகத்தின் இந்த நெருக்கடிகள்தான் பிரச்னையே!

சரி, 30 வயதில் தங்கம் வென்றதுதான் கோமதி செய்த சாதனையா என்றால், அதுவும்தான்... ஆனால் அதுமட்டுமேயில்லை!

30 வயதைத் தாண்டிய பிறகு அடுத்தவரை வெல்வதைவிடப் பெரிய சவால் ஒன்று இருக்கிறது. அது தன்னையே வெல்லுதல். விளையாட்டு வாழ்க்கையின் தொடக்கத்தில் இளமைத்துடிப்போடு செய்த சாதனைகளை 30களில் செய்திட முடியாது. காலம் அதற்கு உதவாது. உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக்கில் அனைவரையும் வென்றார். ஆனால், பீஜிங்கில் ஓடிய அந்த இளம் போல்ட்டை, 30 வயதான அவராலேயே வெல்ல முடியவில்லை.

சொற்ப வீரர்களால் மட்டுமே, முப்பதைத் தாண்டிய பின்னும், தங்களின் செயல்பாட்டை மெருகேற்ற முடியும். கோமதி அந்த மிகச் சொற்ப வீரர்களுள் ஒருவர். அவர் தோஹாவில் தன்னோடு போட்டியிட்டவர்களை மட்டும் வெல்லவில்லை; தன்னையே வென்றிருக்கிறார். 20 வயதில் தொடங்கி, 9 ஆண்டுக்காலம் தன்னால் செய்ய முடியாத விஷயத்தை, தன்னால் அதுவரை எட்ட முடியாத வேகத்தை (800 மீட்டர் தூரத்தை 2:02:70 நிமிடங்களில் கடந்திருக்கிறார்), 30 வயதில் செய்துகாட்டியிருக்கிறார். இதுவல்லவா பாராட்டப்படவேண்டிய விஷயம்!

சாதனையாளர்களை சங்கடப்படுத்தாதீர்கள்!

30 வயதிலும் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை தொடங்கும் என்பதை உணர்த்தியிருக்கிறார் இந்தத் திருச்சிப் பெண். முப்பதுக்குப் பின் எல்லாமே முடிஞ்சது எனத் தங்களைக் குறுக்கிக் கொள்ளும் ஒவ்வொரு பெண்ணுக்குமான நம்பிக்கை இல்லையா கோமதி! இவரை இதற்காகத்தானே கொண்டாட வேண்டும்.

நம்மிடம் இருக்கும் பிரச்னை இதுதான். சினிமாவில் கிடைக்கும் சென்டிமென்ட்டை இப்போதெல்லாம் செய்திகளிலும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டோம்.

‘என்ன, கோமதி கஷ்டப்படுறாரா’, ‘சாம்பியனுக்கு ஷூ இல்லையா’ எல்லோரும் உணர்ச்சிவசப்பட, ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் கிளம்பி விட்டார்கள் ரட்சகர்கள்.

‘நான் உங்கள ஸ்பான்சர் பண்றேன். எங்க நிறுவனத்துக்கு வாங்க’, ‘நான் ஸ்பான்சர் பண்றேன், எங்க விழாவுல கலந்துக்கோங்க’ எனப் பாரிகள் கிளம்ப, காலை 7 மணி முதல் இரவு 11 மணிவரை ஓடிக்கொண்டே இருந்தார். அத்லெடிக்ஸ் அசோசியேஷன், பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவன நிகழ்வுகள், ஊடக அலுவலகங்கள், அரசியல் கட்சி அலுவலகங்கள், பிரபலங்களின் வீடுகள் என மொத்த சென்னையையும் சுற்றிப்பார்த்துத்தான் திரும்பினார். அவர் சாப்பிட்டாரா என்பதைப் பற்றி இப்போது யாருமே கவலைப்படவில்லை!

“ஒரு 10 நிமிஷம் மட்டும்தான் பேச முடியும். அடுத்து அவங்களப் போய்ப் பாக்கணும்.”

“மணி 11 ஆச்சு. சாப்டீங்களா?”

“சாப்பிட்டா, அந்த 10 நிமிஷம்கூட உங்ககூட பேச முடியாதே!”

காலை 7 மணிக்கு, வீட்டிலேயே ஒரு பேட்டியுடன் தொடங்கிய அவரது அந்த நாள், இப்படித்தான் இருந்தது. இத்தனைக்கும் கோமதி பேசிய முதல் வார்த்தை, “தயவு செஞ்சு நான் ஏழை, கஷ்டப்படறேன்னு எழுதாதீங்க. போதும். அதையெல்லாம் திரும்பிப் பார்த்தா சங்கடமா இருக்கு” என்பதுதான்.

அவர் கஷ்டத்தைச் சொல்வதால்தானே ஸ்பான்சர்கள் கிடைக்கிறார்கள்? நல்லதுதான். ஆனால், அந்த ஸ்பான்சர்கள் இவர்களை எப்படி அணுகுகிறார்கள்? ஒரு கார் நிறுவனம் சச்சினின் சாதனையைப் பாராட்டி ஒரு கார் கொடுக்கிறது. அதை ‘அன்பளிப்பு’ என்ற வகையில்தான் அந்த நிறுவனம் அணுகும். ஆனால், இங்கு அப்படியா? ‘கோமதியின் வாழ்க்கையில் ஒளியேற்றுகிறோம். அவர் வறுமையைப் போக்கி வாழ்வளிக்கிறோம்’ என்ற பாவனையில்தானே எல்லாமே நடக்கின்றன.
 
அந்த வெற்றிக்கு முன்பு மட்டுமல்ல, அதற்குப் பிறகும்கூட அவர்கள் பல சங்கடங்களை அனுபவிக்கவேண்டியி ருக்கிறது. ஷூவின் கலர் மாறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல் ஆளாளுக்கு அத்லெடிக் அசோசியேஷனைக் கேள்வி கேட்கப் புறப்பட, அதன் எதிர்வினையைச் சந்திக்கப்போவதும் அவர்தான் இல்லையா? ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களே, அடுத்த ஒலிம்பிக் தொடருக்குப் போகாத கதைகள் இந்தியாவில் உண்டு. நியாயம் கேட்பதாய் நினைத்துக் கேள்வி எழுப்புபவர்கள், நடைமுறையை உணர்வது நலம். ஏனெனில், நாம் நினைத்துக்கொள்வது எல்லாம் நியாயம் அல்ல.

கோமதிக்கு மட்டுமல்ல, இங்கு நாம் கொண்டாடுவதாய் நினைத்து அணுகிக்கொண்டிருக்கும் பல வீரர், வீராங்கனைகளின் நிலையும் அதுதான். எதற்காகக் கொண்டாட வேண்டுமோ அதை விட்டுவிட்டு, நம் சென்டிமென்ட் திருப்திக்காக, கொடைவள்ளல் விளம்பரத்துக்காக வெற்றியாளர்களின் பர்சனல் விஷயங்களைச் சுரண்டிக் கொண்டிருக்கிறோம். வெற்றிக்கு முன் கஷ்டங்களைச் சந்தித்தவர்களுக்கு, வெற்றியோடு சேர்த்து சங்கடங்களைப் பரிசளித்துக்கொண்டிருக்கிறோம். அது கோமதியோடு முடியட்டும்.

மு.பிரதீப் கிருஷ்ணா - படங்கள்: க.பாலாஜி